உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது ஏன்?

மர்லின் மரிக்கார்

க்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமானது. தரை, கடல், ஆகாயம் ஆகிய மார்க்கங்களின் ஊடாக விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த யுத்தம் பத்து நாட்களையும் கடந்து நீடித்த வண்ணமுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் உசுப்பேற்றல் மற்றும் நேட்டோவின் நம்பிக்கை அளிக்கும் வகையிலான நகர்வுகளின் விளைவாக உக்ரைன் இப்போருக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனை உசுப்பேற்றியது போன்று, ரஷ்யாவின் போருக்கு முகம்கொடுத்துள்ள உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. அதன் விளைவாக உக்ரைன் களத்தில் தனித்து விடப்பட்டுள்ளது.

இப்போர் ஆரம்பமானது முதல் இற்றைவரையும், ‘நாம் சமானதானத்திற்கு தயார், யுத்தத்தை நிறுத்துங்கள், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள், உக்ரைய்னைக் காப்பாற்றுங்கள்’ என்றபடி உக்ரைன் ஐனாதிபதி விளடிமிர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்து அபயக் குரல் எழுப்பி வருகின்றார். அத்தோடு ரஷ்யா உட்பட உலகின் பல நாடுகளிலும் இந்த யுத்தத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கையையோ யுத்தத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களையோ ரஷ்யா கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. உக்ரைன் மீதான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அதேநேரம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகளும் இந்த யுத்தத்தை நிறுத்தி ரஷ்யாவை சமாதானப் பேச்சுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை இற்றைவரையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் ரஷ்யாவை கோபம் கொள்ளச் செய்து தூண்டிவிடும் வகையிலான எண்ணெய் ஊற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்திருக்கும் போர் நீடிப்பது குறித்து மக்கள் மத்தியில் பலவிதமான ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. உக்ரைனின் அபயக்குரலையும் யுத்தத்திற்கு எதிராக மக்களின் வலியுறுத்தல்களையும் கருத்தில் கொள்ளாது ரஷ்யா போரைத் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற அதேநேரம், ரஷ்யாவை சமாதான வழிக்குக் கொண்டு வரும் முயற்சிகளும் பெரிதாக முன்னெடுக்கப்படாத நிலையும் தொடர்கிறது. அதனால் இந்த யுத்தத்தின் ஊடாக ரஷ்யாவும் ஏனைய நாடுகளும் அடைந்து கொள்ள விரும்புவது என்ன? என்பதே மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியின் அடித்தளமாக விளங்குகின்றது.

ஆனால் இந்த யுத்தத்தினால் உக்ரைன் அழிந்து சேதங்களுக்கு உள்ளாகி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. ரஷ்யாவானது, பலம் மிக்க அணுவாயுத வல்லரசு நாடு. உக்ரைனோ ரஷ்யாவை விடவும் எல்லா வகையிலும் பின்தங்கிய பலவீனமான நாடு. ரஷ்யாவின் படைபலம், ஆயுதப் பலம் உள்ளிட்ட எல்லா வசதிகளுடன் உக்ரைனை ஒப்பிடும் போது, மலைக்கும் மடுவுக்குமிடையிலான வித்தியாசத்தை அவதானிக்க முடியும்.

இவ்வாறு பலம் வாய்ந்த நாடு முன்னெடுத்திருக்கும் இப்போரில் ரஷ்யாவுடன் பெலாரஸும் உக்ரைனில் தனிநாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ள டொடன்ஷ், லூஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களும் கூட நேரடியாக இணைந்திருக்கின்றன.

இவ்வாறு ரஷ்யா உக்ரைன் மீது ஏன் போரை முன்னெடுக்கின்றது? என்பதுதான் எல்லோரையும் குடைந்தெடுக்கும் முக்கிய கோள்வியாக உள்ளது.

உக்ரைனானது 19 ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டின் ஒரு பகுதியாகவும், ரஷ்யாவின் ஒரு பகுதியாகவும் இருந்தது. என்றாலும் 1917 இல் ஏற்பட்ட ரஷ்ய புரட்சியைத் தொடர்ந்து 1922 இல் உருவான சோவியத் யூனியனில் 15 நாடுகள் இணைந்திருந்தன. அவற்றில் உக்ரைனும் ஒன்றாகும். சோவியத் யூனியனில் இணைந்திருந்த நாடுகளில் ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய நாடாக உக்ரைன் விளங்கியது. அத்தோடு சோவியத் யூனியனில் இருந்த நாடுகளில் உக்ரைன் அதிக முக்கியத்துவம் கொண்ட நாடாகவும் திகழ்ந்தது. இது இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியும் கூட.

Chernobyl nuclear plant

அதேநேரம் சோவியத் யூனியனின் அணுவாயுத தயாரிப்புக்கு உக்ரைன் முக்கிய பங்காற்றியுள்ளது. ரஷ்யாவின் மூன்றில் ஒரு பங்கு அணுவாயுத தயாரிப்பு கிடங்கு உக்ரைன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. என்றாலும் 1979 – 1989 வரையான ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் ஊடாக சோவியத் யூனியன் பொருளாதார ரீதியில் வீழச்சியடைந்தது. அதனைத் தொடர்ந்து சோவிய யூனியனில் அங்கம் வகித்த நாடுகள் 1991 இல் தனித்தனியாகப் பிரிந்து 15 நாடுகளாகின. அதில் உக்ரைனும் ஒன்றாகும்.

உக்ரைன் சோவியத் யூனியனில் இருந்து பிரியும் போது ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிகளவு அணுவாயுதங்களைக் கொண்ட நாடாக இருந்தது. இக்காலப்பகுதியில் அமெரிக்காவும், ரஷ்யாவும் அணுவாயுதங்களைக் கைவிட வேண்டுமென உலகின் பிறநாடுகளை வலியுறுத்திக் கொண்டிருந்தன. இது தொடர்பில் அணுவாயுதங்கள் பரவல் தடை ஒப்பந்தமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சூழலில் அணுவாயுதங்களை கைவிடுமாறு உக்ரைனிடமும் வலியுறுத்தப்பட்டது. இப்பின்புலத்தில் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்கட்டில் 1994 இல் கைச்சாத்திடப்பட்ட அணுவாயுத பரவல் தடை ஒப்பபந்தப்படி, அணுவாயுத கிடங்கை அகற்றவும், தம்மிடம் இருக்கும் அணுவாயுதங்களை ரஷ்யாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் இணக்கம் தெரித்ததோடு 1996 இல் அவற்றைக் கையளிக்கவும் செய்தது.

அதேநேரம், 1991 இன் பின்னர் உக்ரைனின் ஜனாதிபதிகளாகப் பதவியேற்றவர்கள் மறைமுகமாக ரஷ்யாவுக்கு ஆதரவானவர்களாக இருந்து வந்தனர். ஆனால் 2019 இல் பதவிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி, அமெரிக்க, ஐரோப்பிய சார்பு போக்கைக் கொண்டவராக இருந்து வருகிறார். அத்தோடு கிழக்கு ஐரோப்பிய நாடாக விளங்கும் உக்ரைன் மக்களில் பெரும்பகுதியினர் தம்மை ஐரோப்பிய நாடுகளுடன் இணைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். அத்தோடு உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த முயற்சிகளை தற்போதைய ஜனாதிபதி விரைவுபடுத்தினார்.

ஆனால் 1997 முதல் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளை நேட்டோவில் இணைக்க வேண்டாமென ரஷ்யா வலியுறுத்தி வருவதோடு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள தம் அண்டை நாடுகளை நேட்டோவில் இருந்து வெளியேற்றுமாறும் கோரி வருகிறது. ஆனால் நேட்டோ அக்கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அது தனது பாதுகாப்புக்கும் வணிக போக்குவரத்துக்கும் பாதிப்பாகவும் அச்சுறுத்தலாகவும் அமையும் என ரஷ்யா கருதி வருகிறது. அதேநேரம் சோவியத் யூனியனில் பிரிந்து தனிநாடாகும் போது ரஷ்யாவின் மூன்றிலொரு பங்கு அணுவாயுதக் கிடங்கைக் கொண்டிருந்த உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், தாம் எதிர்கொள்ளும் அணுவாயுத அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்க முடியும் என ரஷ்யா கருதுவதாகவே தெரிகிறது.

Zaporizhzhia nuclear power plant in south-eastern Ukraine

ரஷ்யா இப்போரை நகர்த்திச் செல்லும் விதம் அதற்கு நல்ல சான்றாக உள்ளது. போரை ஆரம்பித்த முதல் சில தினங்களுக்குள் உக்ரைனில் நீண்ட காலமாக செயலிழந்துள்ள செர்னோபில் (Chernobyl) அணுவாயுதகூடத்தைக் கைப்பற்றிய ரஷ்யா, ஐரோப்பியாவின் மிகப் பெரிய அணுவாயுத கூடமான சப்ரோஸ்ஸியாவை (Zaporizhzhia) கடந்த வெள்ளியன்று (4.3.2022) கைப்பற்றியது. அத்தோடு தனது அணுவாயுத தடுப்பு படையணியையும் தயார் நிலையில் வைத்திருக்கின்றது.

இவற்றின் ஊடாக உக்ரைன் மூலம் தான் எதிர்கொள்ளக் கூடிய அணுவாயுத அச்சுறுத்தலை தவிர்க்கவே ரஷ்யா எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால் இப்போரின் ஊடாக உக்ரைனும் அந்நாட்டு மக்களும் நேரடியாகவே பேரழிவுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அதேநேரம் இப்போரின் மறைமுகத் தாக்கங்களுக்கு உலகின் ஏனைய நாடுகள் முகம் கொடுப்பதையும் தவிர்க்கவே முடியாது. அதனால் இந்த யுத்தத்தை விரைவாகவும் வேகமாகவும் முடிவுக்கு கொண்டு வந்து அமைதி சமாதானத்தை ஏற்படுத்துவது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.

தினகரன்
2022.03.09

Tags: