உக்ரைனில் நேட்டோவின் பினாமி யுத்தம்
கடந்த வானவில் இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் ‘ஐரோப்பாவில் யுத்தத்தைத் திணிக்கும் நேட்டோ’ என்ற தலைப்பில் ரஷ்யா-உக்ரைன் யுத்த நெருக்கடி பற்றி சுருக்கமாக விபரித்திருந்தோம். ஐரோப்பாவில் மீண்டுமொரு யுத்தம் தோன்றுவது என்பது பேரழிவிற்கே வழிவகுக்கும் என்ற நோக்த்தின் அடிப்படையிலே அந்தத் தலையங்கம் எழுதப்பட்டது.
உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்படக் கூடாது, டொன்பாஸ் மற்றும்; டொனெஸ்க் மக்ககளுக்கு எதிராக உக்ரைனில் இயங்கும்; அமெரிக்க – நேட்டோ – ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவிலான இராணுவக் கட்டமைப்பு நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளுடனும், ஜெர்மனி, பிரான்ஸ் முன்னிலையில் உக்ரைன் ரஷ்யாவுடன் செய்துகொண்ட மின்ஸ்க் (Minsk) உடன்படிக்கைக்கு இணங்குமாறும் ரஷ்யா உக்ரைனை வலியுறுத்தியது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் ரஷ்யாவின் பாதுகாப்புக்கான ‘சிவப்புக் கோடுகள்’ (Red lines) என்று ரஷ்யா தொடர்ந்து சொல்லி வந்தது. அவை மீறப்பட்டால் அதற்கான பதிலையளிக்க நேரிடுமென நேட்டோ நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யா எச்சரித்தது. எனினும் உக்ரைனும் அமெரிக்க மேலாதிக்க நேட்டோவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து சிவப்புக் கோடுகளை மீறி நடந்து வந்துள்ளன.
மேலும் உக்ரைன் உட்பட மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா – நேட்டோ நாடுகளின் இராணுவ நடவடிக்கைகள், ஒரு தீவிர அச்சுறுத்தலாக ரஷ்யா உணர்ந்தது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முடிந்தவரையில் இராணுவ மோதலைத் தவிர்ப்பதற்காக ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ் என பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தியது.
சகல சமாதான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், பெப்ரவரி 24ந் திகதி இராணுவமயமாக்கல் மற்றும் நாஸிமயமாக்கல் போன்றவற்றிலிருந்து உக்ரைனை விடுவிப்பதற்காக (demilitarization, denazification), ரஷ்யா விசேட இராணுவ நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது. போர் ஆரம்பித்த பின்னரும் ரஷ்யாவும் உக்ரைனும் பல சுற்றுப்பேச்சுவார்ததைகள் நடத்தியுள்ளனர். அத்துடன் இஸ்ரேல், துருக்கி போன்ற நாடுகளும் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எந்தத் தரப்பினராலும் இதுவரையில் போரை நிறுத்த முடியவில்லை.
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள இரரணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, யப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராகப் பாரிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உட்பட ஏராளமான ரஷ்ய அரசுப்பிரநிதிகள் தங்கள் நாட்டிற்கு பயணம் செய்ய முடியாதவகையில் பயணத்தடைகளையும் அறிவித்துள்ளன. ரஷ்யாவின் வங்கிகளுடான சகல சர்வதேசத் தொடர்புகளையும் துண்டித்து வெளிநாட்டு வங்கிகளிலிருந்த 500 பில்லியன் டொலருக்கு அதிகமான ரஷ்யப்பணம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா, இந்தியா, ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா போன்ற நாடுகளை உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரைக் கண்டிக்குமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.
ரஷ்யா உலகில் எரிவாயு உற்பத்தியில் இரண்டாமிடத்தையும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மூன்றாமிடத்தையும் வகிக்கின்றது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யின் விலைகள் உலகச்சந்தையில் முன்னெப்போதுமே இல்லாத வகையில் உயர்ந்துள்ளன. இதனால் தடைவிதித்துள்ள நாடுகளின் மக்கள் உட்பட உலகெங்கிலுமுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது, அத்தோடு ரஷ்ய இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிரீமியா ரஷ்யாவுடன் இணைந்தததையும், டொன்பாஸ் மற்றும் டொனெஸ்க் பிராந்தியங்களின் குடியரசுப் பிரகடனங்களை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை உக்ரைன் நிறைவேற்றினால் போரை உடனடியாக நிறுத்துவதாக ரஷ்யா திரும்பத்திரும்பக் கூறிவருகின்றது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையானது, பெரும்பாலான நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கு இடையிலான மோதலாக வளர்ந்துள்ளது என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகின்றது. அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இதுவரையில் உக்ரைனுக்கு 10 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளவாடங்களை வழங்கியுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளவாடங்களை வழங்கத் தயாராகியும் வருகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் மூலம் இவர்கள் ஒரு பினாமி யுத்தத்தையே நடத்துகிறார்கள்.
உக்ரைன் தேசத்தின் தற்போதைய எல்லைகள் 1917 வரை உருவாகவில்லை. அத்துடன் 1922 இல் சோவியத் ஒன்றியத்தின் அங்கத்தினாராவதற்கு முன்னதாக, ஒட்டோமான் பேரரசு, ரஷ்யாவின் ஜார் பேரரசு மற்றும் போலந்து உட்பட பல்வேறு சக்திகளால் ஆளப்பட்ட ஒரு துண்டு துண்டான பகுதிகளாகவே அது இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே, அப்போது போலந்தின் ஒரு பகுதியாக இருந்த நிலப்பகுதிகளை உள்ளடக்கி. கொஞ்சம் ஓன்றுபட்டதாக உக்ரைன் உருவெடுத்தது. சோவியத் ஒன்றியம் உருவானபோது, லெனின் தலைமையிலான போல்ஷவிக்குகள், முன்னர் ஜார் ரஷ்யப் பேரரசின் பகுதிகளாக இருந்த சிறுபான்மைத் தேசிய இனப்பிரதேசங்களுக்கு சுயாட்சியை வழங்குவதற்கு முன்மொழிந்தனர். இது அவர்களின் சொந்த மொழி, கலாச்சாரம் மற்றும் பிரிந்து செல்லும் உரிமையை தக்க வைத்துக்கொள்ள அனுமதித்தது. இந்தச் சமரசம், கம்யூனிசத்திற்கான தொழிலாள வர்க்க ஐக்கியம் என்ற கோட்பாட்டிற்குப் பதிலாக தேசியவாதத்தை முன்னோக்கித் தள்ளியது எனலாம். இதுவே ஒரு கம்யூனிச சமூகத்தை அடையத் தவறியதற்கும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை ஊக்குவிப்பதற்கும் பங்களித்தன என்ற குற்றச்சாட்டு இப்போதும் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
உக்ரைனில் நாளுக்கு நாள் பல மனித உயிர்கள் மற்றும் கட்டமைப்புகள் அழிந்து கொண்டிருக்கின்றன. பத்து மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.. அமெரிக்கா – நேட்டோ நாடுகளின் கைப்பொம்மையான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ரஷ்யாவுடன் பேசத்தயார் என்று கூறுகிறார். பின்னர், உக்ரைனுக்கு மேலும், மேலும் இராணுவ உதவி செய்யுமாறும் எல்லோரிடமும் கெஞ்சுகிறார். உக்ரைனின் இன்றைய நிலைமைக்கு இவரும் அமெரிக்காவுமே முழுப்பொறுப்பாளிகள். இதுவும் போதாதென்று தற்போது அமெரிக்கா சீனாவையும் மிரட்டி வருகின்றது. இது இன்னுமொரு உலக யுத்தத்தை நோக்கி உலகம் பயணித்துக் கொண்டிருக்கின்றதா என்ற அச்சத்தையே தோற்றுவித்த வண்ணமுள்ளது.
-ஆசிரியர் தலையங்கம், வானவில் இதழ் 135, பங்குனி 2022
வானவில் இதழ் நூற்றுமுப்தைந்தினை முழுமையாக வாசிப்பதற்கு: