ட்ரூடோ பற்றி ட்ரம்ப் கீழ்த்தரமான வர்ணனை!

-சயந்தன்

னடாவிலிருந்து எல்லை தாண்டி அமெரிக்கா செல்லும் பாரவூர்தி சாரதிகள் (Truck Drivers) கட்டாயமாக கொவிட் – 19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடிய அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுமார் 1,500 சாரதிகள் தலைநகர் ஒட்டாவாவில் ஜனவரி 29 இல் ஆரம்பித்த மறியல் போராட்டம் தொடர்கிறது.

இந்தப் போராட்டத்தால் தலைநகரின் இயல்பு வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் பொதுமக்கள் தமது அன்றாட கருமங்களை ஆற்ற முடியாமல் இருப்பதுடன், தமது அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாதபடி அனைத்து வர்த்தக நிறுவனங்களும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. இது தவிர, ஆர்ப்பாட்டக்காரர்களால் எந்த நேரமும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற அச்சத்திலும் மக்கள் இருக்கிறார்கள்.

தலைநகரின் பாதுகாப்பின் பொருட்டு பெருமளவு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கை எதிலும் இதுவரை ஈடுபடவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது எந்தவிதமான பலாத்காரமும் பிரயோகிக்கப்பட மாட்டது என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் அறிவித்திருக்கிறார்.

பாரவூர்தி சாரதிகளின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கனடாவின் வலதுசாரி கொன்சவேர்டிக் கட்சி உட்பட பல வலதுசாரிக் குழுக்கள் தமது ஆதரவை ஏற்கெனவே தெரிவித்திருந்தன. இப்பொழுது ஒரு புதிய திருப்பமாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், கடைந்தெடுத்த வலதுசாரியுமான டொனால்ட் ட்ரம்ப் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். அவர் ஆதரவு தெரிவித்ததுமல்லாமல் கனடியப் பிரதமர் ட்ரூடோவை மோசமான முறையில் ‘கடைகோடி – இடதுசாரி பைத்தியக்காரன்’ (Far-Left Lunatic) எனவும் வர்ணித்திருக்கிறார்.

ட்ரம்பின் இந்த நிலைப்பாடு குறித்து ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில்தான் இந்த கொவிட் – 19 ஆரம்பித்துப் பரவியது. இந்த நோய் உலகிலேயே அமெரிக்காவில்தான் மிகவும் வேகமாகப் பரவி பல இலட்சம் மக்களின் உயிர்களைக் காவு கொண்டது. அதற்குக் காரணம், ட்ரம்ப் அதைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல், இந்த நோய் உருவாவதிற்குக் காரணம் சீனாதான் என சீனாவை வசை பாடுவதிலேயே தனது காலத்தைக் கழித்து அமெரிக்க மக்களுக்குப் பேரழிவைக் கொண்டு வந்தார்.

ஆனால், ட்ரூடோவின் கனடிய அரசாங்கம் தனது நாட்டில் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. அதற்குக் காரணம் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இருந்ததுதான். பல ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் பரவுவதைத் தடுக்கும் வழிவகைகளில் ஒன்றாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, பின்னர் அதைத் தளர்த்தி விட்டார்கள். ஆனால், கனடாவில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாய நடைமுறையாக இருந்து வருகிறது.

அமெரிக்காவின் சீரழிவுச் சமூகக் கலாச்சாரம் போலல்லாது கனடிய மக்கள் ஓரளவு கட்டுப்பாடுகளை அனுசரித்து நடப்பவர்கள். தற்போதைய பாரவூர்திச் சாரதிகளின் போராட்டம் கூட ஒரு சிறுபான்மையினர் நடத்தும் போராட்டம்தான். ஏறத்தாழ 120,000 பாரவூர்தி சாரதிகள் உள்ள கனடாவில் 10 வீதமானவர்கள்தான் இந்த எதிர்ப் – புரட்சி கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அது மாத்திரமின்றி, மொத்தச் சாரதிகளில் 90 வீதமானவர்கள் ஏற்கெனவே முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியும் விட்டார்கள்.

தற்போதைய போராட்டம் கூட, சாரதிகளின் தன்னிச்சையான போராட்டம் அல்லவென்றும், வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவான பாரவூர்தி உரிமையாளர்களின் ஏற்பாட்டிலேயே இது நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது. அது உண்மைதான் எனக் கருதுவதற்கும் இடமுண்டு.

ஏனெனில், சுமார் 3,000 அங்கத்தவர்களைக் கொண்ட சீக்கிய சமூகத்தவர்களின் பாரவூர்தி சாரதிகள் சங்கம் ஒன்று தற்போதைய ஆர்ப்பாட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், பல பாரவூர்திகளை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள் தம்மிடம் வேலை பார்க்கும் சாரதிகளின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்காமல் கண்டும் காணாமல் இருந்து வரும் நிலையில், அந்தப் பிரச்சினைகளுக்குப் போராடாமல், இப்படியான ஒரு அநாவசியமற்ற விடயத்துக்குப் போராடுவது அர்த்தமற்றது எனக் கருத்துத் தெரிவித்துள்ளது. (கனடாவில் உள்ள பாரவூர்தி ஓட்டுனர்களில் கணிசமானதொரு தொகையினர் சீக்கிய மூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

போராட்டம் நடத்துபவர்கள் அரசாங்கம் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால், அரசாங்கம் அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந்த விடயம் ஒரு பொருளாதாரம் அல்லது உரிமைப் பிரச்சினை சம்பந்தப்பட்டது அல்ல, இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை, எனவே இதில் பேசுவதற்கு எதுவுமில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. உண்மையும் அதுதான். சாதாரண கனடியப் பொதுமக்கள் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக ஓடியோடி தடுப்பூசி செலுத்துகையில், இந்த விதண்டாவாதமான சிலர் மட்டும் அதை எதிர்ப்பதென்பது அவர்களுக்கு ஏதோ உள் நோக்கம் உள்ள காரணத்தால்தான் எனக் கருத இடமுண்டு

ஆர்ப்பாட்டக்காரர்களும் அரசாங்கமும் இதுவரை தத்தமது நிலைப்பாடுகளில் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நிற்கிறார்கள். வெற்றிக் கனியைப் பறிக்கப் போவது யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Tags: