பொருளாதார சவால்கள் நிறைந்த புதிய ஆண்டுக்குள் உலகம் பிரவேசம்!

சம்யுக்தன்

கொவிட் மூன்றாம் அலை, நீண்ட நாள்பொது முடக்கம், டொலர்பற்றாக்குறை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என பல்வேறு சவால்களுடன் 2021ஆம்ஆண்டு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், 2022ஆம்  ஆண்டு புதிய சவால்களுடன் பிறந்துள்ளது.இவ்வாறான சவால்கள் இலங்கைக்கு மாத்திரமன்றிஉலக நாடுகள் பலவற்றுக்கும் காணப்படும்பொதுவான சவால்களாகவே உள்ளன.

இலங்கையைப் பொறுத்த வரையில் தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சாவல்கள் முக்கிய விடயமாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாடும் தமக்குக் காணப்படும் சவால்களை முறியடிப்பதற்கும், அதிலிருந்து மீண்டெழுந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன. இவ்வாறு முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் சில வெற்றியளிப்பதுடன், சில தோல்வியிலும் முடிவடைகின்றன.

அண்மைய தசாப்தங்களில் உலக நாடுகள் எதிர்கொண்ட புதியதொரு சூழலாக தற்போதைய கொவிட் பெருந்தொற்றை அடிப்படையாகக் கொண்ட நிலைமை காணப்படுகிறது. இவ்வாறான நெருக்கடியான சூழல் இலங்கைக்கு முற்றிலும் புதியதொரு விடயமாகும். இதுவரை எந்தவொரு காலமும் எதிர்கொள்ளாத சூழலுக்கு தற்போதைய அரசாங்கம் முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிக்கான பிரதான காரணம் கடந்த இரு வருடங்களாக நாட்டை ஆக்கிரமித்துள்ள கொவிட் தொற்று ஆகும். அந்த தொற்று இன்னுமே முடிவுக்கு வந்துவிடவில்லை.

மேலே குறிப்பிட்டதைப் போன்று இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகளும் இப்புதிய சூழலில் தம்மை நிலைநிறுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அந்தந்த நாடுகளின் பிரஜைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. இது மாத்திரமன்றி கொவிட் தொற்று பரவலானது இலங்கைக்கு மாத்திரமன்றி முழு உலகத்துக்குமே பல படிப்பினைகளை வழங்கியுள்ளது.

விசேடமாக தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சவாலான சூழல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மாத்திரம் பாதிக்கவில்லை. சகல மட்டங்களிலும் உள்ளவர்களையும் பாரபட்சமின்றி சவால்களுக்கு உட்படுத்தியுள்ளது. இருந்தபோதும் பொருளாதார ரீதியில் சற்று பலமான நிலையில் உள்ளவர்களால் நிலைமைகளை ஓரளவுக்குச் சமாளிக்கக் கூடியதாக இருந்தாலும், வாழ்க்கையை ஓட்டிச் செல்வதற்கு அன்றாட உழைப்பை நம்பியிருக்கும் தரப்பினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமைய மாற்றுவதற்கு அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு சில மாதங்களிலேயே கொவிட் சவாலுக்கு நாடு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. தொற்றுநோய் ஆபத்துச் சூழலுக்கு மத்தியிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் பதவியேற்றுக் கொண்டது. இதன் அடிப்பைடயில் பார்க்கும் போது இந்த அரசாங்கம் ஆரம்பம் முதலே சவால்களுக்கு மத்தியிலேயே நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வரலாற்று ரீதியாக எடுத்துப் பார்க்கும் போது இலங்கை பொதுவாகவே மானியங்கள் மற்றும் நலன்புரித் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. மக்களின் மேம்பாட்டுக்காக கடந்த கால அரசாங்கங்கள் பல்வேறு இலவசத் திட்டங்கள் மற்றும் மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தன.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களால் அவ்வாறே பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொவிட் தொற்று நோய் சூழலாக இருந்தாலும் தற்போதைய அரசுக்கும் மானியங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொது முடக்கம் மற்றும் ஊடரங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டாயத்துக்கு அரசாங்கம் தள்ளப்பட்ட போது, தொழிலற்று வீடுகளில் இருந்த குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5000ரூபா கொடுப்பனவுகளை அரசு வழங்கியது. கொவிட் முதலாவது அலை, இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலை என ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

இதற்கென பல மில்லியன் ரூபாவை செலவு செய்ய வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. அது மாத்திரமன்றி முடக்கங்களினால் அரசுக்கு உரிய தேசிய வருமானத்தை ஈட்ட முடியாமல் போனது. இதற்கும் அப்பால் நாட்டு மக்களை கொவிட் தொற்றிலிருந்து காப்பாற்றும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்காக பல மில்லியன் ரூபாவை செலவு செய்ய வேண்டிய நிலைமை அரசுக்கு ஏற்பட்டது.

இது இவ்விதமிருக்க, கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் அதற்கு முன்னரும் பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமும் அரசுக்குக் காணப்பட்டது. இதனையும் உரிய காலத்தில் மீளச் செலுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. நாட்டில் அந்நிய செலாவணிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் முன்கூட்டியே இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இருந்த போதும்,  நீண்ட கால கொவிட் தொற்று நெருக்கடி காரணமாக தவிர்க்க முடியாத நிலையில் தற்பொழுது நாட்டில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைச் சீர்செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு மாற்று நடவடிக்கைகள் குறித்து தீவிரம் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில், விலைவாசி அதிகரிப்புக்கான அடிப்படைக் காரணங்கள் பற்றிச் சிந்திக்காது சகலவற்றிலும் எதிர்ப்பு அரசியல் செய்வதில் சில தரப்பினர் ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக பிரதான எதிர்க் கட்சியானது இன்றைய நிலையில் நாடு பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கு எவ்வாறான யோசனைகளையும் முன்வைக்கவில்லை.

மாறாக ஆரம்பம் முதல் விமர்சனங்களையே செய்து வருகிறது. கொவிட் தொற்று ஆரம்பித்த காலத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென விமர்சித்தது. அதன் பின்னர் தடுப்பூசிகள் செலுத்த ஆரம்பிக்கப்பட்டதும் அவற்றின் தரங்கள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை எதிர்க்கட்சி ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களைத் தூண்டி விட்டு அவர்களை வீதிக்கு இறங்க வைத்து போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் தற்பொழுது மீண்டும் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கான முயற்சிகளை எதிர்க்கட்சி முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று தற்பொழுது நாடு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலை நமக்கு மாத்திரம் உரியதல்ல. பல உலக நாடுகளும் இவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளன. இருந்தபோதும் அந்தந்த நாடுகளில் ஆளும் கட்சி எதிர்க் கட்சிகள் என சகல தரப்பினரும் ஒன்றிணைந்து சவாலிலிருந்து வெளியே வருவதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளார்கள்.

ஆனால் இலங்கையிலோ காட்சிகள் வேறு விதமாக உள்ளன. இலங்கையில் மக்களையும், தொழிற்சங்கங்களையும் வீணாகக் குழப்பி விட்டு அரசுக்கு எதிரான விஷமப் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விடயத்திலும் அரசியல் இலாபம் தேட முயலாமல் பொறுப்புள்ள பிரஜைகள் என்ற வகையில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அரசாங்கம் தவறிழைக்கும் இடங்களில் தவற்றைச் சுட்டிக் காட்டி அவற்றுக்கு மாற்று யோசனைகளை முன்வைத்து சவால்களிலிருந்து தம்மையும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டு மக்களையும் மேம்படச் செய்வதையே எதிர்க்கட்சி தற்பொழுது செய்ய வேண்டும்.

இதனை விடுத்து மக்களை வீணாக உருவேற்றி வீதிகளில் இறங்கச் செய்து கொவிட் தொற்றை அதிகரிக்கச் செய்வது மாத்திரமன்றி, நிலைமைகளை மேலும் சிக்கலடையச் செய்யாமலிருக்க வேண்டும். அதேநேரம், அரசாங்கமும் இன்றைய நிலையில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமையில் உள்ளது. தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி உலகின் சில நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கு முற்படுகின்றன. அரசுக்கு எதிரான சக்திகள் அந்நாடுகளுக்கு ஆதரவாக செயற்படுவதையும் காண முடிகின்றது. இவ்வாறான சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க வேண்டிய நிலையிலும் அரசாங்கம் உள்ளது.

-தினகரன் வாரமஞ்சரி
2022.01.02

Tags: