இலங்கை வேடுவர் இனமும் அவர்களின் மொழியும்
-போல்ராஜ் சந்திரமதி
தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவிற்கு பழமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் சைகைகள், உடல் அசைவுகள், ஓசைகள், நெருப்பு புகை என்பவற்றின் ஊடாக தமது கருத்துக்கள் எண்ணங்கள் மற்றும் தேவைகளை சக மனிதர்களோடு பரிமாறிக் கொண்டான். பின்னைய காலங்களில் மொழிகள் விரிவாகத் தொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்த போதிலும் பின்னர் எழுத்து வடிவம் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.
இதனடிப்படையில் தொடர்பாடல் என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒர் விடயமாகும். தற்போது இலங்கையில் வாழும் ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறையானது சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையிலிருந்து மாறுபட்டதைப் போன்று அவர்களது மொழியும் மாறுபட்டதாகவே காணப்படுகின்றது.
ஆரம்ப காலத்தில் மொழியியலாளர்கள் வேடுவ மொழியானது சிங்கள மொழியின் பேச்சு வழக்கு மொழியா? அல்லது வேறு மொழியா? என ஐயப்பட்டனர். 1959ஆம் ஆண்டு முறையான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது வேடுவ மொழியானது “கிரியோஸ்” மொழியென்றும்,இம் மொழியானது தம்பனவில் உள்ள பழைய மொழிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது எனவும் அறிந்தனர்.
மேலும் வேடுவ மொழியின் தாய்மொழி அறியப்படவில்லை, எனினும் சிங்கள மொழியின் தாய்மொழி இந்திய-ஆரிய மொழிகள் என அறியப்பட்டது. வேடுவ மொழியில் சொற்களின் வகையானது பெயர்ச்சொல், வினைச்சொல் மற்றும் உயர்திணை சொற்கள், பால் வித்தியாசத்தில் பயன்படுத்தப்பட்டன. சுய அடையாளம் தேடும் வேடுவர்கள் சிலருக்கு சில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் மட்டுமே தெரிந்தபோதும் இம்மொழியை செவ்வனே கற்றவர்களும் இருந்தனர். குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழி இல்லை ஆனால் ஆரிய மொழிகளின் சாயல் அண்மைக்காலமாக இவர்களது பேச்சில் கலந்துள்ளது. என மொழியிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக வேடுவ மொழி சார்ந்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ரதுகல பகுதியைச் சேர்ந்த வேடுவர்களின் மொழி பற்றிய வரலாறு. அதற்கான சான்றுகள், தற்காலத்தில் அவர்களின் மொழி பயன்பாடு எவ்வாறு உள்ளது மற்றும் பழங்குடியினர்களின் மொழியியல் தேவைகள் பற்றிய விபரங்களை நேர்காணலின் ஊடாக அறிய முடிந்தது.
அந்தவகையில் இலங்கையின் பிபிலை – ரதுகல பகுதியில் வசிக்கக்கூடிய வேடுவர்களின் தலைவர் சூதாவன் நீலத்தோ அவர்கள் வேடுவ மொழி பற்றிய பல விடயங்களை கூறினார்.
வேடுவ மொழி தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் தற்போது ரதுகல பகுதியில் வசிக்கும் இவர்களின் பரம்பரை தானிகல என்ற பிரதேசத்தில் வசித்ததாகவும் 1938ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே பிபிலை – ரதுகல பகுதியில் தம்மை பதிவு செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டார். தானிகல பிரதேசத்தில் வசிக்கும் போது அவர்களுக்கு வேடுவ மொழி மாத்திரமே தெரிந்தது. பின்னர் ரதுகல பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து அங்குள்ள. சிங்கள மக்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்த பின்னரே அவர்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்டதாகவும் அதற்கு முன்பு வேடுவ மொழியில் மாத்திரமே உரையாடியதாக குறிப்பிட்டார்.
ரதுகல பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்த போது அவ் வேடுவர்களையும் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பார்வையிட பல சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன்போது ரதுகல பிரதேசத்தில் குறித்த காலத்தில் கிராம சேவகராக பணிபுரிந்தவர் வேடுவர்களுடைய மொழியை கற்று அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுடனும், வேடுவர்களுடனும் உரையாடலை மேற்கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவியுள்ளார்.
இவ்வாறாக ரதுகல பிரதேசத்தில் வசிக்கும் வேடுவர்கள் சிங்கள மக்களுடன் உரையாடல்களை மேற்கொண்டு காலப்போக்கில் சிங்கள மொழியை கற்றுக் கொண்டுள்ளனர். மேலும் சாதாரண சிங்கள மக்களைப் போன்று தற்போது சரளமாக சிங்கள மொழியைப் பேசுகின்றனர். தொடர்ந்து அவர் தமது மொழி பற்றி கூறுகையில் ஆரம்பத்தில் வேடுவ மொழியை சிங்கள மொழியாகவே கருதினார்கள் ஆனால் இவ் வேடுவ மொழி சிங்கள மொழியின் சாயலோடு அதன் ஒலியியல், உருப்பியல் அடிப்படையில் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது.
மேலும் இவ் வேடுவ மொழியில் எழுத்துருக்கள் இல்லை சில குறியீடுகளை மாத்திரமே பயன்படுத்தி தமது மொழி சார்ந்த விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் வேடுவ மொழியில் இத்தனை சொற்கள் தான் உள்ளன என்ற அளவீடுகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
ரதுகல பிரதேசத்தில் வசிக்கும் வேடுவர்களின் வாழ்க்கை முறை சாதாரண மக்களின் வாழ்க்கை முறை போன்று தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.வீட்டு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், நீர் வசதி என்பவற்றோடு அவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பிரதேசத்தையும் குகை மற்றும் குடிசைகளை “ஆதிவாசி மக்கள் உரிமை மத்திய நிலையம்” என ரதுகல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் இடமாக மாற்றி அமைத்துள்ளனர். குறித்த இடத்தில் இவர்கள் பயன்படுத்திய பொருட்கள், கல்வெட்டுக்கள், அவர்களின் பரம்பரை மற்றும் உரிமைகள் பற்றிய நூல்கள், காட்சிப்படங்கள், வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள் மற்றும் மொழி பற்றிய ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ் ரதுகல பிரதேசத்தில் வசிக்கும் வேடுவர்களின் தலைவர் அவர்களின் மொழிப்பற்றி தொடர்ந்து பேசுகையில், எமது பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளில் தற்போது சிங்கள மொழியில் கல்வி கற்கின்றனர். ஆனால் பாடசாலை தவிர எமது பகுதிகளில் வேடுவ மொழியிலேயே உரையாடல்களை மேற்கொள்வர்.
எமது பிள்ளைகளுக்கு தொடர்ந்து எமது வேடுவ மொழியை கற்றுக் கொடுக்கின்றோம். அதுமட்டுமன்றி இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் அயல் பிரதேசங்களில் வசிக்கக்கூடிய சிங்கள மக்களுக்கும் எமது மொழியை பயிற்றுவிக்கின்றோம். எமது பிரச்சினையை தேவைகளை அனைவருக்கும், அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்துவதற்கும் சகமனிதர்களுடன் நல்லுறவை பேணி கொள்வதற்கும் சிங்கள மொழியை நாம் கற்றுக் கொண்டோம்.
மேலும் எமது இனத்தவரோடு வேடுவ மொழி மூலமே உரையாடல்களை மேற்கொள்வோம். அதற்கு காரணம் வரலாற்றில் மட்டுமே பேசப்படும் ஒரு மொழியாக எமது வேடுவ மொழி மறுவிச்செல்வதை நாங்கள் விரும்பவில்லை என தமது மொழி பற்றிய சில விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
இதனடிப்படையில் மொழியியலாளர்கள் கூறுவதைப் போன்று வேடுவ மொழி எனப்படும் “வெத்தா” எனும் மொழி சிங்கள மொழியின் சாயலுடன் காணப்படுகின்றதே அன்றி அது சிங்கள மொழி அல்ல. மேலும் இவ் வேடுவ மொழி ஒலியியல் மற்றும் உருப்பணியியல் அடிப்படையில் வேறுப்பட்டதாகவே காணப்படுகின்றது. சொற்களின் அளவுகள் எதுவுமின்றி குறியீடுகளாகவே பயன்படுத்தப்படுகின்றது. சாதாரண மனிதர்களைப் போன்று இவ் வேடுவ மக்களும் தமது மொழி மீது அதீத பற்று கொண்டு வாழ்கின்றனர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.