காலத்தின் தேவையே பகத்சிங்கை வளர்ந்தெடுத்தது
–ச.லெனின்
மார்ச் 23: பகத்சிங் நினைவு தினம்
“காலத்தின் தேவையே நம்மை இவ்வாறு வளர்த்தெடுத்துள்ளது. கம்யூனிசத்தின் தந்தை என்று கூறப்படும் கார்ல் மார்க்ஸ்கூட, உண்மையில் அந்தத் தத்துவத்தின் மூலகர்த்தா அல்ல என்றே நான் கூறுவேன். ஐரோப்பாவில் நடைபெற்ற தொழிற்புரட்சியே அத்தகைய மனிதர்களை வளர்த்தெடுத்தது. மார்க்ஸ் அவர்களில் ஒருவர். குறிப்பிட்ட பாதையில் அக்காலச்சக்கரத்தை முடுக்கிவிட்டதில் மார்க்சுக்கு ஒரு முக்கியமான பங்குண்டு என்பது உண்மையே” என்று சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
வரலாற்றில் தனிநபர்கள்
இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் மற்றும் மார்க்சிய நோக்கில் ‘வரலாற்றில் தனிநபர்கள்‘ என்கிற அம்சத்தை பகத்சிங்கின் எழுத்து பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது. மார்க்ஸ் பற்றி பகத்சிங் குறிப்பிடுவது சற்று அதீதமான பார்வையாகக்கூட தெரியலாம். ஆனால், காலத்தின் தேவையே வரலாற்றில் தனிநபர்களை உருவாக்குகிறது என்பதையே அவர் இங்கு முன்வைக்கிறார்.
“கம்யூனிஸ்ட் அறிக்கை‘‘ –க்கு 1883 இல் எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் “அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து வரலாற்று ரீதியான ஒவ்வொரு சகாப்தத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாய கட்டமைப்பும், அந்தந்த சகாப்தத்தின் அரசியல் வரலாற்றுக்கும் அறிவுத்துறை வரலாற்றுக்குமான அடித்தளமாக அமைகின்றன” என்கிறார். பகத்சிங்குடைய வாதத்திற்கான நியாயத்தை எங்கெல்சின் இவ்வரிகள் வழங்குகின்றன.
“கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” எனும் தனது நூலில் இதுகுறித்து மேலும் விரிவாகவே எங்கெல்ஸ் எழுதியுள்ளார். “சோஷலிசம் என்பது எதார்த்தத்தில் நிலவும் இந்த மோதலினால் (உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே நிகழும் மோதலினால்) சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறில்லை” “உண்மையில் இம்மோதல் நமக்குப் புறத்தே, இம்மோதல்களை உருவாக்கிய மனிதர்களின் எண்ணத்தையும் செயல்களையும்கூடச் சாராமல் தன்னியல்பாக நிலவுகிறது” “சோஷலிசம் என்பது ஏதோவோர் அறிவுசார் மூளையின் தற்செயலானகண்டுபிடிப்பல்ல. வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்’‘ என்கிற எங்கெல்சின் வார்த்தைகளை “கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்கூட இந்த தத்துவத்தின் மூலவர் அல்ல என்றுகூட நான் கூறுவேன்” என்கிற பகத்சிங்கின் வார்த்தைகளோடு இணைத்துப் பார்ப்பது சரியான புரிதலை வழங்கும்.
மார்க்ஸ் காலத்திற்கு முன்பு கற்பனாவாத சோசலிசம் பேசியவர்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தனர். ஆனால் முதலாளித்துவ அமைப்பு முறையில், சுரண்டல் எதில் அடங்கியிருக்கிறது எனும் ரகசியத்தை தோலுரிப்பதும், குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தில் முதலாளித்துவம் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டாலும் பிறகு தவிர்க்க முடியாத வகையில் அது வீழும் என்பதையும் கற்பனாவாத சோசலிசவாதிகள் கண்டறிய முடியவில்லை. அதை மார்க்ஸ் கண்டறிந்தார். “வரலாறு பற்றி பொருள்முதல்வாதக் கருத்துரு, உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய இரகசியத்தின் வெளிப்பாடு ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்கு கடமைப்பட்டுள்ளோம்’‘ என்கிறார் எங்கெல்ஸ். மேலும், தொழிலாளியிடம் இருந்து “ஊதியம் தரப்படாத உழைப்பை உறிஞ்சி கொள்வதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் அதன் கீழ் தொழிலாளி சுரண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறது என்பதை (மார்க்ஸ் கண்டறிந்த உபரி மதிப்பின் மூலம்) எடுத்துக் காட்டப்பட்டது”என்கிறார்.
கற்பனாவாத சோசலிசம் எனும் நிலையிலிருந்து விஞ்ஞான சோசலிசத்தை நோக்கிய “குறிப்பிட்ட பாதையில் காலச்சக்கரத்தை முடுக்கிவிட்டதில்“ மார்க்சின் உபரி மதிப்பு மற்றும் முதலாளித்துவ இயங்கு முறை குறித்த பங்களிப்பு, கணிசமானதொரு பாத்திரத்தை வகித்தது என்பதை எங்கெல்சின் வார்த்தைகளே நமக்கு வழங்குகிறது.
வரலாற்றை மக்களே படைக்கின்றனர்
பொதுவாகவே மக்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிடுவதும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் தகுதி அவர்களுக்கு இல்லை என்றும், ஆளும் வர்க்கம் மக்களின் பொதுப் புத்தியில் ஏற்றிவைப்பது வழக்கம். எனவே, மக்களை மீட்க ஒரு மீட்பர் வருவார்; அவரே மக்களை அனைத்து துயரங்களிலிருந்தும் மீட்பார் என்று கட்டியமைக்கிறது.
வரலாற்றை தனிநபர்கள் படைப்பதில்லை; ஆனால் வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானதாகும். வரலாற்றைத் தனிநபர்கள் படைக்கிறார்கள் என்பது முதலாளித்துவ சிந்தனை போக்காகும். அத்தகைய முதலாளித்துவ கல்வி முறைதான் இந்திய விடுதலை உள்ளிட்ட எல்லா வரலாறுகளையும் யாரோ ஒருவர் சாதித்தது போல் கட்டமைத்துள்ளது. உண்மையில் வரலாற்றை மக்களே படைக்கிறார்கள். உலகில் நடைபெற்ற அத்துணை சமூக மாற்றங்களும் மக்களால் படைக்கப்பட்டதே அன்றி தனிநபர்களால் அல்ல என்பதை மக்கள் வரலாறு சொல்லுகிறது. மார்க்சியம் மக்களின் வரலாற்றைப் பேசுகிறது. பகத்சிங்கும் அதையே கூறுகிறார்.
வராலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்பதையும் பகத்சிங் அறிந்தே இருந்தார். அதேநேரத்தில் மக்கள் திரள் போராட்டம், கூட்டு செயல்பாடு, அமைப்பின் அடித்தளமாக இருக்கும் தோழர்களின் உழைப்பு ஆகியவற்றின் மேன்மையையும் அவசியத்தையும் அவர் பல இடங்களில் பேசியுள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் உயிர்த்தியாகம் அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளது. பகத்சிங் மற்றும் அவர்தம் தோழர்கள் தூக்கிலிடப்பட்டபோது தேசமே உணர்ச்சி மேலிட்டு கொதித்தெழுந்தது. காந்திக்கு நிகரான புகழோடும் மக்கள் செல்வாக்கோடும் பகத்சிங் அன்று இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய அக்கட்சியின் முன்னோடி பட்டாபி சீத்தாராமையா குறிப்பிடுகிறார். அப்படியான நிலையிலும் பகத்சிங் தனிநபர் மாயைக்கு ஆட்படாமலே இருந்தார். வீரதீர செயல்களில் பங்கெடுப்பவர்களையும் ஆட்சியாளர்களால் அரசியல் காரணங்களுக்காக தூக்கிலிடப்படுபவர்களையும் தானாக புகழ் தேடி வருகிறது. ஒரு பெரிய மாளிகையின் முகப்பில் பதிக்கப்பட்ட வைரம் போன்று அவர்கள் காட்சிப்படுத்தப்படுகின்றனர். ஆனால், அம்மாளிகையை நிமிர்ந்து நிற்க வைத்துள்ள சாதாரண அஸ்திவார கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை என்று மிகுந்த தன்னடக்கத்துடன் பகத்சிங் குறிப்பிடுகிறார். இதன்மூலம், எவ்வித ஆரவாரமும் இன்றி சமூக மாற்றம் என்கிற லட்சியத்திற்காக ஒரு புரட்சிகர இயக்கத்திற்குள் பணியாற்றும் ஆற்றல் மிகுந்த செயல்பாட்டாளர்களின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைக்கிறார்.
“சோசலிசம் மற்றும் கம்யூனிச சிந்தனைகளை, நீயோ நானோ இங்கு விதைக்கவில்லை. நாம் வாழும் காலகட்டத்தின் சூழ்நிலைகளும் அதன் விளைவால் ஏற்பட்டுள்ள கட்டாயமும் நம்மை அச்சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு செய்துள்ளன. இச்சிந்தனைகளைப் மக்களிடம் எடுத்துச்செல்ல நாமும் சிறிது பங்காற்றியுள்ளோம் என்பது உண்மை.” என்று சுககேவிற்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் குறிப்பிடுகிறார். எந்த தனி நபருக்காகவும் வரலாறு காத்துக்கிடப்பதில்லை. காலம் அதன் தேவையை கருத்தில்கொண்டு, தனிநபர்களை உருவாக்கி வளர்த்து முன்னோக்கி பாய்ந்து கொண்டே உள்ளது.
மதம் சார்ந்த தேசியம்
பகத்சிங்கிற்கு முன்பும் பின்பும் பல இளம் போராளிகள் தேச விடுதலைக்காக தங்களின் உயிரை தியாகம் செய்தபோதும், பகத்சிங் அவர்களிலிருந்து தனித்துவமாக நிற்பதற்கான காரணம் அவரது சித்தாந்தத் தெளிவாகும். இன்று மதவாத சக்திகள் மக்களை பிளவு அரசியலை நோக்கி அணி திரட்டி வரும் தருவாயில், பகத்சிங்கின் சித்தாந்தத் தெளிவும், இந்திய புரட்சி இயக்கத்தில் அவர் ஏற்படுத்திய தத்துவார்த்த தாக்கமும் கவனிக்கத்தக்கதாகும். இன்றுள்ளதுபோன்ற மதவெறி அரசியலோ, தேச பிரிவினையின்போது நிகழ்ந்த மதமோதல்களோ பகத்சிங் வாழ்ந்த காலத்தில் இல்லாதபோதும், மதப்பற்றில் மூழ்கிய உணர்வு வயப்பட்ட செயல்பாடுகளை கடந்த, பொது நோக்குடன் கூடிய, பக்குவப்பட்ட, தேர்ந்த அரசியலை பகத்சிங் கைக்கொண்டிருந்தார். பகத்சிங்கே கூறுவதுபோல் அது காலத்தின் தேவையிலிருந்து அவர்கள் வந்தடைந்த இடமாகும்.
பகத்சிங்கின் காலத்திற்கு முந்தைய புரட்சிக் குழுக்கள் எல்லாம் கடவுள், மதம் உள்ளிட்ட பழமைவாத போக்குகள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவைகளாகவே இருந்தன. பகத்சிங் கடவுள் மறுப்பாளராக இருந்ததும், “நான் ஏன் நாத்திகன்” என்கிற தனது நூலில் நாத்திகத்தை அவர் பற்றி நிற்பதற்கான காரணங்களை விளக்கியிருப்பதும், அவருக்கு முந்தைய புரட்சிக் குழுக்களின் நிலைபாட்டிலிருந்து எவ்வளவு முற்போக்கான வளர்ச்சிக் கட்டத்தில் அவர் நின்றார் என்பதை எடுத்துக்காட்டியது.
லோகமான்ய பால கங்காதர திலகர் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர். ஆனால் அவர் விடுதலை போராட்ட களத்தில் வெள்ளையர்களையும் அவர்களின் அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதற்கு மத ரீதியான உணர்வுகளை மையப்படுத்தி செயலாற்றினார். 1897 காலகட்டத்தில், பூனாவில் பிளேக் நோய் பரவியபோது அதை கட்டுப்படுத்துவதற்காக ராண்ட் எனும் வெள்ளை அதிகாரி நியமிக்கப்பட்டார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தோடு பூனாவை விட்டு வெளியேற வேண்டுமென்று கூறி கடும் அடக்குமுறைகளை ஏவினார். பிளேக்கை கட்டுப்படுத்த , பிளேக் நோய்க்கு காரணமான எலிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். ராண்ட் ஏவிய அடக்குமுறையை எதிர்கொள்ள, எலிகள் நமது விநாயகரின் வாகனம்; அதை வெள்ளையர்கள் அழிக்கிறார்கள் என்று உணர்வு ரீதியான பிரச்சாரத்தையே திலகர் மேற்கொண்டார்.
இச்சூழலில்தான் சபேகார் சகோதரர்கள் ராண்ட் மற்றும் அவர்ஸ்ட் ஆகிய வெள்ளை அதிகாரிகளை 1897 ஜூன் 22 அன்று சுட்டுக் கொன்றனர். இந்து மதத்திற்கு எதிராக உள்ளவர்களை அழிப்பதற்கான சங்கம் (Society for the Removal of Obstacles to the Hindu Religion) எனும் அமைப்பை சபேகார் சகோதரர்கள் 1894 லேயே உருவாக்கியிருந்தனர். அச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சியும் ராணுவ பயிற்சியும் வழங்கப்பட்டது. அது இந்து மதத்தை பாதுகாப்பதற்கான சங்கம் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வமைப்பினர் ஆண்டுதோறும் சிவாஜி மற்றும் விநாயகர் திருவிழாக்களை நடத்தினர். அதில் வெளிப்படையாகவே இந்து மதத்திற்கு எதிராக உள்ளவர்களை எதிர்க்க வாள் ஏந்தவேண்டும் என்றனர். இந்த யுத்தத்தில் நமது உயிரை துச்சமாக மதிக்க வேண்டும் என்றனர். “ஐயகோ, கொலைகார பாவிகள் நம் பசுக்களையும் பசுங்கன்றுகளையும் கொன்று குவிக்கிறார்களே” என்று வெள்ளையர்களுக்கு எதிரான வாசகமாக கணபதி ஸ்லோகங்களில் பாடினர். மேலும் “இவர்கள் எப்படி வெள்ளையர்களுக்கு எதிராக இருந்தார்களோ, அதே அளவுக்கு முஸ்லீம்களுக்கு எதிராகவும் இருந்தனர்“என்று பதிவு செய்கிறார் சிவவர்மா.
வங்கத்தில் அனுசீலன் சமிதி (உடல்நலக் கழகம்) எனும் அமைப்பு 1902 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிழக்கு வங்கத்தில் இருந்த பெருநகரான டாக்காவை மையமாகக் கொண்ட ஒரு குழுவும், இன்றைய மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவை மையமாகக் கொண்ட ஒரு குழுவும் செயல்பட்டன. வங்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் எழுத்துக்கள் இந்த அமைப்பின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல குறிப்பிடத் தகுந்த புரட்சியாளர்களை வளர்த்தெடுப்பதாகவும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு அடித்தளமாகவும் இந்த அமைப்பு இருந்தது. “ அனுசீலன் சமிதி உறுப்பினர்கள் மிகவும் பயபக்தியுடன் இந்து மத நூல்களிலிருந்து, குறிப்பாக கீதையிலிருந்து, மேற்கோள்களை வாசித்தார்கள்”. பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், பிரம்மா பந்தவ், அரவிந்த கோஷ் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் வெள்ளையர்களின் இருப்பை இந்து மதத்திற்கு எதிரானதாகவும் அதை அகற்ற மத உணர்வுடன், தீவிரவாத தன்மையுடன் போராட வேண்டும் என்று இளைஞர்களுக்கு வழிகாட்டி வளர்த்தனர். இது தவிர்க்க முடியாத வகையில் அரசியலில் மதக் கலப்பிற்கு வழிவகுத்தது.
புரட்சிகர இயக்கத்தின் தத்துவ வளர்ச்சி
வரலாற்று வளர்ச்சிப் போக்கில், இருபதாம் நூற்றாண்டான் துவக்கத்திலிருந்தே மத அரசியலுக்கு மாற்றாக தேசிய சிந்தனை கொண்ட அரசியலாக வளர்ச்சி பெற்றது. 1902 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனுசீலன் சமிதியின் பிரகடனத்திலேயே இதற்கான விதை இருந்தது. அதில் “ அனுசீலன் கனவு காணும் சமூகத்தில் ஏழைகள் என்றோ, கல்வியற்றவர்கள் என்றோ, யாரும் இருக்க மாட்டார்கள். மனிதர்களை ஏற்றத்தாழ்வாக நடத்தும் சமூகத்தில் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. சமூக, பொருளாதார, பிராந்திய சமத்துவமின்மை என அனைத்து சமத்துவமின்மைகளையும் அழித்தொழித்து நாட்டில் வாழும் அனைவருக்கும் சமத்துவத்தை கொண்டுவர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கப் புரட்சியாளர்கள் மத அரசியலிலிருந்து உத்வேகம் பெற்றிருந்தாலும் இஸ்லாமிய வெறுப்பு அவர்களிடம் இல்லை என்கிறார் சிவவர்மா. அதேசமயம் துவக்கத்திலிருந்தே பஞ்சாபிலிருந்து வந்த புரட்சியாளர்கள் வகுப்புவாத பலவீனம் அற்றவர்களாகவே இருந்தனர் என்றும், அவர்களை பொறுத்தவரை மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதாகவே இருந்தது என்கிறார்.
பிரெஞ்ச், இத்தாலி மற்றும் ரஷ்ய புரட்சியாளர்களின் தாக்கமே இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வளர்ந்த இந்திய புரட்சியாளர்கள் மத்தியில் விளைந்த இந்த வளர்ச்சிப் போக்கிற்கு அடிப்படையாக அமைந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
1917 இல் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சி உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கியது. இந்திய விடுதலை இயக்கத்திலும் அது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. புரட்சிக் குழுக்கள் பொதுவாக மக்களுடன் ஒரு நெருங்கிய தொடர்பற்றவர்களாகவே இருந்தனர். தனிநபர் பழி தீர்த்தல், ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பதையும் தாண்டி ஒரு சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மக்கள் சக்தியின் அவசியத்தையும் உழைக்கும் மக்களின் பங்களிப்பையும் ரஷ்ய புரட்சி இந்திய புரட்சியாளர்களுக்கு எடுத்துக்காட்டியது.
உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையே ரஷ்ய புரட்சி புரட்டிப்போட்டது. அந்த வரலாற்று வளர்ச்சியின் தாக்கம் பகத்சிங்கை எட்டியபோது, அது இந்திய புரட்சிக் குழுக்களின் செயல்பாடுகளிலும் அதன் கொள்கை லட்சியங்களிலும் வெளிப்பட்டது. “மக்களை திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாட்டு மக்கள் நமது துணிவையும் செயல்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்” என்றார் பகத்சிங். கப்பற்படை எழுச்சி எனும் போர்க்குணமிக்க போராட்டமும் வெகுஜன மக்கள் திரள் போராட்டமும் வலுப்பெற்ற நிலையில்தான் இந்திய விடுதலை சாத்தியமானது என்கிற பிற்கால உண்மை பகத்சிங்கின் தெளிந்த அரசியல் அவதானிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இந்துஸ்தான் குடியரசு சங்கம் என்பதை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கம் என பெயர் மாற்றம் செய்யவும் அவரே காரணமாக அமைந்தார். “புரட்சிக் கட்சி என்பது தேசிய அளவிலான ஒன்றல்ல. மாறாக அது சர்வதேச அளவிலானது” என்கிற சர்வதேச பாட்டாளி வர்க்க அரசியலை அது பறைசாற்றியது.
கடவுள், மதம், மதச்சார்பின்மை
கடவுள் குறித்த அறிவியல் பூர்வமான பொருள் முதல்வாதப் பார்வையை பகத்சிங் வந்தடைந்திருந்தார். வறட்டுத்தனமான நாத்திகத்தை அவர் பேசியதில்லை. மிகவும் எதார்த்தமாக அவற்றை அணுகி அதிலிருந்து பொய்மைகளை விலக்கினார். “கடவுள், சொர்க்கம், நரகம், பூர்வஜென்ம பாவ புண்ணியம் போன்ற எவ்வித நம்பிக்கையும் நமக்கு கிடையாது. …. தலை எழுத்து என்பதும், அதை மாற்றவே முடியாது என்பதிலும் நமக்கு கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில்தான் நாம் நமது வாழ்வையும் சாவையும் அணுகவேண்டும். … என்னை போன்ற பொருள்முதல்வாதப்பார்வை கொண்ட நாத்திகவாதி உபயோகமற்ற முறையில் சாவது குறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எங்கள் வாழ்வை எவ்வளவு மதிப்புமிக்க முறையில் வாழ முடியுமோ அத்தகைய முறையில் வாழ்வதையே விரும்புகிறோம்” என்று கடவுள் குறித்த தனது கருத்தை பகத்சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
கடவுள் அதைத் தொடர்ந்த வடிவமான மதம் உள்ளிட்டவைகளின் அடிப்படை நோக்கம் மற்றும் அதன் மோசமான விளைவுகள் குறித்தும் பகத்சிங் மிகக் கச்சிதமாக தனது நிலையை விளக்கியுள்ளார்.
மாயை, தலையெழுத்து, கடவுள், மதம் என்பவை எல்லாம் சாதாரண மக்களை ஏமாற்றி அவர்களை சுரண்டப் பயன்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் நச்சுக் கருத்துக்கள்தான். இதுவரை எல்லா மதங்களும் உலக மக்களை பிரித்துவைத்து அவர்களிடையே கலகங்களை தூண்டின. மதங்களின் பெயரால் நடத்திய ரத்தக் களறிகளைபோல் உலகத்தில் வேறெந்த விஷயத்திலும் நடக்கவில்லை. மதம் மனிதர்களை பிரித்து வைக்கிறது. அன்பு செய்வதை பறைசாற்றாமல் ஒருவருக்கொருவரை பகைக்கச் செய்கிறது. மதம், மூட நம்பிக்கைகளை ஊக்குவித்து மக்களின் அறிவு வளர்ச்சியைத் தடுக்கிறது. மனிதனின் சிந்தனா சக்தியை குறைக்கும் அத்தகைய மதம் எப்போதும் எனது மதமாக முடியாது என்கிறார் பகத்சிங்.
மதச்சார்பின்மை என்று வருகிறபோது, இன்றைய அளவில் மிகத் தீவிரமான மத மோதல்கள் நிகழ்ந்திராத சூழலிலும் பகத்சிங்கின் அவதானிப்பும் தீர்க்கமான பார்வையும் இன்றைய நிலைக்கும் பொருந்திப்போவதை பார்க்க முடியும். “ இங்குள்ள எல்லா கடவுள்களும் எனது கடவுள்கள்தான். ஒரு கடவுளை மற்றொரு கடவுளுடன் சண்டையிடச் செய்வதும், அதன்மூலம் நாம் வாழும் இச்சொர்க்கத்தை நரகமாக மாற்றும் சக்திகளை ஒழிப்பதோடு, மனித சமூகத்தை சமத்துவ சமூகம் நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சிகளே எனது மதமாகும்’‘ என்கிறார் பகத்சிங். அவரது வார்த்தைகள் இன்றைய மதவெறி அரசியலை முன்னிறுத்தும் ஆர்எஸ்எஸ் இன் கருத்து நிலையை எதிர்கொள்வதற்கான சிறந்த ஆயுதமாகும். முற்போக்கு சித்தாந்தத்தின் வரலாற்று வழிவந்தவர்தான் பகத்சிங் எனும் புரட்சியின் அடையாளம் என்றும், மதச்சார்பின்மையை வலியுறுத்தியவராகவும் எல்லா வகையான சுரண்டலையும் எதிர்த்து களமாடியவராகவும் அவர் இருந்தார் என்பதையும் இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லவேண்டும். மதம் சார்ந்த அரசியலை பேசிய துவக்ககால புரட்சி குழுக்களை கடந்து, உலக வரலாற்று வளர்ச்சிப்போக்கின் கால ஓட்டத்தில் மதச்சார்பற்ற அரசியலை பகத்சிங் வந்தடைந்தார். அந்த வரலாற்றின் நீட்சியை உறுதிப்படுத்துவதே காலத்தின் இன்றைய தேவையாகியுள்ளது.