ஆயிரம் கதைகளின் நாயகன்….

– எஸ்.ராமகிருஷ்ணன்

ழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார். நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அனைவரும் காத்திருந்த வேளையில் இந்த மண்ணுலகவாழ்வு போதும் என்று உதறி விடைபெற்றுவிட்டார்.

விவசாயிகள் அப்படித்தான் பெரியதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். இளவயதிலே காசநோயாளியாகச் சாவின் விரல்கள் தன் மீது படருவதைச் சந்தித்து மீண்டவர் என்பதால் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது வாழ்க்கை என்றே சொல்லுவார்.

இந்த வாழ்க்கையைத் தேனை ருசித்துச் சாப்பிடுவது போலத் துளித்துளியாக அனுபவித்து வாழ்ந்தார்.

கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் அவரைப் போல விரிவாக எழுதியவர் எவருமில்லை..

மக்களின் பேச்சுமொழியை இலக்கியமொழியாக மாற்றியவர் கிரா. அவரது பேச்சிற்கும் எழுத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. மனிதர்களைப் போலவே நிலமும் நினைவுகள் கொண்டது. கரிசல் நிலத்து வாழ்க்கையின் அழியாத நினைவுகளை அடையாளம் கண்டுவெளிப்படுத்தும் கதைசொல்லியாகக் கிரா விளங்கினார்.

அவரது கதைகளில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் அசலானவை. மண்ணிலிருந்து பிறந்தவை.ஊரை நினைவு கொள்ளுவது என்பது வெறும் ஏக்கமில்லை. ஒரு வாழ்க்கை முறையை, தனித்துவத்தை. இயற்கையை இழந்துவிட்டதன் வெளிப்பாடு.

அவரது பேச்சிலும் எழுத்திலும் உணவு முக்கியமான அம்சமாக இருந்தது. அதைப்பற்றிப் பேசாமல், எழுதாமல் அவரால் இருக்கமுடியாது.

காரணம்பசியும் ருசியும் தானே கிராமத்து வாழ்க்கையின் ஆதாரம்.

நாட்டுப்புற கதைகளை இலக்கியமாக யாரும் அங்கீகரிக்காத காலத்திலே அவற்றைத் தேடித் தொகுத்து ஆய்வு செய்தவர் கிரா. அது போலவே கரிசல் வட்டார சொற்களுக்கென ஒரு அகராதியினைத் தொகுத்திருக்கிறார். தமிழில் அது ஒரு முன்னோடி முயற்சியாகும்.

மின்சாரம், தேயிலை, டார்ச்லைட், மோட்டார்பம்ப், டிராக்டர், கிராமபோன், கார், தந்தி, தொலைபேசி எனத் துவங்கி கிராமத்திற்குள் வருகை தந்த புதிய விஷயங்களை, அதனால்ஏற்பட்ட வாழ்க்கை மாற்றங்களை, சுதந்திரப்போராட்ட கால நினைவுகளை, தென்தமிழக அரசியல் பொருளாதார மாறுதல்களைத் தனது படைப்பில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

மாற்றத்தை வரவேற்பதும் அதன் விளைவுகளை அடையாளம் காணுவதும் நவீனத்துவத்தின் முக்கிய அம்சம். அந்த வகையில் நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்கக் குரலாகவே கி.ரா ஒலித்தார்.

குடும்பத்தில் ஒரு நபர் என்றொரு சிறுகதையைக் கிரா 1963ல் எழுதியிருக்கிறார்.

தொட்டண்ணன் என்ற கரிசல் விவசாயி காளை மாடு ஒன்றை வைத்திருக்கிறான். அது தான் அவனது சொத்து. இரவல் மாடு ஒன்றை வாங்கிஇந்த இரண்டினையும் பூட்டி ஏர் உழுது விவசாயம் செய்கிறான். அந்த மாட்டினை கணவனும் மனைவியும் தங்களின் பிள்ளை போலக் கவனிக்கிறார்கள். ஒரு நாள் அந்த மாடு நோயுறுகிறது.

நாட்டுவைத்தியரிடம் மருந்து வாங்கித் தருகிறார்கள்.

