அரசியல் சுதந்திரத்திற்கும் சமூக நீதிக்கும் வ.உ.சி ‘சம அபிமானி’
-அருணன்
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150ஆவதுபிறந்த ஆண்டு இது. அவர் சுதந்திரப்போராட்டத்தின், சுயசார்புப் பொருளாதாரத்தின் தமிழக அடையாளம். அதுமட்டுமல்ல, அவர் மகத்தான சமூகநீதிப் போராளியும்கூட.அவரைக் கம்யூனிஸ்டுகளும் காங்கிரசாரும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக அரசும் பல திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதிலே சந்தடி சாக்கில் கந்தப்பொடி விற்ற கதையாகபாஜகவும் அவரைக் கொண்டாடுவதாகக் கிளம்பியிருக்கிறது!
வ.உ.சி.க்கும் பாஜகவிற்கும் என்ன சம்பந்தம்? அவரின் அந்த மூன்று லட்சியங்களுக்கும் சங்கிகளுக்கும் தொடர்பே கிடையாது. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கெடுத்தது இல்லை. பாஜகஅரசோ சுயசார்புப் பொருளாதாரத்தை குழி தோண்டிப்புதைக்கும் வகையில் பொதுத்துறை சொத்துக்களை எல்லாம் குத்தகை என்ற பெயரில் பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு கையளிக்கிறது. அப்புறம், சமூகநீதிக்கும் சங்கிகளுக்கும்-சனாதன மொழியில் சொன்னால் -ஸ்நானப்பிராப்தியும் கிடையாது!
வ.உ.சியின் சுதந்திரப் போராட்டத் தியாகமும், சுதேசிக் கப்பல் விட்டதும் தெரிந்த அளவிற்கு அவரின் சமூகநீதி உள்ளம் பலருக்கும் தெரியாது. 1916இல் “தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்” எனும் நீதிக் கட்சி பிராமணரல்லாதாருக்காகத் துவக்கப்பட்டது. அதற்குப் போட்டியாக காங்கிரசிலிருந்த பிராமணரல்லாதார் 1917இல் “சென்னை மாகாணச் சங்கம்” என்பதைத்துவக்கினார்கள். 1919இல் அதன் மாநாடு ஈரோட்டில் நடந்த போது அதில் கலந்துகொண்டார் வ.உ.சி. என்றுதிரு.வி.க. தனது “வாழ்க்கைக் குறிப்புகளில்” எழுதியிருக்கிறார்.
1920இல் திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடந்த போது “இந்த மாநிலத்தில் நிலவும் தற்பொழுதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு அரசுபொது வேலைகளிலும் கௌரவ உத்தியோகங்களிலும் பிராமண, பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்”எனும் தீர்மானத்தை வ.உ.சி கொண்டு வந்ததாக இந்து பத்திரிகையில் (25-6-1920) செய்தி வந்தது.அரசு உத்தியோகங்களில் அன்று பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆகவே பிராமணரல்லாதாருக்கு போதுமான பிரதிநிதித்துவம் வேண்டும்எனும் சமூக நீதியை வற்புறுத்தினார் நமது செக்கிழுத்த செம்மல். ஆனால் மாநாட்டுத் தலைவர் எஸ். சீனிவாசய்யங்கார் “இது பொதுநலத்திற்கு கேடு” என்றுஅனுமதிக்க மறுத்து விட்டார். தங்கள் நலத்திற்கு கேடு என்றால் பொது நலத்திற்கே கேடு எனச் சொல்வதைஅன்றே கடைப்பிடித்தார்கள் மநுவாதிகள்!
இதனால் எல்லாம் வெறுப்புற்றுத்தான் 1925இல்காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார். அடுத்த ஆண்டே மதுரையில் பிராமணரல்லாதார் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். இதற்கு “தமிழ்நாட்டுப் பழம்பெரும் தலைவர் வி. ஒ. சிதம்பரம் பிள்ளை …முதலியவர்களும் வந்திருந்தனர்” என்கிறார் சாமி. சிதம்பரனார் தனது “தமிழர் தலைவர்” நூலில்.
1927ஜூன் 26 தேதியிட்ட “குடி அரசு” இதழில் ஒருசெய்தி உள்ளது. கோவில்பட்டியில் அந்தக் காலத்திலேயே “திராவிடர் கழகம்” என ஒன்று இருந்திருக்கிறது அதன் 18ஆவது ஆண்டு நிறைவுவிழா பெரியார்தலைமையில் நடைபெற்றது. “திரு. வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் ‘நம்மவர் கடமை’ என்று தம்சொற்பொழிவை நிகழ்த்தினார்” என்கிறது அது. அந்தப்பேச்சின் ஊடே பெரியாரை அவர் புகழ்ந்ததும், “தலைவர்” என்று கொண்டாடியதும், அதனால் பெரியார்
கூச்சப்பட்டதும் தெரிய வருகிறது.
சமூக நீதிக்கு ஆதரவாக
இதே ஆண்டு நவம்பரில் சேலத்தில் நடந்த காங்கிரஸ் ஜில்லா மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தினார் வ.உ.சி. அது “அரசியல் பெருஞ்சொல்” எனும் தலைப்பில் அன்றே சிறு நூலாக வெளிவந்தது. (வ.உ.சி. நூல் திரட்டு: வீ. அரசு) அதைப் படித்துப் பார்த்தால் அன்றைய தமிழக சமூக, அரசியல் வாழ்வைஅவர் பூரணமாக உணர்ந்திருந்தது தெளிவாகிறது. அரசியல் சுதந்திரத்தைப் பெற மக்கள் ஒற்றுமையை எழுப்பியாக வேண்டும், அதற்கு சமூக நீதியை ஆதரித்தாக வேண்டும் என்றார். இன்னும் குறிப்பாக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனும் இடஒதுக்கீடு கோட்பாட்டை காங்கிரஸ் ஏற்றாக வேண்டும் என்றார்.
“தென் இந்திய நலவுரிமைச் சங்கத்தார் சென்ற பலவருஷங்களாக வேண்டுகின்ற ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ நமது பொதுவுடைமைகளில் முக்கியமான சிலவற்றை விளக்கிக் காட்டி நமக்குள் ஏற்பட்டுள்ளஒற்றுமையின்மையையும் பகைமையையும் குறைக்கவல்லது. அது காரணத்தால் அது பற்றி சில இங்கு கூறுகின்றேன்” என்றே அந்தப் பகுதியை அவர் ஆரம்பித்திருக்கிறார். எதிரியே ஆனாலும் அவர் சொல்வதில் நியாயம் இருந்தால் அதை ஏற்க வேண்டும் என்ற பாணியில் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான வாதங்களை பிரமாதமாக முன்வைத்திருக்கிறார் நமது வ.உ.சி.
இந்தப் பின்புலத்தில்தான் பெரியாருக்கும் வ.உ.சி.க்கும் இடையிலான நட்பு வலுப்பட்டு வந்தது. 1928 ஜூன் 10 ஆம் தேதியிட்ட குடி அரசு ஏட்டில் வந்துள்ள அவரின் பேச்சு இதை உறுதி செய்கிறது. பெரியார் படத்தை நாகப்பட்டினத்தில் திறந்து வைத்து அவர் கூறினார்: “அவரை எனக்கு 20 வருடமாகத் தெரியும்.அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள்சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் நானும் என்னால் ஆன உதவியை அவ்வியக்கத்திற்குச் செய்து வருகிறேன்”. இந்த நட்பு தனிப்பட்டதாக மட்டுமல்லாது சமூகநீதி சார்ந்த நட்பாகவும் இருந்தது தெளிவாகிறது.
வ.உ.சி.யின் தனித்துவம்
ஆனால் இதன் பொருள் ஏகாதிபத்திய எதிர்ப்பையோ, அரசியல் சுதந்திரப் போரையோ கைவிட்டார் என்பது அல்ல. இங்குதான் வ.உ.சி. தனித்துவமாக நின்றார். அவருக்கு அரசியல் சுதந்திரமும், சமூக நீதியும் இரு கண்களாக இருந்தன. இதற்கு இரு தக்க ஆதாரங்கள் உள்ளன.காலம் ஓடிக் கொண்டிருந்தது. முதலில் மறுத்து வந்த காங்கிரசும் சமூகநீதி பேசும் காலமும் வந்தது. குறிப்பாக1932 புனே ஒப்பந்தத்தை தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை காங்கிரஸ் துவக்கியது. வ.உ.சி. தூத்துக்குடியில் இருந்த அந்த 1934இல் காந்தி அங்கே வரவிருந்தார். அவரை வரவேற்பதற்கான தயாரிப்புக் கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்கி இப்படிப்பேசினார் வ.உ.சி: “இந்த நகரவாசிகள் செய்த மாபெரும் தவத்தினால் மகாத்மா காந்தி இந்நகருக்கு வர இருக்கிறார். அன்னவரைக் கண்டபின் மக்கள் யாவரும் தங்களுடைய மூடநம்பிக்கைகளை விட்டுவிடவேண்டும், தீண்டாமை எனும் பேயைத் துரத்த வேண்டும்”. அரசியல் சுதந்திரப் போரையும் சமூகநீதிப் போராட்டத்தையும் இணைக்க காந்தி முன்வந்த போது அவரையும் காங்கிரசையும் ஆதரிக்கத் தயங்கவில்லை வ.உ.சி.
1936 மே மாதத்தில் திருச்சியில் பிராமணரல்லாதார் மாநாடு ஒன்று நடக்கவிருந்தது. அதற்கு வ.உ.சி. ஒரு “விண்ணப்பம்” (குடி அரசு17-5-1936) எழுதினார். அதில்இப்படிக் குறிப்பிட்டார்: “பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாதார்கள் வெளிப்படுவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழியானது பார்ப்பனரல்லாதார்கள்- ஜஸ்டிஸ் கட்சியினராயினும், சுயமரியாதைக் கட்சியினராயினும், சுயேட்சைக் கட்சியினராயினும், காங்கிரஸ் கட்சியினராயினும், காங்கிரஸ் முன்னேற்றத்திலும் பிராமணரல்லாதார்கள் முன்னேற்றத்திலும் சம அபிமானம் உள்ள என் போன்றவர்களாயினும், பார்ப்பனர் ஆதிக்கத்தை வெறுத்து காங்கிரசை விட்டு விலகி நிற்கும் எனதுநண்பர் டாக்டர் வரதராஜூலுநாயுடு போன்றவர்களாயினும்-எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியில் பார்ப்பனருக்குள்ள ஆதிக்கத்தை ஒழித்துப் பார்ப்பனரல்லாதார்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டும்”.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் வ.உ.சி. தன்னைப் பற்றித் தந்துள்ள மதிப்பீடு. “காங்கிரஸ் முன்னேற்றத்திலும் பிராமணரல்லாதார்கள் முன்னேற்றத்திலும் சம அபிமானம் உள்ள என் போன்றவர்கள்” எனும் அந்த சொற்கள் அவரின் தனித்துவமான நிலைபாட்டை பறைசாற்றுகிறது. அவர் அன்றைய தமிழ்நாட்டுகாங்கிரசையோ, அல்லது நீதிக் கட்சியையோ அல்லது சுயமரியாதை இயக்கத்தையோ அப்படியே ஏற்கவில்லை. மாறாக அரசியல் சுதந்திரத்திற்கும் சமூகநீதிக்கும் சம முக்கியத்துவம் தருகிற ஒரு சிறப்புநிலைபாட்டைக் கொண்டிருந்தார் என்பது உறுதியாகிறது. அவர் தேசவிடுதலை அபிமானி, சமூகநீதி அபிமானி, இரண்டுக்கும் சம அபிமானி!இதே ஆண்டு நவம்பரில் வ.உ.சி காலமானதால் இதுவே அன்னாரின் இறுதியான நிலைபாடு. இதற்குஎள்ளளவும், எள்ளின் முனையளவும் சம்பந்தம் இல்லாத பாஜகவும் வ.உ.சி.யைக் கொண்டாடக் கிளம்புகிறது என்றால் அது கண்கட்டு வித்தைதானே, ஊரைஏமாற்றும் வேலைதானே?
-தீக்கதிர்
2021.09.07