கிழக்கு ஐரோப்பாவிலிருந்து தென் சீனக் கடல் வரை நீளும் ‘ஒக்டோபஸ்’ கரங்கள்
-சுஜித் அச்சுக்குட்டன்
உலக அரசியலின் தற்போதைய பரபரப்பு பிரச்சனையாக உக்ரைன்- ரஷ்யா விவகாரம் உருவாக்கி ஊதி விடப்பட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கப் போகிறது என்றும் அதை அமெரிக்கா எதிர்க்கிறது என்றும் இதன் விளைவாக மூன்றாம் உலகப் போர் மூளும் என்றும் உலக முதலாளித்துவ ஊடகங்கள் தங்களது விருப்பங்களை செய்தியாக்கி வெளியிட்டு வருகின்றன. ஆனால், முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் அமெரிக்கா மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக, நாசகர நேட்டோ ராணுவக் கூட்டணியில் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளில் ஒன்றான உக்ரைனை இணைப்பதற்கும், அதன்மூலம் உக்ரைனை ஆக்கிரமித்து, அதனைப் பயன்படுத்தி படைகளை குவித்து ரஷ்யாவை முற்று கையிடுவது என்ற மிகப் பெரும் சூழ்ச்சித் திட்டத்தை அமெரிக்கா அரங்கேற்ற முனைவதன் விளைவாக ஏற்பட்டிருப்பதே இந்த பதற்றம் என்பதை இந்த உலகுக்கு சொல்லாமல் மறைக்கின்றன ஊடகங்கள். கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பதற்றம் முதல் தென் சீனக் கடல் வரையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எனும் ஆக்டோபஸின் கொடிய கரங்கள் நீள்கின்றன.
தென் சீனக் கடலில்…
இது இப்படியிருக்க வாஷிங்டனிலிருந்து 13,800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென் சீனக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடு எந்த சந்தர்ப்பத்திலும் அங்கும் ஆயுத மோதல் வெடிக்கும் அபாயத்தை உருவாக்கி வருகிறது. பசிபிக் பகுதி யில் தனது தளங்களிலிருந்து நீண்ட தூர ஏவுகணை களை சீனாவுக்கு எதிராக தயார் செய்து வருவதாக வும் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் கொண்ட போர் விமா னங்கள் மற்றும் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புக ளுடன் கூடிய அழிப்பான் (Destroyer) வகை கப்பல்கள் உள்ளடக்கிய தொழில் முறைத் தாக்குதல் குழுக்கள் தென்சீனகடல் பகுதியில் அடிக்கடி நுழைவதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் ஆப்கனில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறு வது; தென்சீனக் கடல் பிரச்சனையில் அமெரிக்க நலன் சார்ந்த முயற்சிகளை புதிய கோணத்தில் புதுப் பிப்பது என்னும் இரண்டு மிக முக்கிய அரசியல் முடிவு களை எடுத்திருந்தது. தலிபான் கைகளில் மீண்டும் ஆப்கனை ஒப்படைக்கும் முடிவு அமெரிக்காவின் தோல்வி என்றாலும், ஆசியாவில் ஒரு புதிய தலை வலியை உருவாக்கிவிட்டு தென்சீனக் கடல் அரசியலில் சீனாவிற்கு எதிராக தென் கிழக்கு ஆசிய நாடுகளை கலக தொலை நோக்கில் ஒருங்கிணைப்பது தான் அமெரிக்காவின் முக்கிய திட்டமாக உள்ளது.
சீனாவின் பிரம்மாண்ட வளர்ச்சி
தென் சீனகடலில் அமெரிக்காவின் இந்த அரசியல் கலகம் அடிப்படையில் நான்கு நோக்கங்களை கொண் டது. ஒன்று, மக்கள் சீனத்தின் சமூக-பொருளாதார-ராணுவ மற்றும் தொழில்துறை வளர்ச்சி அமெரிக்கா விற்கு அச்சத்தை ஏற்படுத்தி் வருகிறது. சீனத்தின் வாங்கும் திறன் சமநிலை (Purchasing power parity)- விகிதங்களைப் பயன்படுத்தி சர்வதேச டாலர்களுக்கு மாற்றப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.27 டிரில்லியன் டாலராக 2020-இன் மதிப்பீட்டில் உலகில் முதல் இடத்தில் இருந்தது. இதன் அடுத்தடுத்த ஆண்டு களில் மேலும் முன்னேறி 2030 ஆம் ஆண்டில் 36.112 டிரில்லியன் டாலராகவும் 2050 ஆம் ஆண்டில் 61.079 டிரில்லியன் டாலராகவும் (2014 அடிப்படை ஆண்டில்) 246 சதவீதம் (அதாவது 3 மடங்கு வளர்ச்சி) வளர்ச்சி யடையும். (ஆதாரம்:ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்) அதே சமயத்தில் அமெரிக்கா உள்பட முதல் பத்து நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மைனஸ் தேய்மானத்தில் (அமெரிக்கா – மைனஸ் 3.6 சதவீதம்) பின்னுக்கு சென்று கொண்டிருக்கும் நிலை யில் சீனத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 2.3 சதவீதமாக முன்னேற்றத்தில் இருந்தது. (ஆதாரம் : உலக வங்கி 2020) சீனா அடுத்த சில பத்தாண்டுகளில் உலகின் சகல துறைகளிலும் வல்லமை கொண்ட நாடாக மாறும் என்பதால் சீனாவின் முன்னேற்றம் சோசலிசத்தின் வெற்றியாக உலக நாடுகளுக்கு உத்வேகமளிக்கக் கூடும் என்ற அச்சத்தில் சீன வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் சூழ்ச்சிகளில் ஒன்றாக சீன எரிசக்தி இறக்கு மதியில் 80 சதவீதமும் கொண்ட தென் சீனக் கடல் பிராந்தியத்தின் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இரண்டாவதாக உலகளாவிய வர்த்தக மதிப்பில் 70 சதவீதம் இக்கடல் வழியாக கொண்டு செல்லப்படு வதுடன் ஏராளமான எரிபொருள் படுகை வளம் கொண்ட மிகப்பெரிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் வியட் நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடு களின் அரசியலை சீனத்திற்கு எதிராக வடிவமைக்க வும் இதன் தொடர்ச்சியாக ஆசிய பசிபிக், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களில் சீனத்திற்கு எதிராக தனது பொருளாதார ராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வும் தென் சீனக் கடல் பிரச்சனையை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. மூன்றாவதாக கண்டம் தாண்டிய 3,075 கிமீ நீள முள்ள உலகின் முதல் இரயில் பாதை (1863-1869) அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. கிழக்கு அமெரிக்க ரயில்வே நெட்வொர்க் மற்றும் சான் பிரான் சிஸ்கோ விரிகுடாவை இணைக்கும் மிப்பெரும் ரயில் பாதையை 20000 சீனத் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி உருவாக்கினர். இத்தொழிலாளர்கள் அமெரிக்கா விற்கு வந்த சிறிது காலத்திலேயே சீன இன வெறுப்பு உணர்வு (சைனோபோபியா) அமெரிக்காவில் உருவாக் கப்பட்டது. சீனர்களின் கடும் உழைப்பின் சி்ன்னமாக எழுந்த உலக சாதனையை அமெரிக்க அறிவாளிகள் வரலாற்றிலிருந்து ஓரம் கட்டினர். கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய மக்களின் மஞ்சள் வண்ண இனஉருவ கத்தை சீன இருத்தலியல் ஆபத்தாக (மஞ்சள் அபாயம் – Yellow Peril) சித்தரிக்கும் உளவியல் தாக்குதல் பிரச்சாரத்தை அமெரிக்கா தொடர்ந்து நடத்தியது. (கோவிட் 19 சீன வைரஸ் ஆயுதம்தான் என்று கூறியதும் இதன் தொடர்ச்சிதான்). 19வது நுற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் சீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சீனர்களின் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் சூழ்ச்சி
அதே வேளை சோவியத் புரட்சியைத் தொடர்ந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1921 இல் பிறந்தது. தோழர் மாவோ தலைமையிலான சீனப்புரட்சி 1949-இல் வெற்றி யடையும் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தேசியவாத சியாங்கேஷேக் ஆட்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. சீனாவின் வெள்ளை அறிக்கை வெளியீடு (U.S. Publication of china white paper-12.5.1949) என்ற அமெரிக்க ஆவ ணத்தின் பக்கம் 44, சீனப் புரட்சிக்கு முந்தைய ஐந்து ஆண்டுகால அமெரிக்க நடவடிக்கைகளைக் கூறுகிறது. அந்த ஆவணம் சீனாவை சோவியத் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்பு தளமாக மாற்ற வேண்டும் என்றும் இதற்கு மூன்று வழிகள் அமெரிக்காவின் முன்னே இருந்தன என்றும் கூறியது. முதலாவதாக, சீன உள் விவகாரங்க ளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது; இரண்டா வதாக பெருமளவு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது; மூன்றாவதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சியாங்கேஷேக்கின் கொமிங்டாங் கட்சியும் இணைந்த ஒரு கூட்டணி அரசை தோற்றுவிப்பது. சீனாவில் உள்குழப்பத்தை உருவாக்க இதில் ஏதேனும் ஒரு வழியை அமெரிக்கா தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்த ஆவணம் கூறியது. ஆனால் தோழர் மாவோ தலைமையில் சீனப் புரட்சி மகத்தான வெற்றி பெற்று 1.10.1949 அன்று சீன மக்கள் குடியரசு உருவானதோடு மார்க்சிய- லெனினிய பாதையை சுவீகரித்து கொண்டது. இது ஆசியாவில் அமெரிக்காவிற்கு கிடைத்த சம்மட்டி அடியாகும். இப்படி 20ஆம் நூற்றாண்டில் துவங்கிய சோவி யத்-சீன கம்யூனிச சிவப்பு எதிர்ப்புப் பித்தம் தலைக் கேறிய அமெரிக்கா, 21ஆம் நூற்றாண்டில் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தி்ல் ஆயுத மோதலை உருவாக்கி சீனத்தின் சர்வதேச வர்த்தகத்தை முடக்க தென்சீனக் கடல் பிராந்தியத்தை தனது முதன்மை இலக்காக அமெரிக்கா மாற்றி உள்ளது.
நான்காவதாக கோவிட்19 பெருந்தொற்றில் சீன வெறுப்புணர்வை விசிறிவிட்டு நடத்தப்பட்ட வைரஸ் பூச்சாண்டி பிரச்சாரம் உலக சுகாதார அமைப்பு கண்டித்ததால் படுதோல்வியடைந்தது. கோவிட் 19 மரணங்கள் வெறும் 4650-க்குள் கட்டுப்படுத்தப்பட்ட தோடு அதன் இழப்புகளிலிருந்து ஓராண்டிற்குள் சீனம் தன்னை புதுப்பித்துக் கொண்டது. சீனத்தின் கோடிக் கணக்கான டோஸ் தடுப்பூசிகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் சென்றன. இவை அனைத்தும் சீனா விற்கு சர்வதேச அரங்கில் மதிப்பை ஏற்படுத்தின. பேசித் தீர்க்க வேண்டிய தென்சீனக் கடல் கடல்சார் உரிமை கோரலை அமெரிக்கா சிக்கலாக்கி தீவிரப்படுத்து வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கமலாவின் கனவு
இத்தகைய சர்வதேச அரசியல் பின்னணியில் ஆப்கானிஸ்தான் குழப்பங்களுக்கு மத்தியில் 22.8.2021 அன்று ஒருவார கால தென்கிழக்கு ஆசியப் பயணத்தை தொடங்கிய அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், சிங்கப்பூரில் 24.8.2021 அன்று பேசும் போது “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை பெய்ஜிங் மதிப்பதில்லை. தென்சீனக்கடல் நாடுகளின் இறையாண்மையை சீனா அச்சுறுத்துகிறது” என்று கூறினார். இதற்கு பதிலளித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் பென்பின், மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு பொறுப்பேற்காமல் ஆப்கானிஸ்தா னில் தன்னிச்சையாக அமெரிக்கா இராணுவத் தலை யீட்டை நடத்தலாம்; எப்போது ஆப்கனுக்குள் நுழைய வேண்டும். எப்போது வெளியேற வேண்டும் என்பதை தன்னிச்சையாக முடிவு செய்யலாம்; உலகில் அமெ ரிக்கா முதன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்ற நாடுகளை அவமதிக்கலாம், அடக்கலாம், வற் புறுத்தலாம், கொடுமைப்படுத்தலாம்; ஆப்கானில் இன்று நடப்பவை எல்லாம் அமெரிக்காவின் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கின் வியாக்கியா னமே. விதிகள் மற்றும் “ஒழுங்கு” ஆகியவற்றை மேற்கோள் காட்டி தனது சுயநலம் மற்றும் மேலாதிக்க நடவடிக்கைகளை பாதுகாக்க எப்போதும் அமெரிக்கா தான் முயற்சிக்கிறது” என்று சரமாரியாக பதிலடி கொடுத்தார்.
வியட்நாம் பாதுகாப்புக்கு இவர் உதவுவாராம்!
1980-களில் இடதுசாரி முற்போக்கு ஆப்கன் ஜனநாயக குடியரசை ஒழித்துக் கட்டுவதற்கு ஆப்கன் முஜாஹிதீன்களுக்கு அமெரிக்கா பில்லியன்கள் மடங்கு டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை மிகப்பெரும் சதித்திட்டத்தின் கீழ் (Operation Cyclone) பாகிஸ்தான் மூலம் அளித்தது. இந்த சதி வேலையில் சிஐஏ-வும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ யும் இணைந்து வேலைசெய்தன. அதே சமயத்தில் அல்கொய்தா பின்லேடனுக்கு துவக்க ஆயதப் பயிற்சி கள் வழங்கியது அமெரிக்க சிறப்புப் படையின் கமோண்டாவும் சிஐஏ ஏஜெண்டுமான அலி முகமது என்பதும் பின்னாட்களில் அம்பலமாயின.
1955 இல் துவங்கிய – வியட்நாம் போர் 1975 இல் முடிவுக்கு வந்தபோது 19 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த அந்த அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு லட்சோப லட்சம் வியட்நாம் மக்கள் மட்டுமின்றி கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வளைகுடா, தென் சீன கடல் தீவுகளின் அப்பாவி மக்கள் மாண்டுபோயினர். கோடிக்கணக்கா னோர் நிரந்தர ஊனம் அடைந்தனர். மனிதகுல வரலாறு காணாத இந்த அமெரிக்க அக்கிரமத்திற்கு வியட்நாம் கம்யூனிஸ்ட்டுகள், அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்டு ஆர் போர்டுக்கு அவமானகரமான தோல்வியை 29.4.1975-இல் தண்டனையாக வழங்கினர். 29.4.1975 அன்று சைகோன் மாநகரம் 22 ஜியா லாங் தெருவில் இருந்த அமெரிக்க தூதரகத்தின் மேல் தளத்தில் வந்திறங்கிய கடைசி அமெரிக்க ஹெலிகாப்டரில் எஞ்சிய அமெரிக்கர்களில் அமெரிக்க தூதர் கிரகாம் மார்ட்டினும் நடுநடுங்கியவாறே அச்சத்துடன் இருந்தார். வியட்நாமிலிருந்து மட்டுமல்ல, தென்கிழக்காசியா விலிருந்தும் தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த அமெரிக்க பயில்வான்கள் ஓட்டம் பிடித்தனர்.
அதே வியட்நாமில் 25-8-2021 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். “சுதந்திர மான திறந்த பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவ தற்கு அமெரிக்கா எந்த ஒரு உயர்மட்ட பாதுகாப்பு ஒத்து ழைப்பிற்கும் தயார். வலுவான, வளமையான சுதந்திர வியட்நாமை உருவாக்கவும் தயார்” என வரலாற்றுக் கூச்சமின்றி கூறினார். 1940-களில் சோவியத்திற்கு எதிராக சீனாவை பயன்படுத்த நினைத்ததைப் போல சோசலிச வியட் நாமையும் சீனத்திற்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்தது என்பதையே 25.8.2021 கமலா வின் பேச்சு அம்பலப்படுத்தியது. ஜோ பைடன் மற்றும் கமலாவின் ஆசை பைத்தியங் கள் கண்ட கனவாகவே (Lunacy Dream) எதிர் காலத்தில் மாறும் என்பதைத்தவிர வேறு என்ன கூற முடியும்?
மாபெரும் தேசத்தின் மிகப்பெரும் கடமை
தென்கிழக்கு ஆசிய பிராந்திய பிரச்சனைகளில் வரலாற்று ரீதியாக இந்தியா பராமரித்து வந்த நடு நிலையை தடம் புரளச் செய்வதற்காக உருவாக்கப் பட்டதுதான் 1992-இல் அமெரிக்காவால் உருவாக்கப் பட்ட மலபார் கடற்படை பயிற்சிகளாகும். துவக்கத்தில் இந்திய கடற்படை மாலுமிகளுக்கு நல்ல அனுபவ பரிவர்த்தனையாக இப்பயிற்சிகள் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் பங்கேற்புடன் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நேட்டோ பதிப்பாக (Nato version) மலபார் கடற்படை பயிற்சிகள் இன்று உருமாறிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி ஓய்வு பெற்ற புனே தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் அதிகாரியும் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சியாளராகவும் இருந்த ஒருவர் “1971 இந்தோ-பாகிஸ்தான் சண்டையின்போது இந்தி யாவை அமெரிக்கா மிரட்டியது உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு எப்போதும் ஆசியாவில் அமைதி யின்மைதான், குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா – இந்தியா விற்கிடையில் வேண்டும்.
இந்தியாவைப் பற்றி அமெரிக்க நிர்வாகங்களின் மூளையில் இருப்பது என்ன என்பதை நிக்சன், கிஸ்ஸிங்கர் இருவரின் 10.12.1971 அன்றைய தனிப் பட்ட உரையாடலைப் படித்தால் – கேட்டால் தெரியும். இப்போதும்கூட அமெரிக்க நிர்வாகிகளுக்கு இதே புத்தி தான்” என்று கூறுகிறார். மேலும் அவர் இந்தியா வை மிரட்டும் வகையில் தனது எல்லையில் தனது படை யணிகளை பெயரளவிற்கு ஏதாவது அசையச் செய்யும்படி 1971 டிசம்பர் முதல் வாரத்தில் சீனாவை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால் 1962-இல் நம்மோடு மோதிய சீனா அதை உதாசீனம் செய்தது என்று கூறிய அவர் அமெரிக்காவுட னான எந்தப் பயிற்சியும் நம்பத் தகுந்தது அல்ல என்று உறுதியாக கூறுகிறார். “நம்மை அவர்கள் ரகசியமாக கண்காணிக்கவும் இந்திய ராணுவ பயிற்சித் திட்ட முறைகளை அளவிடுவ தற்கும் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் அமெரிக்கா வடிவ மைத்த மலபார் பயிற்சி, குவார்ட் உச்சிமாநாடு என்ப தெல்லாம் தென் கிழக்காசிய இந்தோ – பசிபிக் பிராந்தி யத்தில் சீனத்திற்கெதிரான தனது ஏகபோக மேலாதிக் கத்திற்கான தொலைநோக்கு ஏற்பாடுகள் என்பது மட்டு மின்றி தனக்கு கோஷ்டிசேர்க்கும் தந்திரமுமாகும்” என்றும் கூறுகிறார்.
21ஆம் நூற்றாண்டில் துவக்க பத்தாண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடுமையான பொருளா தாரப் பாதிப்பில் சிக்கியுள்ளது. எனவே தன்னை சர்வதேச தாதாவாக நிலை நிறுத்திக்கொள்ள அமெரிக்கா வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்கிறது என்பதையே டொனால்டு டிரம்ப் – ஜோ பைடன் – கமலா ஹாரிஸின் சமீபத்திய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. ஆப்கனிலிருந்து தனது படைகளை சுருக்கி தென் சீனக்கடலுக்குள் பாய்ச்சும் அமெரிக்க ஆக்டோபஸின் நாசகர கரங்களை தென்கிழக்காசிய கடல்களில் வெட்டி எறிவதும் தெற்காசிய நாடுகள் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைப்பது மட்டுமே வளர்ச்சி – அமைதிக் கான மனிதகுல கடமையாக இருக்கும்.
-தீக்கதிர்
2022.02.23