நான்கு மாதங்களில் ஒரு மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்கள் வெளியேற்றம்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இப்படி வெளியேறும் மக்கள் அருகிலுள்ள பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்குச் செல்கின்றனர். கூடுதலான மக்கள் ஈரானுக்கே செல்கின்றனர். தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ஒருவர் கருத்துக் கூறுகையில் தினசரி 4,000 பேர் என்ற வகையில் ஆப்கான் மக்கள் ஈரானுக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். ஆப்கன் அரசாங்கத்தின் பேச்சாளரான பிலால் கறிமியும் (Bilal Karimi) மக்களின் இந்த வெளியேற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
துருக்கி நாட்டின் எல்லைகளின் ஊடாக ஈரானுக்குள் நுழையும் ஆப்கான் மக்கள் பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புகலிடம் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கான் மக்களின் இந்த முயற்சி பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ‘நியுயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகை, 2015 இல் ஏற்பட்டது போல மீண்டும் ஒரு அகதிகள் பிரச்சினை ஐரோப்பாவில் ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. 2015 இல் சுமார் ஒரு மில்லியன் மக்கள் – அதிகமானோர் சிரியாவைச் சேர்ந்தவர்கள் – ஐரோப்பாவுக்கு அடைக்கலம் கோரி படையெடுத்தனர். அவர்களில் பெரும்பாலானோரை ஜெர்மனி ஏற்றுக் கொண்டது.
ஆப்கானிஸ்தான் மக்கள் இவ்வாறு பெருமெடுப்பில் தமது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவும் அதன் மேற்கத்தைய கூட்டாளி நாடுகளும் அந்த நாடு மீது விதித்த பொருளாதாரத் தடையால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி. மற்றது, கடுமையான மத அடிப்படைவாதிகளான தலிபான்கள் மக்கள் மேல் மேற்கொள்ளும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும்.
இதற்கிடையில் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படக்ஸான் (Badakhshan) மாகாணத்தில் அம்மை நோய் காரணமாக 74 குழந்தைகள் இறந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணங்கள் உண்மைதான் என்பதை அந்த மாகாணத்தின் கலாச்சார செயலகத்தின் தகவல்துறை தலைவர் மாசுடின் அஃமடி (Maazudin Ahmadi) சீன செய்தி நிறுவனமான சின்குவாவிடம் (Xinhua) தெரிவித்துள்ளார். மலைப் பிரதேசமான அந்த மாகாணத்தின் பல மாவட்டங்களில் அம்மை நோய் வேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.