நேட்டோவே, வெளியேறு!
இராக்கின் சதாம் ஹுசேனை தூக்கிலிட்டு படுகொலை செய்தது போல, லிபியாவின் மும்மர் கடாபியை வெட்டி படுகொலை செய்து சாக்கடையில் தூக்கியெறிந்தது போல, இன்னும் இந்த உலகின் பல நாடுகளது தலைவர்களை கொன்று ஒழித்தது போல, ஜனாதிபதி விளாடிமிர் புடினை அழித்துவிடத் துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தி யம். ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புட்டினோ, இவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
ரஷ்யாவின் மீது, அது இப்போது சோசலிச சோவியத் ஒன்றியமாக இல்லை என்ற போதிலும், கொலை வெறியுடனும், ஆத்திரத்துடனும் வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கி றது அமெரிக்கா. ரஷ்யாவை சுற்றிலும் நேட்டோ ராணுவப் படைகளை குவிப்பது; முன்னாள் சோவி யத் குடியரசு நாடுகளில் ஒன்றான உக்ரைனில் முழுமையாக நேட்டோ துருப்புகளை இறக்கி அந்த நாட்டை தனது கைகளுக்குள் கொண்டு வருவது; அதைத் தொடர்ந்து ரஷ்யாவை சுற்றி வளைக்கும் விதமாக அதன் எல்லைகளையொட்டி ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேட்டோ மற்றும் அமெரிக்க துருப்புகளை இறக்குவது என்ற ஒரு விரிவான சூழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் உக்ரைனுக்குள் நுழைந்திருக்கிறது.
ஆனால் சர்வதேச ஏகாதிபத்திய ஊடக ஊது குழல்கள், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்திருப்பதாகவும், எனவே ரஷ்யாவை தடுத்து நிறுத்துவதற்காக அமெரிக்கா களத்தில் இறங்குவதாகவும் முற்றிலும் பொய்யான பிரச்சாரத்தை கட்ட விழ்த்துவிட்டுள்ளன. உண்மையில் ரஷ்யா படை யெடுக்கவில்லை. உக்ரைனுக்குள் ரஷ்ய படையினர் நுழையவுமில்லை. அவர்கள் தங்களது எல்லையில் உள்ளனர்.
சோவியத் ஒன்றியம் இருந்தபோதே நேட்டோ தனது படைகளை சோவியத் ஒன்றிய நாடுகளுக்குள் கொண்டு வரக்கூடாது என்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து நடக்குமாறு அமெரிக்காவை புட்டின் வலியுறுத்தி வருகிறார். வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) என்பது, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ராணுவக் கூட்டணி என்பது நினைவுக் கூரத்தக்கது. இதில் எந்த விதத்திலும் சோவியத் முன்னாள் குடியரசான உக்ரைன் இணைய முடியாது. ஆனால் தற்போது நேட்டோ ராணுவக் கூட்டணியின் ஒப்பந்தங்கள் மற்றும் விதிகளையும்கூட மறுத்து, ரஷ்யாவை சுற்றி வளைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உக்ரைனில் உள்ள தனது கைப்பாவை ஆட்சியாளர்களின் உதவியுடன் அமெரிக்கா, தனது தலைமையிலான நேட்டோ ராணுவக்கூட்டணியில் உக்ரைனை இழுத்துப் போட முழு வீச்சில் இறங்கியிருக்கிறது.
ரஷ்யா தனது பாதுகாப்புக்கு மட்டுமல்ல, முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய மற்றும் ஆசிய பிராந்தியங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய மையமான புவி அரசியல் கேந்திரத்தில் அமைந்துள்ள நாடு. அது ஒருபோதும் நேட்டோ விரிவாக்கத்தை அனுமதிக்காது. இது ரஷ்யாவின் வரலாற்றுப் பங்களிப்பு. உக்ரைனிலிருந்து நேட்டோவும் அமெரிக்காவும் உடனே வெளியேற வேண்டும். இல்லையெனில் பலவந்தமாக வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது.
-தீக்கதிர்
2022.01.28