பிரதமர் மோடியை எப்படி மன்னிக்க முடியும்?

-எஸ்.ஜி.ரமேஷ்பாபு
சி.பி.ஐ(எம்) கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

ருத்துவமனைகள் பெருந்தொற்று நோயாளிகளாலும், சவகிடங்குகள் பிணங்களாலும், அணையா பெருந்தீயுடன் சுடுகாடுகளும் மூழ்கிக்கிடக்கும் ஒரு அவல காலத்தில் இதை எழுத நேர்கிறது. பெருந்தொற்றால் உடல் சுற்றப்பட்ட தாயை, தமக்கையை, சோதரனை, மகனை, மகளை தூரத்திலிருந்து பார்த்து அழுவதை தவிற வேறெதும் செய்ய இயலாத ஆற்றாமையால் விம்மி வெடித்தழுகிறது மனம். இணைய பெருவெளியெங்கும் மரண அறிவிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. முகநூலில் மனதும் விரல்களும் நடுங்க நடுங்க மரண செய்திகளுக்கு பின்னூட்டம் இடவேண்டியிருக்கிறது. பொறுப்பற்றவன் கையில் கிடைத்த தீப்பெட்டியால் நகரங்கள் பற்றி எரிவதை பார்த்துக்கொண்டே நாட்கள் கடந்து செல்கிறது. பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதைவிட அதை வைத்து அரசியல் நடத்தும் ஒரு சர்வாதிகார மத்திய ஆட்சியின் அகங்கார பிடியில் மக்கள் பயத்துடனும், விரக்தியின் விளிம்பிலும் நிற்கின்றனர்.

2020 ஆம் ஆண்டில் பெருந்தொற்றுநோயின் முதல் அலை இந்தியாவே அஞ்சும் அளவுக்கு மோசமாக பாதிக்கவில்லை என்றாலும், மோடியின் அரசாங்கத்தால் சில மணிநேர அறிவிப்புடன் செய்யப்பட்ட பொது முடக்கம் பொருளாதாரத்தை அதிர்ச்சியளிக்கும் முறையில் வீழ்ச்சியடைய செய்தது. கடந்த ஆண்டு உலகின் மிக மோசமான பொருளாதார செயல்பாட்டில் இந்தியாவும் இருந்தது. இந்திய பொருளாதாரம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.5 சதவீதம் சுருங்கியது. 2020 அக்டோபரில் வீட்டு வருமானம் முந்தைய ஆண்டை விட 12சதவீதம் குறைவாகஇருந்தது, அதே நேரத்தில் தொழிலாளர் பங்களிப்பு 2020 ஜனவரியில் 43சதவீதம் ஆக இருந்து நவம்பரில் 40சதவீதம் ஆக குறைந்தது, வேலையின்மை விகிதங்கள் உயர்ந்தன. பொருளாதாரச் சுமை ஏழைகள் மீது மொத்தமாய் விழுந்தது.

நடைபாதையில் மரணமடைந்து விழுந்தவர்களை மத்தியஆட்சியாளர்கள் ஏளனமாக பார்த்து நகைத்தனர். ஆனால்கடந்த ஆண்டை விட நாடு மிகவும் மோசமான சுகாதார நெருக்கடியுடன் மல்யுத்தம் செய்து வருவதால், இம்முறைநடுத்தர வர்க்க இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அடிப்படை மருத்துவ சேவையை உறுதி செய்வதற்காக தங்கள் வாழ்க்கை சேமிப்பை இழக்கும் கட்டாயத்தில் உள்ளனர். ‘மோடியை எப்படி மன்னிக்க முடியும்?’ இந்த தலைப்புடன் கடந்த மே 7 தேதிபுகழ்பெற்ற ‘டைம்’ இதழில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. 2014 தேர்தலில் மோடியை கொண்டாடிய நடுத்தர வர்க்கம் பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் மோடிக்கு எதிராகதிருப்பக்கூடும் என்ற செய்தியை ஆதாரத்துடன் அலசுகிறது அந்த கட்டுரை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகளை அனுபவித்தவர்கள், ஆனால் அது தேசிய நலனுக்காக என்று தங்களை நம்பிக் கொண்டவர்கள், இந்தக் கொள்கைகள் குறித்த தங்கள் புரிதலை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ள காலமாய் பெருந்தொற்று இரண்டாவது அலை காலம் உள்ளது.

