பாகிஸ்தான், துருக்கி மாணவர் உயிர்தப்புவதற்கு கைகொடுத்த இந்தியாவின் தேசியக்கொடி!
கடுமையான யுத்தம் இடம்பெற்று வருகின்ற உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியர்களுக்கு மட்டுமின்றி பாகிஸ்தான், துருக்கி மாணவர்களுக்கும் இந்திய தேசியக்கொடி உதவி செய்துள்ளது. இத்தகவலை பகிரங்கமாக பாகிஸ்தான் மாணவர் ஒருவர் அந்த நாட்டின் தொலைக்காட்சியில் கூறியுள்ளார். இத்தகவல் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் உருக்குலைந்துள்ளது. ஏவுகணை, குண்டுவெடிப்பு தொடர்ந்து நிகழ்வதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்தவாறு தப்பியோடி வருகின்றனர். இதனால் அங்குள்ள இந்திய மக்களை மீட்கும் பணியில் இந்திய மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ‘ஒபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில் இருந்து இந்தியப் பிரஜைகள் சிறப்பு விமானங்களில் நாடு திரும்பி வருகின்றனர். உக்ரைனில் தொடர்ந்து போர் மேகங்கள் அதிகரிப்பதால் இந்த மீட்பு பணியை இந்திய மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது.
மீட்புப் பணிக்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே பாகிஸ்தான், துருக்கி மாணவர்களுக்கு உயிர்தப்புவதற்கு இந்திய தேசியக் கொடி கைகொடுத்து உதவியுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. உக்ரைனில் இருந்து ருமேனியா, ஹங்கேரி வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்புக்காக இந்திய தேசியக்கொடியுடன் வந்துள்ளனர். தேசியக் கொடியுடன் வந்தால் ரஷ்ய இராணுவம் எதுவும் செய்வது இல்லை. இவர்கள் உக்ரைனை விட்டு ஓரளவுக்கு பத்திரமாக வெளியேறி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான், துருக்கி மாணவர்களும் இந்திய தேசியக்கொடியை பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர்.
இத்தகவலை பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அந்நாட்டு மாணவர் ஒருவர் பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், “இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக வெளியேற முடிகிறது. இதனால் பாகிஸ்தான் மாணவ, மாணவியர் இந்திய தேசியக் கொடியை அசைத்து, ‘பாரத மாதா கீ ஜே’ எனக் கூறி எல்லையை அடைகின்றோம்” எனக் கூறியுள்ளார்.
இத்தகவல் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவ, மாணவியரை மீட்க அந்த நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது அந்த நாட்டு மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், போரில் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் மாணவர்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருவது பாகிஸ்தானில் பலருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தயவினால் தமது நாட்டு மாணவர்கள் உயிர்தப்ப வேண்டியுள்ளது என்று அவர்கள் வெட்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “இந்திய தேசியக் கொடிதான் தங்கள் நாட்டு தேசியக் கொடியை விட பாதுகாப்பானது என்று உணர்ந்துள்ளனர் பாகிஸ்தான் மாணவர்கள்” என்று அவர்களே தெரிவித்து வருகின்றனர்.
இது இவ்விதமிருக்க சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை இந்தியா, சீனா அல்லது அமெரிக்கா மீது விழ வைக்க முடியும் என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் எலான் மஸ்க் இதற்கு பதில் அளித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐ.எஸ்.எஸ் (International Space Station – ISS) சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஐ.எஸ்.எஸ் பூமியில் இருந்து 400கிமீ உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. 28ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் இது பூமியும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.
பூமியை 90 நிமிடத்திற்கு ஒரு முறை இது சுற்றும். சுமாராக தினமும் 16முறை இது பூமியை சுற்றுகிறது. ஆனால் பெரும்பாலும் ரஷ்யாவிற்கு மேலே இது செல்லாது.
1998 இல் இது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதில் இருந்தே கீழ்மட்ட சுற்றுப்பாதையில்தான் சுற்றுகிறது. அங்கு கொஞ்சம் புவி ஈர்ப்பு விசை இருக்கும். இதில் எப்போதும் விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். தற்போது அங்கு 4 அமெரிக்க வீரர்கள், 2 ரஷ்ய வீரர்கள், 1 ஜெர்மனி வீரர் ஆகியோர் உள்ளனர். இப்போது ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய வீரர்கள் – அமெரிக்க வீரர்கள் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒன்றாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“நீங்கள் ரஷ்யாவிற்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் ஐ.எஸ்.எஸ் சரியாக இயங்காது. அதை தவறான வட்டப்பாதையில் கொண்டு செல்வோம். ஏன் ஐரோப்பா, அமெரிக்கா மீது மோதச் செய்வோம். இது 500 தொன் எடை கொண்டது. நாங்கள் ஏதாவது செய்து இந்தியா, சீனா மீது விழுந்தால் என்ன நடக்கும்?” என்று ரஷ்ய தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அதாவது அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது ஐஎஸ்எஸ்ஸை விழச் செய்வோம் என்று மிரட்டினார். இதற்கு தற்போது ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதாவது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இந்த ஐ.எஸ்.எஸ் தளத்தில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் டிராகன் காப்ஸ்யூல் உள்ளது. இதை வைத்து அந்த ஸ்பேஸ் ஸ்டேஷனை இயக்க முடியும். ஸ்பேஸ் ஸ்டேஷனை இந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக இயக்க முடியும். சில கடைசி நேர மாற்றங்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதை வைத்தே நாங்கள் ஐ.எஸ்.எஸ்ஸை காப்பற்றுவோம் என்ற ரீதியில் எலான் மஸ்க் (Elon Musk) பதில் அளித்துள்ளார்.