காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள்: ஐ.பி.சி.சி (IPPC) அறிக்கை விடுக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன?
காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பேரிடர்களும் வறட்சிகளும் அதிகரித்து வருவதோடு, கடல் நீர்மட்டமும் உயர்வதாக ஐபிசிசி அமைப்பின் அறிக்கை எச்சரிக்கை விடுப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
வணக்கம். வருகிற 28ம் தேதி ஐ.பி.சி.சி. அமைப்பு தனது இரண்டாவது பணிக்குழுவின் அறிக்கையை வெளியிடவுள்ளது. ஐ.பி.சி.சி. அமைப்பின் செயல்பாடுகளும், தற்போது வெளியாகவுள்ள அறிக்கையும் காலநிலை மாற்றத்தை நமது அரசுகள் எதிர்கொள்வதற்கு எந்த வகையில் உதவும் என்பது குறித்து கீழ்காணும் இந்த விளக்க ஆவணம் எடுத்துரைக்கிறது.
ஐ.பி.பி.சியின் புதிய அறிக்கை வெளியானவுடன் அதுகுறித்த செய்திகளை தெளிவாகவும் விவரமாகவும் எடுத்துரைக்க செய்தியாளர்களுக்கு இந்த விளக்க ஆவணம் உதவியாக அமையும்.
ஐ.பி.சி.சி. என்றால் என்ன?
Intergovernmental Panel on Climate Change என்றழைக்கப்படும் இந்த அமைப்பு 1988ம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தால் தொடங்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையிலான கொள்கைகளை உருவாக்க அரசாங்கங்களுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களை வழங்குவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
ஐ.பி.சி.சி. செயல்பாடுகள்
இந்த ஐ.பி.சி.சி. மூன்று பணிக்குழுக்களாக செயல்படுகிறது. முதல் பணிக்குழு (Working Group I) காலநிலை மாற்றத்திற்கான அறிவியல் அடிப்படை குறித்தும் இரண்டாவது பணிக்குழு (Working Group II) காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்தும் மூன்றாவது பணிக்குழு (Working Group III) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துவது குறித்தும் ஆராய்கிறது.
ஐ.பி.சி.சி. இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) வெளியிட்டுள்ளது.
முதல் மதிப்பீட்டு அறிக்கை
1990-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த முதல் மதிப்பீட்டு அறிக்கையானது காலநிலை மாற்றத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தை வழங்கியது. மேலும், உலக வெப்பமயமாதலின் ஆதாரங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்தும் இவ்வறிக்கையில் பேசப்பட்டிருந்தது.
இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை
1995-ம் ஆண்டு வெளியான இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையானது உலகளவில் காலநிலை மாற்றத்திற்கு தெளிவாக கண்டறியக் கூடிய அளவில் மனித செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தது.
மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை
2001-ம் ஆண்டு வெளியான மூன்றாவது அறிக்கை கடந்த 50 ஆண்டுகளில் உலகம் சந்தித்த வெப்பநிலை உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்பதற்கான புதிய மற்றும் வலுவான ஆதாரங்களை முன்வைத்தது.
நான்காவது மதிப்பீட்டு அறிக்கை
2007-ம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் உலகளவில் சராசரி காற்று மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயருதல் போன்றவற்றைக் கண்காணித்ததன் அடிப்படையில் உலக வெப்பமயமாதல் என்பது சந்ததேகத்திற்கு இடமின்றி தெளிவாகியதாகக் கூறப்பட்டிருந்தது.
ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை
2014-ம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் அனைத்து கண்டங்கள் மற்றும் கடல்களில் காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 95% மனிதர்கள் மட்டுமே உலக வெப்பமயமாதலுக்குக் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது ஐ.பி.சி.சி. தன்னுடைய ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் காலகட்டத்தில் உள்ளது. இந்த ஆறாவது அறிக்கை காலமான 2015 முதல் 2023 வரை மொத்தமாக 8 அறிக்கைகள் வெளியிடப்படும். ஏற்கெனவே இதில் 5 அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. தற்போது ஐ.பி.சி.சியின் இரண்டாவது பணிக் குழு காலநிலை மாற்றத்தின் காலநிலை மாற்றத்தின் தாக்கம், தகவமைத்தல் குறித்த தனது அறிக்கையைத்தான் வருகிற 28ம் தேதி வெளியிடவுள்ளது.
Working Group II Report
ஐ.பி.சி.சியின் இரண்டாவது பணிக்குழுவானது காலநிலை மாற்றத்தால் சமூக – பொருளாதார மற்றும் இயற்கை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது பணிக்குழுவின் அறிக்கை உருவான விதம்
இந்த அறிக்கையானது பல நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்ட 270 அறிவியலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக 34,000 ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்யப்பட்டு உறுப்பு நாடுகள் அனைவராலும் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரசாங்க பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட 60,000 கருத்துக்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அறிக்கையின் முக்கியத்துவம்:
காலநிலை வேகமாக மாற்றமடைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இந்த மாற்றங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் அன்றாடம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, தாக்கம் மற்றும் அதை தகவமைக்கும் முறைகள் பற்றி அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றத்திற்கு நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டிய வழிகள், தீர்வுகள் குறித்தும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.பி.சி.சி. ஆறாவது மதிப்பீட்டு காலத்தில் முதல் பணிக்குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- வேகமாகவும், மிகப் பெரிய அளவிலும் நம் புவியின் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அறிக்கையில் அலசப்பட்ட தரவுகள், சான்றுகள் வாயிலாக இயற்கையின் மீதான மனிதர்களின் செல்வாக்கு மட்டுமே புவியின் இயற்கை அமைப்பின் நிலைத்தன்மை குறைந்ததற்கும் மாறியதற்கும் காரணம் என்பதை அறிவியலாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
- எல்லா கணிப்புகளின் அடிப்படையிலும் அடுத்த பத்தாண்டுகளில் உலகின் சராசரி வெப்ப நிலையானது 1.5° செல்சியை எட்டிவிடும். இது 1.6° செல்சியஸ் அளவிற்குக் கூடச் செல்லும்.
- 2014-ம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்குப் பிறகு கிடைத்த அனைத்து ஆதாரங்களையும் கொண்டு பார்க்கையில் இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை 3°செல்சியசை எட்டும். உறுதியாக 2.5° செல்சியஸ் முதல் 4°செல்சியசாக இருக்கும்.
- உலகம் மேலும் வெப்பமடைவதால் இயற்கை அமைப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் திறனை நிலம் மற்றும் கடல் சூழலியல் அமைப்பு இழந்து வருகிறது.
- உலக நாடுகள் இந்த வெப்பமயமாதலைத் தடுக்க தங்களது பசுமை இல்ல வாயுக்களின் நிகர உமிழ்வை பூஜ்ய நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அறிக்கையில் கூறப்பட்ட முக்கிய தரவுகள்
- மனிதர்களின் செயற்பாட்டால் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகம் வெப்பமடைந்துள்ளது.
- 1750-ம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம்.
- 2019-ம் ஆண்டு வளிமண்டலத்தில் காணப்பட்ட கரிம வாயுவின் (CO2) செறிவானது அதற்கு முந்தைய 2 மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவானது அதற்கு முந்தைய 800,000 ஆண்டுகளில் காணப்படாத அளவாகும்.
- 1970-ம் ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும்.
- 1900-ம் ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல் மட்ட உயர்வின் வேகமானது கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும். 2100-ம் ஆண்டில் 2மீ அளவிற்கும் 2150-ம் ஆண்டில் 5மீ அளவிற்கும் கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
- கடல் வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கையானது 1980-ம் ஆண்டிற்குப் பிறகு இருமடங்காக அதிகரித்துள்ளது.
- ஆர்க்டிக் கடல் பகுதியிலுள்ள பனிப் பாறைகளின் பரப்பு 1979 முதல் 1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 40% மற்றும் 10% குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம்.
- காலநிலை மாற்றத்தால் உலகின் நீரியல் சுழற்சி வலுவடைகிறது. இதன் காரணமாக கனமழை பொழிவும் அதனால் வெள்ள பாதிப்பும் உண்டாகிறது. இதே நீரியல் சுழற்சி சில இடங்களில் வறட்சிக்கும் காரணமாகிறது.
காலநிலை மாற்றத்தின் பல்முனைத் தாக்குதல்
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணராத பகுதியே உலகத்தில் இல்லை என்பது அண்மையில் IPCC வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சமாகும். இந்தியாவிலும் கூட அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் காலநிலை மாற்றத்தின் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.
காலநிலை மாற்றமும் மேற்குத் தொடர்ச்சி மலையும்
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இருபத்தி நான்கரை கோடி மக்களின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆறுகளின் நீர் ஆதாரமாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைதான். தமிழ்நாட்டில் பாயக் கூடிய வைகை, தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளின் பிறப்பிடமாகவும் இருப்பது இம்மலைதான். பல அரியவகை பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள், மீன்கள், தாவரங்கள், மரங்களின் இருப்பிடமாக இருக்கும் இந்த மலைத் தொடரின் சோலைக் காடுகளும் புல்வெளிப் பரப்புகளும் புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிப்படைந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் கடந்த 100 ஆண்டுகளில் வெப்ப நிலையானது 0.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து காக்க வேண்டிய அவசரம் தற்போது ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றமும் பாலையாதலும்
2018- 19 ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியாவில் 97.85 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கான நிலம் சீர்கெட்டுள்ளதாக இஸ்ரோவின் Space Applications Centre அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 29.7 % பரப்பாகும். தமிழ் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 11.87% நிலப்பரப்பு அதாவது 15 லட்சத்து 43 ஆயிரத்து 898 ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பு பாலையாகி வருவதாக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. இப்பிரச்சனைக்கு மனித செயல்பாடுகள் முக்கியக் காரணம் என்றாலும் காலநிலை மாற்றமும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
காலநிலை மாற்றமும் வறட்சியும்
ஒன்றிய அரசின் புவி அறிவியல் துறை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் பருவ மழையில் ஏற்பட்ட குறைபாடின் காரணமாக அதிக எண்ணிக்கையில் வறட்சி நிகழ்வுகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. 1951 முதல் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் வறட்சியால் பாதிக்கப்படும் இடங்களின் பரப்பளவு 1.3% அதிகரித்துள்ளது. வறட்சியானது, நேரடியாக பட்டினிக் கொடுமையால் மக்கள் உயிரிழப்பதற்கும் பிழைப்புத் தேடி வேறு இடங்களுக்கு புலம் பெயர்வதற்கும் காரணமாக அமைகிறது. தற்போது நாம் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைக்காவிட்டால் வறட்சி நிகழ்வுகள் ஏற்படும் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்றே பல ஆய்வுகளும் கூறுகின்றன.
காலநிலை மாற்றமும் நிலத்தடி நீரும்
தமிழ் நாடு அரசின் நீர்வளத் துறை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பெரும்பாலன மாவட்டங்கள் தங்களின் நீர்ப்பாசனத்திற்கான தேவையில் 50% நிலத்தடி நீரையே நம்பியுள்ளன. தஞ்சாவூர், பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் 95% நிலத்தடி நீரையே பாசனத்திற்காகப் பயன்படுத்துகின்றன. சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீரானது அதிகளவில் சுரண்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கமும் பருவமழையில் ஏற்படும் மாறுதல்களும், குறைபாடுகளும் இப்பிரச்சனையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
காலநிலை மாற்றமும் கடல் நீர்மட்ட உயர்வும்
தமிழ் நாட்டில் 1076 கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2018ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில், தமிழ்நாட்டின் கடற்கரையில் 41% அதாவது 402.94 கிலோமீட்டர் தூரமானது கடலரிப்பிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடல் நீர்மட்டமானது 2050ஆம் ஆண்டில் 1மீ அளவிற்கு உயர்ந்தால் கூட 1091 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. புவி வெப்பமடைதலை தடுக்காவிட்டால் 2025 ஆண்டிற்குள் சென்னையில் கடலில் இருந்து 100மீ தொலைவிற்கான நிலப்பகுதி மூழ்கும் எனவும் கூறப்படுகிறது. வரும் காலங்களில் கடல் நீர்மட்ட உயர்வானது தமிழ் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றமும் வெப்பநிலை உயர்வும்
இந்தியாவின் சராசரி வெப்ப நிலையானது 1901 முதல் 2018ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 0.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. வெப்பமான பகல் மற்றும் இரவு நாட்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரித்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்களை அதிகளவு வெளியேற்றிக் கொண்டேயிருந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றமும் பேரிடர்களும்
இந்தியாவில் தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் அதிகனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் மட்டும் நாடு முழுவதும் 600 பேர் உயிரிழந்தனர். இடிமின்னல் தாக்குதலில் கடந்தாண்டு நாடு முழுவதும் 815 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு ஜனவரி மாதம் நிலவிய கடும் குளிரில் 150 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் மட்டும் 1,444 பேர் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும்
அரசு கொள்கைகளை வகுக்கும் பொழுது காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும் தனித்தனியே கையாளப்படுகிறது. ஆனால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய, ஒன்றாக அணுகப்பட வேண்டிய பிரச்சனைகள் ஆகும். உதாரணத்திற்க்கு காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கும் நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் காலநிலை மாற்றத்திற்கும் அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. இதனால் இவை இரண்டையும் குறைக்க ஒருங்கிணைந்த, துறை மற்றும் பகுதி சார்ந்த நடவடிக்கைகள் தேவை.
தற்பொழுது நிலவிவரும் காற்று மாசின் அளவுகள் அப்படியே தொடர்ந்தால், ஏற்கெனவே காற்று மாசுபாடடைந்த இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 5 முதல் 9 ஆண்டுகள் வரை இழக்க நேரிடும் என்கிறது அண்மையில் வெளியான AQLI (Air Quality Life Index ) ஆய்வறிக்கை.
காலநிலை மாற்றமும் காலநிலை அகதிகளும்
இனக் கலவரங்களின் காரணமாகவும், போர்ப் பதற்றத்தின் காரணமாகவும், அகதிகளாக புலம்பெயரும் மக்களை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால், காலநிலை மாற்றத்தின் காரணமாக தங்களின் இருப்பிடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து வாழ வழியின்றி வேறு இடத்திற்கு இடம்பெயரும் காலநிலை அகதிகளின் எண்ணிக்கை வருங்காலங்களில் பெரிதும் அதிகரிக்கும் என்கிறது உலக வங்கியின் அறிக்கை. இந்த அறிக்கையின்படி, அடுத்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 20 கோடி மக்கள் காலநிலை அகதிகளாக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற போவதாக தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு உள்ள தெற்காசிய பிராந்தியத்தில் காலநிலை அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
காலநிலை மாற்றமும் தொழிலாளர்களும்
காலநிலை மாற்ற பாதிப்பினால் விளிம்புநிலை தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை காலநிலை பாதிப்பினால் விவசாயிகளை காட்டிலும் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய விவசாய கூலிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். காலநிலை மாற்றத்தினால் இரண்டு வகையில் தொழிலாளர்கள் பாதிப்படைகிறார்கள். ஒன்று வேளைப்பளு அதிகரிப்பு மற்றொன்று உழைக்கும் திறன் குறைவு. இக்காரணங்களால் நேரடியாக நாட்டின் பொருளாதாரமே நலிவடையும் சூழல் உள்ளது.
தொழிலாளர்கள் தற்போதைய வறுமையைவிட அதீத வறுமைக்கு ஆளாகக் கூடிய சூழல் உள்ளது. இந்த காலநிலை மாற்றத்தினால் உயரக்கூடிய வெப்பநிலை காரணமாக heat stroke போன்ற உயிர்ச்சேதம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உள்ளாகக்கூடும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும், பொருளாதரத்தில் பின் தங்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் அதிகளவில் பாதிப்படைவார்கள். அதிகரிக்கும் வெப்பநிலையின் காரணமாக ஏற்படும் உடல் சோர்வினால் நடக்கும் சிறிய தவறு கூட மிகப்பெரிய தொழிற்சாலை விபத்திற்கோ அல்லது தொழிலாளர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கோ வழிவகுக்கும்.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தை விட அதிகமாக உழைக்கக்கூடிய சூழல், நோய்கள், கூலிக்குறைவு என பலதரப்பட்ட பாதிப்புகளை காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஏற்படுத்தும்.
காலநிலை மாற்றமும் பெண்களும்
காலநிலை மாற்றம் அனைத்து மக்களுக்குமான பிரச்சனையாக இருந்தாலும் ஆண்களைக் காட்டிலும் பிற பாலினத்தவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சமூக, கலாச்சார, பொருளாதார அளவில் இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அருகி வரும் நீர்நிலைகள், சுகாதாரமற்ற குடிநீர், உணவுத்தட்டுபாடு, அதிகரித்து வரும் வெப்ப நிலை, மாசான காற்று, தொற்று நோய் போன்ற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பல இன்னல்களில் இவர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், அதிக வெப்பமான சூழலில் வாழ நேரிடுவதால், கருவில் உள்ள குழந்தை இறப்பதற்கும், ஊனமுறுவதற்கும், முன்கூட்டியே பிறப்பதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. குடும்பக் கட்டமைப்பில் அனைவரையும் பேணிக் காக்கும் கடமை பெண்களுக்கே திணிக்கப்பட்டுள்ளதால் நீர், உணவுத்தட்டுப்பாடு அவர்களையே பெரிதும் பாதிக்கின்றது.
பொருளாதார நெருக்கடியினால் குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன. கிராமப்புறங்களில் நீருக்காக பல மைல் தூரம் நடக்கும் பெண்களின் நிலை வறட்சி அதிகரிப்பதால் இன்னும் மோசமாகின்றது. சுகாதாரமற்ற நீரினால் மாதவிடாய், மகப்பேறு போன்ற காலங்களில் அவர்களின் உடல் நிலை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. காலநிலை மாற்றத்தால் உடனே பாதிக்கப்படக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் விவசாயிகள், மீனவர்கள், மற்றும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். விவசாயத்தில் 85 % பேர் பெண்கள், சுமார் 5 லட்சம் பெண்கள் மீனவத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் உலகளவில் ஏழ்மையில் வாழும் மக்களில் 70 % பெண்களே. இது மட்டுமின்றி காலநிலை மாற்றத்தால் நிகழும் புயல் வெள்ளம் போன்ற பேரிடர்களில் சொல்லமுடியா துயரத்துக்கு ஆளாவதும் அவர்களே. 1991ல் வங்காளதேசத்தில் புயலால் இறந்த 1,40,000 பேரில் 90% பெண்கள். 2008 மியான்மரில் நர்கீஸ் புயல் தாக்கியதால் இறந்த1,30,000 பேரில் 61% பேர் பெண்கள்.
முழு அறிக்கையையும் படிக்க:
Climate Change 2022: Impacts, Adaptation and Vulnerability