தலிபான் வசம் ஆப்கானிஸ்தான்: வியட்நாமுடன் ஒப்பிடப்படுவது ஏன்? வல்லரசுகள் புகுந்த நாடுகளின் சோக வரலாறு

எம். மணிகண்டன்

வெளிநாட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கிய தலிபான்கள், கடந்த சில நாள்களில் யாரும் எதிர்பாராத வேகத்தில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியுள்ளனர்.

2001-ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக தலிபான்களை ஒழிப்பதிலும், தங்களது விரும்பும் ஆட்சியை அமைப்பதிலும் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, தனது கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்திருக்கிறது. இதுவும்கூட அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்பவே நடக்கிறது.

ஏனெனில் தலிபான்களுடன் உடன்பாடு செய்து கொண்ட பிறகே ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறும் முடிவை அமெரிக்கா எடுத்திருக்கிறது.

பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகலிடம் என்று கருதப்பட்டதால்தான் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின்படி தலிபான்கள் அமெரிக்காவின் இலக்குகளானார்கள்.

அமெரிக்காவுக்கு இது இன்னொரு வியட்நாமா?

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்களுடனேயே அமெரிக்கா திடீரென ஒரு உடன்பாட்டைச் செய்து கொண்டு ஆப்கானிஸ்தானைக் கைவிட்டிருப்பதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அமெரிக்கா இத்தகைய முடிவை எடுத்திருப்பது வியட்நாம் போருடன் ஒப்பிடப்படுகிறது. குறிப்பாக காபூல் நகரம் தலிபான்களின் வசம் சென்றிருப்பது ‘சாய்கோன்’ வீழ்ச்சியுடன் ஒப்பிடப்படுகிறது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்கா வியட்நாம்போரில் ஈடுபட்டிருந்தபோது, அந்த நாட்டின் தென் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதன் தலைநகரம்தான சாய்கோன். நாட்டின் வடக்குப் பகுதி கம்யூனிஸ ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

1975-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வடக்கு வியட்நாமின் படைகள் அமெரிக்கப் படைகளை வீழ்த்தி, சாய்கோன் நகரைக் கைப்பற்றின. சில மாதங்களிலேயே நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

எத்தனையோ நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்கப் தலையிட்டு மிக எளிதாக வெற்றிபெற்று வந்த அமெரிக்காவுக்கு மிக மோசமான தோல்வி ஏற்பட்டது இந்தப் புள்ளியில்தான்.

காபூல் நகரை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு வியட்நாமில் ஏற்பட்டதைப் போன்ற தோல்வி ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டிருப்பதாக பல பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள். சாய்கோன் வீழ்ச்சியுடன் காபூலையும் ஒப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த தெற்கு வியட்நாமின் தலைநகரான சாய்கோன் கம்யூனிஸ படைகளிடம் வீழ்ச்சியடைந்த நாள்

வியட்நாமில் நடந்தது என்ன?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் சோவியத் ஒன்றியம் என உலக வல்லரசுகள் தங்களுடைய வலிமையை நிரூபித்துக் காட்டுவதற்கான களமாகப் பயன்பட்டது கிழக்காசியப் பிராந்தியம். சுமார் முப்பது ஆண்டுகள்வரை நீடித்த போரில் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய மூன்று நாடுகளும் நாசமாக்கப்பட்டன. சுமார் 40 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களில் சுமார் 25 லட்சம்பேர் அப்பாவிப் பொதுமக்கள்.

வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என்று பிரிந்திருந்த பகுதிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்த வேளையில்தான் ஆளுக்கொரு புறமாக வல்லரசு நாடுகள் இந்த விவகாரத்தில் களமிறங்கின. அமெரிக்க ஆதரவுடன் தெற்கு வியட்நாமும், சோவியத் ஒன்றியம், சீனா, கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் வடக்கு வியட்நாமும் தீவிரமாகச் சண்டையிட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்கத்திய ஆயுதங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கான களமாகப்பயன்பட்டாலும், மரபு சார்ந்த போர் முறைகளில் நவீன ஆயுதங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாது என்பதை இந்தப் போர் உணர்த்தியது. அமெரிக்காவைப் பொறுத்தவரை போருக்கான காரணம் மிக எளிமையானது. கம்யூனிஸம் எங்கு பரவினாலும் அதைத் தடுத்து நிறுத்துவது தங்களுடைய கடமை என்று அந்த நாடு கூறிவந்தது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸின் காலனி ஆதிக்கத்தில் இருந்த வியட்நாமில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காட்சிகள் மாறியிருந்தன. போரில் தோற்றுப்போன ஜப்பான் வியட்நாமை உள்ளடக்கிய இந்தோ சீனா பகுதியில் இருந்து வெளியேறியதும், ஹோ சி மின் படைகள் வடக்குப் பிராந்தியத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. சுதந்திர நாடாகவும் அறிவித்துக் கொண்டது. சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளின் உதவியுடன் கம்யூனிஸ கொள்கைகள் வியட்நாமின் வடக்குப் பிராந்தியத்தில் அமல்படுத்தப்பட்டன. தெற்குப் பகுதியை நோக்கி அவர்கள் முன்னேறத் தொடங்கியதும் போர் தீவிரமடைந்தது.

அமெரிக்காவின் பார்வையில் கம்யூனிஸம் பரவுவதைத் கட்டுபடுத்துவதற்காக நடத்தப்பட்ட போர் இது. வடக்கு வியட்நாமின் கம்யூனிஸ படைகள் தெற்கு வியட்நாமைக் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காகவே தாங்கள் போரில் இறங்கியதாக அமெரிக்கர்கள் தெரிவித்தனர். ஹோ சின் படைகளைப் பொறுத்தவரை, வடக்கு தெற்கு எனப் பிரிந்திருந்த வியட்நாமை ஒன்றிணைத்து கம்யூனிஸ அரசை நிறுவவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர்.

வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலின்போது ஆற்றுக்குள் பதுங்கிய ஒரு குடும்பம்

தாக்குப் பிடிக்க முடியாத அமெரிக்கா

அமெரிக்கா வியட்நாம் போரில் நேரடியாக ஈடுபடத் தொடங்கியது 1961-ஆம் ஆண்டில்தான் என்றாலும் 1950-களிலேயே ராணுவ ஆலோசகர்களை அனுப்புவது, ஆயுதங்கள் வழங்குவது என படிப்படியாக தலையிட்டு வந்தது. 1960-களில் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த ஜான் கென்னடி, எப்பாடுபட்டாவது கம்யூனிஸப் படைகளை அழிப்போம் என்று சூளுரைத்ததுடன், ஏராளமான படைகளையும் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாகப் போரிடுவதற்காக அனுப்பி வைத்தார்.

லிண்டன் ஜான்சன் அதிபராகப் பொறுப்பேற்றதும், வியட்நாம் போரில் அமெரிக்காவின் தலையீடு மேலும் அதிகரித்தது. ரோந்து சென்ற அமெரிக்கக் கப்பலை வடக்கு வியட்நாமைச் சேர்ந்த படகுகள் தாக்கி அழிக்க முயன்றதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து வியட்நாம் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க அதிபருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரம் வழங்கியது. அமெரிக்க விமானங்கள், வியட்நாம் மட்டுமின்றி, லாவோஸ் கம்போடியா ஆகிய நாடுகளிலும் குண்டுகளை வீசியது.

சண்டை தீவிரமடைந்திருந்தபோது, இரு தரப்பினரும் கொடூரமான படுகொலைகளைச் செய்தனர். My Lai என்ற இடத்தில் அமெரிக்கப்படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததும், Hue பகுதியில் வடக்கு வியட்நாமின் வியட்காங் படைகள் நடத்திய அத்துமீறல்களும், தென் கொரியப் படைகள் நிகழ்த்திய TAY Vinh கொலைகளும் வரலாற்றில் அழிக்க முடியாத கறைகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

முதன் முதலாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போர் இது. போர்க் கொடூரங்களை மக்கள் சின்னத் திரையில் காட்சிகளாகக் கண்டார்கள். இதுவே அமெரிக்காவுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. கம்யூனிஸப் படைகளின் போர்த் தந்திரங்களுக்கு முன்னால் அமெரிக்காவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த சாய்கோன் நகரம் கம்யூனிஸப் படைகளின் வசமானது.

அமெரிக்காவுக்குப் பெரும் தோல்வியாக முடிந்த இந்தப் போர், அந்த நாட்டின் வரலாற்றின் பெருங் கறையாகப் படிந்திருக்கிறது. அந்தக் காட்சிகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தூதரகத்தைக் அமெரிக்கா காலி செய்தபோது நினைகூரப்படுகின்றன.

சோவியத் ஒன்றியத்துக்கு என்ன தொடர்பு?

இன்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பின்வாங்குகிறது என்றால், இதே போன்றதொரு நிலைமை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.

1978-ஆம் ஆண்டு சவுர் புரட்சி மூலம் ஆப்கானிஸ்தானில் மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற கம்யூனிஸ சித்தாந்தங்களைக் கடைப்பிடிக்கும் அரசு ஆட்சியில் அமர்ந்தது. நாட்டின் பெயர் ஆப்கானிஸ்தான் ஜனநாயகக் குடியரசு என்று மாற்றப்பட்டது. சோவியத் ஒன்றியத்தைப் போன்று ஆப்கானிஸ்தானையும் பொதுவுடைமை தேசமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்த்து நின்ற மதகுருமார்கள் நாடு கடத்தப்பட்டனர், அல்லது கொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிராக பல கிளர்ச்சிக்குழுக்கள் தோன்றின. வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்த இந்தக் குழுக்கள் இஸ்லாமிய எழுச்சி மற்றும் கம்யூனிஸ எதிர்ப்பு என்ற வகையில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தன. இவர்களே முஜாஹிதீன்கள் என்று அறியப்பட்டனர். இவர்களை ஒடுக்குவதற்காக சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தன.

சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைத் தடுப்பதற்காக அமெரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முஜாஹிதீன்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தன. பாகிஸ்தானிலும் சீனாவிலும் பயிற்சியளிக்கப்பட்டது.

சோவியத் ஒன்றிய படைகளுக்கு எதிராகச் சண்டையிட்ட முஜாஹிதீன்கள்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால், ஆப்கானிஸ்தானின் முக்கியமான பகுதிகளை முஜாஹிதீன்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சண்டை தொடங்கி மூன்றே மாதங்களில் ஆப்கானிஸ்தானில் 20 சதவீதப் பகுதிகளை சோவியத் ஒன்றியம் பிடித்து வைத்திருந்தாலும், மீதமுள்ள 80 சதவீதப் பகுதிகளில் முஜாஹிதீன்களின் கையே ஓங்கியிருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் ஆயுத பலத்தைப் புரிந்து கொண்ட முஜாஹிதீன்கள், கெரில்லாப் போர் முறை மூலம் தாக்குதல்களை நடத்தினர். மலைகள், குன்றுகள், காடுகள் போன்றவை பற்றிய அறிவைப் பெற்றிருந்ததால் அவர்களை எதிர்த்து, சோவியத் ஒன்றியத்தால் வேகமாக முன்னேற முடியவில்லை.

சோவியத் படைகளை வீழ்த்திய முஜாஹிதீன்கள்

அமெரிக்கா அளித்த ஆயுதங்களை வைத்திருந்த முஜாஹிதீன்கள் சோவியத் ஒன்றியத்தின் பல ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தினர். போரின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை, படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இஸ்லாமியர்கள் மத்தியில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது.

பக்கத்து நாடுகளில் இருந்து இஸ்லாமிய இளைஞர்கள் முஜாஹிதீன்களின் இயக்கத்தில் இணையத் தொடங்கியதால், போரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் கோர்பசேவ் ஆட்சிக்கு வந்ததும், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1989-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி படைகள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் நடந்த போர் முடிந்த சிறிது காலத்தில் சோவியத் ஒன்றியம் தனித்தனி நாடுகளாகச் சிதறத் தொடங்கியது. இதற்குத் தாங்களே காரணம் என்று முஜாஹிதீன்கள் முழக்கமிட்டனர். அமெரிக்காவுக்கு ஒரு வியட்நாம் என்றால் சோவியத் ஒன்றியத்துக்கு ஆப்கானிஸ்தான் என்று அப்போது பேசப்பட்டது. காபூல் நகரம் மீண்டும் தலிபான்களின் வசம் சென்றிருப்பது இத்தகைய சோகமான வரலாற்றை நினைவூட்டுகிறது.

பிபிசி தமிழ்
2021.08.16

Tags: