இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?
-ஜி.ராமகிருஷ்ணன்
2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய மாநாடு, கொரோனா பாதிப்பினால் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது) நகல் தீர்மானத்தை படிக்க உதவியாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
நாடு முழுவதும் உள்ள கட்சி அமைப்புகள் இந்த நகல் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தியும், தனியாகவும் திருத்தங்களை அனுப்புவார்கள். வரப்பெற்ற திருத்தங்களையும், மாநாடு நடக்கும்போது விவாதத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, அரசியல் தீர்மானம் இறுதிப்படுத்தப்படும். கட்சியின் கொள்கையை உருவாக்குவதில் கட்சியின் அணிகள் முழுவதையும் ஈடுபடுத்தும் இந்த நடவடிக்கை நமது கட்சியில் பின்பற்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் உயர்ந்த வெளிப்பாடு ஆகும்.
நகல் அரசியல் தீர்மானத்தை 3 பகுதிகளாக பகுத்துப் பார்க்கலாம். முதலாவது, உலகளாவிய நிலைமை. இரண்டாவது தேசிய நிலைமைகள். மூன்றாவது எதிர்கால அரசியல் கடமைகள்.
உலக நிலைமைகள்:
“நவீன தொழில் துறை, உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது… நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே நீண்டதொரு வளர்ச்சிப்போக்கின் விளைவு – உற்பத்தி முறைகளிலும், பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றங்களின் விளைவு” என்று 1848 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது முன்னைக்காட்டிலும் உலகச் சந்தை விரிந்து பரந்ததாக இருக்கிறது. அறிக்கை எழுதப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்த நிலைமைகளில் இருந்து 20 ஆம் நூற்றாண்டிலும், தற்போதும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சி உலகச் சந்தையில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியா உள்ளிட்டு பல காலனி நாடுகள் விடுதலை அடைந்தன. எனவே, ஏகாதிபத்திய ஆதிக்கம் முந்தைய வடிவத்தில் தொடரமுடியவில்லை. இருந்தாலும் நவீன-தாராளமய பொருளாதாரக் கொள்கையின் மூலம், அறிவியல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பயன்படுத்தி, தமது ஆதிக்கத்தை ஏகாதிபத்திய நாடுகள் வலுப்படுத்திக்கொண்டன. பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, உலகெங்கிலும் ராணுவத் தலையீட்டையும், அரசியல் தலையீட்டையும் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.
அதே நேரத்தில், பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, கொரோனா மரணங்களிலும் முதலிடத்தில் இருக்கிறது. இவ்வாறு, முதலாளித்துவத்தால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே, உலக முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்துவருகிறது. இதனைப் பற்றி நகல் தீர்மானத்தில் பத்தி 1.6 “உலக முதலாளித்துவம் மீட்சியடைந்து பழைய நிலைக்கு வருவது சாத்தியமாகவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கணக்கீட்டின்படி உலக மொத்த உற்பத்தி வளர்ச்சி 2009 ஆம் ஆண்டில் 5.4 சதவீதமாக இருந்தது 2019 ஆம் ஆண்டில் 2.8 சதவீதம் என்ற நிலைக்கு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது” என்பதை சுட்டிக்காட்டுவதுடன் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் நாட்டடங்கு விதிக்கப்பட்டதால் மொத்த உற்பத்தி மைனஸ் 4.4 சதவீதமானதையும் எடுத்துக் காட்டுகிறது.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துவருகிறது. அதனை பத்தி 1.8 விளக்குகிறது. வேலையின்மையும் வறுமையும் அதிகரித்து வருவதுடன் சுரண்டல் தீவிரமாகியிருப்பதையும் அது விளக்குகிறது.
வலதுசாரி திருப்பத்தில் மாற்றம்:
மேற்சொன்ன பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடம் அதிருப்தி அதிகரிக்கிறது. அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி சக்திகள், கடந்த பத்து ஆண்டுகளில், பல நாடுகளில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். ஆனால் அந்த நிலையில் இருந்து இப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
2018 ஆம் ஆண்டுக்கு பின், லத்தீன் அமெரிக்க நாடுகளில் வலதுசாரி சக்திகளுக்கு எதிரான எழுச்சி நடைபெற்றுவருவதை நகல் தீர்மானத்தின் பத்தி 1.36 முதல் 1.39 வரை விளக்குகிறது. 2019 ஆம் ஆண்டில், அமெரிக்கா மேற்கொண்ட தலையீட்டின் காரணமாக பொலிவியாவில் ஈவோ மொரேல்ஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்கு எதிராக வலுவான மக்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்கள். பிரேசில் நாட்டில் 2018 ஆம் ஆண்டில் வலதுசாரிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். இப்போது அந்த ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி உருவாகி போராட்டங்கள் நடந்துவருகின்றன. தேர்தல் நடைபெற்றால், தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சிலி நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியையும் உள்ளடக்கிய இடதுசாரி ஆட்சி ஏற்பாட்டுள்ளது. மேலும் சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே பெரு, ஹோண்டுராஸ், அர்ஜண்டைனா, நிகரகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சக்திகள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. வெனிசுவேலாவில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை எதிர்த்த வலுவான மக்கள் இயக்கம் நடந்த பின்னணியில் மீண்டும் நிகோலஸ் மதுராவின் தலைமையிலான ஆட்சி அமைந்து இயங்கிவருகிறது.
ஐரோப்பிய நாடுகளிலும் ஆலைத் தொழிலாளர்கள், சேவைத்துறைகளில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், சுகாரார பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர உழைக்கும் மக்களும் பல வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். பிரான்ஸ், போர்ச்சுகல், கிரீஸ் போன்ற நாடுகளில், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கக்கூடிய சட்டத் திருத்தங்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளது. போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகள் கோரி, போராட்டத்தை முன்னெடுத்து, சட்டத்தையும் நிறைவேற்றச் செய்துள்ளார்கள்.
கொரோனா நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் உள்ள சோசலிச அரசாங்கங்களை பலவீனப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏற்கனவே முன்னெடுத்துவரும் பொருளாதார தடைகளை தீவிரமாக்குகிறது.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் உட்பட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். மறுபக்கம் மக்கள் சீனத்தின் சோசலிச அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றினை வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதுடன் உலகின் இரண்டாவது பொருளாதாரமாகவும் வலிமையடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், அதீத வறுமையை முற்றாக ஒழித்துள்ள சீனாவின் பிரகடனம் கவனிக்கத்தக்கதாகும். உலக அரங்கில் மக்கள் சீனத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
உலகின் பிரதான முரண்பாடுகள்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உலக நிலைமைகளையும், தேசிய நிலைமைகளையும் புரிந்துகொள்ள கீழ்க்காணும் பிரதான முரண்பாடுகளை மனதில் நிறுத்துவது அவசியமாகும்.
1) சீனா, கியூபா, வடகொரியா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய நிலைப்பாடுகளும். சீனாவுடன் அமெரிக்கா கடைப்பிடிக்கின்ற மோதல் போக்கும் – ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடுகளாக உள்ளன.
2) அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டதை கட்சியின் சென்ற மாநாடு சுட்டிக்காட்டியது. தற்போது ஜோ பைடன் ஆட்சிக்கு வந்துள்ளார். சில திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்து ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் எதிரான அணிச்சேர்க்கையை உருவாக்கிட முயற்சி நடக்கிறது. இருப்பினும் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் ஏற்பட்ட சலசலப்புகள் தொடர்கின்றன.
3) உலகம் வெப்பமாதலும், வளரும் நாடுகளின் மீதான கடன் சுமையும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. எனவே, ஏகாதிபத்திய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரிக்கின்றன. லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் அதன் வெளிப்பாடுகளைப் பார்க்கிறோம்.
4) உழைப்புக்கும் மூலதனம் மற்றும் முதலாளித்துவத்திற்கும் அமைப்பிற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு தீவிரமடைந்துவருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. வேலை இழப்பும், நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் வேலைச் சூழலில் மாற்றங்களும் தொடர்கின்றன. இவைகளை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போராடி வருகிறது.
இத்தகைய பின்னணியில், உலகில் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை ஆதரிப்பதுடன், இந்தியாவிலும் அதனை வலுப்படுத்திட வேண்டும் என்று நகல் அறிக்கையில் பத்தி 1.65 தொடங்கி 1.75 விளக்கியுள்ளது. உலக அளவில் இடதுசாரி சக்திகளோடு கைகோர்ப்பதுடன், இந்தியாவிலும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான மக்கள் இயக்கங்களை வலுப்படுத்த கட்சி தனது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.
புவி வெப்பமாதல்:
புவி வெப்பமாதல் பிரச்சனை தீவிரமடைந்துவருகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் உலக மக்களை பாதிக்கிறது. பருவநிலை மாற்றத்தை ஒரு வர்க்கப் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்கிறது நகல் அறிக்கை. ‘உலக சமநீதிக்கான போராட்டம் தீவிரமடைந்து வருவதை சி.ஓ.பி 26 மாநாடு காட்டுகிறது, இந்த போராட்டம் மிக நீண்டதாக இருக்கும்’ என்று பத்தி 1.53 குறிப்பிடுவது முக்கியமானதாகும்.
இப்படியான சூழலில், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் ஆண்டுக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. முக்கியமான சமூக பொருளாதார சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்கிற அனுபவப் பகிர்விற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் அவசியம் உள்ளது. இந்த ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்கிறது நகல் அறிக்கை.
தேசிய நிலைமைகள்:
ஆங்கிலத்தில் 63 பக்கங்கள் உள்ள நகல் அறிக்கையில், 19 பக்கங்கள் உலக நிலைமைகளும், 44 பக்கங்கள் தேசிய நிலைமைகளையும், எதிர்கால கடமைகளையும் கட்சி விவரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான தொகுதிகளில் வென்றதுடன், கூடுதலான வாக்குகளையும் பெற்று அதிகாரத்திற்கு வந்திருக்கும் மோடி அரசாங்கம், தனது பாசிச வகைப்பட்ட இந்து ராஷ்ட்ரா திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கிறது. பாஜகவைப் பற்றி கட்சி திட்டத்தில் 3 பத்திகள் நகல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றிலிருந்து கீழ்க்காணும் பகுதிகள் வாசிக்க:
“பாஜக அதிகாரத்திற்கு வருகிறபோது, அரசின் அதிகாரத்திலும், அரசு இயந்திரத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ வாய்ப்புக் கிடைக்கிறது. இந்துத்துவா தத்துவம் பழமைவாதத்தை வளர்க்கிறது, இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்குடன் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை நிராகரிக்கிறது.”
“மதவெறி அடிப்படையிலான பாசிச போக்குகளின் ஆபத்து வலுப்பெற்று வருவதை எதிர்த்து அனைத்து நிலைகளிலும் (கட்சி) உறுதியாகப் போராடும்”
இப்போதுள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசை, ‘வகுப்புவாத-பெருமுதலாளித்துவ கூட்டு’ (Communal-corporate nexus) என்று நகல் தீர்மானம் குறிப்பிடுகிறது. தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த தன்மையை மோடி அரசு வெளிப்படுத்திவருகிறது.
மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகிய நமது அரசமைப்பின் 4 தூண்களையும் தகர்த்து, இந்திய குடியரசின் தன்மையையே மாற்றிவருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தினை வகுப்புவாத தேசியவாத வெறியைச் சுற்றி அமைத்துக்கொண்டதன் மூலம், மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் தேர்தலில் எதிரொலிக்காமல் செய்ய முடிந்திருப்பதுடன், உள்ளூர் அளவில் சாதி அடிப்படையிலான திரட்டல்களை மேற்கொண்டு அதனைக் கொண்டு ‘இந்து அடையாளம்’ உருவாக்குவதையும் செய்துள்ளார்கள். ஊடகங்களையும், சமூக ஊடகத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். பெருமளவில் பணம் தேர்தல் களத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பொருளாதார இறையாண்மையின் மீதான தாக்குதல்:
2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின், மோடி அரசாங்கம், நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாக அமலாக்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதும், பொதுத்துறைகளை தனியார்மயம் ஆக்குவதுமான நடவடிக்கைகளோடு வேறு பல வடிவங்களிலும் பொருளாதார இறையாண்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. பாதுகாப்புத்துறை உட்பட இந்தியாவின் அனைத்து பொதுத்துறைகளிலும் தனியார்மயத்தை முன்னெடுக்கிறார்கள். இவ்வாறு இந்திய சுயச்சார்பின் அடிப்படைகள் தகர்க்கப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலையை நோக்கி நாடு நகர்கிறது.
கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியிருந்தது. இப்படியான சூழலில் அரசாங்கம் பொதுச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால் பொதுச் செலவினங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டன. இப்போது அது மந்தநிலையை எட்டியுள்ளது.
வேளாண் துறையில் செலவினங்கள் அதிகரித்திருப்பதுடன், அதீத வட்டியும், மானியக் குறைப்பும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் காரணமாக ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான அவசியம் அதிகரித்தது ஆனால் அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. மறுபக்கத்தில், பெருமுதலாளிகளின் ரூ.10.72 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 13 நிறுவனங்களின் ரூ.4.5 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை திரும்ப செலுத்துவதில் இருந்து 64% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுச் சொத்துக்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்களிடம் நாட்டின் சொத்துக்களில் 57% உள்ளது. 50 சதவீதம் இந்திய ஏழைகளிடம் மொத்தச் சொத்துக்களில் 13% மட்டுமே உள்ளது. இதே காலகட்டத்தில் சட்டப்படியான ஊழல் முலம் பாஜக பல ஆயிரம் கோடி பணம் திரட்டுவது முன்னெடுக்கப்படுவதையும் நகல் ஆவணம் விளக்குகிறது.
இவ்வாறாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட நவ-தாராளமயக் கொள்கைகளே வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனா தொற்றினையும் அறிவியலற்ற முறைகளில் கையாண்டதுடன், ஜி-20 நாடுகளோடு ஒப்பிட்டால் மிகக் குறைவான பொதுச் செலவினத்தை மேற்கொண்டு, அவசியமான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளையும் புறந்தள்ளியது பாஜக அரசாங்கம்.
எதேச்சதிகார திசைவழியில்:
யு.ஏ.பி.ஏ., / என்.எஸ்.ஏ மற்றும் தேசத்துரோக வழக்குகளைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மிக மோசமான இந்தச் சட்டங்கள் மதவழி சிறுபான்மையினர் மீது குறிவைத்து செயல்படுத்தப்படுகின்றன. சொந்த மக்களையே வேவுபார்க்கும் போக்கும் அதிகரித்துள்ளது.
நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் அரசியல் திட்டங்களை முன்னெடுக்க ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் ஒன்றிய அரசு தன்னிச்சையான முடிவுகளை தொடர்ந்து திணிக்கிறது. நிதிப் பகிர்வு செய்வதிலும், வரிக் கொள்கைகளும் மாநிலங்களுக்கான வாய்ப்புகள் சுருக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைகளை நகல் அறிக்கை உதாரணங்களுடன் விளக்குகிறது.
நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்களின் சுயேட்சையான தன்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. விசாரணை அமைப்புகள், அரசியல் நோக்கத்தோடு ஏவிவிடப்படுவதும் தொடர்கிறது. இவை அனைத்தையும் விளக்கும் நகல் அறிக்கை, ஜம்மு காஷ்மீர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளது.
சமூக நீதியின் மீது தாக்குதல்:
பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கருவியாக செயல்படும் பாஜக, அரசாங்கத்தை பயன்படுத்தி அதன் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்கிறது. இதனால் சமூக நீதி ஏற்பாடுகள் சிதைக்கப்படுகின்றன. பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தார், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், பாலியல் சிறுபான்மையினர் என அனைத்து தரப்பின் மீதும் ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன.
புதிய கல்விக் கொள்கை, மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடிப்படையில், அறிவியல் விரோதமாகவும், வரலாற்றின் இடத்தில் நம்பிக்கையை புகுத்துவதுடன், இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதலாகவும் அமைந்திருக்கிறது. இந்திய தத்துவங்களுக்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிப்பதாகவும் உள்ளது.
வெளியுறவுக் கொள்கை:
இந்தியா பின்பற்றிவந்த கூட்டு சேராக் கொள்கை கைவிடப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக அதை மாற்றும் போக்கில் பாஜக செயல்படுவதை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் கடன் போன்ற உலகு தழுவிய பிரச்சனைகளிலும், உள்நாட்டுக் கொள்கைகளிலும் இது இந்திய நலன்களை பாதிக்கும். அண்டை நாடுகளுடனான உறவிலும் இது பாதிப்பை உருவாக்குகிறது.
அதே போல, அறிக்கையின் பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பான பகுதி, நாம் சந்தித்துவரும் பிரச்சனைகளை விளக்குகிறது. நமக்கென்று சுயேட்சையான அணுகுமுறையின் அவசியத்தை அந்தப் பகுதி சுட்டிக்காட்டுகிறது.
நம்பிக்கை தரும் மக்கள் போராட்டங்கள்:
கடந்த 4 ஆண்டுகளில், நாடு முழுவதுமே மக்கள் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும்.
அன்னிய மூலதனத்தோடு கைகோர்த்துக் கொண்டுள்ள இந்திய பெருமுதலாளிகளின் திட்டங்களுக்கும், இந்திய விவசாயிகள் மற்றும் ஒரு பகுதி பணக்கார விவசாயிகளுக்கும் இடையிலான மோதலாக விவசாயிகள் போராட்டத்தை பார்க்க வேண்டும். பெரிய முதலாளிகளின் நலன்களுக்கும், பெருமுதலாளி அல்லாத கோடிக்கணக்கான சிறு/குறு தொழில்முனைவோர் மற்றும் ஒரு பகுதி நடுத்தர முதலாளிகளின் நலன்களுக்கும் இடையிலான மோதலும் போராட்டங்களில் வெளிப்படுகிறது.
நகல் அறிக்கை குறிப்பிடும் மேற்சொன்ன வர்க்கங்களின் மீதான தாக்கத்தை கணக்கில் கொண்டு, தொழிலாளர் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் முன்னேறிட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளிடையே எழக்கூடிய முரண்பாடுகளை பயன்படுத்தி சுரண்டப்படும் வர்க்கங்கள் தங்களுடைய வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என நகல் அறிக்கை பணிக்கிறது.
அரசியல் கட்சிகளைப் பற்றி:
அரசியல் கட்சிகளைப் பற்றிய நகல் அறிக்கையின் மதிப்பீடு கவனமாக வாசிக்க வேண்டியதாகும். “இந்திய ஆளும் வர்க்கங்களுடைய பிரதானமான கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. இதன் துணையோடு ஆர்.எஸ்.எஸ். தனது வலைப்பின்னலை விரிவாக்குகிறது. இந்தியாவின் பெரிய கட்சியாகவும் பாஜக மாறியுள்ளது.” அதே சமயத்தில் பல மாநில தேர்தல்களில் பாஜக தன்னுடைய இலக்குகளை எட்டமுடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. பாஜக தற்போது இந்தியாவின் 12 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது, நாடாளுமன்றத்தில் 2 அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நவ-தாராளமய கொள்கைகளை முன்னெடுக்கிறது. காங்கிரசின் பலமும் செல்வாக்கும் குறைந்துவருகிறது. உட்கட்சி பூசலின் காரணமாக காங்கிரசில் இருந்து விலகிய பலரும் பாஜகவில் இணைகிறார்கள். மதச்சார்பின்மையை தமது கொள்கையாக கூறினாலும், இந்துத்துவா கொள்கையுடன் சில சமயங்களில் சமரசம் செய்துகொள்கிறது. இதர மதச்சார்பற்ற கட்சிகளை திரட்டும் திறனையும் அது இழந்துள்ளது.
கடந்த மாநாடு, ‘ஆர்.எஸ்.எஸ். பின்புலத்துடன் செயல்படும் பாஜக, பிரதான ஆபத்து’ என்பதை சுட்டிக்காட்டியது. எனவே பாஜகவையும், காங்கிரசையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் அணிச்சேர்க்கையை கட்சி ஏற்படுத்திக்கொள்ள கூடாது என்பதை நகல் அறிக்கை தெரிவிக்கிறது.
மாநில கட்சிகளைப் பொருத்தமட்டில், அவை நவ-தாராளமய கொள்கைகளையே முன்னெடுக்கின்றன. அரசியல் சந்தர்ப்பவாத போக்கினை அவ்வப்போது கடைப்பிடித்து வந்துள்ளார்கள். எனினும் கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில் மாநில கட்சிகள் பலவும் பாஜகவுடன் கூர்மையாக முரண்படுகின்றன.
பொதுவான பிரச்சனைகளில் கரம் கோர்க்க முன்வரும் மாநில கட்சிகளுடன் ஒத்துழைப்பதுடன், மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப உத்திகளை வகுத்திட வேண்டும். அதே சமயத்தில் மாநில கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுக்கும் கொள்கைகள் மக்களை பாதிக்கும்போது, தனியாகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மாநில ஆட்சிகளை, ஒன்றிய அரசோடு இணைவைத்து பார்க்கக் கூடாது. (விரிவாக வாசிக்க : நகல் அறிக்கை பிரிவு 2.139 – 2.143)
அதே போல, இஸ்லாமியர்களிடையே செயல்படும் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் அரசியலுக்கு இது சாதகமாக அமைவவதை சுட்டிக்காட்டும் நகல் அறிக்கை, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக உறுதியாக நின்று, மதச்சார்பற்ற மேடைகளில் திரட்டிட வேண்டும் என்று பணிக்கிறது.
வலிமையான மார்க்சிஸ்ட் கட்சி:
ஆர்.எஸ்.எஸ். வலைப்பின்னல் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுத்தளத்தில் ஏற்பட்டிருக்கும் அரிமானத்தை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கேரளத்தில் நமது ஆட்சியை பலவீனப்படுத்தும் விதத்தில் பாஜக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. முன்னணி ஊழியர்களின் மீதான தாக்குதலும் முன்னெடுக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில், கட்சி எதிர்கொண்டுள்ள பின்னடைவை சுய விமர்சனப் பார்வையுடன் ஆய்வு செய்து, அதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை, சிரத்தையுடன் அமலாக்கிட வேண்டும் என்று நகல் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. திரிபுராவிலும் நம் மீதான பாசிச வகைப்பட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த மாநிலங்களில் நமது ஆதரவுத்தளத்தில் சரிவும் ஏற்பட்டு வருகிறது.
நமது கட்சியின் ஆதரவுத்தளம் பாதிக்கப்பட்டால் அது மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் மேற்கொள்ள வேண்டிய தலையீடுகளை பலவீனப்படுத்தும். எனவே, கட்சியை வலுப்படுத்த வேண்டியது நம் முன் உள்ள முக்கியமான கடமையாகும். கொல்கத்தா பிளீனம் எடுத்த முடிவுகளை சிரத்தையுடன் அமலாக்க வேண்டும். அரசியல், தத்துவ, ஸ்தாபன பணிகளை முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கைகள் மீது இயக்கத்தை நடத்த வேண்டும். அவர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த வேண்டும். உள்ளூர் அளவில் இயக்கங்களை கட்டமைத்து மக்களைத் திரட்ட வேண்டும்.
நவ-தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தினால் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும் கேள்விக்குறியாகியுள்ளது. வேலையின்மை, வறுமை உள்ளிட்ட துன்ப துயரங்கள் அதிகரிக்கின்றன. இந்த சூழலில், மக்களுக்கு மதவெறியூட்டி, சாதிவெறியூட்டி, இனவெறியூட்டி இயங்கும் அதீத வலதுசாரி கட்சிகள் அதிகாரத்திற்கு வருகிறார்கள்; அல்லது போராட்டங்களை சீர்குலைக்கிறார்கள். இப்படியான நிலைமைகளில் தலையீடு செய்து மக்களை வென்றெடுக்கக் கூடிய முயற்சியில் பல நேர்மறையான அனுபவங்களும் உலகத்தில் உள்ளது. அவைகளை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இடது ஜனநாயக திட்டம்:
நகல் அறிக்கையின் பத்தி 1.17 – 1.19 சுட்டுவது போல செயல்பட்டு இந்தியாவில் நமது இயக்கத்தை முன்னேற்றுவதே ‘இடது ஜனநாயக திட்டம்’.
மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களை திரட்டுவதே இடது ஜனநாயக திட்டத்தின் நோக்கம். இடது ஜனநாயக அணியை கட்டுவதை பலரும் தொலைநோக்கு திட்டமாகவே கருதுகிறார்கள். அவ்வாறு அல்ல. இடது ஜனநாயக அணியை கட்டுவதை கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் முடிவு.
துன்ப துயரங்களில் உள்ள மக்களின் தேவைகளையே நாம் இடது ஜனநாயக திட்டத்தில் முன்னெடுக்கிறோம். நம் திட்டங்களும் கோரிக்கைகளும் தான் முதலாளித்துவ கட்சிகளின் திட்டங்களுக்கு மாற்று.
இடது ஜனநாயக அணியின் திட்டம், “பொருளாதார இறையாண்மையை பாதுகாத்தல், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்தல், ஜனநாயக உரிமைகளை, குடிமக்கள் உரிமைகளை காத்தல், கூட்டாட்சியை பாதுகாப்பது, பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள், சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள்” என்ற தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. இவைதான் பாதிக்கப்படும் மக்களின் பெரும்பான்மையான கோரிக்கைகள்.
இடதுசாரி கட்சிகளும், அவர்களின் வர்க்க வெகுஜன அமைப்புகளும், இடதுசாரிகள் குழுக்கள் மற்றும் தனிநபர்களும், பல்வேறு கட்சிகளில் உள்ள சோசலிஸ்டுகளும், ஜனநாயக பிரிவினரும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்கும் பட்டியலினத்தார், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையோர் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவை – நாம் அமைக்க வேண்டிய இடது ஜனநாயக அணியின் தொடக்கமாக அமைந்திடுவார்கள். இந்த சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலமே இடது ஜனநாயக அணிக்கு ஒரு திட்டவட்டமான வடிவம் கிடைக்கும் என்று 22 வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் குறிப்பிடுகிறது.
எனவே இந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். தில்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் ஒன்றிணைந்த பல்வேறு இயக்கங்களும், ஆதரவாக நின்ற அறிவு ஜீவிகளையும் ஒருங்கிணைத்திட வேண்டும் என நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்துத்துவாவை எதிர்கொள்வது:
வலிமையான மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதே இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்வதற்கான அடிப்படையான தேவையாகும்.
கட்சியும், வெகுஜன அமைப்புக்களும் வகுப்புவாத சக்திகளின் பிற்போக்கு கருத்துக்களுக்கு எதிராக அயராத பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இந்துத்துவ குழுக்களின் தாக்குதல் போக்குக்கும், வெறுப்பு பிரச்சாரத்திற்கும் பதிலடி தர வேண்டும். சமூக அமைப்புகள், பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அறிவியல் இயக்கங்களை முன்னெடுப்பதன் வழியாக அறிவியல் சிந்தனையை பரவலாக்கிட வேண்டும். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராடுவதும், இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். கொரோனா காலத்தில் முன்னெடுத்த சமூக நல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் தலையீடு செய்து எதிர்கொள்வது அவசியம்.
மேற்சொன்ன நடவடிக்கைகள் இல்லாததன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது ஆதரவுத்தளத்தை விரிவாக்க முடிகிறது.
அரசியல் நிலைப்பாடு:
நமது கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் நிலைப்பாடு, நகல் அறிக்கையின் பத்தி 2.171 இல் விளக்கப்பட்டுள்ளது.
கட்சியை வலுப்படுத்துவதும், இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவதும் ஒரு மாற்றுக் கொள்கையை முன்னெடுக்க அவசியம் ஆகும்.
நவ-தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்களுக்கு வடிவம் கொடுப்பதும் அவசியமாகும். இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக இருமுனைப் போராட்டம் தேவைப்படுகிறது.
நாடாளுமன்றத்திற்குள் நாம் மதச்சார்பற்ற சக்திகளோடு ஒத்துழைப்புடன் இயங்கிட வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் திரட்டி வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். வர்க்க – வெகுஜன அமைப்புகளின் மேடையை உருவாக்க வேண்டும். இவ்வகையிலேயே நாம் இடது ஜனநாயக அணியை ஏற்படுத்த முடியும்.
மேற்சொன்ன சூழலை விளக்கும் நகல் அறிக்கையின் பத்தி 2.172, கட்சியின் தற்போதைய கடமைகளை விளக்குகிறது.
நகல் அறிக்கையை, கட்சியின் ஒவ்வொரு அமைப்பும் ஊன்றிப் படித்து, அமைப்பிற்குள் விவாதித்து, அதனை மேம்படுத்துவதற்கான திருத்தங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பிட வேண்டும். அறிக்கையை முழுமையாக புரிந்துகொள்வதே, அதனை அமல்படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கை ஆகும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நகல் தீர்மானம் குறித்து : முழுமையாக வாசிக்க: