ஆப்கானிஸ்தானில் தாலிபனுக்கு எதிராக பெண்கள் ஆயுதமேந்தியது ஏன்?

-அஸீஜுல்லாஹ் கான் (Azizullah Khan)

“ஆப்கானியப் பெண்கள் தாலிபன்களால் எந்த நன்மையும் விளையும் என்று நம்பவில்லை. நாங்கள் கல்வி கற்கவும் முடியாது, வேலைக்குச் செல்லவும் எங்களுக்கு அனுமதி கிடைக்காது. அதனால், இப்போது பெண்கள் ஆஃப்கன் தேசிய ராணுவத்துக்கு ஆதரவளிக்க முன்வருகிறார்கள். இதனால் தாலிபான்கள் செயல்களைக் கட்டுப்படுத்தலாம்”

காபூல் பல்கலைக்கழக மாணவரும் சமூக ஆர்வலருமான சயீத் கஸ்னிவாலின் வார்த்தைகள் இவை. இவர் ஆயுதம் எடுக்கும் பெண்களுக்கு ஆதரவளிக்கிறார். “தாலிபனின் கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தைப் பற்றி எங்களுக்கு நல்ல புரிதல் உண்டு” என்று அவர் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் மற்றும் தாலிபான்களின் முன்னேற்றத்திற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அச்சுறுத்தும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சில பெண்களும் அடையாளமாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, ஆஃப்கன் பெண்கள் ஆயுதமேந்தி நிற்கும் படங்கள் சில வெளியாயின. அவர்களில் பெரும்பாலோர் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளையும் ஆப்கானிஸ்தானின் கொடியையும் சுமந்து நிற்கின்றனர்.

இந்தப் பெண்கள் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். தாலிபன்களுடன் அரசாங்கத்தால் தனியாகப் போராட முடியாது, எனவே தாங்களும் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் ஆதரவாக நிற்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் வெளிவந்த படங்கள் ஜோஸ்ஜான் மற்றும் கௌர் பகுதிகளைச் சேர்ந்தவை. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் பெண்களின் இந்த முன்னெடுப்பு, காபூல், ஃபார்யாப், ஹெராத் மற்றும் பிற நகரங்களிலும் கூட தொடங்கியுள்ளது.

சயீதா கஸ்னிவால் காபூலில் வசிப்பவர். அவர் போராட்டத்தில் ஈடுபடவில்லை, ஆனால் அவர் பெண்களின் இந்த முன்னெடுப்பை முழுமையாக ஆதரிக்கிறார்.

தாலிபன்களுக்கு எதிராக ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என்றும் இது மிகவும் நல்லதோர் நேர்மறையான முன்னெடுப்பு என்றும் அவர் பி பி சி-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

“தாலிபன்களின் அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு எதிராகவும் தங்கள் சுதந்தரம் வேண்டியும் அனைவரும் முன் நிற்க வேண்டும் என்று இந்தப் பெண்கள் விரும்புகிறார்கள்” என்று அவர் கூறினார்.

ஆப்கன் பெண்களுக்குத் தாலிபான் மீது நம்பிக்கை இல்லை

SAEEDA GHAZNIWAL AND DR. SHUKRIA

டாக்டர் ஷுக்ரியா நிஜாமி பஞ்ச்ஷீரைச் சேர்ந்தவர். ஆனால் தற்சமயம் அவர் காபூலில் வசித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகளுக்கான செயல்பாடுகளில் பங்களிக்கும் ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர்.

அரசாங்கத்தால் தீவிரவாதிகளுடன் தனியாகப் போராட முடியாது, இதற்கு மக்களின் ஆதரவு தேவை என்று அவர் கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்றும் இது ஒரு நல்ல சகுனம் என்றும் அவர் கருதுகிறார். மேலும், இப்போது பெண்களும் ஆப்கானிய இராணுவத்துடன் தோளோடு தோளாக நிற்கிறார்கள், இது இராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் என்றும் இவர் கூறுகிறார்.

“ஆப்கானிஸ்தான் முற்றிலும் சுதந்திரம் அடையும் வரை, நான் ஓயப்போவதில்லை. காரணம், 30 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டைச் சூழ்ந்த இருள், மீண்டும் இந்த நாட்டிற்குள் தலையெடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.

ஆப்கன் தாலிபான் மற்றும் ஆப்கன் இராணுவத்திற்கு இடையிலான மோதல்கள் நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நடந்து வருகின்றன, மேலும் இரு தரப்பினரும் தாங்கள் வெற்றி பெற்றதாகவும் போர் உத்திகளைப் பற்றியும் கூறுகின்றனர்.

நாட்டு மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது, மேலும் தாலிபன்கள் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கூறிக்கொள்வதால், பெண்கள், ஒரு காலத்தில், தாலிபன் ஆதிக்கத்தில் ஆஃப்கன் இருந்ததையும் அப்போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறியதையும் அச்சத்துடன் நினைவு கூர்கின்றனர். அந்த நிலை மீண்டும் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

கத்தாரில் உள்ள தாலிபனின் அரசியல் அலுவலகத்திற்கும் ஆப்கானிஸ்தானில் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடும் தாலிபன்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் இரண்டும் ஒன்று போலத் தான் என்றும் சயீதா கஸ்னிவால் கூறுகிறார்,

“நாங்கள் தாலிபான்களை நம்பவில்லை, ஏனென்றால் தாலிபான்களின் வரலாறு மற்றும் அவர்களின் ஆட்சி பற்றி எங்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறது. இந்த யுத்தம் முடிவடையாது, இது நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும்” என்று அவர் கூறினார்.

மீண்டும் கட்டாயக் கொள்கைகளைக் கைகொள்ளுமா தாலிபான்?

பெண்களுக்கான தாலிபனின் கொள்கை குறித்து கேட்டபோது, ​​கத்தாரில் உள்ள தாலிபானின் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், பெண்களுக்குக் கல்வி மற்றும் வேலை செய்யும் முழு சுதந்திரமும் இருக்கும், ஆனால் அவர்கள் இஸ்லாமிய முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் கூறினார்.

தாலிபன்களிடமிருந்து எந்தத் தடைகளும் இருக்காது என்றும், அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய மரபுகள் மற்றும் பாணியின்படி தொடர்ந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

ஹிஜாப் அணியாத பெண்கள் கடந்த காலங்களில் தண்டிக்கப்பட்டது போல இப்போதும் தண்டிக்கப்படுவார்களா என்று கேட்கப்பட்ட போது,​​ நேரம் வரும்போது இது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் தான் இது பற்றி அதிகம் எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் பதிலளித்தார்.

ஆப்கன் தாலிபன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது, அதில் ஊடக அறிக்கைகள் தவறான மற்றும் எதிர்மறையான பிரச்சாரம் என்று விவரிக்கப்பட்டுள்ளன. கத்தார் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் ஒரு அறிக்கையில், “தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் பெண்கள் தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது தவறான கருத்து. இந்தப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். இது பிரச்சாரம் என்றும், இந்த பகுதிகளில் வாழும் மக்கள் இஸ்லாமிய முறைப்படி தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யாருக்கு என்ன செய்தி அளிக்கிறார்கள் இந்தப் பெண்கள்?

JONAS GRATZER

தற்போதைய சூழ்நிலையில், ஆப்கன் பெண்கள் ஆயுதம் ஏந்துவது இதுவே முதல் முறை. இது ஒரு குறியீட்டுச் செய்தி என்று உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் ஆயுதங்களை எடுத்து வீதிகளில் இறங்குவதன் நோக்கம், எதிரிகளான தாலிபான்களுக்கு எதிராக ஒரு வலுவான எதிர்வினையை வெளிப்படுத்துவதேயாகும்.

ஆப்கானிஸ்தான் பெண்கள் ஆயுதம் ஏந்திய நடவடிக்கை இரண்டு வெவ்வேறு செய்திகளைத் தெரிவிக்கிறது என்று காபூலைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஆசாத் சமீம் பிபிசியிடம் தெரிவித்தார். முதல் செய்தி, தங்கள் அரசுக்கும் ராணுவத்துக்குமானது. பெண்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற செய்தி. இது ராணுவத்திற்கு வலு சேர்க்கும்.

இரண்டாவது செய்தி, சர்வதேச அளவில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுக்கானது. ஆஃப்கன் பெண்கள் தாலிபான் அரசாங்கத்தை விரும்பவில்லை, எனவே தங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறார்கள் என்ற செய்தி.

ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் தரப்பிலிருந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வரும் கருத்து, அவர்கள் யாரையும் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்றும் தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்துப் பணிகளும் அதாவது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அல்லது அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் தொடரப்படும் என்பது தான்.

தற்போதைய நிலைமை மீண்டும் ஆப்கானிய பெண்களுக்கு ஒரு பெரிய சோதனையாக இருக்கும். கடந்த காலங்களில் கூட, ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமான மக்கள் வெளியிடங்களுக்குக் குடியேறியபோது, ​​பெண்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேர்ந்தது, ஆப்கானிய பெண்கள், அண்டை நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-பிபிசி தமிழ்
2021.07.08

Tags: