விவசாயத்தில் வேண்டாம் அரசியல் ஆதாயம்

ன்று இலங்கை நாட்டில் பேசப்படும் முக்கிய பிரச்சினையாக கொவிட் பரவுதல் முதலிடத்தில் இருக்குமானால், இரண்டாம் பேசு பொருளாக விளங்குவது பசளை பிரச்சினையாகவே இருக்கும். இலங்கை விவசாயத்துறை இரசாயன உரம் மற்றும் கிருமி, களை நாசினிகளைக் கைவிட்டு இயற்கை உர விவசாயத்துக்கு மாற வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவானது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் தென்பகுதியில் காணப்படும் விவசாயிகளின் ஆவேசத்தை வடக்கில் காணமுடியவில்லை. வடபகுதி விவசாயிகள் மௌனம் காப்பது அவர்கள் ஏற்கனவே யுத்த காலத்தில் இரசாயன பசளைகளின்றியே பயிர்ச்செய்கையில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வெற்றிகண்ட அனுபவம் காரணமாகவோ என்று தெரியவில்லை.

இலங்கை விவசாயத்துறை அபிவிருத்திக்காக வருடாவருடம் பெருளவு பணம் ஒதுக்கப்பட்டு குளங்கள் அபிவிருத்தி நீர்த்தேக்க நிர்மாணம் போன்ற பெருந்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ள போதிலும் மொத்த விவசாய உற்பத்திக்கும் மக்களின் தேவைக்கும் இடையே பற்றாக்குறை நிலையே இன்றளவும் நீடித்து வருகிறது. இத்தனை தசாப்த முயற்சிகளின் பின்னரும் ஏன் இன்னும் பற்றாக்குறை நிலை நீடிக்கிறது என்ற கேள்வியை இது திருவாளர் மகாஜனத்திடம் எழுப்பவே செய்யும். இதே சமயம், ஒரு லட்சம் மெட்றிக் தொன் அரிசி. இறக்குமதி செய்யப்படவுள்ளது என்ற செய்தி,  அரசுகள் எத்தனையோ விவசாய புரட்சிகளை மேற்கொண்ட பின்னரும் இன்னும் இதே நிலைதானா? என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பாமலா இருக்கும்?

இந்த நிலையில் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்;  இனி இரசாயன பசளை கிடையாது என்ற அரசின் கொள்கை, விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கவே செய்யும். எனினும் நாம் முற்று முழுதாக இரசாயன உரங்களையும் கிருமி நாசினிகளையும் நம்பி விவசாயம் செய்ய முடியாது. விவசாய மண்ணை வளப்படுத்தும், விவசாயிகளின் தோழர்களான புழு பூச்சிகள், பறவையினங்கள் இன்று அம் மண்ணில் காணப்படுவதில்லை. விவசாய இரசாயனங்கள் குடிநீரை  நஞ்சாக்கி வருகின்றன. சிறு நீரக நோயாளர்களின் எண்ணிக்கை விவசாய பிரதேசங்களிலேயே அதிகம். ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதா, மென்மேலும் சிறுநீரக நோய் மருத்துவமனைகளை அமைப்பதா அல்லது இரசாயன உரங்களை நிறுத்தி இயற்கை விவசாயத்துக்கு திரும்புவதா? என்ற கேள்விக்கு இன்றில்லையேல் நாளையாவது நாம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆனால் மிகவும் நடைமுறை சாத்தியமான மற்றும் பழக்கப்பட்டுப்போன ஒரு விவசாய நடைமுறையில் இருந்து ஒரேயடியாகவும் திடீரெனவும் விலகச் சொல்வது கொந்தளிப்பை ஏற்படுத்தவே செய்யும் முதலாவது, இரசாயன உரப்பாவனை இனி இல்லை என்ற அறிவிப்பு. இரண்டாவது விவசாய பகுதிகளில் நிலவும் உரப் பற்றாக்குறை. பெரும்பாலான விவசாயிகள் பணக்காரர்கள் அல்ல. கடன் வாங்கி பின்னர் வருமானத்தில் கடனை அடைக்கும் விவசாயிகளே அதிகம். எனவே இப் போகத்துக்கான உரவிநியோகத்தை போதிய அளவில் வழங்கி, இயற்கை விவசாயத்துக்கு படிப்படியாக விவசாயிகளை தயார்ப்படுத்தலே சரியான வழி முறையாக அமையும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும்.

இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்றல்ல; நீண்டகாலமாகவே சூழலியலாளர்களினால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. அறுபதுகளின் நடுப்பகுதியில் அமெரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவிய ஹிப்பி கலாசாரம் இயற்கையுடன் வாழ்தல் என்ற தத்துவத்தைகொண்டு மேலெழுந்த ஒரு கலாசாரம். ஹிப்பி குடும்பங்கள் இயற்கை விவசாயத்தையே முன்னெடுத்தன. ஆனால் பழக்கப்பட்டுப்போன ஒரு விடயத்தை, அது மதுவோ அல்லது புகைபிடித்தலோ, திடீரெனக் கைவிட்டு விட முடியாது என்பதுபோலவே இரசாயன பசளை விவசாயத்தையும் ஒரேயடியாகக் கைவிட்டு விடும்படி விவசாயிகளிடம் சொன்னால் குழம்பித்தான் போவார்கள்.

இயற்கை விவசாயம் என்றதும் உடனடியாகக் கவனிக்க வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. எந்த நாடும் நூற்றுக்கு நூறு வீதம் இயற்கை விவசாயத்துக்கு மாறியதில்லை. இன்று விவசாயிகள் உபயோகிக்கும் விதைகள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இவ்விதைகள் கொம்போஸ் போன்ற இயற்கை உரங்களில் வளர்ச்சி பெற்று சிறந்த விளைச்சலைத் தருமா என்ற கேள்வி உள்ளது. இரசாயன களை கொல்லிகள், கிருமி நாசினிகளுக்கு பதிலாக எவற்றை உபயோகிப்பது என்ற கேள்விக்கும் பதில் காணப்பட வேண்டும். நாட்டு மக்களின் தேவைக்கும் உணவுப்பொருள் உற்பத்திக்கும் இடையே ஒரு பற்றாக்குறை ஏற்கனவே நிலவும்போது இயற்கை விவசாய விளைச்சல் இந்த இடைவெளியை மேலும் அதிகரித்தால் அதற்கு என்ன செய்வது என்ற கேள்வியும் உள்ளது.

இயற்கை விவசாயத்துக்கு இந்நாட்டில் எந்த எதிர்ப்பும் கிடையாது. அனைவரும் சொல்வது, மாற்றம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான். மேலும் குழம்பிப் போயிருக்கும் விவசாயிகளைப் பயன்படுத்தி அதை வெகுஜன மக்களிடம் பெரும்பிரசாரமாக எடுத்துச் சென்று அரசியல் இலாபம் தேடுவதற்கு எதிர்க்கட்சிகள் முழு மூச்சாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. கொவிட் முடக்கங்களால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து முடங்கிப் போயிருப்பதால் இயல்பாகவே எழக்கூடிய பொருளாதார கஷ்டங்களுடன் விவசாயிகள் பிரச்சினையையும் இணைத்து அரசுக்கு எதிரான பெருங்குரலாக அதை மாற்றிவிட பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அரசு இப்பிரச்சினைகளை நடைமுறை சாத்தியமான வழிகளில் அணுகி பொருத்தமான தீர்வுகளை உடனடியாகவே எடுக்க வேண்டும் என்பதைச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

-தினகரன் ஆசிரியர் தலையங்கம்
2021.07.04

https://www.youtube.com/watch?v=Xeu6QyGHUX8
Tags: