‘ஆறாவது பேரழிவு தொடங்கிடுச்சு, தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு!’

முனைவர். வானதி ஃபைசல்

ம்முடைய வளிமண்டலத்தில் 15 முதல் 30 கி.மீ உயரம் வரை காணப்படும் ஓசோன் படலமே, உயிர் போர்வையாக புவியைக் காத்து நிற்கிறது. முதன் முதலாக அண்டார்டிகா கண்டத்தின் மீது ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்ததை, 1970ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தொடர்ச்சியான ஆய்வுகளின் பின்னே 1985ஆம் ஆண்டு இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டிலிருந்தே ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன.

ஆனாலும் மனிதர்களால் உருவாகும் காற்று மாசுபாட்டினால், ஓசோன் படலத்தின் அடர்த்தி வரவர குறைந்து கொண்டே தான் செல்கின்றது. எனவே 1994ஆம் ஆண்டு கூடிய ஐநா சபை, செப்டம்பர் 16ம் தேதியை சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது. ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தையும், அதன் அடர்த்தி குறைவதால் ஏற்படும் விளைவுகளையும், ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கு மனிதர்கள் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக, இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஓசோன் எப்படி உருவானது

பூமியில் ஓசோன் எப்படி உருவானது என்ற கேள்வி நம் அனைவரிடமும் இருக்கும். 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் உருவான நீலப்பச்சைப்பாசிகளே ஓசோன் படலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின. அதுவரை ஒட்சிசன் இல்லாத புவியில் இந்த பாசிகள் ஒட்சிசனை உற்பத்தி செய்தன. அதில் குறிப்பிட்ட அளவு ஒட்சிசன் புற ஊதாக் கதிர்களால் பிரிக்கப்பட்டு ஓசோனாக மாறியது. ஓசோன் படலம் உருவாவதற்கு முன்பு நிலப்பகுதிக்கு வந்த உயிரினங்களால், சூரியனிலிருந்து வந்த புற ஊதாக் கதிர்களை தாங்க இயலாததால் அவை மடிந்தன. எனவே ஓசோன் படலம் உருவான பின்னரே பூமியில் நிலவாழ் உயிரினங்கள் தோன்றின.

இன்று நம்முடைய வளிமண்டலத்தில் 0.001% ஓசோன் உள்ளது. புவியில் அதிகளவு ஓசோன் உருவாவது பூமத்திய ரேகை பகுதியில் தான்.

தரை மட்டத்திலுள்ள ஓசோன்

வளிமண்டலத்தின் உயிர்மூச்சான ஓசோன் தரைமட்டத்தில் ஒரு விஷக்காற்று என்பது உங்களுக்கு தெரியுமா…? வாகனப் புகையிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் ஆக்சைடு, புற ஊதா கதிர்களுடன் வினை புரிவதால் தரைமட்டத்தில் ஓசோன் உருவாகிறது. தரை மட்டத்திலுள்ள ஓசோன் நுரையீரல் ஒவ்வாமையை உருவாக்கும் புகைப் பனி (Photochemical smog) உருவாக முக்கிய காரணமாக அமைகிறது. மனிதர்களாகிய நாம் தரைமட்டத்தில் கேடு தரும் ஓசோனை உருவாக்கிவிட்டு, வளிமண்டலத்திலுள்ள நன்மை தரும் ஓசோனை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைவதால் ஏற்படும் பாதகங்கள்

பூமியின் “சன்ஸ்கிரீன்” என்றழைக்கப்படும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைவதனால், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் முழுவதுமாக பூமியை வந்தடையும். புற ஊதாக் கதிர்கள் தோல் புற்று நோய், கண் புரை, மரபணு குறைபாடு மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவற்றை மனிதர்களில் உண்டாக்கவல்லவை.

ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்ததால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்கெனவே மனிதர்களில் வெளிப்பட துவங்கிவிட்டன. நாம்தான் அதனை உணர்வதாக இல்லை. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 1,30,000 புதிய தோல் புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். கண்புரை நோயும் உலகளவில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 9 கோடியே 40 லட்சம் மக்கள் உலகளவில் கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புற ஊதா கதிர்கள் நீர்வாழ் மற்றும் தரைவாழ் உணவுச்சங்கிலியிலும், உயிர் வேதியியல் சுழற்சிகளிலும் பெருமளவு மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன. அதுமட்டுமின்றி கடலில் வாழும் பிளாங்டான்களின் செல்களை முற்றிலுமாக புற ஊதாக் கதிர்கள் அழித்துவிடுகின்றன. புவியில் மரங்கள் உற்பத்தி செய்வதை விட அதிகளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்வது இந்த பிளாங்டான்களே.

ஓசோன் படலத்தை அழிக்கும் காரணிகள்

ஓசோன் படலத்திற்கு முக்கிய எதிரியாக விளங்குவது குளோரோ ஃபுளுரோ கார்பன்கள். இதனை பெருமளவில் வெளியேற்றுவது தொழிற்சாலைகள், குளிர்பதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், தீயணைக்கும் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கரைப்பான்கள் ஆகியவையே. காற்றில் கலக்கும் இந்த குளோரோ புளோரோ கார்பன்களிலிருந்து, குளோரினைப் புற ஊதா கதிர்கள் பிரிக்கின்றன. இந்த குளோரின் மூலக்கூறுகள் வளிமண்டலத்திலுள்ள ஓசோன் மூலக்கூறுகளை தாக்கி அவற்றை குளோரின் ஆக்சைடாகவும், ஆக்சிஜனாகவும் பிரித்து விடுகின்றன. இவ்வாறு உருவாகும் குளோரின் ஆக்சைடிலிருந்து மிக எளிதில் தானாகவே, குளோரின் மூலக்கூறு பிரிந்து மறுபடி ஒரு ஓசோன் மூலக்கூறை தாக்க செல்கிறது. இவ்வாறாக ஒரு குளோரோ புளோரோ கார்பன் மூலக்கூறு வளிமண்டலத்தை விட்டு நீங்குமுன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சுழற்சி முறையில் அழிக்கிறது.

வாகன புகையினால் உண்டாகும் நைட்ரஜன் ஆக்சைடும் ஓசோன் படலத்தை அழிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. நைட்ரஜன் ஆக்சைடு வளிமண்டல ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து புதிதாக ஓசோன் மூலக்கூறுகள் உருவாவதை தடுக்கிறது.

காட்டுத் தீயினால் உண்டாகும் அளவுகடந்த வெப்பமும், கார்பன் டை ஆக்சைடும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைய மற்றுமோர் காரணமாகின்றது. ஒவ்வொரு வருடமும் காட்டுத்தீ 800 கோடி டன் கார்பன் டை ஆக்சைடை காற்றில் கலக்கிறது. காட்டுத் தீ தரைமட்டத்திலுள்ள ஓசோன் அளவையும் அதிகரிக்கிறது. கால நிலை மாற்றத்தின் காரணமாக சமீப காலமாக உலகின் பல இடங்களில், மிக அதிகமாக காட்டுத்தீ பரவி வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.

இவற்றை தவிரவும் எரிமலை வெடிப்புகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் சரியாக முறைப்படுத்தப்படாத ராக்கெட் ஏவுதல்களும் வளிமண்டல ஓசோன் படலத்தை அழிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

தென்துருவத்தில் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்தது ஏன்..?

பூமியில் மிக அதிகமாக பசுமை நிற வாயுக்களை வெளியிடும் நாடுகளான ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் புவியின் வட பகுதியிலேயே அமைந்துள்ளன. ஆனாலும் பூமியில் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்தது தென் துருவத்தின் மேல்தான். உலகின் மிகப்பெரிய குளிர் நிலப்பரப்பான தென் துருவத்தில் (அண்டார்டிகா கண்டம்) மனிதர்களின் பயன்பாடும் குறைவு. ஆனாலும் அங்கு தான் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்துள்ளது.

அதற்கான காரணம் என்னவெனில், வளிமண்டலத்திலுள்ள காற்று பூமி முழுவதும் சுற்றி வரக்கூடியது. வட பகுதியில் உருவாகும் பசுமை இல்ல வாயுக்கள் தென்பகுதியை அடையும்போது, அங்குள்ள அதிகளவு பனி மேகங்கள் மற்றும் சுழன்றடிக்கும் குளிர் காற்றின் காரணமாக அவ்விடத்திலேயே மாட்டிக் கொள்கின்றன. இந்த பசுமை இல்ல வாயுக்கள் ஓசோன் மூலக்கூறுகளை தாக்கி அழிப்பதனால், அவ்விடத்தில் ஓசோன் படலத்தின் அடர்த்தி மிக அதிகமாக குறைந்துள்ளது. வடதுருவத்தில் (ஆர்டிக்) இதேபோன்ற சூழ்நிலை நிலவினாலும், இப்பகுதி அளவில் மிகச் சிறியதென்பதால் இங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது.

பூமியில் உருவான பேரழிவுகள்

நம் புவியில் உருவான உயிரினங்களில் 99% உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. நம்மிடம் இப்பொழுது மிஞ்சி இருப்பது 1% உயிரினங்கள் மட்டுமே. பூமி தோன்றியதிலிருந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதில் ஐந்து பேரழிவுகள் மிகப் பெரியவை.

முதல் பேரழிவு 44.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. புவி குளிர்ந்ததினால் ஏற்பட்ட இப்பேரழிவின் காரணமாக 57% கடல் வாழ் உயிரினங்கள் அழிந்தன.

பவளப்பாறைகள், கடற்பஞ்சுகள் மிகக் கடினமான ஓடுடைய மீன்கள் உட்பட 50% கடல்வாழ் உயிரினங்களை அழித்த இரண்டாம் பேரழிவு 38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இப்பேரழிவிற்கு காரணம் எரிமலை வெடிப்புகள் என்று கூறப்பட்டாலும், இன்னொரு முக்கிய காரணம் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட அடர்த்தி இன்மை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இக்கால கட்டத்தில் வாழ்ந்த தாவரங்களின் படிம மகரந்தத்தூள்களையும், நுண்ணுயிர் விதைகளையும் ஆராய்ச்சி செய்தபோது அவற்றில் குறைபாடுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக தாவர மகரந்த தூள்களை தாக்குவதால் மட்டுமே இவ்வாறான குறைபாடுகள் உருவாகுமென்பதால், அக்காலகட்டத்தில் ஓசோன் படலத்தின் அடர்த்தி மிக குறைந்து அதனாலேயே பேரழிவு உருவாகியிருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

26 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மூன்றாம் பேரழிவினால் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 80% உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்தன. இப்பேரழிவிற்கு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கிட்டத்தட்ட 96% உயிரினங்களை அழித்த நான்காவது பேரழிவு 25.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. சைபீரிய பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களினால் வெளியான பசுமை இல்ல வாயுக்களால் ஓசோன் படலத்தின் அடர்த்தி மிகவும் குறைந்து, பூமியில் புற ஊதா கதிர்வீச்சு மிகவும் அபாயகரமான அளவை எட்டியதால் ஏற்பட்டதே இப்பேரழிவு. அதிலிருந்து பூமி மீண்டுவர கிட்டத்தட்ட 1 கோடி ஆண்டு ஆனது.

20.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஐந்தாவது பேரழிவின் போது தான் பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய ஊர்வன விலங்குகளான டைனோசர்கள் அழியத் தொடங்கின. இப்பேரழிவின் தொடர்ச்சியாக 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மோதிய விண்கல்லினால் டைனோசர்கள் முற்றிலுமாக பூமியை விட்டு அழிந்தன. புவியின் உச்ச பாலூட்டிகளான குரங்கினங்கள் தோன்ற வழிவகுத்தது இப்பேரழிவே.

பேரழிவுகள் பூமிக்கு ஒன்றும் புதியதல்ல. ஒவ்வொரு ஒரு லட்சம் ஆண்டுக்கொரு முறை பேரழிவுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆறாவது பேரழிவு தொடங்கிவிட்டது என்றே கூறுகின்றனர்.

இம்முறை பேரழிவிற்கு இயற்கை காரணமல்ல. காரணம் மனிதர்கள் மட்டுமே. வாழிட அழிப்பு, காலநிலை மாற்றம், புவி வெப்பநிலை உயர்வு, ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைவு இவை நாம் எதிர்பார்த்ததை விட 50 மடங்கு வேகமாக நடக்கின்றது. பிரிட்டனைச் சார்ந்த புவி விஞ்ஞானியான ஜான் மார்ஷல் மிக விரைவில் இப்பூமி 38 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த வெப்ப நிலையை அடைந்துவிடுமென்று கூறுகின்றார். இம்முறை வரும் பேரழிவிற்கு புற ஊதா கதிர்களே காரணமாக இருக்கும்.

ஓசோனை மனிதனால் உருவாக்க இயலாது. ஓசோன் உருவாவதற்கு தேவை வளிமண்டல ஆக்சிஜன். அந்த ஆக்சிஜனை உருவாக்குவதற்கு உள்ள ஒரே வழி மரங்களே. எனவே முடிந்த அளவு மரங்களை நடுவோம். புவியின் உயிர் போர்வையை காப்போம்…!

Tags: