ஆப்கானிஸ்தானில் தலிபானின் தேன் நிலவு முடிந்தது!
–மஜித் நுஸ்ரத்
ஆப்கானிஸ்தானில் தீவிரமாக மேற்கொண்ட வன்முறை செயல்பாடுகளின் விளைவாக, கடந்த ஓகஸ்ட் 15ஆம் தேதி அந்த நாட்டை தலிபான் கைப்பற்றியது. அந்த நாட்டில் ஆட்சி அதிகாரம், அதிகார பகிர்வுக்காக நடக்கும் உள்மோதல் மற்றும் தீவிரம் அடையும் பொருளாதார நெருக்கடியைப் பாரக்கும்போது, தாலிபனின் தேன் நிலவுக் காலம் முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.
தற்போது கந்தஹாரில் உள்ள தலிபான் தலைமை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக தலிபானின் ஓர் அங்கமான ஹக்கானி குழு உள்ளது. வலுவுடன் விளங்கும் அந்த குழுவை வெளிநாட்டு போராளிகளும் ஆதரிக்கிறார்கள். காபூல் உட்பட கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாதி பகுதியை ஹக்கானி குழுவும் அதன் ஆதரவு போராளிகளுமே கிட்டத்தட்ட கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
தலிபான் தலைவர் முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதாவை வெகு நாட்களாகக் காணவில்லை. இது குழுவின் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது தலிபான் மீதான உள்நாட்டு மோதலுக்கு வழிவகுக்கும் ஆபத்தாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த சவால்களின் காரணமாக, இந்த நேரத்தில் அமைப்பின் ஒற்றுமையை பராமரிக்கவே தலிபான் முன்னுரிமை தருவதாகத் தோன்றுகிறது, இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கம் அமைய வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வெளிப்படுத்தப்படும் கவலைகளை தலிபான் நிராகரித்துள்ளது.
தற்போது தலிபான் அறிவித்துள்ள இடைக்கால அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் பழையவர்கள். மேலும் பஷ்தூன் அல்லாத சமூகத்தினருக்கு பெரிய பொறுப்பு ஏதும் தரப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஆளுகையை கைப்பற்றியதன் மூலம் தலிபானுக்கு நிறைய ஆதாயம் கிடைத்துள்ளது. அது பிரிக்கப்பட்ட விதத்தில்தான் மோதல் தொடர்கிறது. ஆனால், மிக ஆழமாக பார்த்தால் அந்த மோதலுக்குள் பாரம்பரிய இனவெறிக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான மோதல் மறைந்திருப்பதை பார்க்கலாம். கிழக்குப் பகுதியில் வாழும் பஷ்தூன்கள் மிகவும் வலிமை பெற்றுள்ளனர். அவர்கள் தென் பகுதி பழங்குடிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் 40% மக்கள் பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பஷ்தூன்கள் துர்ரானி மற்றும் கில்சாய் என இரண்டு முக்கிய பிரிவுகளாக உள்ளனர். எண்ணிக்கையில் துர்ரானி பஷ்தூன்கள் குறைவு என்றாலும், 1747ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான காலகட்டங்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆப்கானிஸ்தானில் ஆளுகை செலுத்தியிருக்கின்றனர்.
இதேவேளை கில்சாய் பஷ்தூன்கள், பெரும்பாலான காலத்துக்கு அதிகாரத்தில் இருந்து விலகியே இருந்தனர். பழங்குடிகளாக வாழும் அவர்கள்வசம் போதுமான சொத்துகள் கிடையாது.
ஹக்கானி குழுவின் தலைவரான கில்சாய் ஒரு பஷ்தூன். அவரது குழுவினர் தலிபானின் அங்கம். ஆனால், தலிபானுக்குள் இருக்கும் ஹக்கானி குழு செயல்திறன், நிதி சுயாதீனம் போன்றவற்றில் தங்களுக்கே உரிய வழியில் தனித்து செயல்படுகிறது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் பஷ்தூன் அல்லாத தலிபானுக்கும் வெளிநாட்டு தீவிரவாத குழுக்களுக்கும் நெருக்கமானதாக ஹக்கானி குழு அறியப்படுகிறது.
இது தவிர, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடனும் அந்த குழு நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. இதே போல, சித்தாந்த ரீதியாக அல் காய்தா, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் கோராசன் கிளையுடனும் ஹக்கானி குழு நெருக்கமான உறவைப் பாராட்டி வருகிறது.
முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி மற்றும் அவரைத் தவிர அதிபர்களாக இருந்த மூன்று இடதுசாரி தலைவர்களும் பஷ்தூனின் கில்சாய் பிரிவைச் சேர்ந்தவர்கள். சில ஆப்கானியர்கள் ஹக்கானி குழுவசம் ஆப்கானிஸ்தான் செல்ல அஷ்ரஃப் கனியே அனுமதித்து இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறார்கள்.
தலைமை தேர்வை நிறுத்தி வைத்த தென் பகுதி தீவிரவாதிகள்
பெரும்பாலான மூத்த தலிபான் தலைமைப் பதவிகளை தெற்கில் உள்ள கந்தஹார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பஷ்தூன்களே வகிக்கிறார்கள். தாலிபனின் எமிருக்கு துணையாக சிராஜுதின் ஹக்கானி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
2015இல் முல்லா ஒமரின் மரண அறிவிப்பு வெளிவந்த பிறகு, அடுத்த தலைமை குறித்து தென் பகுதியில் இருந்த தலிபான்கள் மோதிக் கொண்டனர். ஆனால் ஒமருக்குப் பிறகு தலைவரான முல்லா அக்தர் மன்சூர், சிராஜுதீன் ஹக்கானியை தனது மூன்று துணைத் தளபதிகளில் ஒருவராக வைத்துக் கொண்டார். இந்த சிராஜுதின் ஹக்கானி கிழக்கு ஆப்கானிஸ்தானின் கிரேட்டர் பக்தியா பகுதியைச் சேர்ந்தவர்.
மறுபுறம், தலிபான் அதி உயர் தலைவரான முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதா, பிரதமர் முல்லா மொஹம்மத் ஹசன் அகுந்த் மற்றும் துணைப் பிரதமர் முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் துர்ரானி ஆகியோர் பஷ்தூன்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஹெப்துல்லாவுக்கு முன்பாக தலிபான் தலைவராக இருந்த முல்லா மன்சூர் அக்தர், ஒரு துர்ரானி ஆவார்.
தலிபான் நிறுவனர் முல்லா ஒமர் கில்சாய் பஷ்தூன் வழி வந்தவர் என்றாலும், அவரை தென் பகுதி பஷ்தூன்களுக்கான இணைப்பாகவே தலிபான்கள் பார்த்தனர். முல்லா ஒமர், கந்தராஹில் பிறந்த பஷ்தூன்களுடன் கலந்து வாழ்ந்தவர். அவரது மகன் முல்லா யாகூப் தாலிபன் அரசாங்கத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராகியிருக்கிறார். அவர் தலிபான் தென் பகுதி தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவராக அறியப்படுகிறார்.
புதிய தாலிபன் அரசாங்கத்தில் மூத்த தலைவர்கள் இருக்கலாம். ஆனால், தெற்கிலிருக்கும் இரண்டு முக்கிய தலிபான் தளபதிகளான முல்லா கய்யூம் ஜாகிர், முல்லா இப்ராஹிம் சாதர் ஆகியோர் அரசாங்கத்தில் சேர்க்கப்படவில்லை.
பலம் காட்டும் ஹக்கானி குழு
ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு முல்லா பராதருக்கும் ஹக்கானி குழுவுக்கும் இடையே ஆட்சி அதிகாரத்துக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் கடும் மோதல் இருந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
அந்த தகவல்களின்படி, முல்லா பராதர் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கம் தேவை என்று விரும்பியதாகவும் அவர் பஞ்ஷிர் பகுதியில் தலிபான் தாக்குதல் நடத்தியதை எதிர்த்தார் என்றும் கூறப்படுகிறது. பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி கடந்த சில தசாப்தங்களாக அமைதியாக இருந்தது. ஆனால், அங்கு தலிபான் ஆக்கிரமித்தவுடன் மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது.
கத்தாரின் தோஹாவில் தலிபான் தரப்பில் அமெரிக்காவுடனும் ஆப்கானிஸ்தான் அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்திய குழுவை வழிநடத்தியவர் முக்கியமானவர் பராதர். ஆனால், இப்போது தலிபான் அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகு பராதரின் தகுதி குறைக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
மேலும் சில தகவல்கள், பராதர் காபூலை விட்டுச் சென்று விட்டதாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சில நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளியில் தோன்றிய பரதர், ஒரு காகிதத்தில் எழுதி வைத்த அறிக்கையை வாசித்தார். கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான தகவலை மறுத்த அவர், தமது இருப்பிடம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
செப்டம்பர் 3ஆம் தேதி மாலை காபூலில் நடந்த துப்பாக்கிச் சூடு உண்மையில் ஹக்கானி குழுவின் பலத்தை காட்டுவதாக சில தகவல்கள் கூறுகின்றன. தென் பகுதியில் உள்ள தலிபானுக்கு தங்களுடைய பலத்தை அவர்கள் அந்த துப்பாக்கி சூடு மூலம் காட்டியதாகவும் தெரிகிறது. குண்டுமழை போல அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிஉயர் தலைவர் எங்கே?
தலிபான்களின் அதி உயர் தலைவர் முல்லா அகுந்த்ஸாதா நீண்ட காலமாகவே வெளியே காணப்படவில்லை, மேலும் அவரைப் பற்றிய கேள்விகளை சாதாரண மக்கள் மட்டுமின்றி சில தலிபான் தளபதிகளும் பலவிதமாக ஊகித்து வருகிறார்கள்.
சில தகவல்கள், முகுந்த்ஸாதா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்கின்றன. மற்ற தகவல்களோ சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார் என்றும் அங்கு அவர் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றன.
தலிபானுக்கு உள்ளாகவே பல முரண்பாடுகள் தோன்றும் வேளையில் ஆப்கானிஸ்தானைச் சுற்று நிச்சயமற்ற நிலை உள்ளது. மக்களின் பார்வையில் படாமலேயே அகுந்த்ஸாதா உயிருடன் வாழ்வதும் எளிதான விஷயமல்ல.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியான டோலோ நியூஸ், முல்லா ஹெப்துல்லா அகுந்த்ஸாதா நீண்ட காலமாக மக்கள் மத்தியில் தோன்றாமல் இருப்பது குறித்து கந்தஹாரில் உள்ள மக்களும் தலிபான் தலைவர்களும் அச்சம் கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டது.
எனினும், அறிக்கையொன்றில் கந்தஹாரை விட்டு அகுந்த்ஸாதா விரைவில் வெளியே வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், டோலா நியூஸ், அகுந்த்ஸாதா உயிருடன் இருக்க மாட்டார் என்ற அச்சத்தை செய்தியாகவே வெளியிட்டது.
முல்லா ஒமரின் மரணத்திற்குப் பிறகு, முல்லா ஹெப்துலாவும் இறந்து விட்டால் தலிபானுக்கு புதிய தலைமை யார் என்பது தொடர்பாக நடக்கும் மோதல்கள் வரும் நாட்களில் மேலும் வலுப்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாலிபனின் தேனிலவு முடிந்தது
மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி கடுமையாகி வருகிறது, வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்ட பிறகு தாலிபனுக்குள் நிலவும் வேறுபாடுகள் அதிகமாகியுள்ளன. இப்போது தலிபான் ஆளுகைக்கு, சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான சவாலுடன் சேர்த்து, நாட்டு மக்களாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட ஆக்கபூர்வ நடவடிக்கையில் கவனம் செலுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை செப்டம்பர் 7ஆம் தேதி தலிபான் அறிவித்தது, ஆனால் இந்த ஏற்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தாலிபன் தெளிவுபடுத்தவில்லை. அதி உயர் தலைவரின் பணி, தலைமை கவுன்சிலின் அதிகாரம், உலமா பரிஷத்தின் பங்கு என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
தீவிரவாத அமைப்பான ஐஎஸ்(கே)-வுடன் தாலிபன் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் விளக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில், ஆப்கானிஸ்தான் விவகாரங்களை கண்காணித்து வரும் மிக்கேல் செம்பல் என்ற ஆய்வாளர், “தலிபானை சுற்றி பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதில் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதே பிரதானமாக பிரச்னை,” என்று பிபிசி பெர்ஷிய சேவையிடம் தெரிவித்தார்.
இதை எல்லாம் பார்க்கும்போது, தலிபானின் தேன் நிலவு காலம் முடிந்து விட்டது. இனி அந்த அமைப்பு தன்முன் உள்ள மிகப்பெரிய சவால்களை சமாளிக்கத் தயாராக வேண்டும் என்று மிக்கேல் செம்பில் கூறினார்.