உக்ரைன் போரும் நவீன முதலாளித்துவகால கொள்ளையும்

-பாஸ்கர்

போர் என்றதும் நம் மனதில் தோன்றுவது ஒரு நாடு மற்ற நாட்டை பிடிக்கச் செல்கிறது என்பதான ஒரு சித்திரம். விவசாயம், கால்நடை வளர்ப்பு முதன்மையாக நடந்த அந்த காலங்களில் இந்த உற்பத்தி சார்ந்த நிலங்களை ஆக்கிரமிப்பது போரிடும் அரசர்களின் நோக்கமாக இருந்தது, அல்லது கால்நடைகளை கவர்வது நோக்கமாக இருந்தது.

பின்பு வர்த்தகம் வளர்ந்து தங்க வெள்ளிக்காசுகள் பரிவர்த்தனை ஊடகமான பிறகு நிலத்தை ஆக்கிரமிப்பதோடு செல்வத்தின் உருவமான தங்கம் வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடிப்பதும் சேர்ந்து கொண்டது. வரலாற்றில் கஜினி முகமது, சிவாஜி என பலரும் இப்படியான கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முதலாளித்துவம் வளர்ந்து காகிதப்பணம் வந்து முதலீடு, தொழில்நுட்பம், மூலப்பொருட்கள், சரக்கு போக்குவரத்து, விற்பதற்கான சந்தை, மலிவான தொழிலாளர்கள் என உற்பத்தியின் பரிமாணம் பெருமளவு மாறிவிட்டது. முடியாட்சியில் இருந்து மக்களாட்சிக்கும் வந்து விட்டோம். போர்கள் இன்னும் நின்று விடவுமில்லை; போருக்கான நோக்கங்களும் பெரிதாக மாறிவிடவுமில்லை. மாறாக அதன் பரிமாணங்கள் பரந்து விரிந்திருக்கின்றன.

காலத்திற்கேற்ப மாறும் போரின் நோக்கம்

உக்ரைன் போரை பொறுத்தவரையில் போரின் குறுகியகால நோக்கம் ஐரோப்பிய சந்தைக்கு தேவையான எரிவாயு குழாய்கள் செல்லும் இந்த நாட்டை நேட்டோவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது.

உக்ரைனின் எல்லையை பயன்படுத்தி நேட்டோ ரசியாவின் எண்ணெய் எரிவாயு வளத்தைப் பிடிப்பதும், ஐரோப்பிய சந்தையை ரசியா தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைப்பதும் நீண்டகால நோக்கம். இது முதன்மையான நோக்கமே தவிர இந்த நோக்கம் மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது.

அமெரிக்காவின் இன்றைய முக்கிய பிரச்சனை கொரோனா வந்தபிறகு கிட்டத்தட்ட ஏழு ட்ரில்லியன் டொலர் பணத்தை அச்சிட்டதால் ஏற்பட்ட பணவீக்கமும் விலைவாசி உயர்வும். இப்போது மிகையாக சந்தையில் இருக்கும் டொலர்களை மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளிழுக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும்.

அமெரிக்க மக்களின் வங்கிக் கணக்கில் போட்ட பணம் ஏற்படுத்திய தேவை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இப்போது வட்டியை உயர்த்தினால் உற்பத்திக்கான முதலீடு கிடைப்பது கடினமாகிவிடும். தேவையும் குறைந்து உற்பத்தியும் குறைந்தால் அது தேக்க பணவீக்கத்தை (stagflation) ஏற்படுத்தும். எனவே இதற்கு மாற்றுவழி கண்டாக வேண்டும்.

இன்றைய வர்த்தகம், பரிவர்த்தனை, செல்வம்

உலக நாடுகள் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுவது அனைவரும் அறிந்தது. இந்த ஏற்றுமதியும் இறக்குமதியும் ஒரே நேரத்தில் நடைபெறுவதில்லை.

ஆதலால் நாடுகள் பொருளை கொடுத்து டொலரை வாங்கிக் கொள்கின்றன. பின்பு தேவையின்போது இந்த பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கிக் கொள்கின்றன. தேவைக்கு போக எஞ்சியவற்றை கையிருப்பாக வைத்திருக்கின்றன. இதனை மற்ற நாணயமாகவோ தங்கமாகவோகூட மாற்றி வைத்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் இவை டொலராகவும் யூரோக்களாகவும் வைக்கப்படுகின்றன.

இந்தக் கையிருப்பை ஒரு நாட்டுக்குள் மட்டுமல்ல நாடுகள் தாங்கள் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளிலும் வைத்திருப்பார்கள்.

ஒரு நாட்டிலுள்ள ஒருவர் பொருளை ஏற்றுமதியோ இறக்குமதியோ செய்துகொண்டு அதற்கான பணத்தை பெறவோ தரவோ அவரின் வங்கிக்கணக்கில் இருந்து வங்கியின் மூலமாக மற்ற நாட்டு வங்கிக்கு செய்தி அனுப்பப்படும். அது வங்கிகளின் பரிமாற்ற அமைப்பான SWIFT வழியாக மற்ற வங்கிக்கு சென்றடையும். செய்தி கிடைத்தவுடன் அந்த நாட்டில் இருக்கும் வங்கி உரிய நபரின் கணக்குக்கு பணத்தை செலுத்தும்.

நவீன கொள்ளை

இந்த கையிருப்பு பணமான டொலரும் யூரோவும், செய்தி பரிமாற்ற SWIFT அமைப்பும் அமெரிக்க மற்றும் மேற்குலகின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, ஒரு நாட்டை இந்த அமைப்பில் இருந்து நீக்கும்போது அது உலக வர்த்தக அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுகிறது. இரண்டாவதாக, அந்த நாடு கையிருப்பாக வைத்திருக்கும் பண இருப்பை முடக்கி விட்டார் அந்த நாடு இதுவரையிலும் சேர்த்த செல்வத்தை இழந்து அதன் வர்த்தகமும் பொருளாதாரமும் முடக்கப்படுகின்றன, அவை செயலிழக்கச் செய்யப்படுகிறன்றன.

இதனை நவீன நிதியத் தாக்குதல் (financial warfare) என்கிறார்கள். இத்தகைய தாக்குதலுக்கு உலக மக்களின் ஒப்புதலை பெறும்வகையில் குறி வைத்துள்ள நாட்டின் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வலுவான ஊடகத்தை பயன்படுத்தி உலகம் முழுக்க பரப்பி ஒரு பொதுவான கருத்தை கட்டமைக்கிறார்கள். அதனை தகவல்தொடர்புப் போர் (infowar) என்கிறார்கள்.

2008-ல், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இப்போது போலவே ட்ரில்லியன் கணக்கில் டொலரை வெளியிட்டதால் பணவீக்கம் ஏற்பட்டது. அப்போது, ஈரான் மீது அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, 2012-ல் அந்நாடு ஸ்விப்ட் (SWIFT) அமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. அதன் 100 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இப்போது உக்ரைனுக்கு நேட்டோவில் இணைய உரிமை இருக்கிறது என்பதைப்போல ஈரானுக்கு அணு ஆயுதம் தயாரிக்க உரிமை இருக்கிறது என்று யாரும் பேசவில்லை. எண்ணெய் ஏற்றுமதி சந்தையில் இருந்து ஈரான் ஓரம் கட்டப்பட்டு அதன் யப்பான், தென்கொரியா, இந்தியச் சந்தைகள் கைப்பற்றப்பட்டன.

2019-ல் எண்ணெய் உற்பத்தி செய்யும் மற்றொரு நாடான வெனிசுவேலாவில் உள்நாட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வெனிசுவேலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. வெனிசுவேலாவின் எண்ணெய் சந்தையும் இல்லாமல் ஆக்கப்பட்டது. அந்த நாட்டின் மில்லியன் கணக்கான டொலர் சொத்துக்கள் முடக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தேடுக்கப்படாத அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட எதிர்த்தரப்பு அரசியல்வாதி குவைடோவின் அரசியல் செலவுகளுக்கு அந்தப் பணம் திருப்பிவிடப்பட்டது.

இதேபோல பில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தானின் சொத்துக்களை முடக்கி வைத்திருந்த அமெரிக்கா அந்த மக்கள் உணவுக்கு வாடும் சூழலில் அந்தப் பணத்தை 7/11 தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறது.

அடுத்த நாட்டின் சொத்தை அபகரித்து முடக்குவது மட்டுமல்ல அதனை இவர்கள் விருப்பம் போல பயன்படுத்தும் சட்ட அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது என்று யாரும் கேட்பதில்லை. எல்லை கடந்து நீளும் இந்த (அ)நீதிக் கரங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை.

களவாடப்பட்ட ரசியாவின் செல்வம்

இப்போது உக்ரைன் போரைத் தொடர்ந்து ரசியாவின் வங்கிகள் அனைத்தும் ஸ்விப்ட் (SWIFT) அமைப்பில் இருந்து விலக்கி ரசியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ரசியாவின் 643 பில்லியன் டொலர் சொத்தில் 25% ரசியாவிலும் சீனாவிலும் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ள எஞ்சிய 400 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களை அந்த நாடு இப்போது பயன்படுத்த முடியாது.

இதற்கும் அமெரிக்க பணவீக்கத்தை குறைக்க டொலரை உள்ளிழுப்பதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல இயலாது. வருடாந்திர அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் பேசிய பைடன், சாலைகள், பாலங்கள் என மிகப்பெரும் அளவில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாக அறிவித்தார். பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் புதிய டொலர் வெளியீடு செய்யமுடியாத சூழலில் இதற்கான பணம் எங்கிருந்து வரும் என அவர் சொல்லவில்லை. மேலும் ரசியா தனது ஆக்கிரமிப்புக்கான விலையை கொடுக்கும் என்றும் சொன்னார். அதன் பொருள் இந்த முடக்கப்பட்ட சொத்துக்களா? அல்லது இதன்மூலம் சந்தையில் குறையும் டாலர் புழக்கத்துக்கு ஏற்ப அமெரிக்காவின் தேவைக்கான புதிய கடன் பத்திரங்களை வெளியிடுவதா என்பதும் தெரியவில்லை.
மேலும் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பின் இப்போது அணிவகுத்திருப்பதாக சொன்னதும் அவையில் கரவொலி எழுந்தது. ஆம்.. ஜெர்மனி முழுவதுமாக அமெரிக்க சார்புநிலைக்கு வந்திருக்கிறது. ஐரோப்பாவில் நடுநிலை வகித்தர்வர்கள்கூட நேட்டோவில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

ரசிய எரிவாயு சார்பை உடைப்பதில் முழுவீச்சாக ஐரோப்பா ஈடுபட்டிருக்கிறது. ஜெர்மனி கப்பல் வழியாக வரும் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிதாக இரண்டு இறக்குமதி நிலையங்கள் கட்டப்போவதாக சொல்லி இருக்கிறது.

அமெரிக்காவின் எரிவாயுவும் அதன் ஆதரவு கத்தார் நாட்டின் எரிவாயுவும் ரசியாவின் இடத்தை இப்போதைக்கு பூர்த்தி செய்யும். ரசியாவில் இருந்த முக்கிய எண்ணெய் நிறுவனங்களான அமெரிக்காவின் எக்ஸ்சான்மொபில், இங்கிலாந்தின் பிபீ போன்ற நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவித்திருக்கின்றன. மற்ற அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. ரசியாவுடனான ஐரோப்பிய எண்ணெய் கும்பலின் கூட்டு உடைக்கபட்டு இருக்கிறது. ரசியா மேற்கின் தொடர்பில் இருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு உதவிய உக்ரைன் என்ன பெற்றது?

உக்ரைன் பெற்றதென்ன?

அந்த நாட்டின் அதிபர் செலன்ஸ்கியிடம் அவர் வெளியேற உதவுவதாக சொன்னபோது “எனக்கு இடம் வேண்டாம் எங்களுக்கு போரிட ஆயுதங்கள் கொடுங்கள்” என்றார். உடனே பல மில்லியன் பெறுமான ஆயந்தங்களை மேற்கு நாடுகள் வழங்கின.
அடுத்து “போரிட ஆட்கள் வேண்டும்” என்றார்.

உணர்வை தூண்டும் முகநூல் பதிவுகள் நிரம்பி வழிந்தன. சிரியா போருக்கு ஐரோப்பிய இசுலாமியர்களை துருக்கி வழியாக அனுப்பி போரிட வைத்ததுபோல ரசிய எதிர்ப்பு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஆட்கள் திரட்டப்பட்டு போலந்து எல்லையில் நிற்கிறார்கள்.

அடுத்து “எங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். “பார்க்கலாம்.. ஆனால் அது நீண்ட காலம் பிடிக்கும் நடவடிக்கை” என்றார் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்.

அடுத்து “உக்ரைனின் பில்லியன் டொலர் பெறுமான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார். அதுபற்றி பேச்சுமூச்சு எதுவும் இல்லை.

சமூக ஊடகங்கள் வாயிலாக ரசியாவுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தும் உளவியல் போரிலும் பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் நிதியப்போரிலும் மேற்கு வெற்றி பெற்றாலும், உக்ரைன் களப்போரில் 70% படைத்திறனை இழந்து பல பகுதிகளில் சுற்றி வளைக்கப்ட்டிருக்கிறது. உக்ரைனியர்களின் வீரமிக்க போராட்டத்தை நினைவில் கொள்வோம் என்னும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் உருசலா வான் டெர் லேயனின் பேச்சு இந்தப் போரில் தோற்கப் போகும் உக்ரைனுக்கு வாசிக்கும் இரங்கற்பாவை போன்றிருக்கிறது.

அடுத்து உள்நாட்டு குழப்பம், கொரில்லா போர் என உக்ரைனை ரசியாவின் புதைகுழியாக்கும் ஆலோசனைகளும் அமெரிக்க வட்டத்தில் வலம் வருகிறது.மொத்தத்தில், உக்ரைனியர்கள் உயிரை விட்டததைத் தவிர வேறு எதையும் அடைந்ததாக தெரியவில்லை.

ரசியாவின் பதிலடி நடவடிக்கைகள்

பொருளாதார இழப்பை சந்தித்து தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் ரசியா செயற்கைக்கோள்களை ஏவப்பயன்படும் ராக்கெட் என்ஜின்களை அமெரிக்காவுக்கு கொடுக்க மறுப்பதாக அறிவித்துள்ளது. ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயுவை நிறுத்தப் போவதாகவும் கூறி தனது பதிலடிகளை தொடங்கி இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை 120 டொலர்களை தாண்டியும் எரிவாயுவின் விலை இரண்டு மடங்காகவும் ($5/MMBTU) அதிகரித்திருக்கிறது. எல்லா பொருட்களின் விலையும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி வர்த்தக சூதாடிகள் விலையை ஏற்றி கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொழுத்திப்போட்டு எரிய விடப்பட்டுள்ள இந்த போரில் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களும், அரசியல், வர்த்தக, வணிக சூதாடிகளும் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். உசுப்பி விடப்பட்டு மதியிழக்கச் செய்த மக்கள் இதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரசியாவில் இருந்து வெளியேறும் மேற்கின் இடத்தை சீன நிறுவனங்கள் பிடிக்கலாம். ரசிய எரிபொருள் சீனச் சந்தைக்கு திரும்பலாம். அப்படி நடந்தால் சீன நாணயமான யுவானின் கையிருப்பு அளவும் சீனாவின் பண பரிவர்த்தனை அமைப்பின் வலுவும் கூடும்.
இந்த எண்ணெய், எரிவாயு விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபேக் (OPEC) மறுத்துவிட்டது. எண்ணெய்ச் சந்தையை நிலைப்படுத்த ரசியாவும் சவுதியும் இணைந்து செயல்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ரசியாவுக்கு எதிரான தீர்மானத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஈராக் என அனைத்தும் ஆதரிக்க மறுத்துவிட்டன. முன்பு சந்தையில் இருந்து தான் வெளியேற்றிய ஈரானையும், வெனிசுவேலாவையும் சந்தைக்குள் கொண்டுவரும் வேலைகள் தொடங்கி இருக்கிறது. அதன்படி, ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சி இறுதியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்போது அது ரசியா-ஈரான் வர்த்தக பொருளாதார நடவக்கைகளை பாதிக்காது என எழுத்துபூர்வ உறுதிவேண்டும் என ரசியா கேட்கிறது.
வெனிசுவேலாவை வீழாமல் காக்க சீன-ரசிய நாடுகள் உணவு, பணம், படை, போர்விமானம் வரை அனுப்பின. இப்போது இவர்களின் முதுகில் வெனிசுவேலாவை குத்தவைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

ஈரான் இதுவரை இவர்களிடம் பட்டதை மறந்திருக்க வாய்ப்பில்லை ஆதலால் அவர்கள் இந்த வலையில் விழும் வாய்ப்பும் குறைவு. சுருக்கமாக ஐரோப்பாவை தன்பின்னால் அணிவகுக்க வைத்த அமெரிக்காவால் ஆசிய நாடுகளை அணிவகுக்கச் செய்யமுடியவில்லை. அனைத்தும் ரசிய சார்பு அல்லது நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.

ஐரோப்பாவைபோல ஆசியாவையும் அணிவகுக்க செய்ய….

இந்த ஆசிய நாடுகளை தன்பின்னால் அணிவகுக்க அடுத்தகட்ட நகர்வுகளும் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. இந்தோ-பசிபிக் குவாடு (அமெரிக்கா-இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டு) கூட்டத்தை நடத்துதல், இந்த நான்கு நாடுகளின் கூட்டில் தைவான் இணைய விருப்பம் தெரிவித்தல், தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் அரசுமுறை பயணமாக வருகை என வேலைகள் வேகம் பிடிக்கிறது.

முன்னாள் சிஐஏ தலைவரும் முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளருமான போம்பேயோ தைவானில் நான்கு நாட்கள் தங்கி இந்தத் தீவு தனிநாடாக இருக்க வேண்டும் என உசுப்பி விடுகிறார். தைவானை சீனா தனது நாட்டின் பகுதியாக சொந்தம் கொண்டாடுகிறது. தைவானை தனிநாடாக அங்கீகரித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறுகிறது.

இந்நிலையில் போர்மேகம் ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு நகர்வதுபோல தெரிகிறது. இதற்கு சீனாவின் பதில் ராணுவ நடவடிக்கையாக இருக்கும் பட்சத்தில் இந்தியா இதிலும் நடுநிலை வகிக்குமா? என்பது கேள்விக்குறி.

இந்தியாவின் மின்னணு பொருளாதார மாற்றங்கள் அமெரிக்க தொழில்நுட்பத்திலும் அவர்களின் நிறுவனங்களின் முற்றுருமையில்தான் நடக்கிறது. ஜியோவின் தொழில்நுட்பமும், மூலதன அடித்தளமும் முகநூலும், கூகிளும்தான். இந்தியாவின் அறுநூறு பில்லியன் டாலர் கையிருப்பு இப்படி அன்னிய நிறுவனங்களின் முதலீட்டின் மூலம் கடனாக வந்ததுதான்.

எரிபொருள் விலை கூடி பொருளாதாரம் நலிவடைந்துவரும் இந்தச் சூழலில் நிதிச் சந்தையில் இருந்து இவர்கள் வெளியேறினால் 1990-களில் இந்தியா சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடியை ஒத்த சூழலை சந்திக்க வேண்டிவரும்.

குறுகியகால வெற்றி நீண்டகால பிரச்சனைகள்

தற்காலிகமாக ஐரோப்பாவில் ரசியாவின் எரிவாயு சந்தையை உடைப்பது, ஐரோப்பிய நாடுகளை தன்பின்னால் அரசியல்ரீதியாக அணிவகுக்கச் செய்வது, அமெரிக்காவின் உள்நாட்டு பணவீக்கத்திற்கு பகுதியளவு தீர்வு, எண்ணெய் கும்பலின் அரசியல் ஆதிக்கத்தை உடைப்பது என பல நோக்கங்களில் அமெரிக்கா வெற்றி கண்டிருக்கிறது.

ரசியா உக்ரைனை கட்டுக்குள் கொண்டுவந்து தனது பாதுகாப்பையும் பேரவலிமையையும் தக்கவைத்துக் கொள்ள சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் வாய்ப்புகளையும் பிரச்சனைகளையும் சீனா கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.

நீண்டகால நோக்கில் இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். உதாரணமாக நாடுகள் இனி டொலர் கையிருப்பை வைத்திருக்க தயங்குவார்கள் என்கிறார் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பாவெல். ரசியாவின் நிலையை பார்க்கும் சீனா தன்னிடம் உள்ள 2 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு மாற்றாக தங்கம் போன்ற மாற்றை நோக்கி நகரும். அதேபோல ஐரோப்பாவின் 40% எரிவாயுத் தேவையையும் உலகின் 10% எண்ணெய் தேவையையும் ஈடுசெய்யும் ரசியாவை பதிலீடு செய்வது கடினம். உலகின் எரிபொருள் விலையேற்றத்தையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாது. அது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த பிரச்சனைகளை வைத்து அமெரிக்கா குளிர் காய்ந்தாலும் நீண்டகால நோக்கில் பணவீக்கத்தை எப்படி தீர்ப்பது என்பதை நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

  1. அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிப்பது.
  2. பணக்காரர்களின் மீதான வரிவிதிப்பு.
  3. அமெரிக்க தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை மணிக்கு 15 டொலர்களாக அதிகரிப்பது.
  4. தொழிலார்கள் சங்கங்கள் வைக்க நிறுவனங்களை அனுமதிக்க வைத்து அவர்களின் பேரவலிமையை கூட்டுவது.

ஆக அமெரிக்க நிதிமூலதனத்தை அனுமதித்து அதன்மூலம் உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி செய்து டொலரை ஈட்டி கடனை அடைத்து மூலதன வலிமையை பெற்று தொழிற்துறை நாடாவது என்ற இந்தியாவின் பாதை போகாத ஊருக்கு வழி என்பது தெளிவாக புலனாகிறது. அப்படியே அதில் வெற்றி பெற்றாலும் ஒரு பொருளாதாரத் தடையின் மூலம் ஒட்டுமொத்த செல்வத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். இனிவரும் காலம் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கான காலமில்லை.

இந்தியப் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பி தீர்வுகாணும் விதமாக இந்த தேசபக்தர்கள் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து நம்மை ஒரு போரில் கொண்டுபோய் சிக்கவைக்கும் அபாயமும் இருக்கிறது.

ஆகவே இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும். நேருகால அணிசேராக் கொள்கையை கடைபிடிக்க அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். குறுகியகால நோக்கில் எந்த சிக்கலிலும் இந்திய உயிர்கள் பலியாவதை தடுக்க வேண்டும். நீண்டகால நோக்கில் இந்திய பொருளாதார சிக்கலை தீர்க்க மாற்று பாதைகளை சிந்திக்க வேண்டும். இவை அனைத்தும் நமது இன்றைய இன்றியமையாத தேவையும் கடமையும் ஆக மாறி இருக்கிறது.

Tags: