கல்விப் புலத்தினுள் தன்னடக்கம் நிறைந்த பேராசிரியர் சந்திரசேகரம்
–எஸ். பாண்டியன்

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களை முதன் முதலில் சந்திக்கும் எவருக்குமே பெரும் வியப்பு ஏற்படுவதுண்டு. மாபெரும் கல்விமான் ஒருவரிடம் இத்தனை பணிவும் தன்னடக்கமும் எவ்வாறு குடிகொண்டன என்பதுதான் அந்த வியப்பு.
அவர் கல்வியில் ஒரு கடலாகத் திகழ்ந்தார். கல்விமான் ஒருவரிடம் இத்தனை எளிமையைக் காண்பது மிகவும் அரிது. பேராசிரியர் சந்திரசேகரனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மாத்திரமே அவரது எளிமையும், தன்னடக்கமும் நன்கு புரியும்.
அவருடன் நெருக்கமும் நட்புறவும் கொண்டுள்ளவர்களில் அநேகமானவர்கள் கல்விமான்களோ, புத்திஜீவிகளோ அல்லர் என்பதுதான் இங்கே வேடிக்கை. அவருடன் சிநேகம் கொண்டிருந்தவர்களில் கற்றறிந்தவர்களும் இருந்தனர். பாமரர்களும் இருந்தனர். அவர்கள் அநேகருக்கும் சமமான மரியாதை கொடுத்து நெருங்கிப் பழகினார் பேராசிரியர் சந்திரசேகரன்.
‘கல்வியறிவற்றோரை கல்விமான்கள் சமூகம் தாழ்த்துவது அறிவீனம். கல்விப் புலத்தில் இல்லாத பலரிடம் ஆழமான ஞானம் உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு கற்றோர் சமூகம் முன்வர வேண்டும். எமது சமூகத்தில் கற்றோருக்கும், பாமரர்களுக்குமிடையே நிலவுகின்ற பாரிய ஏற்றத்தாழ்வு முதலில் நீக்கப்பட வேண்டும்’ என்று வெளிப்படையாக அடிக்கடி அவர் பேசுவதுண்டு. அக்கொள்கையை அவர் தனது வாழ்வில் சரியாகவே கடைப்பிடித்து வாழ்ந்தார்.
தன்னை விட வயதில் குறைந்தவர்கள் ‘தம்பி’ என்று அந்நியோன்யமாக விளிக்கும் பண்பு கொண்டவர் அவர். இல்லையேல் அவர்களின் பெயருக்கு முன்னால் ‘மிஸ்டர்’ இட்டு அழைப்பார்.
அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது மிகவும் இலகுவானது. வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தொலைபேசி அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நிதானமாக உரையாடி விளக்கங்கள் கொடுப்பார். அது நீண்ட உரையாடலாகிப் போவதுண்டு. அவர் கூறும் ஆக்கபூர்வமான தகவல்களை துண்டித்துக் கொள்வதில் எவருக்கும் விருப்பம் இருக்காது.
அவர் ஒரு தகவல் பெட்டகம்; கல்வித்துறை ஊற்று. அதனால் பலரும் அவருடன் அடிக்கடி தொடர்பு கொள்வதுண்டு. அவர்களில் பலதரப்பினரும் அடங்குவர். கல்வி சம்பந்தமாகவோ இல்லையேல் வேறு அவசியமான விடயங்களாகவோ இருக்கலாம். அனைவர் சந்தேகங்களுக்கும் சலிப்பின்றி விளக்கங்கள் அளிப்பார். சிலரது தொலைபேசி அழைப்புகளை தவற விட நேர்ந்தால், தொலைபேசியில் பதிவாகியுள்ள இலக்கத்துடன் அவராகவே தொடர்பு கொண்டு பேசுகின்ற பவ்வியம் அவரிடமிருந்தது.
தினகரன் பத்திரிகைக்கும் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களுக்கும் இடையேயான உறவு மிக நீண்டதாகும். தினகரன் பத்திரிகையின் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி தொடர்பான வரலாற்றை வரிசைக்கிரமமாக ஆதாரங்களுடன் கூறக் கூடியவராக அவர் இருந்தார். தினகரனின் முக்கிய தினங்கள் தொடர்பான சிறப்பு மலர்களுக்கு விசேட ஆக்கங்களை தயார் செய்கின்ற போது, ஆசிரியபீடத்தினால் முதலில் அணுகப்படுபவர் பேராசிரியர் சந்திரசேகரம்.
அதேபோன்று சிறப்புமலருக்கான ஆக்கங்களை முன்கூட்டியே முதலாவதாக எம்மிடம் ஒப்படைத்து விடுபவரும் அவர்தான். தினகரனுக்காக அவர் எழுதிய கட்டுரைகள் ஏராளம். பேராசிரியர் ஒருவரிடம் தொலைபேசி வாயிலாக கட்டுரை கோருகின்றோமென்ற சங்கோஜம் எமக்குத் தோன்றுவதுண்டு.
ஆனால் அவரிடம் தற்பெருமையோ, அகம்பாவமோ இருந்ததில்லை. மிக எளிமையான மனிதராக மனமுவந்து தினகரனுக்கான கட்டுரைகளை அவர் தந்து விடுவார்.
தினகரனின் 90ஆம் வருட கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற வேளையில் சிறப்பு சஞ்சிகையொன்றும் வெளியிடப்பட்டது. பேராசிரியரிடம் சிறப்புக் கட்டுரையொன்று கோரினோம். மறுநாள் காலையில் கட்டுரை தயாராகி விடுமென்றார்.
ஆனால் மறுநாள் காலை 8எட்டு மணியளவில் அவருடன் தொடர்பு கொண்ட போது, அவர் கட்டுரையை எழுதத் தொடங்கவேயில்லை. அதற்காக மன்னிப்புக் கோரினார். அடுத்த தினம் தந்து விடுவதாகக் கூறினார்.
ஆனால் அரைமணி நேரம் கழிந்ததும் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
“இன்னும் அரைமணியில் கட்டுரை தயாராக இருக்கும்” என்றார் சிரிப்பொலியுடன். அதுதான் அவரது தனித்துவ சுபாவம்.
ஏற்கனவே உறுதியளித்தபடி உரிய வேளைக்கு கட்டுரையை முடித்துக் கொடுக்கவில்லையென்ற மனஉறுத்தல் காரணமாக அவர் உடனடியாகவே எழுதத் தொடங்கியிருக்கலாம். இல்லையேல் நட்புறவுடன் சீண்டுகின்ற நகைச்சுவை காரணமாக அவ்வாறு கூறியிருக்கலாம்.
பேராசிரியருடன் உரையாடுகின்ற போது அவரது ஒவ்வொரு பேச்சிலும் நகைச்சுவை கலந்திருக்கும். மற்றவருடனான உரையாடலை சலிப்பின்றி நகர்த்திச் செல்கின்ற உத்தி அவரிடமிருந்தது. அதேநேரம் தன்வசமுள்ள அறிவுபூர்வமான தகவல்களை அடுத்தவருக்கு வலிந்து ஊட்டுகின்ற ஆசானாகவும் அவர் காணப்பட்டார்.
தினகரனை அவர் மிகவும் நேசித்தார். ‘ஈழத்து இலக்கியத்தை தோற்றுவித்து வளர்த்த ஒரேயொரு பத்திரிகை தினகரன்’ என்று அவர் உறுதியுடன் கூட்டங்கள் பலவற்றில் குறிப்பிட்டிருக்கின்றார். 90ஆம் ஆண்டு பூர்த்தியை தினகரன் கொண்டாடிய சமயத்தில் அவர் சுருக்கமாக ஒரு கருத்தைக் கூறியது நினைவிருக்கின்றது.
“தினகரனின் வெற்றிப் பயணம் முடிவற்றது.
அப்பயணம் தலைமுறை தலைமுறையாகத் தொடரும்” என்றார் அவர்.
“அரசாங்க ஊடகமாக இருந்து கொண்டு இத்தனை துணிச்சலாக எழுதுகின்றீர்கள். தினகரன் மற்றும் வாரமஞ்சரியின் அத்தனை பக்கங்களும் சிறப்பாக உள்ளன. நான் இனிமேல் தினகரனை தினமும் வாங்கப் போகின்றேன்” என்று கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றி விட்டு, அங்கு வந்திருந்த தினகரன் ஆசிரியபீடத்தினரிடம் அவர் கூறியது ஞாபகமிருக்கின்றது.
பேராசிரியர் சந்திரசேகரன் 04.04.2022 அன்று தனது 77ஆவது வயதில் நம்மை விட்டு மறைந்து விட்டார். அவரது பிரிவுச் செய்தி நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது. அவரது கல்வித் தகைமைகள், ஆற்றல்கள், பண்புகள் பற்றியெல்லாம் இப்பத்தியினுள் சுருக்கமாக விபரிப்பது இயலாத காரியம். தன் தகுதிகளையிட்டு தற்பெருமை கொள்ளாமல் எளிமையான மனிதராக, எல்லோர்க்கும் நல்லவராக வாழ்ந்தவர் பேராசிரியர்.
சிந்தனையாளராக, அறிஞராக, கல்வியியலாளராக, பல்கலைக்கழக பீடாதிபதியாக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக,பதிப்பாசிரியராக, சிறந்த பேச்சாளராக பன்முக ஆளுமையுள்ளவராக பேராசிரியர் சந்திரசேகரன் விளங்குகிறார்.
அவர் 22. 12.1944அன்று பதுளை மாவட்டத்தில் பிறந்தார். பதுளை ஊவா கல்லூரி, தெல்லிப்பளை மஹஜன கல்லூரி போன்றவற்றில் கற்ற பின்னர், 1967இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார். கல்விமாணி பட்டத்தையும்,1977 – 1978இல் ஜப்பான் ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழி, பண்பாட்டு சான்றிதழையும், 1978 – 1980களில் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் கல்விமுதுமாணி பட்டத்தையும் பெற்றார்.
பேராசிரியர் சந்திரசேகரம் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவில் உறுப்பினராகவும், மனித உரிமை ஆணைக்குழுவில் கல்வித்துறை சார்ந்த நிபுணத்துவ ஆலோசகராகவும், கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தில் உறுப்பினராகவும், திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட சபையில் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
கொழும்பு பல்கலைக்கழக கல்விபீடத்தின் தலைவராகக் கடமையாற்றினார். 1968ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார. மத்திய வங்கியில் மொழிபெயர்ப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார். ‘வித்தியா நிதி’ என்ற தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் அவர்.
பேராசிரியர் எழுதிய நூல்கள் ஏராளம். இலங்கை இந்தியர் வரலாறு, கல்வியியல் கட்டுரைகள், புதிய நூற்றாண்டுக்கான கல்வி, கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள், உயர்கல்வியில் புதிய செல்நெறிகள், கல்விச் சிந்தனையில் புதிய செல்நெறிகள், இலங்கையில் தமிழர் கல்வி, அபிவிருத்தியும் கல்வியும், கல்வியியல் சிந்தனைகள், மலையக கல்வி_ சில சிந்தனைகள், கல்வி ஒரு பன்முக நோக்கு உட்பட அவர் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாடுகளில் இலங்கையின் உயர் கல்வி, தேசிய கல்வி, மலையகக் கல்வி பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து சர்வதேச புகழை அவர் பெற்றுக் கொண்டார்.
இலங்கையின் கல்விப்புலத்தில் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களின் மறைவு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
-தினகரன்
2022.04.05
பேராசிரியர் சோ.சந்திரசேகரம் – வாழ்க்கை குறிப்பு

ஒரு சிறந்த சிந்தனையாளராக, அறிஞராக, கல்வியியலாளராக, பல்கலைக்கழக பீடாதிபதியாக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக,பதிப்பாசிரியராக, சிறந்த பேச்சாளராக பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவராக பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் இன்று காலமானார். தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பேரிழப்பு.
இவர் 1944.12.23ம் திகதி பதுளை மாவட்டத்தில் பிறந்தா அவர், தன்னுடைய பாடசாலைக் கல்வியை 1950 –1960 களில் பதுளை ஊவா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரி போன்றவற்றில் கற்றதுடன், உயர் கல்வியை 1967இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார். கல்விமாணி பட்டத்தையும்,1977 – 1978ல் ஜப்பான் ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழி, பண்பாட்டு சான்றிதழையும் 1978 – 1980 களில் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் நல்லாட்சி அரசில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவில் உறுப்பினராகவும், மனித உரிமை ஆணைக்குழுவில் கல்வித்துறை சார்ந்த நிபுணத்துவ ஆலோசகராகவும் இருந்ததுடன், கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தில் உறுப்பினராகவும், திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட சபையில் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
கல்வித்துறையில் மிகுந்த பங்காற்றியுள்ள இவர், இறுதியாக கொழும்பு பல்கலைக்கழக கல்விபீடத்தின் தலைவராகக் கடமையாற்றினார். மேலும் இவர் 1968ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் போதனாசிரியராக கடமையாற்றியதுடன் 1969ம் ஆண்டு மத்திய வங்கியில் மொழிபெயர்ப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெலிகம அரபா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 1973ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராக கடமையாற்றியதுடன் அதே காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமாவிற்காக பாடங்கள் எழுதும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். அத்துடன் 1975ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் கொழும்பு பல்கலைக்கழக கல்விபீடத்தின் உதவி விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்று 1986ம் ஆண்டு வரையில் சேவையாற்றினார்.
1986ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தரம் 1 முதுநிலை விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்று 1995ம் ஆண்டு வரையில் அப்பதவியில் சேவையாற்றினார். 1995ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்று வேவையாற்றினார். பின்னர் 2007ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விபீடத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு 2010ம் ஆண்டு ஓய்வு பெறும் வரையில் அப்பதவியில் நீடித்து கல்வித்துறைக்கு பாரிய சேவையாற்றியுள்ளார்.
மேலும் இலங்கை இந்தியர் வரலாறு, கல்வியியல் கட்டுரைகள், புதிய நூற்றாண்டுக்கான கல்வி, கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள், உயர் கல்வியில் புதிய செல்நெறிகள், கல்விச் சிந்தனையில் புதிய செல்நெறிகள், இலங்கையில் தமிழர் கல்வி, அபிவிருத்தியும் கல்வியும், கல்வியியல் சிந்தனைகள், மலையக கல்வி_ சில சிந்தனைகள், கல்வி ஒரு பன்முக நோக்கு ஆகிய நூல்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் கல்வி வளர்ச்சி, இலங்கையில் கல்வி, கல்வியும் மனித மேம்பாடும், கல்வித் திட்டமிடல், கல்வியும் மனிதவள விருத்தியும் ஆகிய நூல்களின் இணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் திருப்பம், அகவிழி மற்றும் சார்க் நாடுகளுக்கான கல்வியியல் ஆராய்ச்சி சஞ்சிகைகளின் ஆலோசகராக செயற்பட்டதுடன் மொத்தமாக 30 தமிழ் மற்றும் ஆங்கில மொழி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் பல்வேறு ஆராய்ச்சி மாநாடுகளில் கலந்து கொண்டு ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். அந்த வகையில் லிபியா நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் கேர்ணல் கடாபியின் பசுமை நூலுக்கு ‘முற்போக்குக் கல்விச் சிந்தனை’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார்.
இது தவிர இந்தியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாடுகளில் இலங்கையின் உயர் கல்வி, தேசிய கல்வி, மலையகக் கல்வி பற்றிய ஆய்வேடுகளை சமர்ப்பித்து சர்வதேச புகழைப் பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் யாழ் மற்றும் கிழக்கிலங்கை பல்கலைக்கழகங்களில் வருகைதரு விரிவுரையாளராகவும் தேசிய கல்வி ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழு, அரசகரும மொழி ஆணைக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் கடமையாற்றியிருந்தார்.
மேலும் தனது கல்விச் சேவையில் ஐக்கிய அமெரிக்கா அலபாமா ஓபோன் பல்கலைக்கழகம், ஜப்பான் ஹிரேஷிமா பல்கலைக்கழகம் என்பவற்றின் வருகைதரு பேராசிரியராகவும் தேசிய கல்வி நிறுவகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை நிறுவனம் என்பவற்றின் விரிவுரையாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் 1978ம் ஆண்டு ஜப்பானிய அரசாங்கத்தின் புலமைப் பரிசில் பெற்றதுடன் 1998ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் புலமைப் பரிசிலையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் ஊவா மாகாண ஆளுநரின் கல்விப் புலமையாளர் விருது, ஊவா மற்றும் மத்திய மாகாண சாஹித்திய விழாக்களில் ‘கல்விமான்’ விருது, மேல் மாகாண சாஹித்திய விருதுகளையும் பெற்று பெருமை சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமூகத்துடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த பேராசிரியர் சந்திரசேகரன் 1980 களில் முஸ்லிம்களின் உயர் கல்வி பற்றி விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.