உக்ரேன் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு

க்ரேன் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு என்ன? என சீன வெளிவிவகார அமைச்சின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சில செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சு பேச்சாளப் பெண்மணி ஹூவா சுன்ஜிங் (Hua Chunying) சம்பந்தப்பட்ட தரப்புகள் அமைதியைக் கடைப்பிடித்து, தம்முடைய வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எப்போதும் சீனாவின் நிலைப்பாடு என விளக்கிக் கூறினார்.

அமெரிக்காவும் அதன் மேற்கத்தைய கூட்டாளி நாடுகளும் ரஸ்யா மீது விதித்துள்ள பொருளாதார மற்றும் தடைகள் பற்றி தமது கருத்தை வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சு பேச்சாளர்,

‘இந்த தடைகள் சட்ட விரோதமானதும் ஒரு தலைப்பட்சமானவையும் ஆகும். தடைகள் மூலம் பிரச்சினைகளை அடிப்படையாகவும் தாக்கமுள்ளதாகவும் தீர்க்க முடியாது என்பதே சீனாவின் நிலைப்பாடு. கடந்த 20 வருட காலத்தில் பல்வேறு அமெரிக்க அரசாங்கங்களால் சுமார் 3,800 தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 2011 இன் பின்னர் ரஸ்யா மீது அமெரிக்கா 100 தடவைகள் தடைகளை விதித்துள்ளது.

இந்த அமெரிக்க தடைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்ததா? இந்த அமெரிக்க தடைகளால் உலகம் சிறப்பான நிலையை அடைந்ததா? ரஸ்யா மீதான அமெரிக்கத் தடைகளால் உக்ரேன் பிரச்சினை தானாகத் தீர்ந்து விடுமா? ரஸ்யாவுக்கு எதிரான இந்த அமெரிக்கத் தடைகளால் ஐரோப்பாவுக்கு கூடுதலான பாதிப்பு கிடைத்து விடுமா? எனவே இந்த சட்ட விரோதமான ஒரு தலைப்பட்சமான தடைகளை சீனா ஆதரிக்கவில்லை.

China Foreign Ministry Spokesperson Hua Chunying

மேற்கத்தைய ஊடகங்கள் அமெரிக்காவாலும் அதன் மேற்கத்தைய கூட்டாளி நாடுகளாலும் ரஸ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் சர்வதேச சமூகத்தின் பிரதிபலிப்பே எனக் கூறுகின்றன. ஆனால் இந்தத் தடைகள் சர்வதேச சட்ட விதிகளுக்கு விரோதமானவை. இந்தத் தடைகள் ஐ.நா. வினாலோ அல்லது தடைக்கு உள்ளாகும் நாடுகளாலோ அங்கீகரிக்கப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒரு பொறுப்பு வாய்ந்த உறுப்பினர் என்ற வகையில் சீனா இந்த சட்ட விரோதத் தடைகளுக்கு ஆதரவளிக்காது.

அத்துடன், இந்தத் தடைகளால் சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமின்றி, உலகளாவிய தொழில்களும் கடும் பாதிப்பை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். ரஸ்யாவுக்கு எதிரான இந்தத் தடைகளின் நோக்கம் சீனா உட்பட ரஸ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளைக் குறி வைப்பதாகும். சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் மிகவும் பரந்துபட்டது. 2021 இல் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் 35.9 சத வீதமாக உயர்ந்துள்ளது. அதாவது அதன் மொத்த பெறுமதி 146.87 பில்லியன் டொலர்களாகும். இது வரலாற்றில் முன்னொருபோதும் நடைபெறாததாகும். எனவே அமெரிக்காவின் இந்தத் தடைகள் ரஸ்யாவுடனான சீனாவின் வர்த்தகத்தைப் பாதிப்பதால் சீனா அதை வன்மையாக எதிர்க்கிறது.

எனவே, உக்ரேன் பிரச்சினையை வைத்துக்கொண்டு அமெரிக்கா சீனாவினதும் ஏனைய தரப்புகளினதும் சட்டபூர்வமான உரிமைகளையும் நலன்களையும் நசுக்க முற்படுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது’.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: