ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

பாலகிரி

சில விடயங்களை அல்லது நபர்களை நோக்கும்போது அவை அல்லது அவர்கள் எதிர் எதிரானவையாக அல்லது எதிரும் புதிருமானவர்களாக இருப்பது போலத் தோன்றும். அதற்குக் காரணம் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிராகப் போடும் கோசங்கள்தான். ஆனால் பெரும்பாலான விடயங்கள் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை. தோற்றத்தளவில் மட்டுமே அப்படி இருக்கின்றன.

ஒரு விடயத்தின் தன்மையை அளவிடுவதற்கு அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளை அல்லது கருத்துக்களை மட்டும் வைத்து அளவிட முடியாது. அவர்களது வார்த்தைகளை விட அவர்களது செய்கைகள் என்னவிதமான விளைவுகளை என்பதை ஆராய்ந்து பார்ப்பதே சரியான வழிமுறையாக – உரைகல்லாக இருக்க முடியும்.

உதாரணமாக, உருவத்தில் உண்மையான பொன் போலத் தோற்றம் அளிக்கும் ‘கிலிட்’ தங்கத்தை இனம் காண்பதற்கு பொற்கொல்லர்கள் அதை அதற்கென இருக்கும் உரைகல்லில் உரைத்துப் பார்ப்பது வழமை. ‘உரைகல்’ என்ற சொல்லே அங்கிருந்துதான் தோன்றியது.

இன்னொரு அரசியல் ரீதியான உதாரணத்தையும் இங்கு குறிப்பிடலாம். இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் மாறிமாறி இனவாதத் தீயைக் கக்கி வந்துள்ளனர். இவர்களால் 1958, 1977, 1982, 1983 ஆண்டுகளில் பல இனவன்செயல்களும் அரங்கேறி மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கும் உள்ளானார்கள்.

அது போதாதென்று சிங்கள இனவாதத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் ஆட்சிபீடம் ஏறியதும் தமிழ் மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட, மறுபக்கத்தில் தமிழ் இனவாதிகள் விடுதலை என்ற பெயரில் ‘விடுதலை’ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். அதன் காரணமாக 30 வருடப் போருக்குள் இலங்கை சிக்கி அனைத்து இன மக்களும் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாயினர்.

ஆனால் உண்மையில் சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் விரோதிகள் அல்லர். அந்த உண்மையை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் அன்றிலிருந்து இன்றுவரை நிலவி வரும் அந்நியோன்யமான உறவு நிரூபிக்கும். சாராம்சத்தில் இந்த இருவகை தீவிர இனவாதங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதே உண்மை.

அதேபோல, இப்பொழுது இலங்கையில் உருவாகியுள்ள சீன எதிர்ப்பையும் எடை போடலாம். இன்று இலங்கையில் சீன உதவியுடன் உருவாகி வரும் கொழும்பு துறைமுக நகருக்கு எதிராக கூச்சல் போடுபவர்கள் யார் யார் என்பதை எடுத்துப் பாருங்கள்.

ஒரு பக்கத்தில் வலதுசாரிக் கட்சிகளான ரணில் தலைமையிலான ஐ.தே.க., சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான முற்போக்கு கூட்டணி என்பன துறைமுக நகர நிர்மாணத்தை வைத்து சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

மறுபுறத்தில் தம்மை இடதுசாரிக் கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஜே.வி.பி., அதிலிருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்ட முன்னிலை சோசலிஸக் கட்சி என்பனவும், சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட சண்முகதாசன் கட்சியிலிருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்டு தற்பொழுது சி.கா.செந்தில்வேல் தலைமையில் செயற்படும் புதிய ஜனநாயக மார்க்சிஸ – லெனினிஸ கட்சி, அவர்களிடமிருந்து பிரிந்த மலையகத்தைச் சேர்ந்த இ.தம்பையா என்பவர் தலைமையில் உருவாகியுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் போன்ற அமைப்புகளும் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த இருவகையான வலதுசாரி – இடதுசாரி பிரிவினரும் சொல்லில்தான் எதிரும் புதிருமாக இருக்கின்றனர். ஆனால் உண்மையில், நடைமுறையில் – சீன எதிர்ப்பு, தற்போதைய அரசாங்க எதிர்ப்பு என்பனவற்றில் ஒரே இலக்கை நோக்கியே செயல்படுகின்றனர். இங்கேயும் தீவிர வலதுசாரித்தனமும் தீவிர இடதுசாரித்தனமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகத்தான் செயல்படுகின்றன.

எனவேதான் ஒருவருடைய சொல்லைவிட நடைமுறையை, அதன் விளைவை வைத்தே அவருடைய பாத்திரத்தை அளவிட வேண்டும் என மார்க்சிஸ ஆசான்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.

Tags: