பிரடெரிக் ஏங்கெல்ஸ் 200

-சீத்தாராம் யெச்சூரி

2020 நவம்பர் 28, பிரடெரிக் ஏங்கெல்ஸ் அவர்களின் 200ஆவது ஆண்டு தினம் ஆகும். இயல்பான சூழ்நிலைகளாக இருப்பின், கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், அதனையொட்டி அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தின் காரணமாகவும், அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் இல்லாதிருக்கும் பட்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), இந்த நிகழ்வை, எப்படி 2018-19இல் மார்க்ஸ் 200ஆவது ஆண்டுதினத்தை அனுசரித்ததோ அப்படிப் பொருத்தமான முறையில் கொண்டாடி இருக்கும்.

மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப் பிரபஞ்கசத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும், இயக்கியலின் கண்டுபிடிப்புகளையும், இயக்கியல் முறையையும் வெளிக்கொணர்ந்து புரிந்துகொள்வதற்கு வளமான ஆதாரங்களை முன்வைத்ததிலும், ஏங்கெல்சின் தத்துவார்த்த பங்களிப்புகள் மகத்தானவகையில் குறிப்பிடத்தக்கவைகளாகும். அவருடைய வாழ்வையும் பணியையும் கொண்டாடுவது என்பது, அவருடைய பங்களிப்புகள் அனைத்தையும் மீளவும் ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்துவதும், மனிதனின் சிந்தனை, அறிவு மற்றும் மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள மகத்தான தாக்கத்தையும் இயல்பாகவே வெளிக்கொணர்ந்திடும்.

இவ்வாறு அவருடைய பங்களிப்புகள் அனைத்தையும் மறுஆய்வுக்கு உட்படுத்தவது என்பது ஒரு மாபெரும் பணியாகும். அவை அனைத்தையும் உள்ளடக்கிவிடமுடியாது. கட்சி, தனக்கிருக்கிற வரையறைகளுடன், இந்த அம்சங்கள் அனைத்திலும் ஓராண்டு காலத்திற்கு தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடரும்.

எனவே, இப்போது ஒரு முக்கிய அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கையாளுகிறேன். கார்ல் மார்க்சின் பெயரில் கூறப்படும் மார்க்சியம், தத்துவத்தையும் நடைமுறையையும் இயக்கியல் ரீதியாக இணைத்து. இவ்வாறு மார்க்சியத் தத்துவத்தை வளர்த்தெடுத்ததில், ஏங்கெல்ஸ் ஆற்றிய பங்களிப்புகள் இரண்டாம் நிலை வகித்ததுபோல், துரதிர்ஷ்டவசமாக, கருதப்படுகிறது. இது மிகவும் பிழையான ஒரு முடிவாகும். இதற்கு மாறாக, ஏங்கெல்ஸ், உலகின் பொருளியல் மற்றும் சமூகத்தின் அனைத்து அம்சங்கள் மீதும் தன் பணிகள் மூலமாக இயக்கியலை வெளிக்கொணர்ந்திருப்பதை நாம் நன்கு காண முடியும். இன்றைய மனிதகுல நாகரிக முன்னேற்றம் மற்றும் புதிய அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நடப்புப் பின்னணியில் இவற்றை நாம் ஒவ்வொருவரும் முறையாக மறுபடியும் படித்திட வேண்டும்.

மார்க்சியத்தைக் கூட்டாகவே உருவாக்கினார்கள்

பிரடெரிக் ஏங்கெல்ஸ், அடிக்கடி, உலகத்தின் முதல் மார்க்சிஸ்ட் என்று குறிப்பிடப்படுகிறார். அவரும் தனக்கேயுரிய இயல்பான தன்னடக்கத்துடன், இந்த அந்தஸ்தை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டிருந்திருக்கலாம். ஒருசமயம் அவர் கூறினார்: “மார்க்ஸ் என்ன சாதித்தாரோ அதனை, நான் எய்தியிருக்க முடியாது. மார்க்ஸ் நம்மையெல்லாம்விட உயரத்தில் நின்றார், விஷயங்களை மேலும் கூர்மையாகப் பார்த்தார், நம்மையெல்லாம்விட அவர் அவற்றை மிகவும் விரிவான அளவிலும், வேகமாகவும் பார்க்கும் திறனைப் பெற்றிருந்தார். மார்க்ஸ் ஒரு மாமேதை. நாமெல்லாம் மிகச் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இருக்கிறவர்கள். அவரில்லையேல், இந்தக் கோட்பாடு இன்றுள்ள நிலையிலிருந்து வெகுதொலைவிலேயே இருந்திருக்கும். எனவேதான், இது மிகச் சரியானமுறையில் அவர் பெயரைத் தாங்கி இருக்கிறது.”

ஏங்கெல்ஸ் அவர்களால் மார்க்ஸ் இவ்வாறு பாராட்டப்பட்டிருந்தபோதிலும்கூட, ஏங்கெல்சின் மார்க்ஸ் குறித்த மதிப்பீடும், மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் சித்தாந்த அடித்தளங்களை வெளிக்கொணர்ந்தில் மார்க்சுக்கு சிறப்பு இடத்தைக் கொடுத்திருப்பதும், வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியதும் அவசியமாகும்.

மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கூட்டுச் செயல்பாடு

மார்க்ஸ், ‘ரெனிச்சே செய்துங்’ (‘Rheinsche Zeitung’) என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். அது, பிற்போக்குவாத பிரஷ்ய அரசாங்கத்தால், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு சக்திகளுக்கும், அரசாங்கத்தைத் தூக்கிப்பிடித்த பிற்போக்குவாதிகளுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில், 1843 மார்ச்சில் அந்த ஏடு தடை செய்யப்பட்டது. மார்க்ஸ், தன்னுடைய பணியைத் தொடர்வதற்காக, 1844இன் தொடக்கத்தில் பாரிசுக்குச் சென்றார். அங்கே அவர், ‘டெட்ஸ்ச்-ஃபிரான்சோசிஸ்ச் ஜார்புஸ்சர்’ (`Deutsch-Franzosische Jahrbucher’) என்னும் இதழைத் தொடங்கினார். ஏங்கெல்ஸ் அவ்விதழுக்குப் பங்களிப்புகளைச் செய்திடுவோரில் மிகவும் இளையவராக மாறியிருந்தார். 1844இல், ஏங்கெல்ஸ் ‘அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்திற்கு ஒரு கோட்டுச்சித்திரம்’ (‘Outline of a Critique of Political Economy’) என்கிற ஒரு கட்டுரையை அளித்திருந்தார். இதில், ஏங்கெல்ஸ், முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை விமர்சிப்பதற்கான அடிப்படைக் கொள்கைகளை வகுத்திருந்தார். ஏங்கெஸ்ஸ் இதில், முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையில் அனைத்து முக்கியமான நிகழ்வுகளும் உற்பத்திச் சாதனங்களின் தனிவுடைமையின் விதிகளிலிருந்து தவிர்க்கமுடியாத விதத்தில் எழுகின்றன என்று கூறியதோடு வறுமையில்லாத சமூகமே இத்தகையதொரு தனியுடைமை இல்லாத சமூகமாக இருக்க முடியும் என்று காரண காரியங்களோடு செயல்விளக்கம் அளித்திருந்தார். இது மார்க்ஸை வெகுவாகக் கவர்ந்தது. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனம் மூலம், தான் ஏற்படுத்தியிருந்த ஹெகலியன் தத்துவத்தின் விமர்சனத்துடன் ஒத்துப்போகக்கூடிய விதத்தில் அதே முடிவுக்கு, சுயேச்சையான முறையில் மற்றுமொரு சிந்தனையாளர் வந்திருக்கிறார் என்று மார்க்ஸ் முடிவுக்கு வந்தார். இதுதான் இவர்கள் இருவரையும், மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியில், தங்கள் வாழ்நாள் முழுவதுமான கூட்டுச்செயற்பாட்டாளர்களாக, நண்பர்களாக, தோழர்களாகப் பிணைத்தது.

ஏங்கெல்சால் எழுதப்பட்ட நூல்களில் மிகவும் முன்னோடியான நூலாக விளங்கும், ‘இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலைமை’ (‘The Condition of the Working Class’) என்பது இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த தொழில் புரட்சியின் ஆரம்ப காலத்தில் மார்க்சின் சிந்தனையோட்டத்தின் அடிப்படையில் பெரிதும் செல்வாக்கு பெற்றிருந்தது. 1844 ஆகஸ்டில் இருவரும் பத்துநாட்கள் தங்கள் கருத்துக்களைப் பரிவர்த்தனைச் செய்துகொண்டபோது, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மீது வைத்திருந்த அபிமானம் வெகுவாக வளர்ந்தது. மார்க்ஸ், ஏங்கெல்ஸின் தைர்யம், அர்ப்பணிப்பு, ஒரேகுறிக்கோளுடன் செயல்படும் விதம் முதலானவற்றை மிகவும் போற்றிப்பாராட்டினார். அந்தக் காலத்தில் எழுந்த அனைத்துவிதமான தத்துவார்த்தக் கேள்விகள்மீதும் அவர்களிருவரும் ஒத்துப்போனதையும் மார்க்ஸ் குறித்துக்கொண்டார்.

அவர்கள் 1844இல் கூட்டாகப் படைத்திட்ட முதல் நூல், ‘புனிதக் குடும்பம் அல்லது விமர்சன ரீதியான விமர்சனத்தின் விமர்சகர்’ (‘The Holy Family or Critique of Critical Criticism) என்னும் நூலில் அவர்கள் தத்துவம் மற்றும அரசியல் பொருளாதாரத்தின் மீது கருத்துமுதல்வாதம் (idealism) செலுத்திய செல்வாக்கிற்கு எதிராகப் போராடினார்கள்.

இதில் மார்க்சும் ஏங்கெல்சும் ஒருங்கிணைந்து, ‘நமக்கும் மேலான இயற்கை சக்திகள் எதுவுமோ, அல்லது மனித உணர்வுகளோ, அல்லது கதாநாயர்கள் எவருமோ (heroes) வரலாற்றைப் படைத்திடவில்லை’ என்பதை மெய்ப்பித்தார்கள். மாறாக, உழைக்கும் மக்கள் மட்டுமே தங்கள் உழைப்பு மற்றும் தங்களின் அரசியல் போராட்டங்கள் மூலமாக, சமூகத்தை முன்னெடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள் என்று மெய்ப்பித்தார்கள். இதில் மேலும் அவர்கள், தொழிலாளர் வர்க்கம் தற்போது இருந்துவரும் தங்கள் சொந்த நிலைமைகளை அழித்து ஒழித்திடாமல், அதாவது, தற்போதைய முதலாளித்துவ சமூகத்தை அழித்து ஒழித்திடாமல், தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது என்றும் காட்டினார்கள். தொழிலாளர்களை, ஒரு வர்க்கமாக, வரலாற்றுரீதியாக விடுவித்திடும் பணித்திட்டம் இதில் விரிவாகக் கூறப்பட்டது.

எனினும், இவர்களிருவரும் ஆதிக்கம் செலுத்திவந்த கருத்துமுதல்வாதத்தை எதிர்த்துப் போராட, தத்துவார்த்த ரீதியாக, செயல்பட வேண்டியிருந்தது, பொருளியல் அடித்தளங்களை நிறுவ வேண்டியிருந்தது. இதனை, மார்க்சும் ஏங்கெல்சும் ஒருங்கிணைந்து, தாங்கள் 1845-46இல் படைத்திட்ட ‘ஜெர்மன் தத்துவம்’ (‘German Ideology’) என்பதில் படைத்திட்டார்கள். முதன்முறையாக, ஒருங்கிணைந்து திட்டமிட்ட முறையில், அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படைகளை – உழைக்கும் வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டத்தைப் – படைத்திட்டார்கள்.

உண்மையில், 1843 முதல் 1845 வரையிலான காலம் மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் ஒரு நீரோட்டத்தை – புரட்சிகர ஜனநாயகத்திலிருந்து தொழிலாளர்வர்க்கப் புரட்சி நிலைக்கு, ஹெகலியன் செல்வாக்கிலிருந்து வரலாற்றுப் பொருள்வாதத்திற்கு, தத்துவத்திலிருந்து அரசியல் பொருளாதாரத்திற்கு மாறுவதைக் குறிக்கிறது. இதில், மார்க்சும் ஏங்கெல்சும் ஒருங்கிணைந்தே ஆரம்ப அடிப்படைப் பங்கினை ஆற்றினார்கள்.

சட்டம் குறித்த ஹெகலியன் தத்துவத்தின் மீதான மார்க்சின் விமர்சனபூர்வமான ஆய்வு அவரை, சட்டரீதியான உறவுகளோ அல்லது அரசியல் வடிவங்களோ தாமாகவோ அல்லது மனித மனத்தின் வளர்ச்சியின் அடிப்படையிலோ அல்லது உணர்வின் அடிப்படையிலோ புரிந்துகொள்ள முடியாது என்றும் அதற்கு மாறாக வாழ்க்கையின் பொருளியல் நிலைமைகளின் அடிப்படையில்தான் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கும் இட்டுச்சென்றது. ஹெகல் ‘குடிமைச் சமூகம்’ (‘civil society’) என்ற ஒரு சொற்றொடரை உருவாக்கி இருந்தார். எனினும், மார்க்ஸ் “குடிமைச் சமூகத்தின் அமைப்பு (anatomy) குறித்து, அரசியல் பொருளாதாரத்தில் நாட வேண்டியிருக்கிறது,” என்ற முடிவுக்கு வந்திருந்தார். இது அவரை இயக்கவியல் பொருள்முதல்வாதம் குறித்த மூலாதாரமான அடித்தளத்தை (seminal foundation) ஆராய்வதற்குக் கொண்டு சென்றது: “மனிதர்களின் நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல, அதற்கு மாறாக, மனிதர்களின் சமூகநிலைதான் அவர்களின் உணர்வை நிர்ணயிக்கிறது.” என்று வரையறுத்தார்.

தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனங்களை இணைத்து, மார்க்சும் ஏங்கெல்சும் இந்தப் புரட்சிகர சித்தாந்தத்தை வளர்த்தெடுத்தனர். இது 1848இல் இவர்கள் கூட்டாக வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கையில்’ வெளிப்படுத்தப்பட்டதையும், பின்னர் அது 1864இல் முதல் அகிலம் அமைக்கப்பட்டபோதும் வெளிப்படுத்தப்பட்டதைக் காண முடியும்.

மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான இயக்கவியல்

மார்க்ஸ், மூலதனம் நூலைப் படைப்பதன்மூலம் முதலாளித்துவ அமைப்பு முறையை அக்குவேறு, ஆணிவேராகப் பிரித்துத் தொங்கப் போடுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, மனிதகுலத்தின் மீதான சுரண்டல் முதலாளித்துவத்தின் உற்பத்தி நடைமுறையில் மேற்கொள்ளப்படுகிறது என்றும், எனவே, அதனைத் தூக்கி எறிவது என்பது ஒரு அறநெறி சார்ந்த கேள்வி மட்டுமல்ல, மனிதகுல விடுதலைக்கான அறிவியல்பூர்வமான அவசியமுமாகும் என்று செயல்படுத்திக் காட்டிய அதே சமயத்தில், ஏங்கெல்ஸ் நாம் மேலே குறிப்பிட்டதைப்போன்று, அனைத்துத் துறைகளிலும் இயக்கவியல் எப்படிச் செயல்படுகிறது என்பதை வெளிக்கொணர்வதில் விரிவான முறையில் கவனம் செலுத்தினார்.

இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை, மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையில் என்றென்றும் நடைபெற்றுவரும் இயக்கவியல் நடவடிக்கைகளாகும். அதாவது, சிறந்ததோர் வாழ்வுக்கும், வாழ்நிலைமைகளுக்கும் ஏற்றவிதத்தில் இயற்கையைப் பொருத்தக்கூடிய முயற்சிகளாகும். இந்த, இயக்கவியல் நடைமுறையில், மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தி மாற்றக்கூடிய அதே சமயத்தில், இயற்கையும் மனிதர்களையும், மனிதகுல வளர்ச்சியின் மீது தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றங்களைச் செய்கிறது. ஏங்கெல்ஸ், ‘குரங்கிலிருந்து மனிதனான பரிணாம வளர்ச்சியில் உழைப்பின் பங்களிப்பு’ (‘The Part Played by Labor in the Transition from Ape to Man’) என்னும் அவருடைய கட்டுரையில், எப்படி மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையே இயக்கவியல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்பதைக் காட்டினார். ஏங்கெல்ஸ், எப்படி உழைப்பு கைகள், மனித உணர்வுகள், பேச்சுக்கள் முதலானவற்றின் வளர்ச்சியில் பங்களிப்பைச் செலுத்தியது என்பதையும் காட்டினார். இவை எந்தவிதமான தெய்வீக சக்தியினால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக, இவற்றின் மூலங்கள் வாழ்க்கையின் பொருளியல் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.

இயற்கையின் இயக்கவியல்:

ஏங்கெல்ஸ் மேலும் இயற்கை மற்றும் அறிவியல் வளர்ச்சி சம்பந்தமாகவும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஆராய்ந்தார். அவர் ஆய்வுகள், “இயக்கவியல் என்பது இயக்கத்தின் பொது விதிகளின் அறிவியலுக்கு அப்பாற்பட்டு மற்றும் இயற்கை, மனித சமூகம் மற்றும் சிந்தனையின் வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு வேறெதுவும் இல்லை.” (“dialectics is “nothing more than the science of the general laws of motion and development of nature, human society and thought”) என்ற முடிவுக்கு வந்தார்.

இயக்கவியலும் மானுடவியலும்:

ஏங்கெல்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாத விதிகளை, அவர் காலத்தில் கிடைத்த தகவல்களிலிருந்து, மானுடவியல் சாட்சியத்திற்கும் பிரயோகித்து, முந்தைய மனித சமூகங்களை ஆய்வு செய்தார். அவர், தன்னுடைய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ (‘Origins of the Family, Private Property and the State’) என்னும் நூலில், ஏங்கெல்ஸ் நவீன வர்க்க சமுதாயத்தைச் சுற்றியிருக்கும் கட்டுக்கதைகளைத் தோலுரித்துக்காட்டுகிறார். எப்படி சொத்தின் அடிப்படையிலான வர்க்க உறவுகள் குடும்பத்தின் தோற்றத்தையும், ‘பெண் பாலினம்’ வரலாற்றுரீதியாக தோல்வியடைந்தது என்பதையும் – ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நிலைமையும், ஆணாதிக்கப் போக்கும் அவற்றிலிருந்து பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் தோன்றின என்பதையும் தோலுரித்துக்காட்டுகிறார்.

இயக்க இயலும் வரலாறும்:

உண்மையில், எங்கெல்ஸ், (1849-50)இல் ‘ஜெர்மனியில் விவசாயிகளின் போர்’ (‘The Peasant War’) என்னும் நூலில், வரலாற்றை ஆய்வு செய்ததில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை முதன்முதலாக நேரடியாகப் பிரயோகித்தார்.

இயக்கவியலும் தத்துவமும்:

ஏங்கெல்ஸ் மார்க்சியத்திற்கு மறுப்பாக வெளிவந்த தத்துவஞானி, ஈகன் டூரிங் (Eugen Duhring), முன்வைத்திருந்த ‘பெரும் கோட்பாடு’ (‘grand theory’) என்னும் சித்தாந்தத்தை அடித்து நொறுக்கும் பணியை எடுத்துக்கொண்டார். ‘டூரிங்கிற்கு மறுப்பு’ என்னும் நூல், மார்க்சியம், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் செல்லுபடியாகும் தன்மையை நிரூபிப்பதில் செல்வாக்குமிக்க தாக்கத்தை செலுத்தியது.

எனவே, அநேகமாக மனித சமுதாயத்தின் நடவடிக்கைகள் அனைத்திலும் ஏங்கெல்ஸ் தனியாகவும், மார்க்சுடன் இணைந்தும் முக்கியமான பங்களிப்புகள் பலவற்றைச் செய்திருக்கிறார் என்பது இவற்றின்மூலம் தெளிவாகிறது. இயற்கை அறிவியல், மானுடவியல், வரலாறு, அரசியல் பொருளாதாரம் மற்றும் தத்துவம் ஆகிய அனைத்துத்துறைகளின் மூலமாகவும் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையேயான இயக்கவியலை விரிவுபடுத்தியதன்மூலம், ஏங்கெல்ஸ், புரட்சிகர இயக்கத்தையும் அதன் தத்துவார்த்த அடித்தளங்களையும் வளர்த்தெடுப்பதில் தனித்துவமிக்க பங்களிப்பினை விட்டுச்சென்றிருக்கிறார். எனினும், இவ்வாறு அவர் மேற்கொண்ட ஒவ்வொரு பணியும், அவர்களில் ஒருவர் சுயேச்சையாகவோ அல்லது கூட்டாகவோ மேற்கொள்வதற்கு முன்னர், இருவரும் அதுகுறித்துப் பரஸ்பரம் விவாதங்கள் செய்தபின்னர்தான் அதனை வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பது அடிக்கோடிட்டுக் கொள்ளப்பட வேண்டும்.

அரசியல் நடவடிக்கை

இத்தகைய தத்துவார்த்த அடித்தளங்களை வளர்த்தெடுத்த அதே சமயத்தில், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் இவ்விரு பேராசான்களும் வெறுமனே வெறும் சித்தாந்தவாதிகளாக மட்டும் இருந்திடவில்லை. மாறாக அவர்கள், தங்கள் காலங்களில் நடைபெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து இயக்கங்களிலும் சுறுசுறுப்பாகப் பங்கேற்றனர், சமயங்களில், அவற்றுக்குத் தலைமை தாங்கினர், வழிகாட்டினர்.

மார்ச்சியத்தை நிறுவிய இவ்விரு பேராசான்களும், வெற்றியை ஈட்டக்கூடிய விதத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு வல்லமையை அளிக்கக்கூடிய ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தைக் கட்டி எழுப்புவதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். இவ்விரு பேராசான்களும் 1864இல், முதல் அகிலம் என்று புகழ்பெற்ற, சர்வதேச உழைக்கும் மக்களின் சங்கம் (International Workingmen’s Association) நிறுவியதில் முக்கியமான பங்கினைச் செலுத்தினார்கள். அப்போது செயல்பட்டுவந்த பல்வேறு இடதுசாரி தொழிலாளர் குழுக்களை ஒரு பொது ஸ்தாபனத்தின்கீழ் கொண்டுவருவதற்கான முதல் முயற்சியாகவும், சர்வதேச தொழிலாளர்வர்க்க இயக்கத்தை முன்னெடுத்துச்செல்வதற்கான முதல் நடவடிக்கையாகவும் இது அமைந்திருந்தது.

அறிவியல்பூர்வமானது, புரட்சிகரமானது

மார்க்சின் மறைவிற்குப் பின், சர்வதேச தொழிலாளர் வர்க்கமும், உலகமும் மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் வளமான பணிகளையும், சித்தாந்த அடித்தளங்களையும் ஏங்கெல்ஸ் மூலமாகவே பிரதானமாகத் தெரிந்து கொண்டன. மார்க்சால் விட்டுச்செல்லப்பட்ட கணக்கிலடங்கா அளவிற்கு இருந்த குறிப்புகள், ஏங்கெல்சால் தொகுக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டன. ‘மூலதனம்’ நூலின் இரண்டாவது மூன்றாவது தொகுதிகளை இந்தக் குறிப்புகளைக் கொண்டு, ஏங்கெல்ஸ்தான் தயாரித்து வெளியிட்டார். ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’க்கான முன்னுரைகளையும், மற்றும் அவர்களின் பணிகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களில் ஏற்பட்டுவந்த வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டியதை வலியுறுத்தியும் எழுதுவதை ஏங்கெல்ஸ் தொடர்ந்தார்.

தோழர் லெனின் கூறியது போன்று, “ஏங்கெல்ஸ், தொழிலாளர் வர்க்கம் தன்னை அறிந்துகொள்ளவும், அவர்கள் உணர்வுபூர்வமானவர்களாக இருப்பதற்கும், தங்கள் கனவுகள் மெய்ப்பட அறிவியலைப் பயன்படுத்துவதற்கும் கற்றுத்தந்தார்.”

தமிழில்: ச. வீரமணி

Tags: