ஐரோப்பாவில் யுத்தத்தைத் திணிக்கும் நேட்டோ!
அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகளின் விமானக்குண்டு வீச்சுகளுடன் 1999 ஆம் ஆண்டு மாரச்சில் ஆரம்பமாகிய செர்பியா-கொசோவோ யுத்தத்திற்குப் பின்னர், ஐரோப்பாவில் 2013 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் ஒன்றினை மூட்டிவிட நேட்டோ நாடுகள் துடியாய்த் துடிக்கின்றன. ரஷ்யா-உக்ரைன் யுத்தம் என்பதை ரஷ்யாவிற்கும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய-நேட்டோ நாடுகளுக்குமான யுத்தமாக விஸ்தரித்து, ரஷ்யாவை யுத்தத்தில் தோற்கடிக்கலாமென அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உட்பட, மேலும் பல நேட்டோ நாடுகள் எண்ணுகின்றன. ஆனால் இந்த எண்ணத்திற்கு முழுமையாகத் துணைபோக ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுவரையில் மறுத்து வருகின்றன என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
1990-1991இல் சோவியத் ஒன்றியம் உடைவதற்கு முன்புவரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் உறுப்பு நாடாக அங்கம் வகித்தது. பின்னர் சோவியத் ஒன்றியம் உடைந்து 15 நாடுகளாக உருவெடுத்தபோது, உக்ரைன் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து 1991 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 24ந் திகதி தனிநாடாகியது. நிலப்பரப்பளவில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடாகிய உக்ரைன், தன்னுடைய எல்லைகளை ரஷ்யா, பெலருஸ், போலந்து, சிலோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, மோல்டோவா போன்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றது.
உக்ரைன் மொழி பேசுபவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக உக்ரைன் இருக்கின்ற போதிலும், கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக ரஷ்யாவோடு நெருக்கமான தொடர்பு கொண்ட நாடாகவும் உள்ளது. அத்தோடு ரஷ்ய மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதாக உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதி விளங்குகின்றது.. அதனால் அவர்கள் ரஷ்ய தேசிய உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
2010 ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட முன்னர் இவர் மூன்று தடவைகள் உக்ரைன் பிரதமராகவும் பதவி வகித்தவர். அவரது ஜனாதிபதி பதவிக் காலம் 2015 வரை இருந்த போதிலும், அவரது ஆட்சிக்கு எதிராக 4 மாத காலமாக உக்ரைனின் தலைநகரில் (Kyiv) ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 22ந் திகதி அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர் அவர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.
விக்டர் யனுகொவிச் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கியெறியப் பட்டமைக்கான காரணம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திடுவதில்லையென அவர் எடுத்த முடிவே என்று கூறப்படுகின்றது. எனினும், அவர் நேட்டோ-ஐரோப்பிய ஒன்றிய சிந்தாந்தங்களுக்கு தலையாட்டும் பொம்மையாக இருக்கவில்லை என்பதே முக்கியமான காரணமாகும். ஆர்ப்பாட்டக்காரர்களின் ‘தந்தையர் நாடு கட்சி’ என்ற பெயரிலான வலது சாரி மற்றும் நவ நாசிப் (Neo Nazi) பின்னணி கொண்ட கூட்டணிக்கு, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய-நேட்டோ நாடுகள் தங்களது முழு ஆதரவையும் வழங்கியிருந்தார்கள்.
விக்டர் யனுகொவிச் பதவியகற்றப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்திற்கு தனது படைகளை அனுப்பியது ரஷ்யா. கிரீமியா 1954 இல் சோவியத் ஒன்றியத்தால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டது. கிரீமியா நாடாளுமன்றம் உக்ரைன் ஆட்சி மாற்றத்தை தாங்கள் ஏற்கவில்லை என்றும் தாங்கள் உக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றியது. அத்துடன் கிரீமியா தேசத்து மக்களின் கருத்து அறிய 2014 மார்ச் 16 அன்று கிரீமியாவில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தியது. அந்த வாக்கெடுப்பில் 96.7% மக்கள் உக்ரைனிலிருந்து பிரிந்து போவதை ஆதரித்தார்கள்.
மேலும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லையையொட்டிய டொன்பாஸ் (Donbasss) பிராந்தியத்தில் லுகான்ஸ்க் (Lugansk), டொனெஸ்க் (Donetsk) குடியரசுகளாக பிரகடனப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்ய இனப்போராளிகளுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது . இதுதான் ரஷ்யா-உக்ரைன் போராக உருவெடுத்தது. ரஷ்ய இனப் போராளிகளுக்கும் உக்ரைன் இராணுவத்துக்கும் இடையில் இருபதுக்கும் மேற்பட்ட தடவைகள் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. இந்தப் போரில் இதுவரையில 14,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆண்டு ஏப்பரலில் நடைபெற்ற உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் நகைச்சுவை நடிகர் வொலோடிமைர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர்தான் இன்றைய நெருக்கடிக்கான காரணம். நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைந்துவிடத் துடிக்கும் இவரை, ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுப்பதற்கு தமக்கு ‘சரியான ஆள்’ கிடைத்துள்ளதாகக் கருதி மேற்குலகம் செயற்பட்டு வருகின்றது.
ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உக்ரைன் அமைந்திருப்பதால், அந்த இடத்தில் நேட்டோ படைகள் வருவதை ரஷ்யாவால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனால் உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யாவிலும் பெலருஸிலும் ரஷ்யப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா உக்ரைனிற்கு ஆயுதங்களை வழங்கி நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அத்தோடு ‘ரஷ்யா இதோ உடனடியாக உக்ரைனை ஆக்கிரமிக்கும்’ என தினமும் அறிவிப்பதோடு நின்று விடாது, உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமெனவும் அவர்கள் மிரட்டி வருகின்றார்கள்.
பனிப்போர் காலகட்டத்தின் பின்னர் ரஷ்யாவை இலக்கு வைத்தே நேட்டோவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைக்கப்படுகின்றன என்பது வெளிப்படையான உண்மை. ஐரோப்பிய நாடுகளுக்கு முதலாம், இரண்டாம் உலகப்போர்களின் அனுபவங்கள் நிறையவே உள்ளன. ரஷ்யாவுடனான மோதலால் நேரடிப் பாதிப்புக்குள்ளாவது ஐரோப்பிய நாடுகளே என்பதை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் நன்கு தெரிந்து கொண்டே மோதலைத் தூண்டி வருகிறார்கள். இதனை ஐரோப்பா புரிந்து நடந்தால் போதுமானது.
-ஆசிரியர் தலையங்கம், வானவில் இதழ் 134, மாசி 2022