ஆனால் குணமடையவில்லை. பக்கத்து டவுனில் உள்ள வெட்னரி டாக்டரை அழைத்து வரப்போகிறான் தொட்டண்ணன் கிராமத்திற்கு வந்து சிகிச்சை செய்ய ஜீப் வசதியில்லை என்றுகாரணம் சொல்லி மருத்துவர் வரமறுத்துவிடுகிறார். ஏமாற்றத்துடன் தொட்டண்ணன் ஊர் திரும்பும் போது மாடு இறந்துவிட்ட செய்தி கிடைக்கிறது.

தொட்டண்ணனும் அவன் மனைவியும் அழுது புலம்புகிறார்கள். தங்கள் சொந்த நிலத்திலே மாட்டைப் புதைக்கிறார்கள். இப்போது உழுவதற்கு அவனிடம் மாடில்லை. வேறுவழியின்றி அவனே மாடு போல நுகத்தடியை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டு உழவு செய்யப்போகிறான்.

இதைக் கண்ட அவன் மனைவி கண்ணீருடன் தலைகவிழ்ந்து இருப்பதாகக் கதை முடிகிறது.

விவசாயியின் துயரத்தை அழுத்தமாகச் சொல்லிய இந்தப் படைப்பு வெளியாகி ஐம்பத்தியெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கிறது. ஆனால் விவசாய வாழ்க்கை இன்றும் மாறவேயில்லை.

கைவிடப்பட்ட கிராமத்து விவசாயிகளின் உரிமைக்குரலாகவே கிரா எப்போதும் ஒலித்தார்.கிராமத்தை அவர் சொர்க்கமாகக் கொண்டாடவில்லை.

அங்கு நிலவும் சாதியக் கொடுமைகள். நிலஉரிமையாளர்களின் கெடுபிடிகள். தீண்டாமை, பெண்களின் மீதான ஒடுக்குமுறைகள். கிராமியக் கலைஞர்களின் வீழ்ச்சி. அரசாங்க அதிகாரிகளின் அலட்சியம் எனக் கிராமம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளையும் துல்லியமாகத் தனது படைப்பில் விவரித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளின் போதுஅவரைக் காணுவதற்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அவரது ஆசிகளைப் பெற்றேன்.

அன்று தான் எழுத இருக்கும் ஒரு நாவலின் கதையைப் பகிர்ந்து கொண்டார்.

சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் கிருஷ்ணர் பிறந்த மதுராவில் இருந்த கோசாலைகளில் அதிகமான பசுகள் சேர்ந்துவிட்டன. ஆகவே அவற்றைப் பராமரிக்க முடியாமல் ஒரு கூட்ஸ் ரயிலில் ஏற்றி தெற்கே அனுப்பி வைக்கிறார்கள். அப்படிக் கரிசல் நிலத்திற்கு வந்து சேரும் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வதற்காக ஒரு இளைஞனை நியமிக்கிறார்கள். அந்தப் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் இளைஞனின் வாழ்க்கையை. அவனுக்கு உதவி செய்த ஒரு பெண்ணைப் பற்றிய கதையைச் சொல்லிக் கொண்டே போனார்.

எழுதி முடித்த ஒரு நாவலைப் பற்றிப் பேசுவது போலவே இருந்தது.

இதை எல்லாம்எழுதிவிட்டீர்களா என்று கேட்டேன். எழுத வேணும். இப்படி ஆயிரம் கதைகள் மனதில்இருக்கிறது. இருக்கிற வரைக்கும் எழுதிக்கிட்டே இருக்க வேண்டியது தானே என்று உற்சாகமாகச் சொன்னார்.

இந்த உற்சாகம் அபூர்வமானது.

முதுமையில் பலரும் நினைவு தடுமாறி சொந்தபிள்ளைகளின் பெயர்களை மறந்துவிடுகிறார்கள். நடக்க முடியாமல் படுக்கையில் கிடக்கிறார்கள். தனது உடல்நிலையைப் பற்றியே சதா புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் கிராவிடம் கிடையாது.இதற்கு ஒரே காரணம் அவரது இலக்கியப் பரிச்சயம் மற்றும் வாழ்க்கையிடமிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடங்கள். அவரது வலிமையான மனவுறுதி.

பெருந்துயரங்களைக் கடந்துவந்த துணிச்சல் முதுமையிலும் உற்சாகமாக நாட்களை கழிக்கச் செய்தது. அதனால் தான் தனது 98 வயதிலும் நாவல் எழுதிவெளியிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களிலும் அவர் எழுதிக் கொண்டு தானிருந்தார். உண்மையில் அது ஒரு கொடுப்பினை. எழுத்தாளர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கே இப்படியான வாழ்க்கை அமையும்.

கிராவின் சிரிப்பு அலாதியானது. மழைக்குப் பின்பு வரும் வானவில் போல யோசனைக்குப் பிறகு அவர் முகத்தில் சிரிப்பு துளிர்ப்பதைக் கண்டிருக்கிறேன்.

சொந்தவாழ்க்கையின் நெருக்கடிகளைப் பற்றி ஒரு போதும் அவர் பேசியதில்லை. பெரிய வீடு கட்டி வசதியாக வாழவேண்டும் என்ற கனவே அவரிடமில்லை. கடைசி வரை அரசு குடியிருப்பு ஒன்றில் தான் வாழ்ந்தார்.“இசையும் இலக்கியமும் துணையிருக்கும் மனிதனுக்குத் தனிமையைக் கண்டு ஒரு போதும் பயமிருக்காது” என்றே கிரா சொல்வார். அது உண்மை.

அவர் வாழ்க்கை முழுவதும் இசை கூடவே இருந்தது. முறையாகக் கர்நாடகசங்கீதம் கற்றுக் கொண்டவர் கிரா. ரேடியோவிலும் கிராமபோன் ரிக்கார்ட்டுகளிலும் சிறந்த இசையைக் கேட்டிருக்கிறார். தனது கடைசி நாட்களில் கூட அவர் நாள் முழுவதும் நாதஸ்வரம் கேட்டுக் கொண்டிருந்தார் என்கிறார்கள்.

கிராவின் இடைசெவலில் தான் நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் பெண் எடுத்திருந்தார். தங்கள் ஊர் மாப்பிள்ளை என்பதால் அருணாசலம் அவர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் கிரா. விளாத்திகுளம் சாமிகள் என்ற அபூர்வமான சங்கீதமேதையிடம் இசை பயின்றவர் கிரா.

கரிசல் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு உன்னதமான இசையை எங்கே போய்க் கேட்க முடியும். பறவைகளின் ஒலியும் மயிலின் அகவலும்தான் இசை. மண்ணின் இசையை ஆழ்ந்து உள்வாங்கி அந்த மனிதர்களுக்கு நாதஸ்வரம் தான் மண்ணின் இசையாக ஒலித்தது. மேளமும் நாதஸ்வரமும் இணைந்து அந்த மண்ணின் ஆன்மாவை வெளிப்படுத்தின.

இசைஞானி இளையராஜாவோடு கிராவிற்குநெருக்கமான நட்பும் தோழமையும் இருந்தது.இசை குறித்து அவர்கள் நிறைய உரையாடியிருக்கிறார்கள். தான் கேட்டு ரசித்த சங்கீதங்களைப் பற்றிக் கிரா பேசும் போது அவர் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அபூர்வமானது.

அந்த இசையின் அமுத துளிகளை நாமும் ருசிப்பது போலச் செய்துவிடுவார்.

இடதுசாரி இயக்கங்களுடன் நெருக்கமான தோழமை கொண்டிருந்த கிரா ரஷ்ய இலக்கியங்களின் மொழியாக்கங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்காக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்.

அந்த நாட்களில் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு விவசாய வேலைகளையும் பார்த்துதான் எவ்வாறு கஷ்டப்பட்டேன் என்று கிராவின்துணைவியார் கணவதி விரிவாக எழுதியிருக்கிறார். அதை வாசிக்கையில் கண்ணீர் கசிகிறது.

ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனதுகுடும்பச் சூழல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.இலக்கியவாசிப்பினையும் எழுத்தையும் அவ்வளவு சீக்கிரமாக வீடு அங்கீகரித்து விடுவதில்லை.

குடும்பப் பிரச்சனைகளின் காரணமாக இலக்கியம் படிப்பதை கைவிட்டவர்கள், எழுதுவதை நிறுத்திக்கொண்ட பலரை நான் அறிவேன். அரிதாகச் சிலருக்கே நல்ல துணையும் எழுதுவதற்கான சூழல்கொண்ட வீடும் அமைகிறது.

கிராவிற்கு அப்படியான துணையாக இருந்தார் கணவதி அம்மாள். விருந்தோம்பலில் அவர்களை மிஞ்ச ஆள் கிடையாது. அவர்கள் வீடுதேடிச் சென்று உணவு உண்ணாத படைப்பாளிகளே இல்லை என்பேன். கணவதி அம்மாளைப் பற்றிக் கிராவின் இணைநலம் என்றொரு நூல் வெளியாகியிருக்கிறது. அதில் அவர் கிராவின் எழுத்திற்கு எவ்வாறு பக்கபலமாக இருந்தார் என்பது விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

கோபல்லகிராமம் ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டும் கரிசல் வாழ்க்கையை உண்மையாகப் பதிவு செய்த அபூர்வமான படைப்புகள். இனவரலாற்றின் ஆவணமாகவும் இதைக் கருதலாம்.

கரிசல் நிலம்தேடி தஞ்சம் புகுந்த குடிகளின் கதையைச் சொல்லும் இந்தப்படைப்பு நூற்றாண்டின் கதையைச் சொல்கிறது. மங்கத்தாயாரு அம்மாளும் சென்னாதேவியும் மறக்கமுடியாதவர்கள். இந்த நாவலில் காலனிய ஆட்சியைக் கிராமம் எப்படி ஏற்றுக் கொண்டது என்பது பதிவாகியிருக்கிறது.

பள்ளிக்கூடம் சென்று படிக்காத கிரா புதுவைப்பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். அவர் புதுவைக்கு இடம்மாறி சென்றபோது ஊரே வியப்பாகப் பார்த்தது. ஆனால் பாரதியை புதுவை ஏற்றுக் கொண்டது போலவே கிராவையும் புதுவை மண் தனதாக்கிக் கொண்டது. தன் கடைசி நாள் வரை அங்கே தான் வாழ்ந்தார்.

புதுவையில் வாழ்ந்தபோதும் அவரது மனதும் நினைவுகளும் ஊரையே சுற்றி வந்தன. பந்தயப்புறாக்களை எங்கே கொண்டுபோய்விட்டாலும் தன் வீடு தேடி திரும்பிவிடும் என்பார்கள். அப்படித்தான் கிராவும் இருந்தார்.அவரது எழுத்தும் பேச்சும் ஊரைப்பற்றியதாகவே இருந்தது.

தனது சமகாலப்பிரச்சனைகள், அரசியல், பண்பாட்டு மாற்றங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்தார். அவரது படைப்பில் வரும் பெண்கள் வலிமையானவர்கள். குடும்பத்தைத் தாங்கிச் சுமப்பவர்கள். அளவில்லாத அன்பு கொண்டவர்கள்.

கிராமத்து மனிதர்களின் பலவீனங்களையும் அறியாமையையும் சஞ்சலங்களையும் வெளியுலகம் பற்றிய பயத்தையும் கிரா வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறார்

.தன்னைப் போலவே கரிசல் நிலத்திலிருந்து நிறைய இளம்படைப்பாளிகள் உருவாகக் கிரா காரணமாகயிருந்தார். அவரது முன்னெடுப்பில் கரிசல்கதைகள் என்ற தொகை நூல் வெளியானது. அதுவே கரிசல் எழுத்தாளர்கள் என்ற மரபு உருவாகக் காரணமாக அமைந்தது.

கடித இலக்கியங்களுக்கு அவரே முன்னோடி. தன் நண்பர்களுக்குள் தொடர்கடிதப்போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறார். ரிலே ரேஸ் போல மாறி மாறி கடிதங்கள் செல்வது வழக்கம். கரிசல்காட்டு கடுதாசி என அவர் விகடனில் எழுதிய தொடரின் வழியே கரிசல் நிலத்தின் மீது பெருவெளிச்சம் பட்டது. தமிழ் மக்கள் இந்த மண்ணையும் மக்களையும் அறிந்து கொண்டார்கள்.

வறண்ட கரிசல்நிலத்தை உயிர்ப்பான கதைகளின் விளைநிலமாக மாற்றியவர் கி.ரா. நினைவுகளைக் காப்பாற்றி அடுத்தத் தலைமுறையிடம் ஒப்படைப்பது இலக்கியத்தின் பணி. அதைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிரா செய்து கொண்டிருந்தார்.

கடவுள் விடுகின்ற பெருமூச்சைப் போல காற்றுவீசும் கரிசல் வெளி என்று தேவதச்சன் ஒரு கவிதையில் சொல்கிறார்.

அந்த மூச்சுக்காற்றை இசையாக்கியவர் கிரா. தனது படைப்புகளின் வழியே அவர் என்றும் நம்மோடு இருப்பார்.

Tags: