உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் எவ்வாறு செயல்படுகிறது?
–கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

உலக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் கையாளப்படும் பிரதான நாணயமாக ஐக்கிய அமெரிக்க டொலர் உள்ளது. அது தவிர உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் நிதி மற்றும் மூலதனப் பாய்ச்சல்களில் மிகப்பெரும் பகுதியும் டொலர்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு சர்வதேச செலுத்தல்கள் மற்றும் பெறுகைகளில் பயன்படுத்தப்படும் ஐக்கிய அமெரிக்க டொலர் உலகின் பிரதான வன் நாணயமாக அல்லது கடினப் பணமாகப் (hard currency) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அமெரிக்க டொலரைத் தவிர யூரோ, ஜப்பானின் யென், பிரித்தானியாவின் ஸ்டேர்லிங் பவுண் போன்ற நாணயங்களும் வன் பணமாகக் கருதப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி உலக நாடுகளின் சொத்து ஒதுக்குகளில் தங்கத்திற்கு அடுத்தப்படியாக முக்கியமான ஒதுக்குச் சொத்தாகத் திகழ்வதும் ஐக்கிய அமெரிக்காவின் டொலராகும்.
எனவே டொலர் ஒரு ஒதுக்கு நாணயமாகவும் (reserve currency) செயற்படுகிறது. சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் டொலரின் முக்கியத்துவம் வரலாற்றுரீதியாக ஏற்பட்ட ஒன்றாகும். சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டு நாணயங்களின் பெறுமதியை நிர்ணயிப்பதில் ஆரம்பத்தில் கட்டித்தங்கத்தின் ஒரு அவுன்சுக்கு எத்தனை அலகு உள்நாட்டு நாணயம் பரிமாறப்படும் என்ற அளவையின் அடிப்படையில் நிர்ணயித்தன. இதனை தங்க நாணயமாற்று வீத முறைமை என அழைத்தனர். ஆனால் 1974இல் இந்த முறைமை கைவிடப்பட்டு ஒரு ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எத்தனை உள்நாட்டு நாணய அலகுகள் பரிமாறப்படுகின்றன என்ற அடிப்படையில் நாணய மாற்று வீதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
டொலர் ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு நாணயமாக இருந்த போதிலும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை நாணயமாக விளங்குகிறது. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் வெளியீடு செய்யும் டொலர்களின் பெரும்பகுதி ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவேதான் அந்நாட்டு அரசாங்கம் டொலரை எந்தளவுக்கு அச்சிட்டு வெளியீடு செய்தாலும் அந்நாட்டின் விலை மட்டங்கள் அதிகரித்து பணவீக்கம் ஏற்படுவதில்லை. நொடிந்துவிழும் நிலையில் உள்ள நாடுகள் அமெரிக்க உதாரணத்தை பின்பற்றி தத்தமது உள்நாட்டு நாணயத்தை பெருமளவில் அச்சிட்டு வெளியிட முயற்சித்து தலைகுப்புற விழுந்து மண்கவ்வியமைக்கு இதுவே முக்கிய காரணமாகும். அமெரிக்காவின் டொலர் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாணயமாகத் தொழிற்படுவதனால் அந்நாட்டிற்கு ஏற்படும் சங்கடங்கள் அநேகம். அதேவேளை அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதார நெருக்கடிகள் காரணமாக டொலரின் மீது எற்படும் அழுத்தங்கள் காரணமாக அதன் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் அதனைப் பயன்படுத்தும் உலக நாடுகளின் நாணயங்களின் பெறுமதியிலும் மாற்றங்களை எற்படுத்தும்.

அமெரிக்க டொலர் சர்வதேச நாணயமாகப் பயன்படுத்தப்படுவதனால் வர்த்தகத்தில் மிகைநிலையினை அனுபவிக்கும் நாடுகள் பெருமளவில் அமெரிக்க டொலர் மிகைகளைப் பெற்று அனுபவிக்கலாம். இதில் அமெரிக்காவின் எதிரி நாடுகளும் முன்னிலையில் உள்ளன. உதாரணமாக, 1950களில் சோவியத் ஒன்றியம் தமது ஏற்றுமதிகள் காரணமாக பெருந்தொகை டொலர் மிகைநிலையினைக் கொண்டிருந்தன. இம்மிகை அமெரிக்க வங்கிகளிலேயே வைப்புச்செய்யப்பட வேண்டியிருந்தது.
எங்கே தனது பெயரில் அமெரிக்க வங்கிகளில் உள்ள டொலரை அமெரிக்கா உறையச் செய்து கபளீகரம் செய்து விடுமோ என்ற பயத்தில் ரஷ்யா பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு வங்கியில் வெளிநாட்டு நாணய வங்கிக் கணக்கினை அறிமுகப்படுத்தி அக்கணக்குகளுக்கு டொலர் வைப்புகளை மாற்றிக் கொண்டது. உலகின் ஒரு நாடு தனது உள்நாட்டு நாணயம் அல்லாத ஒரு நாணயத்தில் கணக்குகளை ஆரம்பித்த முதலாவது சம்பவமாகவும் இது அமைந்தது. இன்றைய வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு இதுவே முன்னோடியாகவும் அமைந்தது. அத்தகைய கணக்குகளில் வைக்கப்படும் வைப்புக்கள் யூரோ வைப்புகள் (Euro deposits) என அழைக்கப்பட்டன. இவற்றுக்கும் ஐரோப்பிய நாணய ஒன்றியத்தின் யூரோ நாணயத்திற்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை.
1970களின் ஆரம்பத்தில் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்த காரணத்தினால் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகள் மிகப்பெரிய டொலர் மிகைநிலையினை அனுபவித்தன. அமெரிக்க வங்கிகள் அவற்றை வளர்முக நாடுகளுக்கு கடன் வழங்க பயன்படுத்தின. அல்லது அமெரிக்காவின் சொத்துக்களை அரபுநாடுகள் வாங்கிக்குவிக்க அவை பயன்படுத்தப்பட்டன.

இன்றைய உலகில் பொருளாதார ரீதியாகவும் உலக அரசியல் ரீதியாகவும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்டுவரும் போட்டா போட்டியில் டொலர் விவகாரம் முக்கிய இடம் பெறுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் மிகப்பெரிய டொலர் மிகைநிலையினைக் கொண்டுள்ள சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் பிரதான நாடாக மாறியுள்ளது. அத்துடன் தன்னிடமுள்ள மீயுயர் டொலர் வளத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளின் சொத்துகளை வாங்கிக் குவிக்கவும் உலக நாடுகளை தமது உலகளாவிய புவிசார் அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டுவரும் மென்வலு உபாயத்தை நடைமுறைப்படுத்தவும் பயன்படுத்துகிறது.
உண்மையில் ஒரு நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் மிகைநிலையினை அனுபவிக்கும்போது அந்நாட்டின் உள்நாட்டு நாணயத்தின் பெறுமதி அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சீனா அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் மிகை நிலையினைக் கொண்டிருக்கும்போது அதன் காரணமாக சீனாவின் உள்நாட்டு நாணயமான யுவானின் (ரென்மெம்பி) பெறுமதி டொலருக்கு எதிராக அதிகரிக்க வேண்டும் இதனால் சீனாவின் பொருள்களின் விலைகள் சர்வதேச சந்தையில் அதிகரிக்கும். அதன் போட்டித்தன்மை குறைவடைந்து ஏற்றுமதிகள் வீழ்ச்சியடையும் இதனால் டொலரின் பெறுமதி படிப்படியாக அதிகரிக்கும். ஆனால் சீன அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இவ்வாறான ஒரு சீராக்கம் ஏற்படாத வகையில் டொலருக்கு எதிரான யுவானின் பெறுமதியை செயற்கையாகக் குறைந்த மட்டத்தில் வைத்திருக்கிறது. டொலர் மிகைகளை மீள்சுழற்சி செய்யும் விதமாக கடன் வழங்கலையும் வெளிநாட்டு முதலீடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய மிகைநிலையினைக் கொண்டுள்ள சீனா, ஏன் உலகின் வன் நாணயங்களில் ஒன்றாக தனது யுவானை முன்னிலைப்படுத்த முயலக்கூடாது என்ற கேள்விகளும் எழுப்பப்படாமலில்லை. ஆனால் சீனாவின் நாணயம் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஓரு நாணயமாகக் கருதப்படுவதில்லை. அத்துடன் சீனாவின் அரசியல் பின்னணி அதனை சர்வதேச ரீதியில் ஏல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையிலும் இல்லை.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதிய ஒரு நாணயமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட யூரோ நாணயம் டொலருக்குப் போட்டியாக வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் அது நிறைவேறவில்லை.

இந்நிலையில் சீனா காசுப்பாவனையற்ற (cashless society) சமூகத்தை உருவாக்கப்போகிறோம் என்று கூறி இலத்திரனியல் யுவானை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு படிப்படியாக இலத்திரனியல் பணத்திற்கு (electronic money) சீனா மாறுமாயின் அது பெரிய சிக்கல்களை உருவாக்கக் கூடும். சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் யுவான் ஒரு நாணயமாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும் சீனாவில் இயங்கும் சகல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினதும் மற்றும் தனிப்பட்ட நபர்களினதும் கொடுக்கல் வாங்கல்களையும் மிகமிக நுணுக்கமாக அந்நாட்டின் அரசாங்கம் கண்காணிக்க இயலும்.
இது தனிப்பட்ட சுதந்திரத்தில் அரசாங்கத்தின் தலையீடு அதிகரித்துச் செல்ல வழிவகுக்கும். எவ்வளவு பணம் யாரால் யாருக்கு எப்போது எங்கு பரிமாறப்பட்டது போன்ற தனிப்பட்ட விபரங்களையும் விரல் நுனியில் அரசாங்கம் வைத்திருக்க முடியும். அதனடிப்படையில் வரி மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் சீனாவில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இம்முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் அந்நாட்டை விட்டு வெளியேறக்கூடும். இந்தியாவும் கூட சிலவருடங்களுக்கு முன்னர் காசுப்பாவனையற்ற பொருளாதார முறைமையினை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படவில்லை.
இலங்கையின் ரூபா இந்த எந்த வகையிலும் உள்ளடக்கப்பட முடியாத ஒரு நாணயம். அதன் உள்நாட்டுப் பெறுமதியினையும் வெளிநாட்டுப் பெறுமதியினையும் தற்காத்துக் கொள்வதே இலங்கை மத்திய வங்கி தற்போது எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும். இதற்கப்பால் கடந்த புதன்கிழமை இலங்கை மத்திய வங்கி இரு ஞாபகார்த்த நாணயங்களை வெளியிட்டது. ஒன்று தங்கத்தினாலானது மற்றையது வெள்ளியினாலானது.
இதற்கு முன்னர் 1998 ஆம் ஆண்டில் இலங்கையின் 50 ஆவது சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு ஞாபகார்த்த தங்க நாணயம் வெளியீடு செய்யப்பட்டது. இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்தத் தங்கநாணயம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையிலும் அந்நாட்டுடனான அறுபத்தைந்து ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையிலும் வெளியிடப்படுவதாக மத்திய வங்கி அறிவித்தது.
ஒரு அந்நிய நாட்டின் அரசியல் கட்சியொன்றின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதும் அற்காக ஞாபகார்த்த நாணயம் வெளியிடுவதும் இதற்கு முன்னர் ஒரு போதும் நிகழ்ந்ததில்லை. இலங்கை அரசாங்கம் சீன நட்புறவை மகிமைப்படுத்தும் ஒரு அடையாளமாகவே இதனை நாம் கருத வேண்டியிருக்கும்.
-தினகரன்
2021.07.11