பொருளாதார நெருக்கடி தீர்க்க ஒரு சர்வகட்சி மாநாடு
–லோரன்ஸ் செல்வநாயகம்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மார்ச் 23ம் திகதி புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.
அனைத்து கட்சிகளுக்குமான அழைப்பை ஜனாதிபதி விடுத்திருந்த போதும் பிரதான எதிர்க் கட்சி உட்பட பல கட்சிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
நாட்டின் முக்கிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கியமான கட்சிகள் பல இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமது யோசனைகளை முன்வைத்தன.
அந்தக் கட்சிகளின் தலைவர்கள் சர்வ கட்சி மாநாட்டில் கருத்துக்களை தெரிவித்த போது நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தெரிவிக்கப்படும் அணைத்து யோசனைகளையும் உள்ளடக்கியதாக நடைமுறை சாத்தியமான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுவது அவசியம் என்பதை வலியுறுத்தினர். நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது என்றும் அவ்வாறு செல்லும்போது நாட்டின் தற்போதைய நிலைமைகளை தெளிவாக எடுத்துரைத்து கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படா தவாறு அந்த உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
மாநாட்டை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன் மாநாட்டில் கலந்து கொள்ளாத கட்சிகளிடம் இருந்தும் யோசனைகளை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தாராளமாக தமது யோசனைகளை முன்வைக்க முடியும் என்றும் தெரிவித்தார். இக்காலங்களில் புலம்பெயர்ந்த அமைப்புகள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுப்பது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பலமாக உள்ள நிலையில் அவர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற் கொள்வதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் இங்கு கருத்துக்களை முன்வைத்ததுடன் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
கட்சித் தலைவர்களான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சிகளின் சார்பில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்தனர்.
அதைபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் மாநாட்டில் உரையாற்றியபோது
புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்ததுடன் அதற்கு பாலமாக இருந்து செயற்பட முடியும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
அத்துடன் நாட்டில் தற்போது அபிவிருத்திக்கான அவசியத்தை விட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய அவசியமே முன்னிலை வகிப்பதாக தெரிவித்த அவர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருப்பது, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, நாட்டு மக்கள் அன்றாடம் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், வறுமை நிலை, மக்களில் தேவைகள் எதிர்பார்ப்புகள் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
மாநாட்டின் ஆரம்பத்திலேயே மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பிலும் விரிவான உரை ஒன்றை நிகழ்த்தினார். அதேவேளை நாட்டின் இந்த நெருக்கடி நிலைக்கு தற்போதைய அரசாங்கம் மட்டும் காரணமல்ல.கடந்த அரசாங்கங்களும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற தோரணையில் அவர் கருத்துக்களை முன்வைத்த போது முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அதற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்ததுடன் நாடு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்சிகளினதும் யோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து விட்டு கடந்த காலத்தை வைத்து குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு போவதற்கு சர்வகட்சி மாநாடு கூட்டப்படவில்லை என்றும் விசனம் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் தற்போதைய நிலைமைகளை தெளிவாக எடுத்துக்கூறும் போது அவ்வாறான கருத்துக்கள் மத்திய வங்கி ஆளுநரால் முன்வைக்கப்பட வேண்டி இருந்ததாகவும் அது எவரையும் குற்றஞ்சாட்டும் வகையில் அமைந்திருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் கேட்டுக்கொண்டார்.
மாநாட்டின் இறுதியில் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச உரையாற்றினார்.
அவரது உரையின் போது எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்பதாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கூடிய கவனம் செலுத்த ப்படும் என்றும் தெரிவித்தார் அதற்கான இணக்கப்பாட்டை அமைச்சரவையின் மூலம் பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்த அவர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணப் பொதிகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் நாட்டு மக்களின் கஷ்டங்களை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. அதேவேளை அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை நாடு எதிர்கொண்டுள்ளது. அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய உள்ளூர் உற்பத்தியில் தன்னிறைவு காண வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேவேளை அத்தியாவசியப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை யாகும். சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் பலரும் யோசனைகளை முன் வைத்துள்ள நிலையில் அது தொடர்பில் முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.
நாட்டின் தற்போதைய நிலையை கவனத்திற் கொண்டால் அபிவிருத்தி வரவு-செலவுத் திட்டம் இப்போது முக்கியமல்ல பதிலாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவுசெலவுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்ைக ஒன்றை முன்வைத்தார். நாட்டின் தற்போதைய நிலை தொடருமானால் போசாக்கற்ற சந்ததியொன்றே உருவாகும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவிக்கையில், பண்டிகை காலங்களுக்கு முன்பதாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடந்த வருடங்களில் கொரோனா வைரஸ் சூழல் காரணமாக மக்கள் புது வருடத்தைக் கொண்டாட முடியாமல் போனது. இம்முறை புதுவருடத்தை கொண்டாடுவதற்காக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறையும் மக்களுக்கு அதனை கொண்டாட முடியாத நிலை காணப்படுவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமான சுரேன் ராகவன் சர்வகட்சி மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
விமர்சனங்களை எவரும் முன்வைக்கலாம். அதற்கான நேரம் இதுவல்ல. கட்சி, நிறம் என அனைத்து பேதங்களையும் கடந்து அனைத்து கட்சிகளும் கூடி நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முன் வரவேண்டியதே இப்போதுள்ள தேவையாகும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில்:
எமது தலைவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே சர்வகட்சி மாநாடு நடத்தப்படுகிறது. விமர்சனங்களை தாண்டி நெருக்கடிகளுக்கு தீர்வு பெற இதுவே சிறந்த சந்தர்ப்பம். நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் அடுத்த ஆட்சியாளர் யார் என இப்போதே சிந்திக்காமல் நாட்டுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது அவரது பேச்சின் மையப்புள்ளியாக இருந்தது.
சிவநேசதுரை சந்திரகாந்தன் எம். பி கருத்து தெரிவிக்கையில்: எம்மால் முடிந்த பங்களிப்பை நாம் செய்வோம் என்றார்.
மொத்தத்தில் சர்வகட்சி மாநாட்டின் முதல்அமர்வு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. அவசியமானால் இன்னொரு தடவையும் கட்சிகளை அழைத்து பேசலாம். இது பொதுப் பிரச்சினைகளின் பேரில் பொதுக் கருத்துகளை உருவாக்க உதவும். நாட்டின் பொது நன்மைக்காக கட்சிகள் பொது வேலைத்திட்டங்களை அமைத்து பணியாற்றுவது ஏற்கனவே நாடுகளில் நிகழ்ந்திருப்பவை தான். சர்வ கட்சி மாநாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மாநாட்டின் இறுதியில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் கருத்தறிந்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசு மிகுந்த அக்கறை
-சம்யுக்தன்
டொலர் பற்றாக்குறை போன்ற காரணிகளால் இலங்கை எதிர்கொண்டிருக்கும் பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு மார்ச் 23ம் திகதி புதன் கிழமை ஜனாதிபதி சர்வகட்சி மாநாடொன்றை நடத்தியிருந்தார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தீர்வு காணும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி இந்த சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சில உறுப்பினர்கள், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை அமைப்பு போன்றவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்பதை அவர்கள் அனைவரும் வலியுறுத்தியிருந்தனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நாம் அனைவருமே பொறுப்பு என்பதால், தீர்வு பெற்றுக் கொள்வதிலும் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
சர்வகட்சி மாநாடு நேர்மையான ஒரு முயற்சி ஆகும். இதில் எந்தவித அரசியல் இலாபமோ குறுகிய நோக்கமோ கிடையாது. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை மீளாய்வு செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்கி, பயனுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை அமைக்க முடியுமென்றும் ஜனாதிபதி இம்மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
சர்வகட்சி மாநாட்டின் ஆரம்பத்தில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அனைவருக்கும் தெளிவுபடுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்திருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நிலைமைக்கு ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை. குறுகிய அரசியல் நோக்கத்தைக் கைவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை மீட்டெடுப்பதற்கு செய்ய வேண்டியதைப் பற்றி ஆராய்வதே பொருத்தமானது எனக் கூறியிருந்தார்.
நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் பெருமளவிலான மக்கள் போஷாக்கின்மையை எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். பொருளாதார செயற்பாடுகள் ஒரு கட்டமைப்புக்குள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். நாட்டின் குறுகிய, நீண்ட கால பொருளாதார கொள்கை தயாரிப்பு தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் ஒன்றிணைந்த இணக்கப்பாடு அவசியமாகும். அதற்கு திறந்த கலந்துரையாடல்கள் தேவைப்படுகின்றன.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக அறியமுடிகிறது. அரசாங்கம் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் கட்சிகளுடன் கலந்துரையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். நிதி தொடர்பில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேநேரம், அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளை நிறுத்தி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார். அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் போது அரசின் திட்ட வரைபு ஒன்றை கொண்டு செல்வது முக்கியமானது.
நாட்டு மக்கள் பெரும் கஷ்டமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களை அதில் இருந்து மீட்பதற்காக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரித்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதியதொரு வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கத் தயாராக இருப்பதாகவும், சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி, தமிழர் முற்போக்குக் கூட்டணி, விமல் விரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் இம்மாநாட்டைப் புறக்கணித்திருந்தன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சார்பில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விலகியிருப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கும் சூழ்நிலையில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிய கருத்துகளை முன்வைப்பது சுயலாப அரசியலின் செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் பிரதான எதிர்க்கட்சி உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் கட்சியாக இருந்தால், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துக் கூறி மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் பற்றிய விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சி கடந்த காலங்களிலும் அரசாங்கத்தை விமர்சிப்பதைத் தவிர எவ்வித ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன்வைக்கவில்லையென்றே கூற வேண்டும். கொவிட் பரவல் ஆரம்பித்தது முதல் எடுத்ததற்கு எல்லாம் அரசாங்கத்தை விமர்சிப்பதையே அவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களைக் கூட்டி வீதியில் இறக்கி தமது மக்கள் பலத்தைக் காண்பித்த எதிர்க்கட்சியினர் ஏன் பொதுவான மேடையில் மக்களின் பிரச்சினை பற்றி அனைத்துக் கட்சிகளுடனும் விவாதிக்கக் கூடாது?
சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்ததன் மூலம் பிரதான எதிர்க்கட்சியாக அவர்கள் செய்ய வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளார்கள் என்றே கூறலாம்.
அதேபோல, மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எப்பொழுதும் சுட்டிக்காட்டும் தேசிய மக்கள் முன்னணி அதாவது ஜே.வி.பியினரும் இந்த மநாட்டைப் புறக்கணித்திருந்தனர். மக்களின் மீது உண்மையில் அக்கறை உள்ள தரப்பினராக இருந்திருந்தால் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்ற பரிந்துரைகளை முன்வைத்திருக்க வேண்டும்.
இதனை விடுத்து ஏற்கனவே பல்வேறு இன்னல்களைச் சந்தித்திருக்கும் மக்களை மேலும் உருவேற்றி வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளுவது ஏற்புடையதல்ல.
இருந்தபோதும், சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாத கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலம் நாட்டின் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதை ஜனாதிபதி சுட்டிக் காட்டியிருந்தார்.
அதேபோல, எதிர்க்கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த சர்வட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை, கலந்து கொள்ளாத கட்சிகளையும் எதிர்காலத்தில் கலந்து கொள்ளச் செய்வதற்கு முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உண்மையான அக்கறையுள்ளவர்களாயின் இதுபோன்ற பொது மேசையில் விரிவான கலந்துரையாடல்களில் பங்கெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் முன்வர வேண்டும். இதுவே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆரோக்கியமானதாக அமையும்.