சீனாவின் வளர்ச்சியும் இலங்கை – சீன உறவுகளும்
-சங்கர சிவன்

‘கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சீன மக்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். அதில் ஒன்று, சீனாவிலிருந்து வறுமையை ஒழித்துக்கட்டியது. இரண்டாவது விடயம் புதிய பட்டுப்பாதை பொருளாதாரத் திட்டம் (தடம் மற்றும் பாதை முன்னெடுப்பு – Belt and Road Initiative). சீனா 800 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது. நூற்றுக்கும் அதிக நாடுகள் தடம் மற்றும் பாதை முன்னெடுப்பில் இணைந்துள்ளன.’
இவ்வாறு கூறியிருக்கிறார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டதின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவருமான டியு குணசேகர. இது சம்பந்தமான நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் (Nelum Pokuna Theatre) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீன, ரஸ்ய, வியட்நாம், கியூப தூதுவர்களும் கலந்து கொண்டதுடன், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகத்தின் பல்வேறு மட்டப் பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அங்கு பேசிய டியு குணசேகர மேலும் கூறியதாவது:
இந்த இராஜதந்திர உறவுகள் ஏற்பட்ட 65 ஆவது ஆண்டு தின சிறப்பான நிகழ்வையொட்டி நான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீ ஜின்பிங் (Xi Jin Ping) அவர்களுக்கும் இதர தோழர்களுக்கும் தோழமை பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை – சீன நட்புறவு உள்நாட்டு ரீதியிலும், பிராந்திய ரீதியிலும், பூகோள ரீதியிலும் முன்னெப்போதையையும் விட இன்று அதிக முக்கியத்துவம் உள்ளதாக இருக்கின்றது. காரணம் என்ன?
முதலாவதாக, 15 ஆம் நூற்றாண்டின் பின்னர், 500 ஆண்டுகள் கழித்து, ஆசியாவுக்கான முதலாவது நூற்றாண்டில் ஆசியா உலகப் பொருளாதாரத்தின் காவலனாக மாறியுள்ளது.
இரண்டாவதாக, ஆசியா முன்னெப்போதையையும் விட கூடுதலான ஒற்றுமையுள்ளதாகத் திகழ்கிறது.
மூன்றாவதாக, ஆப்கனிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர் ஆசியா கூடுதலான சமாதானம் உள்ளதாக, குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் மத்திய கிழக்கு மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளதாக அமைந்துள்ளது.
நான்காவதாக, சீனா இன்று ஆசிய பொருளாதார வளர்ச்சியின் இயங்கு சக்தியாக (Engine) மாறியுள்ளது.
20 ஆம் நூற்றாண்டு இரண்டு உலக யுத்தங்கள், பல தேசிய விடுதலைப் போராட்டங்கள், புதிய சுதந்திர அரசுகளின் பிறப்பு, புதிய குடியரசுகளின் தோற்றம் என்பனவற்றோடு, ஏகாதிபத்தியவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பல இராணுவச் சதிகள், சூழ்ச்சிகள், இன – மத குழப்பங்கள் என்பனவற்றின் சாட்சியாகவும் இருக்கின்றது.

நாங்கள் நல்லதொரு எதிர்காலத்துக்கான நம்பிக்கைகள் அபிலாசைகளுடன் 21 ஆம் நூற்றாண்டுக்குள் பிரவேசித்துள்ளோம். உலகப் பொருளாதாரத்தின் இரண்டாவது பெரும் சக்தியாக சீனா உருவாகியதின் மூலம் புதியதொரு சகாப்தம் தோன்றியுள்ளது.
திரும்பிப் பார்க்கையில், 1911 இல் சீனாவில் நடைபெற்ற முதலாவது ஜனநாயகப் புரட்சியுடன் ஆசியாவில் வரலாற்று ரீதியான மாற்றங்கள் ஆரம்பமாகின. அந்தப் புரட்சியில் சீனாவின் நிலப்பிரபுத்துவ முறை ஒழித்துக் கட்டப்பட்டது. ஆனால் ஒரு புதிய குடியரசு அரசியல் சாசனம் உருவாவதை நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் தடுத்து நின்றன. எனவே, இளமைப் பருவத்தில் இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாவது ஜனநாயகப் புரட்சியை நடாத்தும் கடமையை ஏற்று அதை 1949 இல் பூர்த்தி செய்தது.
சீனப் புரட்சி ஆசியாவின் இதர மக்களுக்கு பலத்தையும் உணர்வையும் அளித்தது. 1949 முதல் 1975 வரை, அதாவது வியட்நாம் போர் முடியும் வரை, 28 ஆண்டுகள் சீனா உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டு இருந்தது.
ஆசியாவில் தேசிய மற்றும் சமூக விடுதலை இலட்சியத்துக்கு சீன மக்கள் வழங்கிய பங்களிப்பு சீனத் தலைமை மீது ஆழ்ந்த மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா புரட்சியின் பின்னர் அழிவிலிருந்து மீண்டெழுந்தது. 1976 ஆம் ஆண்டில்தான் அது தனது ஐ.நா அங்கத்துவத்தைக் கூட பெற முடிந்தது.
இன்றைய உலகின் பொருளாதாரத்தின் மீதான கோளமயமாக்கம் மற்றும் நவ தாராளவாதம் என்பனவற்றின் போக்கிற்கு ஏற்ப சீனா புதிய பொருளாதார தந்திரோபாயத்தின் மீது தனது பார்வையைச் செலுத்தியுள்ளது. டெங்சியாவோ பிங் (Dengxiao Ping) அவர்களின் தாக்கமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் புதிய தந்திரோபாயமாக முன்னெடுக்கப்பட்ட திறந்து விடுதல் மற்றும் சீர்திருத்தங்கள் சீனாவுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
சீனா உலகப் பொருளாதாரமாக வளர்ந்ததிற்கு 21 ஆம் நூற்றாண்டு சாட்சியமாக இருக்கிறது. 2010 ஆம் ஆண்டின் பின்னர் சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பன்முக வளர்ச்சி அதை உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார சக்தியாக மாற்றியுள்ளது.
கொவிட் – 19 காரணமாக உலகப் பொருளாதாரம் எதிர்மறையான தாக்கங்களுக்கு உள்ளான போதும், சீனா 19 றில்லியன் டொலர்களைக் கொண்ட பொருளாதாரமாக இருக்கின்றது. 2000 ஆம் ஆண்டில் சகாப்தத்தின் ஆரம்பத்தின் போது அதன் பொருளாதாரம் 7 றில்லியன் டொலர்கள் கொண்டதாக மட்டுமே இருந்தது. அது இப்பொழுது பொருளாதாரத்தின் எல்லா முனைகளிலும் துடிப்புடன் முன்னேறி வருகின்றது. சீனாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் உள்ளது.
மனித வரலாற்றின் மிகப் பெரும் இம் மாற்றங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சி ஜிங் பிங் தலைமையில் நிகழ்கின்றன.
சீனா மிகப் பெரும் ஏற்றுமதியாளராகவும், இறக்குமதியாளராகவும், உணவு உற்பத்தியாளராகவும், அந்தியச் செலாவணி கையிருப்பாளராகவும் இருப்பதுடன், 500 மில்லியன் மத்தியதர வர்க்கத்துடன் கூடிய உலகப் பொருளாதாரத்தின் தீர்க்கமிக்க மிகப்பெரும் சந்தையையும் கொண்டிருக்கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடி எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் சீன பொருளியலாளர்கள் புதிய வழிமுறைகளையும் பொறி முறைகளையும் கொண்டிருக்கின்றனர். கொவிட் – 19 காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சமாளிக்கும் வகையில் சீன பொருளியலாளர்கள் ஏற்றுமதி சந்தையின் மேலதிகத் தொகையை உள்நாட்டுச் சந்தைக்கு மாற்றியதன் மூலம் இரட்டை வழி பொறிமுறைகளை உருவாக்கியுள்ளனர்.
சீனாவின் பொருளாதாரச் சந்தை ஒரு தீர்க்கமான பாத்திரம் வகிக்கும் என கார்ல் மார்க்ஸ் எதிர்வு கூறினார். அதேபோல, சோசலிச மாற்றத்துக்கு சீனப் புரட்சியின் அவசியம் குறித்து தனது இறுதியான தத்துவார்த்தப் படைப்பில் விலாடிமிர் லெனின் வலியுறுத்திக் கூறியுள்ளார். இவை இலங்கை – சீன நட்புறவின் முக்கியத்துவத்தை இன்று உணர்த்தி நிற்கின்றன. சமாதானம் மற்றும் சமாதான சகஜீவனம் போன்ற பாண்டுங் மாநாட்டுக் (Bandung Conference) கோட்பாடுகள் இன்று மேலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
புதிய சீனாவின் யதார்த்தத்தை எல்லோரும் அங்கீகரிப்பதால்தான் இன்று இந்த நிகழ்வில் சகல அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சீனப் புரட்சி நடந்து முடிந்த கையோடு அப்புரட்சியின் தலைவர்களை 1950 இல் முதலில் சந்தித்த தலைவர்களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவும் ஒருவர். பிலிப் குணவர்த்தன தலைமையிலான முதலாவது அரசியல் கட்சித் தூதுக்குழ அங்கு சென்றது. புதிய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது அமைச்சர் டட்லி சேனநாயக்க அரசாங்கத்தில் வியாபாரம் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ஆர்.ஜீ.சேனநாயக்க ஆகும்.

இலங்கை – சீன நட்புறவுச் சங்கம், ஆபிரிக்க – ஆசிய ஒருமைப்பாட்டு இயக்கம், இலங்கை சமாதானப் பேரவை என்பனவற்றை உருவாக்கும் ஒரு கருவியாக ஒரு தேரரே செயல்பட்டார். தன்னை வெளிப்படுத்த விரும்பாத அந்த ஆளுமையே இறப்பர் – அரிசி ஒப்பந்தம் உருவாவதற்கும் பின்னணியில் இருந்து செயல்பட்டார்.
வியாபாரம் மற்றும் வர்த்தக அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரபல்யம் மிக்க பொருளியலாளர் பேராசிரியர் ஜெயந்த கெலகம அவர்களே சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதலாவது இலங்கை அதிகாரியாவார்.
திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களே சீனாவுக்கு முதலாவது விஜயத்தை மேற்கொண்ட அரச தலைவராவார்.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த சூரிய மல் இயக்கத்தின் (Sooriya Mal Movement) முன்னோடியான வில்மட் பெரேரா அவர்களே புதிய மக்கள் சீனக் குடியரசுக்கான முதலாவது இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
சீனாவுடனான சகோதரத்துவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கு முன் கையெடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் நான் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.