உலகில் அழிவை நோக்கி செல்லும் குடிபெயரும் பறவைகளின் இருப்பு!

மர்லின் மரிக்கார்

உயிர் வாழ்வதற்காக கண்டம் விட்டு கண்டம் நோக்கிச் செல்லும் பறவைகள் மனித நடவடிக்கைகளால் இடைவழியில் கொல்லப்படுகின்ற பரிதாபம்!

உலக குடிபெயரும் பறவைகள் தினம் (world migratory birds day) வருடா வருடம் மே மாதம் 08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடம் தோறும் பறவைகளின் குடிபெயர்தல்கள் இடம்பெறுகின்றன. தாம் வாழும் பிரதேசங்களில் எதிர்கொள்ளும் வாழிடச் சிக்கல், கடும் வெப்பம், கடும் குளிர், உணவுப் பற்றாக்குறை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவென அவ்வாழிடங்களில் இருந்து, வாழக் கூடிய சூழல் நிறைந்த பிரதேசங்களுக்கு பறவைகள் இடம்பெயர்கின்றன.

உகந்த இடத்துக்குச் சென்று குறிப்பிட்ட காலம் தங்கி இருந்து மீண்டும் முன்னைய இடத்துக்கு திரும்பி வருவதலே ‘பறவைகள் குடிபெயர்ந்து செல்லல்’ எனப்படுகின்றது. குறிப்பாக தம் உணவு, இருப்பிடம் மற்றும் சீதோஷண நிலை என்பற்றில் நெருக்கடி ஏற்படும் போதே பறவைகள் குடிபெயர்கின்றன.

கோடை காலத்தில் புவியின் வட அரைக் கோளத்தில் நீண்ட பகற் காலம் நிலவும். அக்காலம் பறவைகள் தமது குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட அதிக வாய்ப்பை அளிக்கும். இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் இலையுதிர் காலத்தில் பகற் காலம் சுருங்கி, உணவு கிடைப்பதும் அரிதாகும். அதன் விளைவாகவே வெப்ப வலயப் பிரதேசங்களுக்கு இப் பிராந்தியங்களைச் சேர்ந்த பறவைகள் குடிபெயருகின்றன.

ஏனெனில் வெப்ப வலயப் பிராந்தியங்களில் பருவ காலங்களுக்கு ஏற்ப உணவு கிடைக்கப் பெறுவதில் மாற்றங்கள் ஏற்படுவதுமில்லை. புலம்பெயரும் போது ஏற்படும் களைப்பு, சக்தி இழப்பு, ஆபத்துகள் போன்ற பாதக அம்சங்களை ஈடு செய்வதிலும் பறவைகள் கவனம் செலுத்துகின்றன.

புலம்பெயரும் பறவைகள் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைக்கப் பெறுவது குறைவடையும். அதனால் பெரும்பாலான பறவைகள் வெதுவெதுப்பானதும் நல்ல சாதகமானதுமான தட்ப வெப்பநிலையை நோக்கி பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளும்.

குடிபெயர்தல் ஆரம்பமாவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே அவை பயணத்திற்குத் தம்மை தயார்படுத்திக் கொள்ளும். குறிப்பாக அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்ளும். சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று கூட ஒத்திகைகள் பார்த்துக் கொள்ளும். அதன் பின்னர் ஒருநாள் சிரேஷ்ட பறவைகளின் மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு குடிபெயர்ந்து செல்லத் தொடங்கும். இப்பறவைகள் பெரும்பாலும் இரவு வேளையிலேயே பயணத்தை ஆரம்பிக்கும்.

இவ்வாறு குடிபெயரும் பறவைகள் இரு விதமான நேர் உணர்வைப் பெற்றுக் கொள்ளும். ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது. அத்தோடு புவிக் காந்தப்புலத்தைச் சார்ந்ததும் அதில் அடங்கும். குறிப்பாக பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாம் செல்ல வேண்டிய இடத்தை இப்பறவைகள் கண்டறிந்து கொள்ளும். இவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பறவைகளின் வான் வழிப் பயண உத்திகள், வயதான பறவைகளில் அதிகமாகக் காணப்படுவதும் உலகம் முழுவதும் உள்ள பறவையினங்கள் பன்னிரண்டு வான்வழிகளைப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் வட அரைக் கோளத்திலுள்ள ஐரோப்பிய, வட அமெரிக்க, ரஷ்ய நாடுகளில் வருடா வருடம் ஓகஸ்ட், செப்டம்பர் முதல் பனிப்பொழிவு ஆரம்பித்து விடும். இதன் விளைவாகப் பறவைகளின் உணவுகள் பனியினால் மூடப்படும். அதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை தவிர்த்து உடல் சீதோஷண நிலையையும் பேணிக் கொள்வதற்காக அந்நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான பறவைகள் ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய கண்ட நாடுகளுக்கு குடிபெயர்கின்றன.

பொதுவாகப் பெரும்பாலான பறவைகள் குடிபெயர்வின் போது மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடியனவாக உள்ளன. அதிலும் இனப்பெருக்கக் காலத்தை மிதவெப்பப் பகுதிகளில் அல்லது வட அரைக்கோளத்தில் கழிக்கின்ற பறவைகள், ஏனைய காலங்களில் வெப்ப வலயங்களை அல்லது தென் அரைக்கோளத்திலுள்ள மிதவெப்ப வலயப் பகுதிகளை நாடிச் செல்லும். குறிப்பாக வடக்கு ஐரோப்பாவிலுள்ள சில பறவைகள், ஆபிரிக்காவிலுள்ள குளிர்கால இடங்களை நோக்கி 6,800 மைல் அல்லது அதனை விடவும் அதிகமான தூரம் பயணிக்கின்றன. இப்பறவைகள் தங்களுக்குள் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் ஒன்று மோதாமலும், சரியான இடைவெளியுடனும், ஒரு குறிப்பிட்ட வேகத்துடனும் பறந்து செல்லக் கூடியனவாக இருக்கின்றன எனப் பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் மிகவும் நீண்ட தூரம் பறக்கும் குடிபெயரும் பறவையாக ‘ஆர்ட்டிக்டேன்’ விளங்குகின்றது. இது வட துருவ ஆர்க்டிக்கில் இருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களின் வழியே தென்துருவ அண்டாட்டிக்காவின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் குடிபெயரக் கூடிய பறவையாக உள்ளது. சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவை, வாழ்நாளின் பெரும்பகுதியை பறப்பதிலேயே கழிக்கின்றது. இப்பறவை ஒரு முறை குடிபெயர்ந்து சென்று திரும்பி வர 70ஆயிரத்து 900 கி.மீ. பயணிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் 1263 பறவைகள் காணப்படுகின்றன. அவற்றில் 160 வகை பறவைகள் குடிபெயரக் கூடியனவாக உள்ளன. அண்மையில் வட அமெரிக்காவின் அலஸ்காவை சேர்ந்த பறவையொன்று சுமார் 12 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் பயணித்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. அத்தோடு சீனாவிலுள்ள ஒரிரு பறவைகள் இந்தியா மற்றும் இலங்கையைக் கடந்து தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்து செல்லக் கூடியனவாக உள்ளன. சில பறவைகள் குடிபெயரும் போது 7 – 10 நாட்கள் எங்கும் தரித்து நிற்காது பயணத்தை மேற்கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ளன’ என்கிறனர் பறவையில் நிபுணர்கள்.

வருடாந்தம் சுமார் 250 பறவைகள் இலங்கைக்கு குடிபெயர்ந்து வருகின்றன. இப்பறவைகள் பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர், ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் வருகை தருவதோடு மார்ச், ஏப்ரல் வரையும் இங்கு தங்கி இருக்கும். அதன் பின்னர் அவற்றின் பூர்வீக இடங்களுக்கு திரும்பி விடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்பத் செனவிரத்ன சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள், இமாலயம், அவுஸ்திரேலியா போன்ற பிரதேசங்களில் இருந்துதான் இலங்கைக்கு குடிபெயரும் பறவைகள் வருகை தருகின்றன. இப்பறவைகள் பிரதானமாக மூன்று வழிகள் ஊடாக நாட்டுக்குள் வருகை தருவதாக குறிப்பிடுகின்ற பறவையியல் நோக்குனர் பியல் மாரசிங்க, அவற்றில் ஒன்று வடபகுதியின் ஊடாக வருகை தருதல், இரண்டு காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக வருதல், மூன்று திருகோணமலை பிராந்தியத்தின் ஊடாக வருகை தருதல் ஆகியனவே அந்த மார்க்கங்கள் என்கின்றார்.

இவ்வாறு வருகை தரும் குடிபெயரும் பறவைகள் உள்நாட்டிலுள்ள நீர்நிலைகளுக்கு அருகிலும் சதுப்பு நிலப்பகுதிகளிலும் பெரிதும் தங்கி இருக்கும். ஒரு சில பறவைகள் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாறிமாறி தங்கி இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குடிபெயரும் பறவைகள் தம் பூர்வீக வாழிடங்களில்தான் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் என சில பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை ஒரு சில பறவைகள் குடிபெயர்ந்து தங்கி இருக்கும் பிரதேசங்களில் இனப்பெருக்கத்தை மேற்கொண்டு தம் இளம் உயிரிகளுடன் பூர்வீக இடத்துக்கு திரும்பிச் செல்வதாக வேறு சில பறவையியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குடிபெயரும் பறவைகளின் இறப்பு அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1.40 இலட்சம் முதல் 3.28 இலட்சம் பறவைகள் காற்று விசையாழிகள் மூலமாக உலகெங்கிலும் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதை விடவும் பெரிய ஆபத்து காற்றாலைகள் மற்றும் அதனுடன் இணைந்த மின்வழங்கல் முறைகளால் பறவைகளின் வாழ்விடங்களை மனிதன் அழித்து விடுவதாகும் என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.

அத்தோடு குடிபெயரும் பறவைகளை வேட்டையாடுதலும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. அவற்றின் வாழிடங்களை அழித்தல் போன்ற நடவடிக்கைகளும் அதிகளவில் இடம்பெறுகின்றன. இவை குடிபெயரும் பறவைகளுக்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளன.

குடிபெயரும் பறவைகளையும் அவற்றின் இருப்பிடங்களையும் பாதுகாப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்தான் 2006 முதல் மே 08 ஆம் திகதி உலக குடிபெயரும் பறவைகள் உலக தினமாகப் பிரகனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே குடிபெயரும் பறவைகளின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பங்களிப்பதன் அவசியம் உலகளாவிய ரீதியில் உணரப்பட்டிருப்பது தெளிவாகின்றது. அதனால் பறவைகளைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் பங்கெடுத்து கொள்வது அவசியம்.

-தினகரன்
2021.05.08

Tags: