5,600 கி.மீ தூரம்; ஐந்தே நாளில் பயணம்!

துரை.நாகராஜன்

டப்பெயர்வானது பறவை இனங்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாக இருக்கின்றது. ஆனால் அவற்றின் வலசைப் (குடிபெயரும் ) பாதைகளில் மனிதர்களால் ஏற்படும் மாற்றங்கள் அவற்றின் வாழ்வைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி அதிகம் பாதிக்கப்பட்டது இந்த அமூர் வல்லூறு.

தெற்கு ஆசியாவிலிருந்து தெற்கு ஆப்பிரிக்கா வரை பயணித்துவிட்டு மீண்டும் திரும்பி தெற்கு ஆசியாவிற்கே வருகை தரும் அளவுக்குத் திறன்படைத்தது இந்தப் பறவை. இதன் மொத்தப் பயணதூரம் 5,600 கிலோமீட்டர்கள். அதுவும் ஐந்தே நாள்களில்! யாரால் முடியும்? அமூர் வல்லூறால் முடியும். முதலில் கிழக்கத்திய சிவப்புக் கால் வல்லூறு (Eastern Red footed Falcon) என்றுதான் இது அழைக்கப்பட்டது. பின்னர் அது மாறிவிட்டது. வட கொரியாவிலிருந்து ரஷ்ய-சீன எல்லையில் அமைந்திருக்கும் அமூர் நதிவரை இதன் வாழிடமாதலால் அமூர் வல்லூறு என்று தற்போது அழைக்கப்படுகிறது. 2012-க்கு முன்புவரை இந்த வேட்டையாடிப் பறவை அதிகம் கவனிக்கப்படாமலே இருந்தது. ஆனால், அந்த ஆண்டில்தான் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் பறவை ஆய்வாளர்களின் பார்வைக்கு வந்தன. நாகாலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 1,20,000 முதல் 1,40,000 பறவைகள் வரை அவற்றின் சுவையான மாமிசத்துக்காகப் பொறிவைத்துப் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையறிந்த பின் நவம்பர் 2013-ல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானிகள், வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம், இடம்பெயரும் உயிரினங்களுக்கான ஆய்வகம், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழலுக்கான அமைப்பு, நாகாலாந்து வனத்துறை ஆகியவை இணைந்து அமூர் வல்லூறுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதன்படி 2013 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாகக் கண்காணித்தனர். முதல் ஆண்டு மூன்று வல்லூறுகளும், 2016-ம் ஆண்டு நவம்பரில் ஐந்துமாக, மொத்தம் எட்டு பறவைகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. அதன் உதவியுடன் அவற்றின் பயணத்தை ஆய்வுசெய்தார்கள்.

அந்த ஜி.பி.எஸ் வசதிகளில் சில சிக்கல்களும் உள்ளன. செயற்கைக்கோள் டிரான்ஸ்மிட்டருடன் இணைக்கப்பட்டுள்ள அமூர் வல்லூறுகள் மட்டுமே உயிர் பிழைத்ததாக கருதப்படும். சில நேரங்களில் டிரான்ஸ்மிட்டர்கள் செயலிழந்து போகலாம். அப்போது பறவைகள் இருக்கும் இடங்களைக் கண்டறிவது மிகவும் கடினமானதாக இருக்கும். சில பறவைகள் இறந்து போனாலும் டிரான்ஸ்மிட்டர்கள் வேலை செய்யாது. இருப்பினும் அவற்றைப் பாதுகாப்பதற்குமுன் அவற்றின் வழித்தடத்தையும் வாழ்வியலையும் அறியவேண்டும். ஓரிரு நாள்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் இந்தப் பறவைகளைக் கண்காணிக்க இதைவிட்டால் வேறு வழி கிடையாது.

அவற்றில் முதலில் கிளம்பியது பங்டி என்று ஆய்வாளர்களால் பெயரிடப்பட்ட ஒரு வல்லூறுதான். 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி கிளம்பிய பங்டி அஸ்ஸாம்-மணிப்பூர்-நாகாலாந்து எல்லையிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கியது. அதற்கு அடுத்த நாள் நாகாவும், 13-ம் தேதி வோகாவும் கிளம்பின. மூன்றுமே பங்களாதேஷைத் தென்கிழக்கு திசையில் பறந்தவாறு கடந்து வங்காள விரிகுடாவை அடைந்தன. நிற்காமல் தொடர்ச்சியான பயணத்தில் அவை கடலுக்குமேல் சுமார் 1300 கி.மீ தொலைவைப் பறந்து கடந்தன. பங்டியும், வோகாவும் விசாகப்பட்டினம் வந்து ஓய்வெடுக்கத் தரையிறங்கின. நாகா கிருஷ்ணா நதியைக் கடந்து மசூலிப்பட்டினத்தில் ஓய்வெடுக்க இறங்கியது. இவையனைத்தும் அமூர் வல்லூறுகள் கிளம்பிய ஒரே நாளில்.11-ம் தேதி கிளம்பிய பங்டி 12-ம் தேதியும், 13-ம் தேதி கிளம்பியவை 14-ம் தேதியுமாகத் தென்னிந்தியாவை அடைந்தன. அதுவும் வங்காள விரிகுடா வழியாக. அங்கிருந்து மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கிய பறவைகள் கோவா வழியாகப் பயணித்து ஐந்து நாள்கள் பத்து மணிநேரம் தொடர்ச்சியாகப் பறந்தன. அப்படியாக மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பறந்து ஆப்பிரிக்க கண்டத்தில் சோமாலியாவைச் சென்றடைந்தன. பங்டி அங்குச் சென்றடைந்த தேதி நவம்பர் 16. இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு மாநிலத்திலிருந்து ஆப்பிரிக்காவுக்குச் சென்று மீண்டும் அங்கிருந்து இங்கு வந்துகொண்டிருக்கின்றன. இவற்றின் பயணம் வலசைப் பறவைகளிலேயே மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியர்களால் ‘சிறப்பு விருந்தாளிகள்’ என்று அழைக்கப்படுகின்றன இந்த அமுர் வல்லூறுகள். வழக்கமாக வடகிழக்கு இந்தியாவுக்கு நவம்பர் முதல் வாரத்தில் வந்து சில நாட்கள் ஓய்வெடுத்து மீண்டும் பயணிக்கத் தொடங்கும். இந்த ஆண்டு கொஞ்சம் முன்பாகத் தற்போதே வருகை தரத் தொடங்கிவிட்டன. சென்ற வாரம், நாகாலாந்தில் உள்ள பெரன் மாவட்டத்தில் பாராக் பள்ளத்தாக்கை அவை வந்தடைந்தன. திமாபூர் வனவிலங்கு அதிகாரி கரோலின் கே அன்காமி மற்றும் வோகா மண்டல வனத்துறை அதிகாரி ஜூத்னுலோ பாட்டான் ஆகியோர் பெரன் பள்ளத்தாக்கில் உள்ள பாரக் பள்ளத்தாக்கில் அமூர் வல்லூறுகளின் வருகையை உறுதி செய்திருக்கின்றனர். இளைப்பாறிக் கொண்டிருந்த அவற்றைப் பதிவுசெய்யக் காட்டுயிர் ஒளிப்படக்காரர்களின் வருகையும் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு அமூர் வல்லூறுகளின் முதல் புகலிடமாக நாகலாந்து என வனவிலங்குத் துறை தெரிவித்திருக்கிறது.

அமுர் வல்லூறு நாகாலாந்தில், வோக்கா மாவட்டத்தில் உள்ள டோயாங் பகுதியில் உள்ள பங்கி கிராமத்தில், ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும், ஒரு மாதத்திற்கும் மேலாகச் செலவிடும். அந்தக் காலகட்டத்தில், அவை அங்குள்ள பூச்சி புழுக்களையும், சிறிய பறவையினங்களையும் உணவாக உட்கொண்டு, மீண்டும் பல ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள தென் ஆப்பிரிக்காவுக்குத் தங்கள் பயணத்தைத் தொடங்கும். 2013-ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் சர்வதேச பல்லுயிரியல் ஆய்வாளர்களால் ‘வல்லூறுகளின் தலைநகரம்’ என்று அறிவிக்கப்பட்டது. அங்கிருக்கும் ஒரு வனவிலங்கு அதிகாரியின் தகவல்படி இந்த ஆண்டு லாங்லெங் (Longleng) என்ற மாவட்டம் வழியாக நாகாலாந்துக்குள் நுழைந்திருக்கிறது.

இடப்பெயர்வானது பறவை இனங்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாக இருக்கின்றது. ஆனால் அவற்றின் வலசைப் பாதைகளில் மனிதர்களால் ஏற்படும் மாற்றங்கள் அவற்றின் வாழ்வைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி அதிகம் பாதிக்கப்பட்டது இந்த அமூர் வல்லூறு. இத்தகைய சிக்கல்களை பல்வேறு பறவைகள் எதிர்நோக்கி நிற்கின்றன. வலசைப் பறவைகளின் வாழிட சிக்கல்களைப் புரிந்துகொண்டு அதன் பாதைகளைப் பாதுகாத்து வைக்க முயற்சி எடுக்கும் ஒவ்வொருவரும் பறவைகளின் மீட்பரே!

Tags: