‘காந்தியைத் துளைத்த குண்டுகளுக்கு மிக அருகிலிருந்த என் அப்பா!’ – கல்யாணத்தின் நினைவுகள் பகிரும் மகள்
–ஜெனி ஃப்ரீடா
காந்தியின் பெருமைகளுக்கான நேரடி சாட்சியாக விளங்கியவர் கல்யாணம். அவருடனான நினைவுகளையும் வரலாற்றின் முக்கியமான தருணங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவரின் மூத்த மகள் மாலினி கல்யாணம்.
மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்தவரும் அவருடைய கடைசிக் காலத்தில் உடன் பயணித்தவருமான கல்யாணம், வயது மூப்பின் காரணமாகத் தனது 99-வது வயதில் 04.05.2021 அன்று உயிரிழந்தார். காந்தியின் பெருமைகளுக்கான நேரடி சாட்சியாக விளங்கியவர் கல்யாணம். அவருடனான நினைவுகளையும் வரலாற்றின் முக்கியமான தருணங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவரின் மூத்த மகள் மாலினி கல்யாணம்.
“என் அப்பா காந்தியையே சுவாசித்தார், காந்தியக் கொள்கைகளிலேயே இறுதிவரை முழுமூச்சுடன் வாழ்ந்தார். ஒரு மனுஷனுக்கு ரெண்டு துணிக்கு மேல தேவையில்லைனு சொல்வார். ஒண்ணைப் போட்டுக்கணும், இன்னொன்றை துவைச்சுப் போடணும். என் சட்டை கிழியிற அன்னைக்குத்தான் எனக்கு தீபாவளின்னு சொல்வார். இன்னைக்கு அவரு கபோர்டை திறந்து பாத்தா வெளியில போடுறதுக்கு ரெண்டு செட் பைஜாமா குர்தா, வீட்ல போடுற ஷார்ட்ஸ் இரண்டு, ஒரு சில செட் சாக்ஸ், கைக்குட்டைதான் இருக்கு” என்று நெகிழ்ந்தார்.
எல்லா மதமும் ஒன்றுதான்!
“எங்கள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தினால் `அல்லாஹூ அக்பர்’ என்றுதான் ஒலிக்கும். வீட்டின் வரவேற்பறையில் நுழைந்ததும் இயேசுவின் மிக அரிய புகைப்படம் இருக்கும். தினமும் அதிகாலை 3.30 மணிக்கு அவருடைய பிரார்த்தனையைத் தொடங்கிடுவார். அந்தப் பிரார்த்தனையில் `Jesus Never fails, அல்லாஹூ அக்பர், ஸ்ரீ ராமஜெயம்’ இந்த மூணு ஸ்லோகனையும் டைரியில எழுதி எழுதி பிரார்த்தனைச் செய்வார். அவருடைய கபோர்டுல இந்த ஸ்லோகன் எழுதின டைரிதான் அடுக்கடுக்கா இருக்கும். அவருக்கு 14 மொழிகள் தெரியும். எந்த மொழி பேசுறவரைப் பார்த்தாலும் அவருடைய மொழியிலேயே அவருகிட்ட பேசுறது அப்பாவுக்குப் புடிக்கும்.
மவுன்ட் பேட்டனுக்கு இட்லி!
“தென்னிந்திய, வட இந்திய, கான்டினென்ட்டல்னு எல்லா வகையான சமையலும் அவருக்குத் தெரியும். மவுன்ட் பேட்டனுக்கும் அவருடைய மனைவிக்கும் இட்லி செய்து கொடுத்திருக்கார். பஞ்சு போல மென்மையா இருந்த இட்லியை அவங்க விரும்பி சாப்பிட்டிருக்காங்க. காந்திக்கும் அவர் சமைச்சுக் கொடுத்திருக்கார். மசாலா சிம்லா டீன்னு ஒண்ணு போடுவார். தனி சுவையோட ரொம்ப அருமையா இருக்கும். வீட்டுக்கு யார் வந்தாலும் அவரே கைப்பட டீ போட்டுக் கொடுப்பார். ஒரே சமயத்துல எங்க வீட்டுக்கு வெவ்வேறு நாட்டுல இருந்து விருந்தினர்கள் வருவாங்க. அதுபோல நேரத்துல எல்லாம் தனியாளா நின்னு அவங்க அவங்களுடைய நாட்டு உணவை சமைச்சுக் கொடுப்பார்.
சுத்தம்தான் முதல்!
சுத்தமில்லாம இருக்கிறது அவருக்குப் புடிக்காது. கைகால் எல்லாம் அழுக்காகிடும்னு என்னையும் என் தங்கையும் சின்ன வயசுல பீச்சுலகூட விளையாட விடமாட்டார். `இறைபக்திக்கு அடுத்து வருவது தூய்மை’னு (Cleanliness is next to godliness) சொல்வாங்க. எங்க அப்பாவுக்கு தூய்மைக்கு அடுத்ததுதான் இறைபக்தி.
டெல்லியில் பங்கி காலனியில் காந்தியோட அவர் இருந்தபோது ஒருமுறை காந்தி அவருடைய அறைக்கு வந்திருக்கார். அப்போ ரூம் சுத்தமில்லாம மோசமான நிலையில இருந்திருக்கு. `ஏன் உன் அறையை இவ்வளவு சுத்தமில்லாம வெச்சிருக்க… வெளியில மட்டும் இப்படி ஜம்முன்னு டிரெஸ் பண்ணி இருக்க. உன் அறையை சுத்தமா வெச்சிக்க வேண்டாமா’னு கேட்டாராம்.
அதுக்கு அப்பா, “உங்களைப் பார்க்க தினமும் பெண்கள், வயசானவங்க, குழந்தைங்கன்னு வர்றாங்க. அவங்க எல்லாரும் பாத்ரூமையும், ஓய்வெடுக்க இந்த அறையையும் பயன்படுத்துறாங்க. உங்களைப் பார்க்க வர்றவங்களுக்குத் தேவையான விஷயத்தைக் கவனிக்க வேண்டியதும் என் கடமைதான். நாளைக்கு வந்து பாருங்க என் அறை எப்படி இருக்குன்னு” சொன்னாராம். காந்தி ரொம்ப நெகிழ்ந்து போயிட்டாராம்.
05.05.2021 அன்று அப்பாவுடைய இறுதிச்சடங்கு முடிஞ்சு அவருடைய அஸ்தியைக் கரைக்கிறதுக்கு நானும் தங்கையும் பீச்சுக்குப் போயிருந்தோம். சடங்கை முடிச்சிட்டு ஈரமான, மணல் ஒட்டின காலோட காருக்குள்ள ஏற எங்களுக்கு மனசே வரல. கண்ணீரோட ரெண்டு பேரும் கால துணிய வெச்சு சுத்தப்படுத்திட்டுதான் ஏறினோம்” சில விநாடிகள் மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.
காந்தியும் கோட்சேவும்!
“குண்டு துளைச்சு காந்தி பின்னால சாயும்போது அப்பாதான் பக்கத்துல இருந்திருக்கிறார். சில இன்ச் தூரத்தில் இருந்ததால துப்பாக்கி குண்டுலயிருந்து அப்பா தப்பிச்சார். `இந்தப் பக்கம் குண்டு வந்திருந்தா நான் போயிருப்பேன்’னு சொல்வார். அஹிம்சாவாதியாக இருந்ததால கோட்சேவின் செயல் பற்றி கடுமையான எதிர்ப்பு இருந்தது.
ஆனாலும் ஆசிரமத்துக்குள் நுழையும் பொதுமக்களை சோதிக்கணும்னு போலீஸார் அப்பாகிட்டதான் முதல்ல சொல்லியிருக்காங்க. அப்பா காந்திகிட்ட கேட்டதுக்கு, `ஒரு மனுஷனுக்கு எப்போ பாதுகாப்பு தேவைப்படுதோ அவனுக்கு வாழ உரிமை இல்லை’னு (A man who needs security has no right to live) சொல்லி அதுக்கு மறுத்துட்டாரு. சோதனைக்கு காந்தி அனுமதி கொடுத்திருந்தா, அந்த கொடூர சம்பவம் நடந்திருக்காதுன்னும் அப்பா அடிக்கடி என்கிட்ட சொல்லுவார்.
23 வயசுதான் அப்போ அப்பாவுக்கு. காந்தி சுடப்பட்டபோது கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தார். உடனே அங்கேயிருந்த ஒருத்தர்கிட்ட சைக்கிளை கேட்டு வாங்கிட்டு சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கும் நேருவுக்கும் இவர்தான் நேர்ல போய் தகவல் சொன்னார்” என்று காந்தியுடனான நினைவுகளைப் பகிர்ந்தார்.
அழகிய தோட்டம்… 5,000 செடிகள்!
மிகக்கடினமான உழைப்பாளியாகவும் இருந்திருக்கிறார் கல்யாணம். சுமார் 5,000 செடிகள் இருக்கும் மிகவும் அழகான தோட்டம் ஒன்றைப் பராமரித்து வந்திருக்கிறார். எத்தனை பூக்கள் பூத்தாலும் அதிலிருந்து பூஜைக்குக்கூட ஒரு பூவைப் பறிக்கவிட மாட்டாராம். ஆரோக்கியமாக இருந்தபோது தோட்டத்தில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வரை வேலை பார்ப்பாராம். தோட்டவேலை மட்டுமல்ல வீட்டு வேலைகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி என்கிறார் அவரின் மகள்.
இறுதி நாள்கள்
“அவர் போறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்கிட்டயும் என் தங்கைகிட்டயும் ஒரே விஷயத்தை தனித்தனியா சொன்னார். `யாரு எனக்கு என்ன துரோகம் பண்ணியிருந்தாலும், என்னை எப்படி ஏமாத்தியிருந்தாலும் அவங்களை சிரிச்ச முகத்தோடதான் வரவேற்கணும். என் இறப்புக்கு வரும்போது என்னை ஏமாத்திட்டாங்கன்னு அவங்ககிட்ட வெறுப்பைக் காட்டக் கூடாது’ன்னு சொன்னார்.
வீட்டில்தான் இறந்தார்
சமூக வலைதளங்களில் கல்யாணம் அவர்கள் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போலவும் அதில் காந்தியைப் பற்றி, கோட்சேவைப் பற்றி பேசுவது போலவும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதுபற்றிக் கேட்டபோது, சில மாதங்களுக்கு முன்பு வழக்கமான பரிசோதனைக்கு அவரை கூட்டிட்டுப்போனபோது எடுக்கப்பட்ட வீடியோ. வயது மூப்பின் காரணமா எங்க வீட்டில்தான் அவர் உயிர் பிரிந்தது” என்று நிறைவுசெய்தார் மாலினி.