சாம் ராஜப்பா எனும் இதழியல் ஆளுமை
– எஸ்.வி.ராஜதுரை

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்த சாம் ராஜப்பா, ஜனவரி 16ந் திகதி ஞாயிறு காலை கனடாவிலுள்ள தன் மூத்த மகன் வீட்டில் மாரடைப்பால் காலமானதை அறிந்து கடும் வலியால் மூடப்பட்டிருந்த என் கண்களில் ஒன்றிலிருந்தும் நீர் வழியத் தொடங்கியது. அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, இதழியலில் அவர் பெற்றிருந்த அனுபவத்தை மட்டுமின்றித் தன் காலத்தில் அவர் காணவும் அறியவும் நேர்ந்த முக்கிய இந்திய, தமிழக அரசியல், பொருளாதார நிகழ்வுகள், அவற்றின் வளர்ச்சிகள், சிதைவுகள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். அதை அவர் செய்திருந்தால், சமகால இந்திய வரலாறு பற்றிய ஆய்விலும் எழுத்திலும் ஈடுபட்டுள்ள அறிஞர்களுக்கு வலுவான ஓர் ஆவணத்தை விட்டுச்சென்றிருப்பார்.
ஆங்கில இதழாளர்களாக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய மனிதர்கள் சிலரை இப்போது என் உடனடி நினைவுக்கு எட்டியவரை பட்டியலிட முடிகிறது: மோகன்ராம், இராம.சம்பந்தம், ஐராவதம் மகாதேவன், சாம் ராஜப்பா, ஞாநி, சாஸ்திரி ராமச்சந்திரன். ‘அதிகாரத்திடம் உண்மையை உரைத்தல்’ என்ற எட்வர்ட் சைதின் அறக் கோட்பாட்டைத் தங்களால் இயன்ற அளவு கடைப்பிடித்த இவர்களில் கடைசியாகக் குறிப்பிட்டவர் மட்டுமே நம்மோடு இருக்கிறார் –டெல்லியில்.
சாம் ராஜப்பாவுடன் நீண்டகாலம் பழகியிருக்கிறேன். தனித்த அடையாளமும், சுதந்திர உணர்வும் கொண்டுள்ள ‘ஸ்டேட்ஸ்மன்’ (Statesman) ஆங்கில நாளேட்டின் சிறப்பு நிருபராக அவர் இருந்தபோதுதான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. ‘ஸ்டேட்ஸ்மன்’ நாளேட்டிலும், பின்னர் ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ (Hindustan times) நாளேட்டிலும் பணிபுரிந்த, யாருக்கும் பணியாத மனித உரிமைப் போராளி காலம்சென்ற கன்ஷியாம் பரதேசி என் நண்பர் என்பது சாம் ராஜப்பாவுக்குத் தெரிந்ததும் இருவரும் மிகவும் நெருக்கமானோம்.
1980-82-ம் ஆண்டுகளில் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டும் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டும், சித்ரவதை செய்யப்பட்டும் வந்தபோது, பெரும்பாலான ஏடுகள் காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டுவந்த விளக்கங்களையே ஏற்றுக்கொண்டிருந்தன. ஆனால், சாம் ராஜப்பாவோ பல்வேறு தரப்புகளிலிருந்து உண்மை விவரங்களைத் திரட்டி ‘ஸ்டேட்ஸ்மன்’ ஏட்டுக்கு அனுப்புவார்.
அப்போது தமிழ்நாட்டில் நடந்த போலி என்கவுண்டர்கள் பற்றி இந்தியாவின் பிற பகுதிகளுக்குத் தெரிய வைத்தவர்களில் சாமும் ஒருவர். அதன் பிறகு புகழ்பெற்ற கேரள எழுத்தாளர் ஓ.வி.விஜயன்கூட தமிழ்நாடு வந்து திருப்பத்தூர், தர்மபுரி பகுதிகளுக்குச் சென்று நீண்ட கட்டுரையை எழுதினார் – அரசு ஒடுக்குமுறையைக் கண்டனம் செய்தும் யதார்த்த நிலையைக் கருத்தில் கொள்ளாத போராளிகளை விமர்சித்தும்.
இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்தில் கேரளத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ராஜன், நக்ஸலைட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படுபவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, போலீஸாரால் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துபோனதை இந்திய அளவில் செய்தியாக்கியவர் சாம் ராஜப்பா. கேரள இடதுசாரி அரசியல் வட்டாரங்களில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய செய்தி அது.
எந்த அரசியல் கட்சிக்கும் ஒருபோதும் சாதகமாக எழுதாத அவர், எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும், எந்தக் கட்சியையும் சேராதவர்களுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு, தகவல்களைத் திரட்டும்போது, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பிறகே அவற்றைப் பற்றிய செய்தியை அனுப்புவார். தமிழகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினையிலும் அவர் காட்டிய ஆர்வத்துக்குச் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். கடலூரில் சிப்காட்டிலுள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்டுவரும் சுற்றுச்சூழல் கேடுகளையும் மாசுகளையும் பலரும் அறிவார்கள்.
நாக்பூரைச் சேர்ந்த ‘நேஷனல் என்விரான்மென்ட் இன்ஜீனியரிங் ரிஸர்ச் இன்ஸ்டிட்டியூட்’ (National environmental engineering research institute, Nagpur) 2008-ல் தயாரித்த அறிக்கை, கடலூரில் சிப்காட் வளாகத்திலும் அதைச் சுற்றிலும் இருக்கும் மக்களுக்குப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியப்பாடு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருப்பவர்களைவிட ஆயிரம் மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டிருந்தது. சிப்காட் வளாகத்தில் உள்ள வேதிப்பொருள்கள், பூச்சிமருந்துகள், மனிதர்களுக்கான நோய்களுக்கான மருந்து ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் கழிவுகளில் உள்ள நச்சுகள் மிக அதிக அளவு (சிகப்பு வகை) மாசு ஏற்படுத்துகின்றன என்று கூறிய அந்த அறிக்கை, அது தயாரிக்கப்பட்ட காலத்தில் அத்தொழிற்சாலைகளில் பாதி இயங்கவில்லை என்றும், அவை இயங்கியிருந்தால் சுற்றுச்சூழல் கேடு மூன்று மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்றும் கூறியது.
கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் பொது இடங்களில் கொட்டப்படுவதால் காற்றிலும் நீரிலும் ஏறத்தாழ 30 வகையான நச்சுப் பொருள்கள் கலந்துவிடுவதை சுட்டிக்காட்டிய அந்த அறிக்கை, அவற்றால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான் என்று கூறியது. அறிக்கையை ‘கம்யூனிட்டி என்விரான்மென்ட் மானிட்டரிங்’ என்ற தன்னார்வக் குழுதான், தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி வெளியே கொண்டுவந்தது.

இந்தத் தகவல்களை வேறு சிலருடன் கலந்தாய்ந்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் சாம் ராஜப்பா எழுதியவை, ’ஸ்டேட்ஸ்மன்’ ஏட்டில் ‘துரிதமான தொழில்மயமாக்கலும், மக்களின் உடல்நலத்துக்கு ஏற்படும் கேடுகளும்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. தொழிலாளர்களின் உடல்நலத்தையோ, ஆயுள்காலத்தையோ ‘மூலதனம்’ பொருட்படுத்துவதில்லை என்று கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்ததைக் குறிப்பிட்டு, ‘அரசாங்கம் மூலதனத்தின் பக்கமா அல்லது தொழிலாளர்களின் பக்கமா என்பதைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று எழுதியிருப்பார் சாம்.
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டங்களைப் பற்றி சாம் தொடர்ந்து எழுதிவந்தார். முல்லைப் பெரியாறு அணை பற்றி எழுதும்போது தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து வலுவான சான்றுகளுடன் அவர் எழுதிய கட்டுரைகளும், பென்னிகுயிக் பற்றிய அவரது கட்டுரைகளும் கேரள அரசின் கவனத்தையும் ஈர்த்தன.
‘தி ஸ்டேட்ஸ்மன்’ ஏடு கொல்கொத்தாவில் நிறுவிய ‘இதழியல் பள்ளி’யின் இயக்குநராகச் செயல்பட்ட அவர், ஏறத்தாழ இரண்டாண்டு காலம் அந்த நகரில் வசித்தார். அவரது துணைவியார் புற்றுநோயால் அவதியுற்றுக்கொண்டிருந்ததால், இதழியல் பள்ளிப் பணிகளை வீட்டிலிருந்தே செய்துவந்தார். அதுமட்டுமல்ல, இதழியல் தொடர்பாக அவரது வீட்டில் ஏராளமான இளைஞர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பயிற்சியும் கல்வியும் வழங்கிவந்தார்.
‘டெக்கான் குரோனிக்கிள்’ (Deccan Chronicle) ஏட்டுக்கும் அவ்வப்போது எழுதிவந்தார். குறைந்த காலமே நீடித்த ‘தி ஆந்திர பிரதேஷ் டைம்ஸ்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக சாம் ராஜப்பா இருந்தார். பலரும் வியக்கும் வண்ணம் அவருக்கு ஒன்றிய அரசு 2017-ல் ‘சிறந்த இதழாளர்’ விருதை வழங்கியது. இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க இதழாளர்களைத் தமிழ்நாடு அரசும் உரிய முறையில் கெளரவிக்க வேண்டும்.
–இந்து தமிழ்
2022.01.18