உலகம் தாய்மொழி தினம் கொண்டாட வங்க மொழிதான் காரணம்!
–ச. பிரபாகரன்
இன்று பெப்ரவரி 21: உலக தாய்மொழி தினம்
வங்கதேசத்தில் தங்கள் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலும் மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பல்மொழிவழிக் கல்விக்காகவும் ஐ.நா-வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1999-ல் பெப்ரவரி 21-ஐ சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது. தாய்மொழியின் அவசியமும் அருமையும் நமக்கு நன்கு தெரியும். ஏனெனில், நம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காக நாம் பெரும் போராட்டம் நடத்தி மொழியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம்.
தாய்மொழிக்கான போர் !
மேற்கு பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக இருந்த உருது, 1948-ல் மொத்த நாட்டுக்குமான ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிழக்கு பாகிஸ்தானின் (இப்போதைய வங்கதேசம்) பெரும்பான்மையான மக்களால் வங்கமொழியே பேசப்பட்டது என்பதால், இந்த அறிவிப்பு பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதையடுத்து பெரிய போராட்டம் வெடித்தது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்களும் டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களும் 1952 பெப்ரவரி 21 அன்று நடத்திய போராட்டத்தின்போது, காவல் துறை துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இதில், பலர் உயிரிழந்தனர். இந்த நாளை நினைவுகூரும் வகையில் வங்கதேசம் ஆண்டுதோறும் மொழி இயக்க நாளைக் கொண்டாடியது. இந்த நாளை அங்கீகரிக்கும் வகையில் ஐ.நா-வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1999-ல் பெப்ரவரி 21-ஐ மொழிரீதியான பன்மைத்துவத்தைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது. இந்த நாள்தான் சர்வதேச தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மொழியினை ஏன் தாய்மொழி என்கிறோம்?
உலகில் தோன்றுகிற உயிருக்கு முதல் சொந்தம் தாய். தாய் வழியாகப் பிறக்கிற குழந்தை தாய் வழியாகவே உலகையும் புரிந்து கொள்கிறது. பசி வந்தால் அழுகிற குழந்தை தாயின் மாரோடு நெருக்கம் கொள்கிறது. கேட்கத் தொடங்குகிற போது தாயின் குரலே குழந்தை அறியும் முதல் மொழி. குழந்தைக்குத் தாயின் மீதுள்ள உரிமையைப் போலவே மொழியின் மீதும் உரிமை உள்ளது. இந்தியா போன்ற பல்வேறுபட்ட கலாசாரம் கொண்ட நாட்டில் மொழி என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. வாழ்வியலும் கூட.
மொழி புவியியல் அமைப்புகளுக்கேற்ப வடிவம் கொண்டிருக்கிறது. குழந்தை வளர்கிற சூழலில் அறிமுகமாகிற மொழியே அதன் புரிந்துகொள்கிற திறன் வளர உதவுகிறது. மொழியை அறிதல், மொழி வழி அறிதல் இரண்டும் கற்றலுக்கான இரு கூறுகள். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000 மொழிகள் பேசப்படுகின்றன. அதில் வெறும் 4 சதவீத மொழிகளைத்தான் உலக மக்கள் தொகையில் 97 சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர். மீதம் 96 சதவீத மொழிகளை வெறும் 3 சதவீத மக்களே பேசுகின்றனர். இந்த 3 சதவீதத்தில்தான் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாத பழங்குடி இன மொழிகள் அடக்கம். இதில் பெரும்பாலானவைக்கு வரி வடிவம் கிடையாது.
இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுவதாக People’s Linguistic Survey of India – 2012 அறிக்கை கூறுகிறது. 1961-ம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடும் போது 220 மொழிகள் 50 வருடங்களில் அழிவைச் சந்தித்திருக்கிறது. அதே நேரத்தில் இந்தி பேசுகிற மக்கள் தொகை 14 கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒரு மொழி மற்ற மொழிகளை உறிஞ்சிப் பெரிதாகிற தோற்றம் உருவாவதை தடுக்க இயலவில்லை. மொழிப் பாதுகாப்பின் அவசியம் குறித்து PLSI ஆய்வாளர் G.N.Devy இணையத்தில் அளித்திருக்கிற பேட்டியில், “மொழி சேகரித்திருக்கிற அறிவு முக்கியமானது. அடுத்த தலைமுறைக்கு அது முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். கலாசார மற்றும் பல்வேறுபட்ட நினைவுகளின் தொகுப்பாக மொழி திகழ்கிறது” என்கிறார்.
உலகில் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளில் தாய்மொழியே பிரதான கற்றல் மொழியாக உள்ளது. பின்லாந்து, கியூபா, ஜப்பான் எனக் கல்வியில் சிறந்த நாடுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
ஆட்சி மொழியும்… பயிற்று மொழியும்!
1937-ல் சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவிவகித்த ராஜாஜி, பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையை 1938 ஏப்ரல் 21 அன்று பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து திராவிடத் தலைவரான தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இந்த ஆணைக்கு எதிராகவும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். 1939-ல் இந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடராஜன், தாளமுத்து ஆகிய இருவர் உயிரை இழந்தனர். பலர், தாக்குதலுக்குள்ளாகினர். இத்தகைய போராட்டத்தின் பயனாக, சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
நமது தாய்மொழியாம் தமிழைக் காக்க அடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965-ல் தொடங்கி நடைபெற்றது. இந்தப் போராட்டம் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே விளங்கும் என்பதை எதிர்த்தது. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சிமொழியாக இந்தியுடன் ஆங்கிலம் இருக்கும் என்றும், அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையொட்டியே 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஓராண்டுக்கும் முன்பே, 1964 ஜனவரி 25 அன்றே சின்னசாமி என்னும் மொழிப்போர் வீரர் இந்தியின் ஆதிக்கத்தை அகற்றக் கோரி திருச்சியில் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதேபோல், மயிலாடுதுறை கல்லூரி மாணவர் சாரங்கபாணியும் தாய்மொழி தமிழுக்காகத் தன்னுயிரைத் தந்தார். இதுபோக, இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1968-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது, “இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படும்” என உறுதியளித்தார். இதனாலேயே அடுத்து 1969-ல் முதல்வர் பொறுப்புக்கு வந்த மு.கருணாநிதி, “கல்லூரிக் கல்விவரை தமிழ்ப் பயிற்று மொழி” என்று அறிவித்தார். கோவை அரசுக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ்ப் பயிற்று மொழி என்பது முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது. இன்னும் உலகில் 40 சதவிகித மக்கள் தாங்கள் பேசும் – புரிந்துகொள்ளும் தாய்மொழியில் கல்வி கற்க இயலாத நிலையிலேயே உள்ளனர் என்பதே உண்மை.
மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல, அது பண்பாட்டு அடையாளம். உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் சுமார் 6,000 மொழிகளிலும், 43 சதவிகித மொழிகள் அழியும் நிலையிலுள்ளன. இந்த மொழிகளில் பலவற்றைப் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் 1,000-க்குள்ளேயே இருக்கும். சில நூறு மொழிகள் மாத்திரமே பொதுமக்கள் பயன்பாட்டிலும் கல்வியைப் பயிற்றுவிப்பதிலும் வழக்கிலுள்ளன. அதிலும் 100-க்கும் குறைவான மொழிகளே நமது டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் நமது மொழி குறித்து நமக்கு எவ்வளவு கவனம் தேவை என்பதையே இந்த நாளில் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.