அடிப்படைவாதத்தை மருத்துவர்கள் விட்டொழியுங்கள்!
மரபுசார் மருத்துவமும் நவீன மருத்துவமும் எதிரெதிர் பக்கம் நின்று மல்லுகட்டும் தமிழ்நாட்டில், எல்லா அறிவையும் உள்ளடக்கி சிந்திக்கக் கோரும் அரிதான குரல் சித்த மருத்துவர் கு.சிவராமன். மக்களிடம் இன்று நிலவும் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கும் நிதானமாகப் பதில் சொன்னார்.
இந்த மோதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மக்கள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், கிடைக்கும் எல்லா சக்திகளையும் நோய்க்கு எதிராக நாம் பயன்படுத்த வேண்டும். ‘சித்த மருத்துவம் எல்லாம் ஒன்றும் இல்லை’ என்று ஒருபுறமும், ‘கொரோனா என்ற கிருமியே இல்லை’ என்று மறுபுறமும் கத்திக்கொண்டிருப்பது நாம் எல்லாம் படித்தவர்கள்தானா என்ற கேள்வியையே எழுப்புகிறது.
கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்துக்கு என்று ஓரிடம் இருப்பதை உணர முடிகிறது. ஆனால், இதனுடைய வரம்புகள் என்ன?
நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நவீன மருத்துவம்சார் ஆய்வுகள் உலகளாவிய அளவில் பெரும் முதலீட்டில் நடக்கின்றன; சித்த மருத்துவம்சார் ஆய்வுகள் மிகச் சிறிய அளவில் நம்மூர் அளவில் நடக்கின்றன. உதாரணமாக, ‘ரெம்டெசிவிர்’ (Remdesivir) மருந்தை எடுத்துக்கொண்டால் பல ஆயிரம் கோடி முதலீட்டில் உருவாகும் மருந்து அது. இங்கு மொத்த சித்த மருத்துவத்தின் மொத்த சந்தையே ரூ.50 கோடிதான். இதில் சித்த மருத்துவத்தின் ஆராய்ச்சிக்கென்று நம் நாட்டில் ரூ.50 லட்சம் கொடுத்தாலே பெரிய விஷயம். இந்த எல்லைக்குள்தான் சித்த மருத்துவம் தன்னுடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகுப் பின்னணியில், இன்றைய நிலையில் ஆரம்ப நோயாளிகளை சித்த மருத்துவ முறையில் மிகச் சிறப்பாகக் கையாள முடிகிறது. தீவிர நோயாளிகளுக்கு ஆய்விலுள்ள சில மருந்துகள் பலன் தருவதைக் காண்கிறோம். ஆனால், எல்லோருக்கும் எல்லா நிலையிலும் தரும் நிலையை அந்த மருந்துகள் இன்னும் எட்டவில்லை. ஆக, தீவிர நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்துடன் நவீன மருத்துவமும் இணைந்த ஒருங்கிணைந்த சிகிச்சையோ அல்லது தனித்த நவீன மருத்துவச் சிகிச்சையோ அவசியப்படுகிறது. அதே சமயம், கொரோனாவுக்குப் பிறகு தொய்வடையும் நுரையீரலை மேம்படுத்துவதில் சித்த மருத்துவம் நல்ல பலன் தருகிறது.
மரபுசார் மருத்துவத்துக்கு எதிராகப் பேசக்கூடியவர்கள் எல்லோருமே மாற்று மருத்துவ முறைகள் அறிவியல் பூர்வமானதில்லை என்றே வாதிடுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தக் காலகட்டத்தில் மட்டும் கபசுரக் குடிநீர் தொடர்பாக 19 ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொன்னால், ‘நேச்சர் இதழில் பிரசுரமாகியிருக்கிறதா?’ என்று அடுத்த கேள்வி கேட்பார்கள். நான் முன்னரே சொன்னதுதான். நிதியும் கட்டமைப்பும் உருவாக்கியிருக்கும் எல்லைக்குள் எவ்வளவு சாத்தியப்படுமோ அத்தனை முயற்சிகளையும் சித்த மருத்துவத் துறையினர் செய்திருக்கிறார்கள். இது போதுமானது என்று நாங்கள் நின்றுவிடவில்லை. அடுத்த அடுத்த கட்ட ஆய்வுக்குச் செல்ல நவீன அறிவியல் துறையினர் எல்லோருடனும் கைகோக்க வேண்டும். சீனாவில் அப்படித்தான் நடக்கிறது. இப்படித்தான் ஏனைய மரபுசார் மருத்துவத் துறையினரும் சில முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். நவீன மேற்கத்திய அறிவியல் முறையில் மட்டும்தான் தீர்வு என்ற நிலைப்பாடு தவறானது. அதேபோல, நவீன மருத்துவத்தை வெறுமனே சந்தையோடு மட்டும் தொடர்புபடுத்தி நிராகரிப்பதும் அறிவுக்குப் புறம்பானது. எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம் என்று யாருமே வாய் திறப்பதில்லை.
தடுப்பூசி தொடர்பாக நிறைய சந்தேகங்கள் மக்களிடம் இருக்கின்றன. நீங்கள் தடுப்பூசியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கொரோனாவுக்கு எதிரான போரில் இன்று மனித குலத்தின் கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஆயுதம் தடுப்பூசி என்று கருதுகிறேன். சித்த மருந்துகள், நல்ல உணவு, யோகா, சுவாசப் பயிற்சி என்று உடலில் எதிர்ப்பாற்றலை வலுவாக்கிக்கொள்ளலாம். முகக்கவசம் வழியாக வைரஸ் உள்ளே செல்லாமல் தடுத்துக்கொள்ளலாம். கசாயம் குடித்து தற்காப்பு ஆற்றலைப் பெருக்கலாம். ஆனால், இவற்றையெல்லாமும் மீறி கொரோனா வந்துவிட்டால் அது உடலுக்குள் பரவி உயிர் சேதம் ஏற்படாமல் தடுப்பதற்குத் தடுப்பூசி மிக மிக அவசியம். தடுப்பூசி வேண்டாம் என்று சொல்பவர்கள் எல்லோருமே சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கக்கூடியவர்களின் வாழ்க்கையைத் துளிகூடப் பொருட்படுத்தாதவர்கள்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நாட்டு மருந்து சாப்பிடக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என்பன போன்ற பேச்சுகள் இருக்கின்றன. அப்படித்தானா?
இப்படியெல்லாம் கேள்விகள் வருகின்றன பார்த்தீர்களா, இதற்குத்தான் ஒருங்கிணைந்த அணுகுமுறை வேண்டும் என்கிறேன். அம்மைக் காலத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டால் பத்து நாட்களுக்குப் புலால் வேண்டாம் என்பார்கள். இப்போதும் நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் தடுப்பூசி போட்டுக்கொண்டால் புலால், எண்ணெய்ப் பலகாரங்கள், காரசாரமான உணவுகளை அடுத்த மூன்று நாட்களேனும் தவிருங்கள் என்கிறோம். நான் என்ன சொல்வேன் என்றால், முதல் இரண்டு நாட்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் ஏதேனும் இருப்பின் அது தவிர வேறு மருந்துகளும்கூட எடுக்காதீர்கள் என்பேன். தடுப்பூசிக்குப் பிந்தைய நாட்களில் பழம், கீரை, காய்கறி, மீன் என்று எளிய உணவை எடுத்துக்கொண்டால், உடல் தடுப்பூசியிலிருந்து நோயுயிர்முறியை உருவாக்கும் வேலையைப் பார்க்க சௌகரியமாக இருக்கும்.
கொரோனாவைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
முதன்மையானதும் மிகத் தலையாயதுமான மூன்று விஷயங்கள்: முகக்கவசம், சமூக இடைவெளி, சுத்தம். நூறு ஆண்டுகளுக்கு முன் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு எதிர் மருந்துகள் கண்டறியாத 1918-ல் ஸ்பானிஷ் ஃப்ளூவிலும்கூட சமூக இடைவெளியும் முகக்கவசமும் மட்டும்தான் உயிர்களைக் காப்பாற்றின. இதோடுகூடவே நல்ல உணவுமுறையும் உடற்பயிற்சியும். சித்த மருத்துவத்தில் உடலைப் பாதுகாப்பதானது பித்தம் தொடர்பானது. தொற்றுக் கிருமி, உடலின் வளர்சிதை மாற்றத்திலுள்ள பிரச்சினைகள், ஒவ்வாமை, அழற்சி, காயங்கள் என அனைத்திலும் உடலை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்கு உடலின் பித்தமானது சீராக இருக்க வேண்டும். நவீன அறிவியலின் அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் வெள்ளையணுக்கள், எலும்பு மஜ்ஜை, மண்ணீரல் போன்றவை நன்றாக இருக்க வேண்டும் என்று சில விஷயங்களைச் சொல்கிறார்கள். புரதச்சத்துள்ள உணவு இதற்கு முக்கியம். பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை, முட்டை, மீன் போன்றவற்றில் புரதம் இருக்கிறது. கரோனாவைப் பொறுத்தவரை ‘ஸிங்க்’, ‘வைட்டமின் சி’, ‘வைட்டமின் டி’ மூன்றையும் நவீன அறிவியல் அவசியம் என்கிறது. இவை மூன்றும் சுவாச மண்டல எதிர்ப்பாற்றலுக்கு முக்கியமானது. நிலக்கடலை, பாதாம், எல்லாக் கீரை வகைகள், பழங்கள் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளும்போது, சமச்சீரான சத்துகள் கிடைக்கும். ‘வைட்டமின் டி’ சூரிய ஒளியில் அதிகமாகக் கிடைக்கும்; உணவில் காளான், மோர், பால் ஆகியவற்றில் கொஞ்சம்போல் கிடைக்கும். இதோடு காலை, இரவு இரு வேளையும் ஐந்து நிமிஷங்களேனும் மூச்சுப் பயிற்சி செய்திடுங்கள். கூடவே, கபசுரக் குடிநீர், அதிமதுரம், கடுக்காய், ஆடாதொடைக் குடிநீர் இவற்றை இக்காலத்தில் எடுப்பது உடலை வலுவாக்கிடும்.
சாப்பிடக் கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா?
ரத்தத்தில் சர்க்கரையை வேகமாகச் சேர்க்கக்கூடிய எந்த உணவையும் எடுக்கக் கூடாது. சீனி வேண்டவே வேண்டாம். அப்படியென்றால் ஐஸ்க்ரீம், மிட்டாய்கள், இனிப்புப் பண்டங்களும் வேண்டாம். ஏனென்றால், ஒரு வைரஸ் வேகமாக வளர இனிப்பு பெரும் தூண்டுகோல். சர்க்கரை வியாதிக்காரர்கள் மட்டுமில்லை; கரோனா வரக் கூடாது என்று நினைக்கக்கூடிய எல்லோருமே இனிப்புகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
கபசுரக் குடிநீர் அனுபவத்தில் எப்படியிருக்கிறது?
ஆரம்பத்தில் கபசுரக் குடிநீர் முக்கியமானது என்பதைப் பழைய தரவுகளைக் கொண்டு அனுமானித்துச் சொன்னோம். ஆனால், போன வருட அனுபவங்கள், இந்தக் காலகட்டத்தில் நடந்த ஆய்வுகள், அதில் கிடைத்த தரவுகள் இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அது நிச்சயமாக உடலின் எதிர்ப்பாற்றலைக் கூட்டி வைரஸ் வேகமாகப் பரவுவதைத் தடுக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது. எனவே, 60 மில்லி அளவுக்கு உணவுக்குப் பின்பாகக் காலை வேளையில் கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்ளுங்கள். தொற்று பெற்றவர்களாக இருந்தால் 14 நாட்களுக்கும், தொற்று பெறாதவர்கள் வாரத்துக்கு 2 நாட்களுக்கும் எடுத்துக்கொள்ளுங்கள். வெயில் காலம் கடந்துவிட்டதென்றால் வாரத்துக்கு 4 நாட்கள்கூட எடுத்துக்கொள்ளலாம்.
சென்ற ஆண்டில் கபசுரக் குடிநீர் எடுத்துக்கொண்டவர்களில் சிலர் வயிற்றுப் புண், மூலத் தொந்தரவு, உடல் சூடு, பித்தம் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு ஆளானதாகச் சொன்னார்களே?
ஆமாம், சிலருக்கு அந்தப் பிரச்சினை இருந்தது. அவர்களெல்லாம் அதிமதுர மாத்திரை, நொச்சிக் கசாயம், ஆடாதொடைக் குடிநீர் எடுத்துக்கொள்ளலாம். இவை எல்லாமே கபசுரக் குடிநீருக்கு அடுத்த நிலை மருந்துகள்.
ஆவி பிடிக்கும் முகாமெல்லாம் நடத்திவருகிறார்கள். இது சரியானதுதானா?
ஆவி பிடித்தல், வேது பிடித்தல் என்பது சித்த மருத்துவத்தில் காலங்காலமாக இருந்துவரும் விஷயம்தான். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள், வாரத்துக்கு மூன்று நாட்கள் போதுமானது. கொரோனா நோயாளிகளாக இருக்கும்பட்சத்தில் நொச்சி, வேப்பிலை, மஞ்சள் கொண்டு தினமும்கூட ஆவி பிடிக்கலாம். ஆனால், ஆவி பிடிக்கும் முகாம் என்ற பெயரில் அருகருகே அமர்ந்து அதிக அழுத்தமுள்ள நீராவியை மூக்கில்பாய்ச்சும் இப்படியான செய்கைகள் ஆபத்தானவை. அரசு இதை அனுமதிக்கக் கூடாது.
சக மருத்துவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை ஏதும் உண்டா?
மாற்று மருத்துவர்கள் நவீன மருத்துவத்தை மதியுங்கள். ஒருபோதும் தடுப்பூசிக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளாதீர்கள். அது மனித குல விரோதச் செயல்பாடு. நவீன மருத்துவர்கள் மாற்று மருத்துவர்களை மதியுங்கள். அவர்கள் கையாள்வதும் அறிவியல்தான்; அது நேற்றைய அறிவின் நீட்சி. இரு தரப்பாருமே அடிப்படைவாதத்தை விட்டொழியுங்கள்; இணைந்து செயலாற்றி கொரோனாவை ஒழிப்போம்!
பேட்டி கண்டவர்: த.ராஜன்