‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சீனாவின் உதவி மிக முக்கியமானது!’ -ரணில் விக்கிரமசிங்க
(இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தினம் மற்றும் இலங்கை – சீன இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65 ஆவது ஆண்டு நிறைவு தினம் சம்பந்தமான நிகழ்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையின் முக்கியமான பகுதிகள்)
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து என்னையும் பிறரையும் அழைத்ததிற்காக நான் முதற்கண் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கட்டாயமாக நன்றி சொல்ல வேண்டும்.
இங்கு நாங்கள் இரப்பர்-அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 70 ஆவது மற்றும் இலங்கை – சீன இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளை கொண்டாடுவதற்காக கூடியிருக்கிறோம். ஒரு விடயம், இரண்டு நிகழ்வுகள் கொண்ட உடன்படிக்கைகளை நினைவுகூர உள்ளோம். 1948 பெப்ருவரி 4 இல் எமது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க இலங்கையின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்து சிங்கக் கொடியை ஏற்றி வைத்தார்.
1949 ஒக்ரோபர் 1 இல் தலைவர் மாஓ சேதுங் மக்கள் சீனக் குடியரசைப் பிரகடனப்படுத்தி புதிய சீனக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கை மக்கள் சீனக் குடியரசை அங்கீகரித்ததை ஒருமித்து வெளிப்படுத்தின. இது ஒரு நெருக்கடியான காலம். இலங்கையர்கள் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று தமது உயிர்களைத் தியாகம் செய்திருந்தனர். இலங்கை, மொங்கோலியா மற்றும் சீனா என்பவை ஐ.நாவில் அங்கத்துவ நாடுகளாக இருக்கவில்லை. ஐ.நாவின் ஒரு அங்கத்தவராக வருவதே அன்று எமது பிரதான முயற்சியாக இருந்தது. இது நடந்து கொண்டிருந்த இரண்டு மூன்று வருடங்களில் இலங்கை தனது முதலாவது வர்த்தக ஒப்பந்தமான இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தை சீனாவுடன் செய்து கொண்டது.
சீனா மீதான பகைமை நிலவிய உலக சூழலில் இன்னொரு நாடு சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றைச் செய்வது கடினமான ஒன்றாகும். இருந்தாலும் இலங்கை அதைச் செய்தது. இதைத் தொடர்ந்து 1954 இல் கொழும்பில் நடைபெற்ற கொழும்பு சக்திகளின் கூட்டத்துக்கு (Colombo Powers Meeting) சீனாவையும் அழைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. நாங்களும் ‘பாண்டுங் மாநாட்டு’க்கு (Bandung Conference) அழைக்கப்பட்டோம். பாண்டுங் மாநாடு நடைபெற்ற நேரத்தில் அப்போதைய எமது பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல அங்கு சீனப் பிரதமர் சௌ என்லாயை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அங்கு நடைபெற்ற ஒரு பிரபல்யமான மதிய உணவின் போது சீனா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து என்பன ஆசிய விவகாரங்கள் குறித்து விவாதித்த விடயம் பல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு ஐ.நாவில் உறுப்புரிமை கிடைத்ததும் ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதற்கான தடைகள் நீங்கியதால் இலங்கை சீனாவுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டது.
அந்தக் கடமையை புதிய அரசாங்கமும், புதிய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். சீனாவை அங்கீகரித்தது மட்டும் நிகழவில்லை. எனக்கு நினைவிருக்கிறது, 1958 இல் விகாரமாதேவி பூங்காவில் சீனாவின் ஒரு மிகப்பெரிய கண்காட்சி நடந்த பொழுது அப்பொழுது மாணவனாக இருந்த நானும் அதில் கலந்து கொண்டேன். இலங்கையின் பிரதமராக திருமதி பண்டாரநாயக்க வந்த பின்னர் அரசியல் உறவுகள் மேலும் வலுப்பற்றன. ஒரு பொதுநாளில் பொருளாதார உறவுகளும் அரசியல் உறவுகளும் மேலும் வளர்ச்சியடைந்தன. இந்த திகதி எமது இரு தரப்புகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1977 யூலை 22 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவராக டெங் சியாவோபிங் பொறுப்பேற்ற பின்னர் அவர் மீண்டும் சீன விவகாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டார். அதே நாளில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் பிரதமரானார்.
இருவரும் வரலாற்றை மாற்றும் இலக்கை நோக்கிப் பயணித்தனர். இரண்டு நாடுகளும் மத்திப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதார நிலைப்பாட்டிலிருந்து விலகியதுடன், இலங்கை வேறு விதங்களிலான வழிகளை நோக்கிச் சென்றது. அதன் இறுதி விளைவு சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக சோசலிச அமைப்பாகும். சீனாவைப் பொறுத்தவரை சீன தன்மைகளுக்கு ஏற்ற சோசலிசத்தையும், சோசலிச சந்தைப் பொருளதாரத்தையும் கொண்டுள்ளது. இந்த வழிமுறைகள் இலங்கையிலும் சீனாவிலும் படிப்படியாக நிகழ்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சீனாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வமான அமைச்சரவை விஜயம் முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த ஆர.பிரேமதாச தலைமையில் நிகழ்ந்தபோது நானும் ஒரு அமைச்சராக அதில் பங்குபற்றினேன். எமக்கு அங்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்ததுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தலைவர் குவா கோபெங்கையும் (Hua Guofeng) சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சீன அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்த லீ சியான்னியன் (Li Xiannian) அவர்களுடன் பொருளாதார விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அங்கு மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்து எனக்கு நினைவிருக்கிறது. நாம் சீனாவை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் ஒரு கண்காணிப்புப் படகில் யாங்சி நதியில் பிரயாணம் செய்ததுடன், சாங்காயில் ஒரு மிகப்பெரும் சதுப்பு நிலத்தையும் கடந்தோம். அடுத்த தடைவ நான் சாங்காய் சென்ற பொழுது அந்த சதுப்பு இடம் பூடொங் (Pudong) நகராக மாறியிருந்தது. சீனாவிலிருந்து ஹொங்கொங்கிற்கும் சென்றோம். நாம் புகையிரதத்தில் பயணித்த பொழுது பெருமளவிலான நெல் வயல்களைக் கண்டோம். அடுத்த தடவை நான் சீனா சென்ற பொழுது அந்த இடம் சென்ஸென் சிறப்பு பொருளாதார வலயமாக (Shenzhen Special Economic Zone) மாறியிருந்தது. அதுபோல, சீனக் குழுக்கள் இலங்கை வரும்போதும் கண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒரு தூதுக்குழு பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலுள்ள பொருளாதார வலயங்களைப் பார்வையிட்டு எமது பணிப்பாளர் நாயகம் உபாலி விஜேவர்த்தனவுடன் கலந்துரையாடியிருக்கின்றது. அதை நெறிப்படுத்தியவர் வேறு யாருமில்லை, வருங்கால சீன ஜனாதிபதியான ஜியாங் ஸெமின் (Jiang Zemin) அவர்களே.
அன்று அந்த மட்டத்தில் எமது இரு நாடுகளுக்குமிடையிலான ஈடுபாடு இருந்தது. சீனா புதிய நீதித்துறை மாற்றங்களைச் செய்யவிருந்த நேரத்தில் நாம் இலங்கையிலிருந்து எச்.டபிள்யு.ஜெயவர்த்தன தலைமையில் எமது மிகச் சிறந்த சட்டத்தரணிகளை சீனாவுக்கு அனுப்பி வைத்தோம். அதன் காரணமாகவே சீன அரசாங்கம் எமது இரு நாடுகளிலும் உச்ச நீதிமன்றக் கட்டிடங்களைக் கட்டியது. மேலும் பல பரிமாறல்கள் எமக்கிடையே உண்டு. அந்த விடயங்களில் மிக முக்கியமாக நினைவுகூரக் கூடியது, பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுடனான எமது போராட்டத்தின் போது சீனா இலங்கைக்கு அளித்த ஆயுத உதவியாகும்.
இலங்கையும் சீனாவும் முதலில் ஒன்றையொன்று அங்கீகரித்தன. நாம் சீனாவின் ஒரு சீனக் கொள்கையையும், சீனா எமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்தோம். இது ஜனாதிபதி ஜெயவர்த்தன சீனாவுக்குச் சென்று பெரும் தலைவர் டெங் சியாவோபிங் அவர்களைச் சந்தித்து உடன்படிக்கைகள் செய்த பின்னர் மேலும் பலமடைந்து, கூடுதலான உதவிகள் வரத் தொடங்கின. நான் 1987 இல் மீண்டும் சீனா சென்ற பொழுது ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் செய்தி ஒன்றை சீனத் தலைமைக்கு எடுத்துச் சென்றேன். அதற்கு சிரேஸ்ட சீனத் தலைவர் வான் லி (Wan Li) தந்த பதிலை கொழும்பு திரும்பிய பொழுது எடுத்து வந்தேன்.
எனவே, பல பரிமாற்றங்கள் இடம் பெற்றன. 1997 இல் ஹொங்கொங்கை இறுதியாக சீன அரசிடமும் மக்களிடமும் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்றதை நினைவுகூர முடிகிறது. சீனாவின் கட்சி இலங்கைக்கு விஜயம் செய்து எனது கட்சியுடனும் வேறு கட்சிகளுடனும் கலந்துரையாடிய பல கட்சித் தொடர்புகள் எமக்குள்ளன. அதேபோல நாம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளோம். நான் பிரதமர் என்ற முறையில் சீனாவுக்கு விஜயம் செய்தபோது எமது சமாதான முயற்சிகள் குறித்து ஜனாதிபதி ஹூ ஜின்ராவோ (Hu Jintao) மற்றும் பிரதமர் வென் ஜியாபோ (Wen Jiabao) ஆகியோருக்கு விளக்கியது நினைவில் இருக்கிறது. அப்பொழுது என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்க முடிந்ததுடன், அவர்கள் தந்த ஆதரவுக்கும் நன்றி சொல்ல வேண்டியுள்ளது.
அதன் பிறகு 2015 இல் மைத்திரிபால சிறசேனவை ஜனாதிபதியாகவும், என்னைப் பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தினராகிய நாம் அங்கு சென்று சீன ஜனாதிபதி மற்றும் கட்சி பொதுச் செயலாளராகிய ஸீ ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ ஆகியோருடன் நடத்திய நீண்ட கலந்துரையாடல் குறித்து சொல்வது அவசியம். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு தடம் ஒரு பாதை (Belt and Road) என்ற திட்ட முன்னெடுப்பின் முதலாவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. அரசியல், இராஜதந்திர உறவுகளில் ஆரம்பித்த இந்த நட்புறவு இப்பொழுது அரசியல், கலாச்சாரம், பொருளாதாரம் எனப் பரிணமித்துள்ளது. அதன் காரணமாகவே எங்கள் எல்லாத் தரப்பும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த 100 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கூடியிருக்கிறோம்.
நீண்ட பயணம் பீஜிங்கில் முடிவடையவில்லை. இப்பொழுது நீங்கள் இன்னொரு நீண்ட பயணத்தை ஆரம்பித்துள்ளீர்கள். நான் நினைக்கிறேன் இந்த வருடக் கடைசியில் நடைபெறவுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது தேசிய மாநாடு சீனாவுக்கும் எங்கள் எல்லோருக்கும் முக்கியமான நிகழ்வாகும். சீன பண்புகளுடனான சோசலிசம் இரண்டாவது சகாப்தத்துக்கான புதிய யதார்த்தத்தை நனவாக்குவதுடன், தேசிய மீள் எழுச்சி என்ற சீனாவின் கனவுக்கும் உரிய ஏற்பாட்டை வழங்கும் என்பது முக்கியமானதாகும்.
முற்றுமுழுதாக ஐரோப்பிய மையப்படுத்தல் இருந்த காலத்தில் இறப்பர் – அரிசி ஒப்பந்தம் இரு ஆசிய நாடுகளுக்குள் நிகழ்ந்த முதலாவது வர்த்தக ஒப்பந்தம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்பொழுது எமது சகல தொடர்புகளும் உடன்படிக்கைகளும் ஐரோப்பாவுடனேயே இருந்தன. ஆனால் முதல் தடவையாக ஏற்பட்ட இந்தப் பொருளாதாரத் தொடர்பு முன்னோக்கிச் சென்ற உறவாக வளர்ச்சியடைந்தது. இன்று ஆசியா உலகின் வளர்ச்சி மையமாக மாறியுள்ளது. அத்துடன் அதில் சீனா வளரும் உந்துசக்தியாக வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநாட்டு நிகழ்வின் பின்னர் ஏற்படும் வளர்ச்சிப் போக்குகள் எமக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதைப் பார்க்க முடியும். அதே நேரத்தில் பாண்டுங் காலத்தில் இருந்து ஆசியா எப்படி வளர்ந்துள்ளது என்பதையும், பாண்டுங் எவ்வாறு பன்முகத் தன்மையின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்பதையும் பார்க்க முடியும்.
எனவே, இந்து சமுத்திரத்திலும், பசுபிக் சமுத்திரத்திலும் பன்முகத்தன்மை நிலவுவதை நாம் கண்டிப்பாக ஏற்பதுடன், எமது சிந்தனைக்கு அதை ஒரு வழிகாட்டும் கோட்பாடாகவும் நாம் அதைக் கட்டாயமாக ஏற்க வேண்டும். நாம் இதிலிருந்து விலக முடியாது. ஏனெனில், நாம் அதிக பதட்டமும் வன்முறையும் நிறைந்த உலகில் வாழ்கின்றோம். நான் உங்கள் நேரத்தை மேலும் எடுக்க விரும்பவில்லை. என்னை இங்கு அழைத்ததிற்காக நான் நன்றி கூறுவதுடன், எமது முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க மற்றும் மாஓ சேதுங் காலத்திலிருந்து இன்றுவரை உள்ள உறவுகளை நினைவு கூருவதுடன், வருங்காலத்தில் எமது உறவுகள் மேலும் வலுப்பெறும் என்பதிலும் சந்தேகமில்லை என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுண்டு.