போராட்டத்தில் விவசாயிகளின் நிலை – களத்திலிருந்து நேரடி தகவல்

கஜேந்திரா ஜாதவ்

டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகள் ஆறு மாதத்தை நிறைவு செய்து ஏழாவது மாதத்திற்குள் அடி எடுத்து வைக்கின்றனர். விவசாயிகள் டெல்லியில் இருக்கக்கூடிய காசிபூர் பகுதியில், சாலையில் கான்கிரீட் போட்டு நிரந்தரமாகவே தங்களின் குடியிருப்புகளை அமைத்து உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் கடுமையான குளிர் நிலவிய காலத்தில் இந்தப் போராட்டம் தொடங்கியது. அதன் பிறகு தொடர் மழை; இப்போது டெல்லியில் வெப்பநிலை 100 டிகிரி பாரனைட் ஆக இருக்கிறது. அவர்கள் அமைத்துள்ள கூடாரங்களுக்கு மேல் உள்ள வைகோல் மேல் தண்ணீரைத் தெளித்து விட்டு வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். முன்னர் அசுத்தமாக இருந்த இடம் தற்போது நிலைமை சுத்தமாக இருக்கிறது.

நடமாடும் கழிவறைகளைக் கொண்டு முடிந்த வரையில் தங்களை சுகாதாரமாக பார்த்துக் கொள்கின்றனர். அதிகாரத்தின் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருக்கிறது; கடுமையான வானிலை ஒரு பக்கம் இருக்கிறது. ஆனாலும், போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு விவசாயிகள் கூறும்போது “எங்களிடம் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் கையிருப்பதாக கூறினர். எத்தனை நாட்களானாலும், எத்தனை பேர் வந்தாலும், நாம் அத்தனை பேருக்கும் உணவளித்துப் போராட்டத்தைத் தொடருவோம்” என்று தெரிவித்திருந்தனர்.

ஆறு மாதம் கடந்தும் இந்தப் போராட்டம் பெரிய அளவிலான விவாதப் பொருளாக மாறாமல் இருந்தாலும், போராட்டத்தை விவசாயிகள் அதே உற்சாகத்தோடு தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர். அறுவடைகுச் சென்ற விசாயிகள் மீண்டும் வருவதைப் நாம் பார்க்க முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களானாலும் ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வைக்கும் இந்த போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால் பேச்சு வார்த்தையின் மூலம் வேளாண் திட்டங்களை திரும்பப்பெறும் போது, இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும்.

நெருக்கடியான நேரத்தில் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவர முடியும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். களத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளும் அதைத்தான் செய்து இருக்கிறார்கள். தங்களுக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய பிரச்சினைகளை சின்ன சின்ன செயல்பாடுகள் மூலமாக எளிமையாக அவர்கள் சமாளித்து கொண்டு வருகின்றனர். டெல்லியில் இப்போது 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை இருக்கிறது. நெடுஞ்சாலை மாதிரியான இடங்களில் அந்த வெப்பநிலை மிகவும் கடுமையாக இருக்கும் என்று நாம் அறிவோம். வெப்பநிலையைச் சமாளிப்பதற்காக அவர்கள் டிராக்டரில் அட்டையைக் கொண்டு கூடாரம் போன்று அமைத்து அதை சுத்தி போஸ்டர்களால் மூடி எந்தவிதமான ஓட்டைகளும் இல்லாமல் அதில் ஏ.சியை வைத்துள்ளனர். ஒரு நெடுஞ்சாலையில் குளிர் சாதன வசதி செய்யக்கூடிய அளவு மின்சாரம் எங்கிருந்து வரும் என்கிற கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.

விவசாயிகள் சிறிய வகையான ஜெனரேட்டர்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கடுமையான வெப்பநிலையால் தாங்க முடியாத நிலை ஏற்படும்போது சமாளிப்பதற்காக இந்த குளிர் சாதன வசதியைப் பயன்படுத்துகிறார்கள். விவசாயிகள் எல்லோரும் வெயிலில் இருந்தவர்கள் தான். ஆனாலும், நிறைய வயதானவர்கள், குழந்தைகள், வயதான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களால் வெப்பத்தைத் தாங்க முடியாது. அக்காரணத்தால், ஏசியை சில இடங்களில் விவசாயிகள் வைத்துள்ளனர். இதைப் பார்த்துவிட்டு விவசாயிகளுக்கு ஏசி வாங்குகிற அளவுக்கு பணம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புவார்கள். இதற்கு முன்னரும் அப்படியான கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. போராட்டம் நடத்தக் கூடியவர்கள் விவசாயிகள் தானே தவிர பிச்சைக்காரர்கள் கிடையாது. அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கான பணம் அவர்களிடம் உள்ளது. வேளாண் சட்டங்களை நீக்குவதன் வழியேதான் இந்த மக்கள் போராட்டம் முடிவுக்கு வரும்.

Tags: