இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள் சொல்லும் செய்திகள் என்ன..?

– சாவித்திரி கண்ணன்

ங்கே பாஜகவின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் அவங்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்! அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாஜகவின் பார்முலா! பஞ்சாப்பில் பாஜகவை பஞ்சராக்கிவிட்டார்கள் மக்கள்! மற்ற மாநிலங்களில் எப்படி வெற்றியை கொய்தது பாஜக?

பஞ்சாபில் பாஜக வசம் ஆட்சி இல்லாதால் அவர்களால் அங்கே வெற்றி பெற முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்த மேற்கு வங்க தேர்தலிலும் இதை நாம் பார்த்தோம்.

பஞ்சாப்பில் சென்ற சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது! சித்துவும், அமீந்தர்சிங்கும் உள்கட்சி சண்டையில் காங்கிரசை மிகவும் பலவீனப்படுத்திவிட்டனர். கிட்டதட்ட 30 சதவிகித தலித்துகளைக் கொண்ட பஞ்சாப்பில் முதல்வராக ஒரு மக்கள் செல்வாக்கில்லாத தலித்தான சரண்ஜித்சிங் சன்னியை முதலமைச்சராக்கியது காங்கிரஸ்! மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர். பஞ்சாபை எடுத்துக் கொண்டால் அது தமிழகத்தைப் போலவே பாஜகவை ஒரு தீண்டத்தகாத கட்சியாக பார்க்கும் மாநிலம் என்பது கவனத்திற்குரியதாகும். காரணம், மதவாத ஆபத்துகளையும், அழிவுகளையும் அது அதிகமாக அனுபவித்த மண்! காங்கிரஸ் அல்லது அகாலிதளம் ஆகிய கட்சிகள் தான் அங்கு மாறிமாறி ஆட்சிக்கு வரும்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் மீண்டும், மீண்டும் ஓட்டுப் போட்டு சலித்துப் போன மக்கள் தற்போது ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளனர். மற்றபடி இங்கு பாஜக காலூன்றுவதற்கான வாய்ப்பை மக்கள் மறுதலித்துவிட்டனர் என்பது கவனத்திற்கு உரியதாகும். பாஜகவுடன் கூட்டணி கண்டு பெரும் தோல்வியை சந்தித்துள்ள முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் தன் டுவிட்டர் பதிவில், “மக்களின் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். பஞ்சாபியர்கள் மதவெறி மற்றும் சாதிக் கோடுகளுக்கு அப்பால் உயர்ந்து வாக்களிப்பதன் மூலம் பஞ்சாபியத்தின் உண்மையான உணர்வைக் காட்டியுள்ளனர். பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பகவந்த் மான்க்கு வாழ்த்துக்கள்” என்று டுவிட்டரில் சரியாகவே தெரிவித்துள்ளார்.

இந்த ஐந்து மாநில முடிவுகளை நாம் பார்க்கும் போது, அதுவும் குறிப்பாக கடைசி நான்கைந்து மாதங்களாக உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் எழுச்சி கண்கூடாக வெளிப்பட்டது. பாஜக கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லாம் குறிப்பாக பிற்பட்ட சாதி தலைவர்கள் கூட்டம், கூட்டமாக அதிலிருந்து வெளியேறி சமாஜ்வாடிக்கு அணிவகுத்து வந்தார்கள்! மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றால் தங்கள் கதி என்னவாகும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், பாஜக மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது என்று தெளிவாக உணர்ந்து தான் அவர்கள் அணி மாறினார்கள்.

ஹாத்ராஸ் கற்பழிப்பு சம்பவம், லக்கிம்பூரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் பாஜகவின் ஆதிக்க அரசியலை நன்கு வெளிச்சம் போட்டு காட்டின. விவசாயிகளின் தொடர் போராட்டங்களின் அதிர்வுகள் உபியில் நன்றாகவே வெளிப்பட்டது. ஆன போதிலும் இந்த இடங்களில் எல்லாம் கூட பாஜக முழு பலத்துடன் வந்துள்ளது என்பதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு மேல் என்ன அநீதிகளை பார்க்க வேண்டும் என்று சொல்லத்தக்க அளவில் வெறுப்பு மற்றும் துவேஷ அரசியலையும், கொரானா காலகட்டத்தில் மிக மோசமான நிர்வாகத்தையும் பார்த்த மக்கள் எப்படி மீண்டும் இவர்களுக்கு அதிகாரத்தை தூக்கி கொடுப்பார்கள்! அது தற்கொலைக்கு சமமான செயல் என்று அவர்களுக்கு தெரியுமே!

உத்திரபிரதேசத்தில் களப்பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் அங்கே பாஜகவின் வீழ்ச்சியை நன்கு உணர முடிந்தது. இந்த சூழ் நிலையில் விழித்துக் கொண்ட பாஜக எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்காக அனைத்து வழிகளிலும் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்தது என்ற செய்திகள் தொடர்ந்து வந்தன! அதன் நீட்சியாகத் தான் அவர்கள் இரண்டு கட்டத்தில் நடத்தி முடிக்க வேண்டிய தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்தினார்கள்! தேர்தலில் என்னென்ன தில்லுமுல்லுகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்தனர். ஆனால், இது ஒருபுறமிருந்தாலும் எதிர்கட்சிகள் வாக்குகள் பலவாறாகப் பிரிந்தது தான் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம்!

கிட்டத்தட்ட 20 சதவிகித இஸ்லாமியர்களைக் கொண்ட உ.பியில் – அவர்கள் அடர்த்தியாக இருக்கும் இடத்தில் கூட பாஜக வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது. காரணம், அவர்களின் ஓட்டுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை.காங்கிரஸ், சமாஜ்வாதி, ஓவைசி, மாயாவதி மற்றும் உள்ளூர் கட்சிகள் இஸ்லாமிய ஓட்டுகளை சிதறடித்துவிட்டனர்.

காங்கிரஸ் தனியாக நின்று மிக மோசமான, வெட்கப்படும்படியான தோல்வியைக் கண்டுள்ளது. பிரியங்காவும், ராகுலும் எவ்வளவோ பிரச்சினைகளுக்கு அங்கு களம் கண்டாலும் உள்ளூரில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைமையையும், கட்சி கட்டமைப்பையும் உருவாக்க தவறியதால் இந்த அவமானகரமான தோல்வி ஏற்ப்பட்டுள்ளது. சமாஜ்வாதியும், காங்கிரசும் கைகோர்த்து இருந்தால் காங்கிரஸ் கவுரவமாக சில தொகுதிகளை பெற்று இருக்கும் -தமிழகத்தைப் போல! சமாஜ்வாடியும் தற்போதுள்ளதை விட கூடுதலாக ஐம்பது தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கும். ஆனால், அகிலேஷ் டெல்லியில் சோனியா கூட்டிய எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு கூட செல்ல மறுத்துவிட்டார். மூர்க்கமான குடும்ப அரசியலில் குடும்பத்தாரையே பாஜகவிற்கு பலி கொடுத்தார்!

உ.பியில் செல்வாக்கு பெற்ற சிறிய தலித் கட்சியின் தலைவரான சந்திரசேகர ஆசாத்தையும், ராஷ்டிரிய லோக்தள்ளின் ஜெயந்த் சதுர்த்தியையும் தன் கூட்டணிக்குள் கொண்டு வர சமாஜ்வாடி தவறிவிட்டது! இந்த இரண்டு இளம் தலைவர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை அகிலேஷ் கொடுக்க முன வந்திருந்தால் நிச்சயம் ஆட்சிக்கு வந்திருப்பார்! உ.பியில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று இருப்பது இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க மதவாத அரசியலை உச்சமாக செய்யும் மாநிலங்களில் ஒன்று உத்திரகாண்ட். இங்கு தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூட்டம் போட்ட இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும் என வெளிப்படையாக பேசினார்கள்! இந்த மாநிலத்திலும் தன் அதிகாரத்தை மீண்டும் உறுதிபடுத்திக் கொண்டது பாஜக!

கோவாவில் மிகக் கேவலமான கட்சித்தாவல் அரசியலை நடத்தி சென்ற முறை ஜெயித்து வந்த காங்கிரசை கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த பாஜக படுமோசமான நிர்வாகத்தையே தந்தது. கிறிஸ்த்துவ மக்களை அதிகமாகக் கொண்ட கோவாவிலும் பாஜகவே வெற்றி பெறுகிறது என்றால், என்ன கோளாறு எனப் பார்க்க வேண்டும்? பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை இங்கு புதிதாக களம் கண்ட திரிணமுல்லும், ஆம் ஆத்மியும் கணிசமாக அள்ளிக் கொண்டு பாஜக அரியணை ஏற வழிவகுத்து விட்டனர்! மணிப்பூரில் மணி பாலிடிக்ஸும், மத பாலிடிக்ஸும் சேர்ந்து ஆட்சியை பாஜகவிடம் தூக்கி தந்துள்ளன! சற்றே குறைவான தொகுதிகள் என்றாலும், பேர அரசியலில் கைதேர்ந்த பாஜக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்!

ஆக மொத்தத்தில் உத்திரபிரதேசத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்தும் முன்பை விட குறைவான தொகுதிகளையே பெற்றுள்ளது. கோவாவிலும், மணிப்பூரிலும் திக்கித் திணறி தான் இடங்கள் வந்துள்ளன! உத்திரகாண்ட்டில் இந்துத்துவம் வெற்றியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் மேன்மேலும் பலவீனப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தன்னை தீவிரமாக சுய பரிசீலனைக்கு உட்படுத்தி, முற்றிலுமாக தன்னை புனருத்தாரணம் செய்து கொண்டால் மட்டுமே அதற்கு எதிர்காலம்! இல்லாவிட்டால் அதன் எதிரிக்குத் தான் காலம்! இது நாட்டிற்கே கேடுகாலம்! எல்லாவற்றுக்கும் மேலாக ஆம் ஆத்மி என்ற சின்னஞ்சிறிய ஒரு யூனியன் பிரதேசத்திற்கான கட்சி இந்த தேர்தலின் மூலம் தன்னை தேசிய கட்சியாக உயர்த்திக் கொண்டுள்ளது என்பது மாற்று அரசியலுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என்பதற்கான அறிகுறியாகும்!

Tags: