இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்தியா – சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீன மக்கள் குடியரசின் அயல்துறை அமைச்சர் வாங் யீ (Wang Yi) புதுதில்லி வருகை தந்தார். அவருடன் இந்திய அயல்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (2022.03.25) வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் அயல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தியா – சீனா இடையே 2020 மே ஐந்து அன்று கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட கடும் மோதல் மற்றும் உயிரிழப்பு; அதைத் தொடர்ந்து நீடித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அடுத்தடுத்த பதற்ற நிகழ்வுகள் ஆகியவற்றின் பின்னணியில் இருதரப்பு உறவு சற்று கடுமையாகி இருந்த நிலையில், அயல்துறை அமைச்சர் வாங் யீ இந்தியப் பய ணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வாங் யீ இந்தியா வர இருப்பது முற்றிலும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அந்நாட்டு தலிபான் அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு, அதன் தொடர்ச்சியாக வியாழனன்று இரவு டெல்லி வந்தடைந்தார். முன்னதாக அவர் காபூல் சென்றதும் கூட சர்வதேச ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. சீனாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் – BRICS (பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென் ஆப்பிரிக்கா) உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விசயங்கள் குறித்து ஆலோசிக்கவும் அழைப்பு கொடுக்கவும் வாங் யீ இந்தியா வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் ஆப்கானிஸ்தானுடனான உறவுகள், ரஷ்யா-உக்ரைன் நிகழ்வுகள் உள்ளிட்ட சர்வ தேச அரசியல் பிரச்சனையின் பின்னணி யில், இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை உட்பட பல்வேறு அம்சங்களை நேரில் விவாதிக்கும் பொருட்டு அவர் வந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. எனினும் பேச்சு வார்த்தை குறித்த விபரங்கள் வெள்ளி மாலை வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட வில்லை.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்த வாங் யீ, கடந்த இரண்டாண்டு காலமாக இந்தியா – சீனா இடையிலான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வழிகளையும் விவாதித்த தாகத் தெரிகிறது. எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் கடும் பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு சீனாவின் முக்கிய அமைச்சர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். புதுடெல்லியில் இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு அவர் நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு செல்வார் எனத் தெரிகிறது.
முன்னதாக கடந்த செவ்வாயன்று இஸ்லாமாபாத்தில் தனது தெற்காசியப் பயணத்தை துவக்கிய வாங் யீ, நேற்று (வியாழக்கிழமை) நடை பெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நிகழ்வில் காஷ்மீர் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். காஷ்மீரில் நல்ல சூழல் உருவாகும் என நம்புவதாகத் தெரிவித்திருந்த அவரது கருத்துக்கு உடனடியாக இந்திய அரசு தனது அதிருப்தியைத் தெரிவித்தது. இத்தகைய பின்னணியில், அடுத்த இரண்டு நாட்களிலேயே வாங் யீ இந்தியா வந்ததும் அவருடன் அயல்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் பேச்சு வார்த்தை நடத்தியதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் அயல்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகியை நேரில் சந்தித்து பேசிய வாங் யீ, ஆப்கன் அரசுடன் அரசியல், பொருளாதார மற்றும் ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதித்தார் என தலிபான் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் சீனா மேற்கொள்ளும் சுரங்கப் பணிகள் மற்றும் பட்டுப்பாதை விரிவாக்கப் பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிகிறது. 2021 ஆகஸ்ட்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அந்நாட்டு அரசுடன் சர்வதேச அளவில் ஒரு முக்கிய நாடு மேற்கொண்டுள்ள முதல் உயர் அதிகாரப்பூர்வ சந்திப்பு வாங் யீ – அமீர்கான் இடையிலான சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில் ஆப்கானிஸ்தா னுக்கு மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பாக அண்டை நாடுகளின் கூட்டத்தை நடத்தலாம் என ஆப்கனும் சீனாவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு, வெள்ளியன்று நடந்த ஜெய்சங்கர் – வாங் யீ சந்திப்பின்போது அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.