தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்தது அவமான செயல்!

னுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியுள்ளதோடு, இச்சம்பவம் அவமானமான ஒன்று எனவும் இதனை தான் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தாமாக முன்வந்த விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்த அவர், இச்சம்பவம் தொடர்பில் மேல்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேற்கொள்வார்.

22.09.2021 அன்று பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியினால் கேட்கப்பட்ட விசேட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர், அனுராதபுர சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்தவின் செயற்பாடு குறித்து நீதி அமைச்சர் என்றவகையில் இச்செயற்பாட்டை நான் கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கக்கூடாது. இதுவொரு அவமானமான செயற்பாடு. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள்

எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக நான் அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்
எனவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேபோல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சுயாதீனமாக முன்வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறைச்சாலை கைதிகள் அரசாங்கத்தின் கீழேயே உள்ளனர். எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இதேவேளை எனது அமைச்சின் கீழ் உள்ள குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு தேசிய ஆணையமும், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறை கைதிகளை பாதுகாப்பு, கௌரவம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டுமென கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இதுபோன்ற சம்பவம் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது. எனினும் இச்சம்பம் இனவாதத்தால் தூண்டப்பட்ட ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை அனுராபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகளை அங்கேயே வைத்திருக்க வேண்டுமென அரசாங்கம் அடம்பிடிக்காது. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பான சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்காக அவர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும்
கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் உள்ள தமிழ் கைதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலுதிகமாக பாதுகாப்புக்களை வழங்கபட்டுள்ளதோடு, அவர்களின் பாதுகாப்பு

தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது எனவும் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது, அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவோர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படியே அச்சடத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட வேண்டும்.

எந்தவொரு அரசாங்கமும் இந்த அலோசனைக் குழுவை அமைத்ததில்லை. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அக்குழுவை நியமித்துள்ளார் என்றார்.

Tags: