புரட்சியை வரவேற்ற புதுயுகக் கவிஞர் பாரதியார்!

-தி.வரதராசன்

செப்டம்பர் 11: மகாகவியின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று!

யிரம் ஆண்டில் அதிசயமாக ஒருமுறை பிறக்கும் உயர்ந்த பிறப்புசொல்லச் சொல்லச் சுவைமிகும் பெயரைஎண்ண எண்ண இனித்திடும் பெயரை பிறந்தநாள் கண்டு நாம் பேசி மகிழ்கிறோம்…”

கவியரசு கண்ணதாசன் மகாகவி பாரதியைப் போற்றி அவரது பிறந்த நாளின்போது தமது “கண்ணதாசன்” மாத இதழில் (செப்டம்பர் 1976) எழுதிய கவிதைவரிகள் இவை. பிறந்த நாள்-நினைவு நாள் என இரு நாட்களிலும் மகாகவியை மறக்காமல் மனதில் ஏந்துகிறது தமிழ்நாடு.

“ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும்  ஒலியிலும்சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள்     தாம் ஒலிக்ககொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்…”

நெஞ்சைப் பறிகொடுத்தேன், என்று-அந்தக் கிராமப்புற மக்களின் பாடல்களில் மயங்கிவிட்டார்  மகாகவி!படிக்காத நாட்டுப்புற மக்களின் பாட்டுக்கு மணிமகுடம் சூட்டிவிட்டார் நமது மகாகவி!  அது சாஸ்திரிய சங்கீதம் அல்ல  – சாதாரண மக்களின் கீதம்!

பாரதியின் வேகம்

இனி, பாரதியின் ஒரு காட்சியைப் பார்ப்போம்: 

“ஒருநாள் காலை 10 மணியிருக்கும். ஆபீஸில் தபால் பார்த்துக் கொண்டிருந்தேன். கனவேகமாக ஒருஜட்கா வண்டி ஆபீஸை நோக்கி வந்தது. ஆபீஸ் பெயரைப் பார்த்ததும் ‘நிறுத்து’ என்று கூவினார் வண்டியில் இருந்தவர். நிற்கிறவரையில் தாங்கவில்லை. குறுக்குக் கம்பியைத் தள்ளிக் கொண்டு கீழே குதித்தார். தள்ளின கம்பி திரும்பி வந்து சொக்காயில் மாட்டிக் கொண்டது. அலட்சியமாகக் கையை உதறினார். சொக்காயின் கை கிழிந்துவிட்டது. அதையும் கவனிக்கவில்லை. ஓடோடியும் உள்ளே வந்தார். நான் இருந்த அறைக்குக் குறுக்குக் கதவுகள் இருக்கக் கண்டு சற்றுத் தயங்கினார். மெல்ல கதவைத் தட்டினார். பதில் இல்லை. கதவுக்கு மேல் தலையை நீட்டிஉள்ளே பார்த்தார். என்னைக் கண்டதும் சிறிது லஜ்ஜைப்பட்டார்.  ‘யார்’ என்று நான் கேட்டேன். ‘நான்தான் சுப்பிரமணிய பாரதி’ என்றார். ‘வாருங்கள், உள்ளே வாருங்கள், உட்காருங்கள்’ என்றேன். அன்றுகண்ட பாரதி இன்றளவும் என் அகக் கண்முன்  நின்றுகொண்டே இருக்கிறார். நடுத்தர உயரம்; ஒற்றை நாடி; மாநிறம் படைத்த மேனி; பிரிபிரியாய்ச் சுற்றிய தலைப்பாகை; அகன்ற நெற்றி; அதன் நடுவே காலணா அளவுகுங்குமப் பொட்டு; அடர்ந்த புருவங்கள் உருண்ட கண்களைக் காத்துவந்தன; நிமிர்ந்த நாசி வாடிய கன்னங்களை விளக்கிக் காட்டியது; முறுக்கு மீசை மேல் உதட்டை மறைத்திருந்தது. உடல் மீது பித்தான் இல்லாத ஷர்ட்டு; அதை மூட ஒரு அல்பகா கோட்டு.வண்டியிலிருந்து குதித்தபோது அதுவும் கிழிந்துவிட்டது. நாற்காலியில் உட்கார்ந்தார்.

நாவெழவில்லை. கண்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன; அறையைச் சுற்றிப் பார்த்தன; என்னையும் ஏற இறங்கப் பார்த்தன.வெகுண்ட கண்கள்; வேதனை வடிந்த கண்கள்; மனம்கவரும் கண்கள். அவை என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டுவிட்டன.” (நூல்: ரா.அ.பத்மநாபன் எழுதிய “தமிழ் இதழ்கள்”) 1920-ஆம் ஆண்டு சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகையில் மீண்டும் சேர்வதற்கு அந்த அலுவலகத்திற்குப் பாரதியார் வருகைதந்த காட்சியை அந்தப் பத்திரிகையின் நிர்வாகியும் பின்னர் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்த சி.ஆர்.ஸ்ரீநிவாஸன் அப்படியே வர்ணனை செய்த வரிகள் இவை. பாரதியின் வேகத்தையும் அவரது தோற்றத்தையும் அப்படியே வார்த்தைகளில் படம்பிடித்துவிட்டார் சி.ஆர்.ஸ்ரீநிவாஸன். ரஷ்யர்களுக்கு புஷ்கின் எப்படியோ, வங்கத்திற்கு தாகூர் எப்படியோ, ஆங்கில இலக்கியத்திற்கு ஷெல்லி எப்படியோ, அப்படியே தமிழ் இலக்கியத்திற்கு மகாகவி பாரதி. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு தமக்குச் சூட்டிக்கொண்ட பல புனைபெயர்களில் ஒன்றுதான் ‘ஷெல்லிதாசன்’! 

பள்ளி, பத்திரிகை ஆசிரியராக…
1904-ஆம் ஆண்டு மாதம் பதினேழரை ரூபாய் சம்பளத்தில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக நூறு நாட்கள் பணியாற்றிய பாரதி, பின்னர் சென்னைக்குச் சென்று சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அந்தப் பத்திரிகை ஒரு மிதவாதப் பத்திரிகையாக இருந்ததால் அது பிடிக்காமல் தேச சுதந்திரப் போராட்டத்தில் உத்வேகமான சிந்தனை கொண்ட பாரதி தமது சிந்தனைக்கும் கொள்கைக்கும் ஏற்ற“இந்தியா” எனும் வாரப் பத்திரிகையின் ஆசிரியரானார். 

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே – நாடு அடிமைப்பட்டிருக்கும்போதே,“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று…”-என்றார் பாரதி. “ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனு மில்லை ஜாதியில் – இழிவுகொண்ட மனித ரென்பது இந்தியாவில் இல்லையே”என்று மகிழ்ந்தார். “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு”என்று மனதில் குதூகலப்பட்டார். இந்தியப் பெருந்தேசம் நாளை நிச்சயம் விடுதலை பெறும் என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை. அதை அவர் தமது மனத்திரையில் காட்சிப்படுத்திப் பார்த்தார். காட்சியில் கவி பிறந்தது.

பாரதி இன்னும் சொல்லுகிறார்:

“முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுஉடைமை
ஒப்பிலாத சமுதாயம்    
உலகத்துக் கொரு புதுமை” 

பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடிதான். இந்த முப்பது கோடி மக்கள் முழுமைக்கும் பொதுவுடைமை என்று உறுதிசெய்கிறார். இந்தப் ‘பொதுவுடைமை’ என்கிற சொல்பாரதி தமிழுக்குத் தந்த புதிய வார்ப்பாகும்! ரஷ்ய சோஷலிஸப் புரட்சி-சோஷலிஸ சமுதாயம்-அதன்புரட்சித் தலைவர் லெனின் – மகாகவி பாரதியின் வார்த்தையில் சொல்வதென்றால் “ஸ்ரீமான்”லெனினது புரட்சிகரச் சிந்தனையிலும், செயல்களிலும், புதிய ரஷ்ய நிகழ்வுகளிலும்  ஈர்க்கப்பட்டதாலேயே பாரதியிடம் ‘பொதுவுடைமை’, ‘புரட்சி’ எனும் புதிய சொற்கள் பிறந்தன. 

மார்க்ஸையும் அறிந்திருந்தார்
லெனினை மட்டுமல்ல, கார்ல் மார்க்ஸையும் பாரதிஅறிந்திருக்கிறார். ‘ஜன அபிவிருத்தியும் பொருள் நிலையும்’ என்ற தமது கட்டுரையில் “ஐரோப்பாவில் சோஷலிஸ்ட் மார்க்கத்தாருக்கு மூலகுருவாகிய கார்ல்மார்க்ஸ் என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: ‘எந்தச் சமயத்தில் பார்த்த போதிலும் ஒரு தேசத்தின் ஜனங்களின் ஆசாரங்கள், அறிவு, பயிற்சி முதலிய யாவும் அத்தேசத்தின் பொருள் நிலையையே பொருத்தனவாகும்.’ 

பாரதி, கார்ல் மார்க்ஸை அறிந்தது மட்டுமல்லாமல் அவரது கட்டுரையையும் படித்திருக்கிறார் என்றேஇதிலிருந்து நமக்குத் தெரிகிறது. பாரதி இன்றிருந்தால் கார்ல் மார்க்ஸை ‘உலக சோஷலிஸ்ட் மார்க்கத்தாருக்கு மூலகுரு’ என்று சொல்லியிருப்பார்!
“1921 செப்டம்பர் 11 அன்று தாம் மரணமடையும் காலம் வரையிலும் சோவியத் ரஷ்யாவைப் பற்றித் தமது சக தேசபக்தர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக, பாரதிபத்திரிகை அல்லது பொதுக்கூட்டம் என்று எந்தவொருசாதனத்தையும் பயன்படுத்தியே வந்திருக்கிறார்” என்றார் தமது பெயரைத் தமிழில் ‘தமிழகப்பித்தன்’ என்று வைத்துக் கொண்ட சோவியத் அறிஞர் டாக்டர்வித்தாலி பி.பூர்னிக்கா.

விசாலமான சர்வதேசப் பார்வை கொண்டவர் பாரதிஎன்பதை அவரது கவிதைகளிலும், உரைநடையிலும் காண்கிறோம். ரஷ்யப் புரட்சிக்கு முன்பிருந்தே ரஷ்யாவின் அரசியல் நிகழ்வுகளை நுட்பமாக அறிந்தவர்: ஆராய்ந்தவர். ரஷ்யாவில் போல்ஷ்விக் (கம்யூனிஸ்ட்) கட்சியை அவர் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைவிட தெளிவாகவே அறிந்திருந்தார். “பத்திரிகைகளின் நிலைமை” என்ற தமது கட்டுரையில்பாரதி கூறுகிறார்: “எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசியக் கட்சியைச் சேர்ந்தது, ஆனால் தக்க பயிற்சி இல்லாதவர்களால் நடத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அப்பத்திரிகையில் யுத்தம் சம்பந்தமான தலையங்கம் எழுதப்பட்டுஇருந்தது. அதில் ருஷியாவில் ‘போல்ஷெவிக்’ என்றொரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் கட்சிஏற்படுத்தி, நமது நேசக் கட்சிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது! அஃது அந்நாட்டின் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு மற்றொரு பெயரென்றும், ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்லவென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை…”

வ.உ.சி.யும் பாரதியும்
மகாகவி பாரதியின் ஆருயிர்த் தோழர் வ.உ.சிதம்பரனார் பாரதியைப் பற்றிக் குறிப்புகள் எழுதிவைத்தார். அவற்றில் ஒன்று இது: “நானும் எனது நண்பர்களும் தூத்துக்குடி வந்து சேர்ந்தோம். சூரத் காங்கிரஸ் உடைந்ததையும், தேசியவாதிகள் மாநாடு உண்டானதையும் அதன் வேலைத் திட்டங்களையும் பற்றித் தூத்துக்குடியில் பல பிரசங்கங்கள் செய்தோம். தேசியமாநாட்டுக் காரியதரிசிகளையும்  அவர் சகாக்களையும் கவர்ன்மென்டார் கவனமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். வங்காளத்தில் அரவிந்தர் முதலியோர்மீதும், சென்னை மாகாணத்தில் என் வகையார்கள் மீதும், பம்பாய் மாகாணத்தில் திலகர் மீதும் இராஜதுரோகக் கேஸ்கள் ஏற்பட்டன. என் வகையார்கள் மீது கேஸ் ஏற்பட்டவுடன் பாரதியார், ஸ்ரீனிவாஸாச்சாரி முதலிய சென்னை நண்பர்கள் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தனர். பாளையங்கோட்டை சென்றால் ஜெயிலுள் விசாரணைக் கைதிகளாயிருந்த என்னையும், எனது நண்பர் சுப்பிரமணியசிவாவையும், பத்மநாபய்யங்காரையும் கண்டு உரையாடிக் களித்தனர். அப்போதுதான் கலெக்டர் விஞ்சுக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பாஷணையென, ‘நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை  நாட்டினாய்-கனல் மூட்டினாய்- வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன்-வலி காட்டுவேன்’ என்னும் தொடக்கத்துப் பாக்களையும், கவர்ன்மென்டாரால் பிரசுரிக்கக் கூடாது என்றுவிலக்கப்பட்ட வேறு சில பாக்களையும் பாரதியார் பாடிமகிழ்ந்தனர். என் வகையார்கள் பேரில் கொண்டுவரப்பட்ட கேஸில் எங்கள் பக்கம் வக்கீல்களாக ஆஜராகி நடத்திய திருநெல்வேலி வக்கீல்களான சாதுகணபதி, பந்துலு, கணபதி ராமய்யர், டி.வி.கிருஷ்ணசுவாமி அய்யர், ஸ்ரீவைகுண்டம் டி.ஆர்.மகாதேவய்யர், சிவராமகிருஷ்ணய்யர் முதலிய தேசபக்தர்களுடன் சாதுகணபதி பந்துலுவின் ஆபீஸ் மேடையில் பாரதியார் முதலிய சென்னை நண்பர்கள் ஒரு வாரம் வரையில் தங்கி கேஸின் நடவடிக்கைகளில் நடந்த வேடிக்கைகளைப் பார்த்துத் தமாஷாகச் சம்பாஷணைகள் செய்து கொண்டும், பாட்டுகள் பாடிக் கொண்டும் காலத்தை உல்லாசமாகக் கழித்துக் கொண்டிருந்து சென்னைக்குத் திரும்பிச் சென்றனர்.” (ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்த ‘ வ.உ.சி.யும் பாரதியும்’ என்ற நூலிலிருந்து)

‘பாரத சமுதாயம் வாழ்கவே!’ என்று தொடங்கும் பாரதியின் பாடலே அவர் எழுதிய கடைசிப் பாடல் என்று பாரதி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனை உறுதிசெய்வது போல் ‘பாரதி: சில பார்வைகள்’ என்ற நூலில் ஆய்வாளர் தெ.மு.சி.ரகுநாதன் கூறுவதாவது:  “பாரதியின் நெருங்கிய தோழரும், தொழிற்சங்கத் தந்தையுமாகத் திகழ்ந்த வி.சக்கரைச் செட்டியார் 1.3.1922 அன்று தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பாரதியின் கடைசித் தோற்றம் கடற்கரையில் நடந்த ஓர் ஒத்துழையாமைக் கூட்டத்திலாகும். அவரைத் தமது பாடல்களிலொன்றைப் பாடும்படி ஜனங்கள் கேட்டபோது அவர் ‘பாரத சமுதாயம்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் துணிவான கருத்தும் உயர்ந்த மன எழுச்சியும் பொருந்தியதாகும்.” 
இந்தப் பாடலில்தான் பாரதி, “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை” என்றார்.

ரஷ்யப் புரட்சியை “யுகப்புரட்சி” என்றார். ‘Revoluation’  என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாகப்‘புரட்சி’யைத் தருகிறார் பாரதி. செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகக் கொடுங்கோல் ஆட்சிச் செய்த ஜார் மன்னனின் ஆட்சியைப் ‘புரட்டி’ப் போட்டப் பேரெழுச்சி என்பதால் அதற்குப் புரட்சி எனும் புதுமைச் சொல்லிட்டு அழைத்தார் பாரதி. ‘பொதுவுடைமை’, ‘புரட்சி’ ஆகிய இரு சொற்களும் புரட்சிகர இயக்கத்திற்கும், தமிழ்மொழிக்கும் பாரதி வழங்கிய அருங்கொடையாகும்.

ஆணும் பெண்ணும் சமம்
 “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதாலே அறிவுலோங்கித் தழைக்கும் இவ்வையம்” என்றார். ஆணும் பெண்ணும் சமம் என்றால் அறிவிலோங்கு வது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, –இந்த உலகமே அறிவில் ஓங்கி வளரும் என்கிறார் பாரதி. ‘அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்புக்கு எதுக்கு?’ என்கிற பழங்காலத்துப்  பத்தாம்பசலிப் பழமொழியைப் புறந்தள்ளுகிறார் பாரதி.

எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று சரிசமத்துவம் சொன்ன பாரதி, சிட்டுக் குருவியின் குரலிலும் அந்தச் சிந்தனையைக் கொண்டுவருகிறார்: 

“கேளடா மானிடா-எம்மில் கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை யில்லை – எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்”
“ஏழைகள் யாருமில்லை-செல்வம் ஏறியோர்     என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை-என்றும் மாண்புடன்    வாழ்வமடா”

 1917 நவம்பர் 7-ல் ரஷ்யாவில் பொங்கி எழுந்த சோஷலிஸப் புரட்சியை ‘புதிய ருஷ்யா’ என்று வரவேற்று வாழ்த்திப் பாடிய உலகின் முதல் கவிஞன் என்றமுறையில் சோவியத் மக்களிடமும் அறிஞர்களிடமும் பாரதிக்கு தனி மரியாதை உண்டு. சிமிர் நோவாஎன்பவர் பாரதியின் தேசியப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, சக்திப் பாடல்கள் முதலானவற்றை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். பாரதி பாடல்கள் வெளிவந்த சில நாட்களிலேயே அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட இந்தியாவின் முதலாவது கவிதை நூல் மகாகவி பாரதியின் நூல்தான். பாரதியைப் பற்றி சோவியத் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு தமிழில் வெளிவந்துள்ளது. 1982-ல் பாரதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா இந்தியாவில் போலவே சோவியத் நாட்டிலும் சிறப்புரைகளும், நூல் வெளியீடுகளுமாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

“செந்தமிழ் நாட்டினிற் பற்றும்-அதன் சீருக்கு நல்ல தோர் தொண்டும்” -என வாழ்ந்தார் பாரதி என்று புகழ்ந்துரைந்தார் பாவேந்தர் பாரதிதாசன். இன்று அந்தமகாகவியின் நினைவு நாளில்  அவரது இலட்சியங்களையும் பெருமைகளையும் நாம் மனதில் ஏந்துவோம்!

Tags: