இது ஒன்றும் மலையகத்துக்கு புதிதல்ல!
–குமார் சுகுணா
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகள், அரசியல் வாதிகளின் அறிக்கைகள்… பல அரசியல் வாதிகள் வீதியில் இறங்கி போராட்டம் என தற்போது பேஸ்புக் பக்கங்களிலும் மலையக அரசியல் வாதிகளினதும் பேசுப்பொருளாக மாறியுள்ள விடயம் டயகம சிறுமியின் மரணம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிக்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் இம்மாதம் 03 ஆம் திகதி தீ காயங்களுடன் சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மிக பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஆனால் இது மலையகத்தின் முதல் சம்பவம் அல்ல. இதற்கு முன்னரும் இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளன.
எத்தனையோ விடயங்கள் வெளி உலகுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது. அவர் அதிகாரத்தில் இருந்திருந்தால் சில வேலைகளில் மறைக்கப்பட்டிருக்கலாம்.
கசப்பு என்றாலும் சில உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கொழும்புக்கு வீட்டு வேலைக்கு, கடை வேலைக்கு என்று மலையக சிறுமிகள் , சிறுவர்கள் அழைத்து செல்லப்படுவது அல்லது பெற்றோர்களினால் விரும்பி அனுப்பப்படுவது என்பது புதிய விடயம் அல்ல.
மலையகத்தை பொருத்தவரையில் 70களில் இருந்து இன்று வரை இருக்கின்ற மாறா நிலைத்தான் கொழும்பு வேலை. 10, 12 வயது நிரம்பியவுடன் அல்லது அதற்கு குறைந்த வயதுடைய பிள்ளைகள் கொழும்புக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுவது வழமை. ஆண் பிள்ளைகள் கடைத்தெருக்களில் ஹோட்டல்களில் சாப்பிட்ட கோப்பைகளை கழுவுவது.. மேசைகளை துடைப்பது… பொட்டளம் கட்டுவது போன்ற வேலைகளிலும் பெண்பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதும் வழமை. அது போல படிப்பை இடைநடுவே விட்டு விட்டு கொழும்பை நோக்கி குறிப்பாக ஆடைத்தொழிற்சாலையில் வேலைக்கு செல்லுபவர்களும் அதிகம். இது போன்ற சம்பவங்களுக்கு தரகர்கள் முக்கிய காரணம். அவர்களுக்கு பணம் மட்டுமே ஆசை. இதனை ஒரு தொழிலாக செய்பவர்கள்.
பெற்றோர்கள்தான் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு முழு காரணம். பொறுப்புக்குரியவர்கள். ஆனால் அந்த பொறுப்பை பலரும் சரிவர செய்வதில்லை என்பதே உண்மை.
இந்த சிறுமியின் மரணத்திற்கு பின் மலையக அரசியல்வாதிகளின் அறிக்கைகளில் வறுமை காரணமாக பிள்ளைகள் வேலைக்கு அனுப்படுவதாக கூறுகின்றனர். இந்த வறுமையை மூன்று தலைமுறையாக மாற்ற முடியாது உள்ளமை அரசியல்வாதிகளின் தவறுதான்.
தேயிலைத் மட்டுமே தொழில் என்று இருந்தவர்களின் பிள்ளைகள் படிக்காமலா இருக்கின்றனர். அல்லது சாப்பிட கூட முடியாத வறுமையிலா இருக்கின்றனர். யோசித்து பார்க்க வேண்டும் .
100 வருடத்துக்கு முன்னர் நமது பாட்டன் உழைப்பதற்காக இந்த நாட்டுக்கு வந்தான். அவன் வந்த போது இருந்த ஒரு ஆரோக்கிய மனநிலைக்கூட இன்று இருப்பவர்களிடம் இல்லை.
குடும்ப வறுமை என்பதை இக்காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்னைக்கேட்டால் மலையக மக்களுக்கு விழிப்புணர்வு என்பது மிக குறைவு. இதனை ஏற்படுத்தக் கூடிய கட்டமைப்பு மலையகத்தில் இல்லை என்றே கூறுவேன்.
பாடசாலை செல்ல வேண்டிய வயதில் ஒரு பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோருக்கு இருக்க வேண்டிய சராசரி அறிவாகும். பெற்றோராக ஒரு உயிரை உருவாக்குவது என்பது வெறும் கடமை அல்ல. அந்த உயிரை இந்த சமூகத்திற்கு மிக சிறந்த பொக்கிசமாக கொடுக்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையானதை செய்து கொடுக்க கூடிய திறனை முதலில் வளர்க்க வேண்டும். அதை விடுத்து கல்யாணம்.. பிள்ளைகள் அவ்வளவுதான்பா வாழ்க்கை என்று வாழ்வது நன்றல்ல.6 பிள்ளைகளை பெற்றால் அந்த ஆறு பேரையும் வளர்க்கும் திறன் இருக்க வேண்டும். தமது ஆசைக்கு பிள்ளைகளை பெற்று அவர்களை பலிகடாவாக்க கூடாது.
மலையகத்தை பொறுத்த வரையில் கொழும்புக்கு சிறுவர்கள் வேலைக்கு சென்று திருவிழா, தீபாவளி போன்ற நாட்களில் ஊர்களில் செய்யும் அளப்பறைகளை நாம் பார்த்திருப்போம். இது நமக்கு அளப்பறையாக தெரிந்தாலும் சக சிறுவனுக்கோ இளைஞனுக்கோ ஈர்ப்பையும் ஆசையையும் தூண்டிவிட்டுவிடும். அவனும் இவர்களை போல கலர் கலராக புத்தாடை .. கையில் கைப்பேசி என்று வலம் வர விரும்பி கொழும்பை நோக்கி ஓடுவர். கொழும்பில் படிக்க வேண்டிய வயதில் எச்சில் கோப்பை கழுவும் சிறுவர்கள் ஊருக்கு வரும் போது பிரமிப்பாக தெரிவார்கள். இதனை பார்த்து சக சிறுவர்களும் அவர்களது பாணியை பின் தொடர்ந்து கொழும்பை நோக்கி செல்வது வழமையானதாகிவிட்டது.
பெற்றோர்களுக்கு நம்மால் மூளைச்சளவை செய்ய முடியாவிடினும் கூட இந்த சமூகத்தின் நாளைய தூண்களான அந்த பிள்ளைகளை வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உண்டு அல்லவா… இலவச கல்வியான அரச கல்வியை பிள்ளைகள் தொடரமுடியாமல் இடைவிடுவதற்கு யார் காரணம் என்று யோசித்து பார்த்தால் சமூகத்தின் அத்தனை பேரும்தான்.
அடுத்தது அரசியல் வாதிகள், வாய்வலிக்க பேசுவார்கள் கைவலிக்க அறிக்கை விடுவார்கள். இத்தனை வருட அரசியலில் கல்வியின் முக்கியத்துவத்தை ஏன் அவர்களால் மலையகத்துக்கு புகுத்த முடியாமல் போனது… இதனை விட மலையகம் மலையகத்தின் படித்த சமூகம் என்று ஒருசாரார். புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் அவர்கள் பின் தங்கிய நிலையில் உள்ள மலையக மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஏதாவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுண்டா… அல்லது கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தியதுண்டா…
எனவே இது போன்ற சம்பவங்கள் மலையகத்தில் ஏற்படுவதற்கு காரணம் அந்த சமூகமே தவிர வேறு யாரும் அல்ல. கொழும்பில் பல இடங்களில் நீங்கள் பார்க்கலாம். ரிஷாத்தின் மட்டும் அல்ல தமிழர்களின் விட்டில் கூட மலையக சிறுமிகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள்.
அங்கேயே சிறுமிகள் பூப்பெய்த எத்தனை சம்பவங்கள் பார்த்திருகிக்றோம். அதே வயது சிறுமி தன் வீட்டில் உள்ளபோதிலும் அவளுக்கு வேலைக்கார பெண்ணாக இந்த சிறுமி இருக்க வேண்டும். அந்த வீட்டு எஜமானர்களின் வக்கிரத்தனமான மனம் சிறுவர்களை வேலைக்கு ஏற்றுக்கொள்கிறது.
அதுமட்டும் அல்ல அந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்ற சந்தர்பங்களும் உள்ளன. தற்போது ரிசாத் வீட்டில் உயிரிழந்த சிறுமியும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பு மிக்க மக்களுக்கான பதவியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாத் வீட்டில் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். ஆனால் ரிஷாத்தோ தற்போது மருத்துவமனையில் நெஞ்சு வலி என்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மேலும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
தனக்கு எதிராக ஒரு பாலியல் துஷ்பிரயோகம் ஏற்படும் போது அதனை எதிர்கொள்ள கூடிய அறிவுக்கூட சிறுமிக்கோ, யுவதிக்கோ இல்லாமல் இருப்பது எத்தனை வேதனைைான விடயம்.
இது தொடர்பில் பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் பேசுவதால் எந்த பயனும் இல்லை. தீர்வுகள்தான் முக்கியம். அந்த தீர்வை நோக்கி மலையக சமூகத்தை இழுத்துச்செல்லுங்கள். நூறுவருடமாக வறுமையை பேசுகின்ற அரசியல் தலைமைகள் அதனை மாற்றும் வழியை ஏற்படுத்த வேண்டும்.
இன்று படித்து விட்டு வேலையின்றி எத்தனை மலையக இளைஞர் , யுவதிகள் இருக்கின்றனர். எந்த பட்டதாரிக்காவது படித்ததற்கான பிடித்த வேலை கிடைக்கின்றதா.. மலையக்தின் சில அரசியல் வாதிகள் தமது இலாபத்திற்காக உயர்தர கல்வி தகுதியை சரிவர பூர்த்தி செய்யாதவர்களை கூட ஆசிரியர்கள் ஆக்கினார்கள்.
பல்கலைக்கழகம் சென்று பட்டம் படித்தவர்களுக்கும் இன்று மலையக்கதில் இருக்கின்ற ஒரே தொழில் ஆசிரியர் தொழில்தான். அதனை தாண்டி அவர்களுக்கான வேறு தொழில் வாய்ப்பினை மலையகத்தில் பெற்றுக்கொடுக்காதது யாருடைய குற்றம். சுயதொழில் வாய்ப்பை கூட பெற்றுக்கொடுப்பதில்லை.
படி படி என்று கல்வியை திணிக்க முடியாது. வெறுமனே வாயால் கூறவும் முடியாது. படித்து அவன் தேர்ந்தெடுக்க வேண்டிய துறை.. அந்த இலக்கு அவனது கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அந்த இலக்கு தன்னையும் தனது சமூகத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கும் வர வேண்டும். அப்படி ஒரு மாற்றம் மலையகத்தில் ஏற்பட்டால் மாத்திரமே சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் நிலை மாறும். இறந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதனை விட இனி இவ்வாறான சம்பவம் நடக்காது தடுக்க முயற்சியுங்கள்.