ஆப்கானிஸ்தான்: விரும்பப்படாத நிலையில் இந்தியா!
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
ஆப்கானிஸ்தானத்தில் ஸ்தல நிலைமைகள் மிகவும் வேகமாக மாறிவருகின்றன. அமெரிக்கத் துருப்புக்கள் கிட்டத்தட்ட விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக நாடு முழுதும் தலிபான் இயக்கத்தினர் முன்னேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் நிலப்பகுதியில் 85 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தலிபான் கூறியிருக்கிறது. இது உண்மையாகவே இருந்தபோதிலும், தலிபான் இயக்கத்தினர் வட பகுதியில் மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா 20 ஆண்டுகளுக்குப்பிறகு தன் துருப்புக்களை விலக்கிக்கொண்டிருப்பது அதன் அவமானகரமான தோல்வியையே குறிக்கிறது. அமெரிக்காவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்ற 2001 செப்டம்பருக்குப் பின்னர், ஜனாதிபதி புஷ் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று கூறி ஆப்கானிஸ்தானத்தின் மீது படையெடுப்புக்கு உத்தரவிட்டார். போர்ச் சக்கரம் முழுமையாகச் சுற்றி வந்தது. 1980களில் சோவியத் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இருந்த ஆப்கானிஸ்தானத்தில் செயல்பட்டுவந்த முஜாஹிதீன் இயக்கத்தினருக்கு, அமெரிக்கா, நிதி மற்றும் ஆயுத உதவிகளைச் செய்து வந்தது. இவ்வாறு அமெரிக்கா ஒசாமா பின் லேடன் போன்ற ஜிகாத்துகளுக்கும் உதவிகளைச் செய்து வந்தது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா முஜாஹிதீனின் சந்ததியினரான தலிபான் இயக்கத்தினருக்கு எதிராகத் திரும்பியது. தலிபான் இயக்கத்தினரை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு, “ஜனநாயகப் போர்வை”யில் தன் தலையாட்டிப் பொம்மை அரசை அமர்த்தியது.
அமெரிக்கா, இருபதாண்டுகளாக மேற்கொண்டுவந்த வான்வழித் தாக்குதல்களாலோ, சிறப்புப் படையினரின் செயல்பாடுகளாலோ தலிபான் இயக்கத்தின் நடவடிக்கைகளை அடக்கிவிட முடியவில்லை. இரண்டு டிரில்லியன் டாலர்களுக்கும் (14,90,55,00,00,00,000.00 ரூபாய்களுக்கும்) மேல் செலவு செய்தும்கூட, 2,312 படையினரைக் காவு கொடுத்தும்கூட, வெற்றிபெற முடியாததைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் தங்கள் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ள முனைந்தன. பைடன், அமெரிக்கா தங்கள் அனைத்து அமெரிக்க-நேட்டோ படையினரையும் செப்டம்பர் வாக்கில் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளும் என்ற நடவடிக்கையை அறிவித்தார்.
இவ்வாறாக இருபதாண்டுகளாக நடைபெற்றுவந்த யுத்தமானது 47,600 அப்பாவி மக்களைப் பலிகொண்டுள்ளது. இவர்களில் 40 சதவீதத்தினர் அமெரிக்காவின் வான்வழி குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர்களாவார்கள்.
டிரம்ப் நிர்வாகம், தலிபான்களுடன் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கியது. பின்னர் ஒரு சமாதான ஒப்பந்தத்தையும் அறிவித்தது. ஆனாலும் தலிபான் இயக்கத்தினருக்கும் ஆப்கன் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஓர் இடை நிலை மாற்றுத் திட்டம் (interim transitional plan) தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துவிட்டது. எப்படி அமெரிக்கா, ஈராக்கில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு அதனை முற்றிலுமாக அழித்தொழித்தபின்னர் அதனைவிட்டு நீங்கிச்சென்றதோ அதேபோன்றே இப்போதும் ஆப்கானிஸ்தானத்தை கைவிட்டுவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.
அமெரிக்கத் துருப்பினரால் உருவாக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்ட ஆப்கன் தேச ராணுவம் (Afghan National Army), வலுவான ஒன்று என சொல்ல முடியாது. அதன் சிப்பாய்களில் பல பிரிவினர் சரணடைந்துகொண்டிருக்கின்றனர் அல்லது தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டுவிட்டு தப்பிஓடிக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் கூட, அமெரிக்கா தன் துருப்புக்களை முற்றிலுமாக விலக்கிக்கொண்டபின், ஆறு மாத காலத்திற்குள், தலிபான் இயக்கம் ஆப்கன் முழுவதையும் கைப்பற்றிவிடும் என்று மதிப்பிட்டிருக்கின்றன. ஆனாலும், தலிபான் அவ்வாறு முழுமையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், அதனால் அங்கே ஸ்திரத்தன்மை ஏற்பட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. அங்கே பல்வேறு இனக்குழுக்களின் செல்வாக்கிற்கு உட்பட மக்கள் ராணுவத்தினரும் (militia), அமெரிக்காவின் அரவணைப்புடன் பயிற்சி அளிக்கப்பட்ட பல்வேறு மக்கள் ராணுவத்தினரும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே அங்கே உள்நாட்டு யுத்தம் உருவாவதற்கான நிலைமைகளும் இருந்து வருகின்றன. இது அங்கே வாழும் மக்களுக்கு மிகவும் மோசமான நிலைமையாகும். அவர்கள் கடந்த நாற்பதாண்டு காலமாக அனுபவித்து வந்ததைப்போன்று தொடர்ந்து வன்முறை சம்பவங்களுக்கு இரையாகி அவதிப்படக்கூடிய அவலநிலை தொடரும்.
இத்தகைய மோசமான நிலைமையைத் தவிர்த்திட ஒரேவழி, ஆப்கானில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒரு புரிதலின் அடிப்படையில் தலிபான் பங்கேற்புடன் ஓர் இடைக்கால அரசாங்கம் அமைப்பதேயாகும். இதுபோன்றதொரு ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே தோஹாவில் தலிபானுக்கும் ஆப்கன் அரசாங்கத்திற்கும் மற்றும் இதர பிரிவினர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட முயற்சியைக் கணிசமான அளவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் இந்தியாவுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் இந்தியா, தலிபான் இயக்கத்தினருடனான தொடர்புகளை ஏற்கனவே முற்றிலுமாக முறித்துக்கொண்டுவிட்டது. வாஜ்பாயி அரசாங்கம் 2001இல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்குத் தன் ராணுவத்தின் முழு உதவியையும் அளிக்க ஒப்புக்கொண்டது. ஆனாலும் அமெரிக்கா, அப்போதிருந்த பாஜக தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவதைவிட அங்கே ஆப்கனுக்கு அடுத்து முன்னணியிலிருந்த பாகிஸ்தான்மூலமாகவே செயல்பட்டது. அதிலிருந்தே, இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு, ஆப்கன் அரசாங்கத்துக்கு அங்கே பல பில்லியன் டாலர்கள் உதவியுடன் கட்டப்பட்டுவந்த பல்வேறு திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் உதவி வந்தது.
அமெரிக்கா, மோடி அரசாங்கத்தைக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமலேயே, தலிபானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி, எவ்விதமான சம்பிரதாயங்களும் இன்றி ஆப்கானிலிருந்து வெளியேற முடிவெடுத்துவிட்டது. மோடி அரசாங்கம், தோஹாவில் தலிபானுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள, தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேறுவழியின்றித் தள்ளப்பட்டது. இந்திய அயல்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், தலிபானுடன் இடைத்தரகர்களாகச் செயல்பட்டுவந்த ஈரான் மற்றும் ரஷ்ய அரசாங்கங்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்வதற்காக, டெஹரான் மற்றும் மாஸ்கோவிற்குப் பயணங்களை மேற்கொண்டார். எனினும், ரஷ்யாவில் ஜெயசங்கர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, ஆப்கானை வலுக்கட்டாயமாக தலிபான் எடுத்துக்கொள்வதில் உள்ள “சட்டபூர்வமான” (legitimacy) அம்சங்கள் குறித்து தனக்கு ஐயங்கள் இருப்பதாகக் கூறியதிலிருந்து, இந்தியா எந்த அளவிற்கு எதார்த்த உண்மைகளுக்கு வெகுதூரத்திற்கு அப்பாலிருக்கிறது என்பது தெரிகிறது.
அமெரிக்கா, ஆப்கானிலிருந்து அகன்றபின்பு, அங்கே அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதற்கான பொறுப்பு என்பது அங்கே செயல்படும் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்குத் திரும்பியிருக்கிறது. ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள ஆறு அண்டை நாடுகளைக் கொண்டு ஷங்காய் கூட்டுறவு ஸ்தாபனம் (SCO-Shanghai Cooperation Organisation) ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானைத் தவிர மத்திய ஆசியக் குடியரசு நாடுகளான தாஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜக்ஸ்தான் ஆகியவையும் அங்கம் வகிக்கின்றன. ஆப்கானிஸ்தானும், ஈரானும் பார்வையாளர்கள் (observers) அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
ஷங்காய் கூட்டுறவு ஸ்தாபனத்தின் நாடுகளின் அயல்துறை அமைச்சர்கள் கூட்டம் ஒன்று, ஆப்கன் பிரச்சனையின் மையமாகக் கொண்டு ஜூலை 13-14 தேதிகளில் தாஜிக்தானின் துஷான்பேயில் நடைபெறுகிறது. ஆப்கான் மீதான ஷங்காய் கூட்டுறவு ஸ்தாபனத்தின் தொடர்புக் குழு ஒன்றின் கூட்டமும் நடைபெறுகிறது. இவற்றில் இந்திய அயல்துறை அமைச்சர் ஜெயசங்கர் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் ஆப்கானில் ஓர் அரசியல் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அது ஆரம்பகாலத்திலிருந்தே தலிபானின் ஆதரவாளராக இருந்துவந்தபோதிலும், இப்போது ஆப்கானில் என்ன நடக்கும் என்று கணிக்கமுடியாத நிலைமை உருவாகியிருப்பது, பாகிஸ்தானின் நலன்கள் மற்றும் பாதுகாப்பையும் பாதிக்கும் அம்சங்களேயாகும். பாகிஸ்தானி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், மொயீட் யூசுப் (Moeed Yusuf), ஜூலை 9 அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் செனட் அந்நிய உறவுகள் குழுவின் முன் ஆஜராகி, ஆப்கானிஸ்தான் தொடர்பாக பாகிஸ்தானின் “விரிவான கொள்கைக் கட்டமைப்பை” (“broad policy framework”) முன்வைத்தார். முதலாவதாக, தலிபான் மற்றும் காபூல் அரசாங்கத்திற்கிடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான ஏற்பாடுகளுக்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இரண்டாவதாக, பாகிஸ்தானுக்குள் அகதிகள் வருகை மற்றும் அங்கே ஸ்திரமற்ற நிலை ஏற்படுவதை எந்த அளவிற்குக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அந்த அளவிற்கு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அவர் மேலும், இப்போது அங்குள்ள ஸ்தல நிலைமைகள் அனைத்தையும் மீறிக் கொண்டிருக்கிறது என்றும், தாங்கள் முதலாவதாகக் கூறியுள்ளமை நடக்குமா எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த அணுகுமுறைகளிலிருந்து, இந்தியா, தான் ஷங்காய் கூட்டுறவு ஸ்தாபனத்தின் ஓர் அங்கம் என்றவிதத்தில், பாகிஸ்தானுடனும் சேர்ந்துகொண்டு, கூட்டு முயற்சிகளுக்கு உதவிட தயக்கம் ஏதும் காட்டக்கூடாது.
பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள தகவல்களின்படி, தலிபான் தாங்கள் ஓர் இஸ்லாமிய எமிரேட் (Islamic Emirate) அமைப்போம் என்றும், அது எவ்விதமான “ஜனநாயகக் கட்டமைப்புடனும்” (“democratic structure”) இருக்காது என்றும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. இப்போது பிரதானமான பிரச்சனை என்பது அது பெண்களையும் சிறுமிகளையும் எப்படி நடத்தப்போகிறது என்பதேயாகும். தலிபானின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், தாங்கள் பெண்களை உயர்கல்வி வரை படிக்க வைப்பதற்கு அனுமதிப்போம் என்று கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர்கள் ஆட்சி அமைத்தபின் நடக்கும் விஷயங்களைக்கொண்டுதான் நம்ப முடியும். கடந்த காலங்களில் தலிபான் ஆட்சிக்காலங்களில் பெண்கள் மிகவும் அவதிக்குள்ளானவர்கள் என்பதைக் கணக்கில்கொண்டு, பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உத்தரவாதப்படுத்தவதற்குக் குறைந்தபட்சம் அனைத்து நாடுகளும் சேர்ந்து கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
2001க்குப் பின்னர் ஆப்கன் தொடர்பான அனைத்துக் கொள்கைகளும், அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்களின்கீழ், அங்கே மேற்கொள்ளப்பட்டிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் விதத்திலும், அவர்கள் ஆப்கன் தேசத்தைக் கட்டி எழுப்புவதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்ததற்கும் உதவிடும் வகையிலேயேயுமே இருந்து வந்துள்ளன.
எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதைப்பற்றியெல்லாம் எவ்விதமான கவலையும்படாது அமெரிக்கா தன் துருப்புக்களை விலக்கிக்கொள்வது, மோடி அரசாங்கத்தையும் அதன் அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையையும் மறுபரிசீலனை செய்திடக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. ஏனெனில் இப்போது இந்தியா, அமெரிக்காவின் நான்கு நாடுகளின் கூட்டணியில் (Quad), ஓர் அங்கமாகும். ஆப்கான் கொள்கையில் ஏற்பட்டிருப்பதுபோலவே, சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகளைக் கண்ணைமூடிக்கொண்டு இந்தியா ஆதரிப்பது என்பதும், இந்தியாவை மேலும் தனிமைப்படுத்திடவும், அதன் போர்த்தந்திர சுயாட்சிக் கொள்கையை (strategic autonomy)த் தடம்புரளச் செய்வதற்குமே இட்டுச்செல்லும்.
-தமிழில்: ச.வீரமணி
ஜூலை 14, 2021