காலநிலை மாற்றம்: “இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!” – எச்சரிக்கும் IPCC அறிக்கை
– சதீஷ் லெட்சுமணன்

“கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே.” – ஐ.பி.சி.சி (Intergovernmental Panel on Climate Change – IPCC) அறிக்கை
“Heat save spread fire that ‘erased’ Canadian Town”
கடந்த ஜூலை மாதம் பிரபலமான அமெரிக்க நாளிதழான `தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியின் தலைப்புதான் இது.
இந்தத் தலைப்பைப் படித்தவுடன் உடனடியாக என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், உண்மையாகவே நடந்தது அதுதான்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்குட்பட்டது `லிட்டன்’ (Lytton) என்ற சிறுநகரம். ஜூன் மாத இறுதி நாட்களில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கனடாவில் உச்சபட்ச வெப்பநிலையை லிட்டன் நகர வெப்பமானிகள் பதிவு செய்துகொண்டிருந்தன. அதன் உச்சமாக ஜூன் 29-ம் தேதி லிட்டன் நகரில் வெப்பநிலையானது 47.9° செல்சியஸ் பதிவானது. தொடர்ந்து மூன்று நாட்கள் வெப்பம் சுட்டெரித்தது.
லிட்டன் நகரத்தின் மரங்களில் இருந்த பச்சை இலைகள் கருகி தரையில் விழுந்தன. இதற்கு முன்பு 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் 45° செல்சியஸ் பதிவான வெப்பநிலைதான் கனடாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது. மூன்று நாட்கள் வீசிய வெப்ப அலையால் பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. ஜூலை மாதம் முதல் வாரத்தில் அந்த நகரத்தின் 90% பகுதிகள் எரிந்து நாசமாயின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டனர். சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் லிட்டனுக்கு திரும்பிய அவர்கள் தங்கள் நகரத்தை அடையாளம் காண முடியவில்லை என்று கூறினார்கள்.

சில நாட்கள் கழித்து ஜூலை 11-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெத்வேலி தேசிய பூங்காவில் (Death Valley National Park) உள்ள ஒரு வெப்பமானி 56° செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவு செய்தது. அதிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் 2 மாதங்களில் பெய்யவேண்டிய மழைப்பொழிவு ஜூலை 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களில் பெய்து தீர்த்தது. பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க், ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த மழைப்பொழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மட்டும் ஜெர்மனியிலும் பெல்ஜியத்திலும் 180 பேர் வரை உயிரிழந்தனர்.
ஜூலை 19-ம் தேதி இங்கிலாந்தில் மற்றுமொரு வரலாற்று காலநிலை சம்பவம் நிகழ்ந்தது.
அந்த நாட்டின் வானிலை சேவை அமைப்பானது முதல்முறையாக வெப்ப அலை பாதிப்பிற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அந்த வாரத்தில் வெப்பநிலையானது 33°செல்சியஸ் தொடும் என எச்சரித்திருந்தது.
சீனாவின் ஹெனான் மாகாணம் அதனுடைய சராசரி ஆண்டு மழைப்பொழிவை ஜுலை 17 முதல் 21-ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் பெற்றது. இந்த மாகாணத்தின் தலைநகரான செங்சோவ் நகரத்தில் 720 மிமீ அளவிற்கு மழை பெய்தது. அந்த நகரத்தின் சராசரி ஆண்டு மழைப்பொழிவே 641 மிமீ தான். கனமழை ஏற்படுத்திய வெள்ளத்தால் சில அணைகள் உடைந்ததாகவும் சில அணைகளை அரசாங்கமே வெள்ள நீரை திருப்பிவிட உடைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இதுபோன்ற சம்பவங்களின் வரிசையில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஜூலை 22-ம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு இடைவிடாது பெய்த கன மழையால் மஹாராஷ்டிரா மற்றும் கோவாவின் பல பகுதிகள் கடும் வெள்ள பாதிப்பையும் நிலச்சரிவையும் சந்தித்தது. 213 பேர் வரை இந்த வெள்ள பாதிப்பில் உயிரிழந்தனர். நான்கரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இப்படி உலகம் முழுவதும் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாத பல தீவிர காலநிலை நிகழ்வுகள் நடந்தேறிய அதே ஜூலை மாதத்தின் 26-ம் தேதிதான் தற்போது ஐ.பி.சி.சி என்றழைக்கப்படும் காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் முதல் பணிக் குழுவின் புதிய அறிக்கைக்கான ஒப்புதலை வழங்கும் கூட்டத்தை 195 நாடுகள் சேர்ந்த குழு தொடங்கியிருந்தது.
Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட அறிக்கை இன்று (09/08/2021) ஐ.பி.சி.சி. அமைப்பால் ஜெனிவாவில் வெளியிடப்பட்டது.
காலநிலை மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் குறித்து விவாதிக்கும் இந்த அறிக்கை கூறும் சுருக்கமான செய்தி என்பது, “கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே” என்பதுதான்.
ஐ.பி.சி.சி. இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) வெளியிட்டுள்ளது.

முதல் மதிப்பீட்டு அறிக்கை
1990-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த முதல் மதிப்பீட்டு அறிக்கையானது காலநிலை மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தை வழங்கியது. மேலும், உலக வெப்பமயமாதலின் ஆதாரங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்தும் இவ்வறிக்கையில் பேசப்பட்டிருந்தது.
இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை
1995-ம் ஆண்டு வெளியான இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையானது உலகளவில் காலநிலை மாற்றத்திற்கு தெளிவாக கண்டறியக் கூடிய அளவில் மனித செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தது.
மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை
2001-ம் ஆண்டு வெளியான மூன்றாவது அறிக்கை கடந்த 50 ஆண்டுகளில் உலகம் சந்தித்த வெப்பநிலை உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்பதற்கான புதிய மற்றும் வலுவான ஆதாரங்களை முன்வைத்தது.
நான்காவது மதிப்பீட்டு அறிக்கை
2007-ம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் உலகளவில் சராசரி காற்று மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயருதல் போன்றவற்றைக் கண்காணித்ததன் அடிப்படையில் உலக வெப்பமயமாதல் என்பது சந்ததேகத்திற்கு இடமின்றி தெளிவாகியதாகக் கூறப்பட்டிருந்தது.
ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை
2014-ம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் அனைத்து கண்டங்கள் மற்றும் கடல்களில் காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 95% மனிதர்கள் மட்டுமே உலக வெப்பமயமாதலுக்குக் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது ஐ.பி.சி.சி. தன்னுடைய ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் காலகட்டத்தில் உள்ளது. இந்த ஆறாவது அறிக்கை காலமான 2015 முதல் 2023 வரை மொத்தமாக 8 அறிக்கைகள் வெளியிடப்படும். ஏற்கெனவே இதில் 4 அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. தற்போது ஐ.பி.சி.சியின் முதல் பணிக் குழு காலநிலை மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் குறித்த தனது அறிக்கையைத்தான் இன்று வெளியிட்டது. இந்த ஆறாவது மதிப்பீட்டு காலத்தின் இறுதி அறிக்கை 2022-ம் ஆண்டு வெளியிடப்படும்.
இந்த அறிக்கையில் உலக வெப்பமயமாதலானது அடுத்த பத்தாண்டுகளுக்குள் 1.5° செல்சியஸ் அளவிற்கு உயர்ந்துவிடும் என்றும் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் அளவை, உடனடியாக, வேகமாக, பெரிய அளவிற்குக் குறைக்காவிட்டால் 2° செல்சியஸ் அளவைக் கூடத் தாண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மனிதர்களின் நடவடிக்கையால் உண்டான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் மட்டுமே 1850-1900 காலத்திலிருந்து 1.5° செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை கூடியதற்குக் காரணம் என்கிறது இந்த அறிக்கை.
அறிக்கை வெளியீட்டின்போது பேசிய ஐ.பி.சி.சி. முதல் பணிக்குழுவின் இணைத்தலைவர் வெலெரி மேசான்-டெல்மெட்டே (Valerie Masson-Delmotte),“காலநிலை மாற்றத்தின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து ஒரு தெளிவான பார்வை இந்த அறிக்கை மூலம் நமக்குக் கிடைத்துள்ளது. நாம் எதை நோக்கிச் செல்லவேண்டும், என்னவெல்லாம் செய்யவேண்டும், இதன் தாக்கத்தை எதிர்கொள்ள எப்படித் தயாராவது என்பதைப் புரிந்துகொள்ள முக்கியமான அறிக்கையாக இது விளங்கும் என்றார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
- வேகமாகவும், மிகப் பெரிய அளவிலும் நம் புவியின் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அறிக்கையில் அலசப்பட்ட தரவுகள், சான்றுகள் வாயிலாக இயற்கையின் மீதான மனிதர்களின் செல்வாக்கு மட்டுமே புவியின் இயற்கை அமைப்பின் நிலைத்தன்மை குறைந்ததற்கும் மாறியதற்கும் காரணம் என்பதை அறிவியலாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
- எல்லா கணிப்புகளின் அடிப்படையிலும் அடுத்த பத்தாண்டுகளில் உலகின் சராசரி வெப்ப நிலையானது 1.5° செல்சியை எட்டிவிடும். இது 1.6° செல்சியஸ் அளவிற்குக் கூடச் செல்லும்.
- 2014-ம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்குப் பிறகு கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் கொண்டு பார்க்கையில் இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை 3°செல்சியசை எட்டும். உறுதியாக 2.5° செல்சியஸ் முதல் 4°செல்சியசாக இருக்கும்.
- உலகம் மேலும் வெப்பமடைவதால் இயற்கை அமைப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் திறனை நிலம் மற்றும் கடல் சூழலியல் அமைப்பு இழந்து வருகிறது.
- உலக நாடுகள் இந்த வெப்பமயமாதலைத் தடுக்க தங்களது பசுமை இல்ல வாயுக்களின் நிகர உமிழ்வை பூஜ்ய நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தரவுகள்
- மனிதர்களின் செயற்பாட்டால் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகம் வெப்பமடைந்துள்ளது.
- 1750-ம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம்.
- 2019-ம் ஆண்டு வளிமண்டலத்தில் காணப்பட்ட கரிம வாயுவின் (CO2) செறிவானது அதற்கு முந்தைய 2 மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவானது அதற்கு முந்தைய 800,000 ஆண்டுகளில் காணப்படாத அளவாகும்.
- 1970-ம் ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும்.
- 1900-ம் ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல் மட்ட உயர்வின் வேகமானது கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும். 2100-ம் ஆண்டில் 2மீ அளவிற்கும் 2150-ம் ஆண்டில் 5மீ அளவிற்கும் கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
- கடல் வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கையானது 1980-ம் ஆண்டிற்குப் பிறகு இருமடங்காக அதிகரித்துள்ளது.
- ஆர்க்டிக் கடல் பகுதியிலுள்ள பனிப் பாறைகளின் பரப்பு 1979 முதல் 1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 40% மற்றும் 10% குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம்.
- காலநிலை மாற்றத்தால் உலகின் நீரியல் சுழற்சி வலுவடைகிறது. இதன் காரணமாக கனமழை பொழிவும் அதனால் வெள்ள பாதிப்பும் உண்டாகிறது. இதே நீரியல் சுழற்சி சில இடங்களில் வறட்சிக்கும் காரணமாகிறது.

இந்த அறிக்கையின் முக்கியத்தும் குறித்து நம்மிடம் பேசிய இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Tropical Meteorology) மூத்த அறிவியலாளர் ராக்சி மேத்யூ கால், “முன்னர் வெளியான ஐ.பி.சி.சி. அறிக்கைகள் ஏற்கெனவே காலநிலை மாற்றத்திற்கு மனிதர்களின் செயல்பாடுகளே காரணம் என்பதை விளக்கியுள்ளன. இன்று வெளியான அறிக்கையின் முக்கியத்துவம் என்னவென்றால் பாரீஸ் ஒப்பந்தத்தின்படி காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவும் அதன் தாக்கத்திலிருந்து தகவமைத்துக் கொள்ளவும் உலக நாடுகள் உருவாக்கி சமர்ப்பித்த தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions) எதுவும் உலக சராசரி வெப்பநிலை உயர்வை 1.5° அல்லது 2° செல்சியசுக்குள் கட்டுப்படுத்தும் அளவிற்கு போதுமானதாக இல்லை.
சராசரி வெப்பநிலை உயர்வானது 1° செல்சியசுக்கு மேல் சென்று கொண்டிருக்கும் சூழலில், ஏற்கெனவே இந்தியா புயல், வெள்ளம், வறட்சி, வெப்ப அலை என அனைத்து விதமான தீவிர காலநிலை நிகழ்வுகளையும் சந்தித்து வருகிறது. மனிதர்கள் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்த தவறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த காலநிலை நிகழ்வுகளின் தீவிரமும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதையே காலநிலை கணிப்புகள் உணர்த்துகின்றன. வெகு தீவிரமாக இந்த மாற்றங்களால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து நாம் திட்டமிடவேண்டும். ஆனால், இந்தியாவில் நாடு தழுவிய அளவில் இந்த மாற்றங்களால் உண்டாகும் அபாய மதிப்பீடு கூட நம்மிடம் இல்லை. நமது நகரங்களை நிச்சயமாக மறுவடிவமைப்பு செய்யவேண்டும். புதிய நெடுஞ்சாலைகள், பொது பயன்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகள், வீடுகள், விவசாய திட்டங்கள் உள்ளிட்ட எந்தவித மேம்பாட்டு திட்டங்களாக இருந்தாலும் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் அபாயங்களை கருத்தில் கொண்டே இனி திட்டமிட வேண்டும்” என்று கூறினார்.

புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு கரிம வாயு, மீத்தேன் மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களை இப்போது வெளியிடும் அளவிலிருந்து வேகமாகக் குறைத்து பூஜ்ய நிலையை அடைந்தால் கூட தீவிர காலநிலை நிகழ்வுகள் இந்த நூற்றாண்டு முழுவதும் நடக்கும் என்பதும் இந்த அறிக்கை கூறும் மற்றுமொரு முக்கியமான செய்தி. வங்கக் கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரித்து வருகிறது. இது தமிழ்நாட்டின் பல கடலோர மாவட்டங்களைப் பாதித்து வருகிறது.
1076 கிலோமீட்டர் தூரம் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரையில் கடலரிப்பும் கடல் நீர் உட்புகுதலும் நிகழ்ந்து வருகிறது. காலநிலை மாற்றத்திற்கான விரிவான செயல் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை தயாரித்து வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் எந்தத் துறை எவ்வளவு உமிழ்வை செய்கிறது என்கிற அடிப்படை தரவுகள் கூட அந்த செயல் திட்டத்தில் இல்லை. இன்று வெளியான ஐ.பி.சி.சியின் அறிக்கை காலநிலை மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் குறித்தும் தீவிரம் குறித்தும் தெளிவாக உணர்த்திவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு புதிய அரசு அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இது செயல்பட வேண்டிய நேரம். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க அரசு செயல்படுமா?
–விகடன்
2021.08.09