இந்தியா தற்போது உலகின் மிக மோசமான கோவிட் -19 வெடிப்பின் மத்தியில் உள்ளது. நாளொன்றுக்கும் நான்காயிரம் மரணங்கள் செய்திகளாகின்றன. இந்தியாவில் இதுவரை 2,42,362 கோவிட் -19 இறப்புகள் பதிவாகி உள்ளன. இது உலகின் மூன்றாவது அதிக இறப்பு எண்ணிக்கை. மருத்துவமனைகள் ஒட்சிசனின் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், மருத்துவ ஒட்சிசன் கிடைப்பதையும் விநியோகிப்பதையும் மதிப்பிடுவதற்காக உச்சநீதிமன்றம் 12 பேர்கொண்ட தேசிய பணிக்குழுவை அமைத்துள்ளது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் ஜூன் 11 க்குள் சுமார் 404,000 இறப்புகள் ஏற்படும் என்று பெங்களூருவில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்’ குழு கணக்கிட்டதை தி ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை அதிகரிக்கிறது.

தடுப்பூசி அரசியல்
கோவிட் எதிர்ப்பு போரில் மிக முக்கிய ஆயுதமாக தடுப்பூசி தேவைப்படுகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கும்போது இந்தியாவில் மேலும் பல கோடி தடுப்பூசி தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கவும், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, தடுப்பூசி உற்பத்தியை பெருக்க உற்பத்தி நிறுவனங்களான சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ரூ.4,500 கோடி தர மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எந்த வங்கி உத்தரவாதமும் இன்றி இந்த நிதி முன்பணமாக வழங்கப்பட உள்ளது. இதில், சீரம் நிறுவனத்திற்கு ரூ.3,000 கோடியும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடியும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், ஜூலைக்குள் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, ஒரு டோஸ் ரூ.150 என்ற விலையில் சீரம் நிறுவனம் 20 கோடி டோஸ், பாரத் பயோடெக் 9 கோடி டோஸ் தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்கும் என ஒப்பந்தமானது.

ஆனால் சில நாட்கள் கடந்ததும் மாநில அரசுகளுக்கு ரூ.400 விலைக்கும் தனியாருக்கு ரூ.600 விலைக்கும் மத்திய அரசுக்கு ரூ.150 விலைக்கும் கொடுக்கப்போவதாக மிகவும் திமிருடன் தானே விலையை தீர்மானித்து சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனாவாலேயால் அறிவிக்க முடிகிறது என்றால் இது யார் ஆட்சி என்ற சந்தேகம் எழுவது இயல்புதானே! கொத்துக்கொத்தாய் மக்கள் சாகும் போதுகூட தடுப்பூசி நிறுவனங்களை அரசுடமையாக்க மோடியால் முடியாது என்பதுமட்டுமல்ல, இமாச்சலப் பிரதேசத்தில் மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (சிஆர்ஐ), பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகம் (பி.சி.ஜி.வி.எல்), பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (பிஐஐ) மற்றும் தமிழ்நாட்டில் எச்.எல்.எல் பயோடெக், பாரத நோய்த்தடுப்பு மற்றும் உயிரியல் கழகம் லிமிடெட், உத்தரப்பிரதேசம், ஹாஃப்கின் பயோ-ஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட், மகாராஷ்டிரா மற்றும் மனித உயிரியல் நிறுவனம், தெலுங்கானா ஆகிய 7 பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்தவும் தயாரில்லை. எந்த வங்கி உத்தரவாதமும் இன்றி 4500 கோடி நிதியை தனியார் முதலாளிகளுக்கு முன்பணமாக கொடுக்கும் மோடி அரசு இந்த பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பு மருத்து தயாரிக்க ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை.மார்ச் மாத ‘மிண்ட்’ ஆங்கில இதழில் வந்த செய்திபடி இங்கிலாந்தில் 25 ஆயிரம் சதுர அடியில் 5 ஆயிரம் கோடி மதிப்பில் மே பைர் ஹோட்டல் நிறுவனத்திடமிருந்து சீரம் நிறுவன உரிமையாளர் ஆதார் பூனாவாலே சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். பெரும் நோய் தொற்றை பயன்படுத்தி பணம் குவிக்கும் செய்திகளுக்கு இந்த ஒரு ஆதாரம் போதும்.

உரிமைகள் முடக்கம்
இந்த நெருக்கடி நிலை காலத்தில்கூட மக்கள் உரிமைகளை கேள்வியாக எழுப்புவது மிகவும் சிக்கலான அரசியல் செயல்பாடாய் மாறிக்கொண்டிருக்கிறது. முதல் அலையின் போது பொது முடக்கத்தையொட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிதி உதவி தொகுப்பு ஒரு வெற்று கூச்சலாய் அமைந்தது. அதை கேள்வி கேட்ட அனைவரும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தினர். முன்பே பிரதமர் நிவாரண நிதி அமைப்பு இருக்கும் போது பி.எம் கேர்ஸ் என்ற தனி அரசு சாரா அமைப்பை துவக்கி நிவாரண நிதி பணத்தை மடை மாற்றினர். இதுவும் பாஜக கட்சியின் ஐவர் குழுவால் நிர்வாகிக்கும் அமைப்பாக மாறியது. இதையும் கேள்வி கேட்க முடியாத சூழல் ‘தேச பக்தி’ என்ற பெயரால் உருவாக்கப்பட்டது.

2012 முதல் 2018 வரையிலான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக தரவை யாரும் பார்க்க முடியாமல் அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதுதான் பண மதிப்பிழப்பில் நடந்த பேரழிவை உணர்த்த முக்கிய மையம். ஆனால் தரவுகளை மூடி மறைத்ததன் மூலம் தனது தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது. அரசை கேள்வி கேட்கும், விமர்சிக்கும், நல்ல ஆலோசனைகளை சொல்லும் முகநூல், டிவிட்டர் பக்கங்கள் உடனடியாக முடக்கப்பட்டன. இப்போதும் முடக்கப்படுகிறது.

மோடியை கேள்வி கேட்பவர்கள் தேசத்தை கேள்விகேட்பவர்களாக புனையப்படுவது பாசிச சித்தாந்த வெளிப்பாடு.நாட்டின் அமைப்புசாரா துறையில்தான் 90 சதவீத இந்திய மக்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு எந்த விதமான சட்டரீதியான பாதுகாப்பும் இல்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு சட்ட பாதுகாப்பும் கிடையாது. சமூகத்தின் ஏழ்மையான இந்த மக்கள்தான் எந்தவொரு பொருளாதார ஏற்றத் தாழ்வுகளாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்கள் தினசரி, வாராந்திர கூலி மற்றும் மாத ஊதியம் பெற்று, அதில் தான் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். திடீரென்று வருமானம் நின்றுபோய்விட்டால், அதை சமாளிக்க அவர்களிடம் சேமிப்பு எதுவும் இருப்பதில்லை. இவர்கள் கொத்துத்கொத்தாய் செத்து விழுந்தாலும் கேள்வி கேட்க நாதியில்லை என்ற நிலைதான் பெரும்பாலான மாநிலங்களில் நிலைமை உள்ளது.

தெற்கிலிருந்து எழும் வெளிச்ச கீற்று
பிரேசில் நாட்டைவிட அதிக மக்கள் தொகையை கொண்ட பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் மாட்டு சாணி குளியலும், கோமிய பிரசாதமும் கோவிட் நோயின் எதிர்ப்பு ஆயுதமாக கொண்டாடப்படுகிறது. மாடுகளுக்கு இருக்கும் மதிப்புகள்கூட அங்கு மனிதர்களுக்கு இல்லை. எனினும் தெற்கிலிருந்து கேரளம் ஒரு வெளிச்சக்கீற்றாய் எழுந்து நிற்கிறது. மக்களை நேசிக்கின்ற ஒரு அரசாங்கமாய், ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு முன் மாதிரியாய், சாலையில் கிடக்கும் எளிய உயிர்களுக்குகூட இரங்கும் மனதாய் இடது ஜனநாயக முன்னணி அரசு எழுந்து நிற்கிறது. கேரள மாநிலத்தை அடுத்தடுத்துத் தாக்கிய இயற்கைப் பேரிடர்களை, 2017இல் ஒக்கி புயல், அதனைத் தொடர்ந்து அதீதமான அளவில் பெய்த மழை வெள்ளம், 2018 மற்றும் 2019இல் ஏற்பட்ட மண்சரிவுகள், 2018இல் நிபா வைரஸ் நோய் தாக்குதல் மற்றும்2020-21இல் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவல் என அனைத்தையும் சமாளித்து மக்களை காக்கும் பணியை செய்வதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் தயாரிப்பில் முதலிடத்திலும் நிற்கிறது.

இதுதான் மக்களுக்கான மாதிரி அரசாங்கம். கோவிட் கால நம்பிக்கை ஒளியை ஏற்ற இத்தகைய செய்திகளை முன்னெடுத்து செல்வோம். நம்பிக்கையும் பரஸ்பர அன்பையும், ஒத்துழைப்பையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வோம். மனித சமூகம் எப்போதும் ஒன்றுபட்டு எழுந்து நிற்கும் என உரத்து கூறுவோம்.

-தீக்கதிர்
2021.05.15

Tags: