ரஷிய விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை: முடிவில் தவறில்லை!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டிப் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. “குவாட்” (QUAD) நாற்கரக் கூட்டணியில் இருந்தபோதும், அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவால் ரஷிய விவகாரத்தில் நடுநிலையாகச் செயல்பட முடிகிறது; சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை மீறி, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது – என்றெல்லாம் இந்திய அரசியல்வாதிகள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கும் உண்மைகளை இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.
ரஷியாவிடமிருந்தான இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு மொத்த எண்ணெய் இறக்குமதியில் இப்போதைக்கு சுமார் ஒரு சதவீதம் மட்டுமே. ஆனால், மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவும் தனது வர்த்தகக் கொள்கையை இந்திய நலனை மையப்படுத்தி வடிவமைக்க முற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, வரும் வாரங்களில் சுமார் 15 மில்லியன் (150 லட்சம்) பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்துள்ள சூழலில்தான் இந்த இறக்குமதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தி. அதுமட்டுமல்ல, இதற்காக சலுகை விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கவும் ரஷியா முன்வந்துள்ளது.
இந்த வாய்ப்பு இந்தியாவின் நடுநிலைக் கொள்கையால் கிடைத்ததாகும். உக்ரைன் மீதான ரஷியாவின் போரை இந்தியா ஆதரிக்கவில்லை என்றபோதிலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் திணித்த ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா ஏற்கவில்லை. ஐ.நா.சபையில் ரஷியாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காமல் நடுநிலை வகித்து, வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அதேசமயம், உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பேசவும் பிரதமர் மோடி தயங்கவில்லை.
மேலும், உலகின் நான்காவது பொருளாதார சக்தியாக வளர்ந்துவரும் இந்தியாவைப் புறக்கணிக்கவோ எதிர்க்கவோ பிற நாடுகள் தயங்கும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவேதான், “இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது சர்வதேச பொருளாதாரத் தடையை மீறும் செயலல்ல’ என்று சமாதானம் கூறி இருக்கிறார், அமெரிக்க அதிபரின் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 84 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே நிறைவு செய்யப்படுகிறது. 2020- 21 நிதியாண்டில் சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள 239 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை பல நாடுகளிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. உலக அளவில் 42 நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கினாலும், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மட்டும் சுமார் 80 சதவீதம் இறக்குமதி நடைபெறுகிறது. குறிப்பாக, இராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் பங்களிப்பு இதில் மிகுதி. இந்தப் பட்டியலில் ரஷியா இதுவரை முக்கிய இடம் வகித்ததில்லை. இந்நிலை தற்போது மாறத் தொடங்கி இருக்கிறது.
இப்போதைக்கு இந்தியாவைப் பகைத்துக் கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை என்றாலும், ரஷியாவுடனான இந்திய வர்த்தகத்தை அந்நாடு பதற்றத்துடன்தான் பார்க்கிறது. தற்போது உலக வர்த்தகத்தில் பொதுச் செலாவணியாக உள்ள அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிற நாட்டு நாணயங்கள் உருவாகிவிடக் கூடாது என்பதே அந்நாட்டின் தற்போதைய கவலை.
இதுகுறித்து அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ராய்மேண்டோ, ரஷியாவும் இந்தியாவும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் டாலரைப் புறக்கணித்து ரூபாய்- ரூபிள் செலாவணி மாற்றத்தைப் பயன்படுத்திவிடக் கூடாது என்று எச்சரித்தார். இது ஒருவகை ஏகாதிபத்தியமே எனில் மிகையல்ல.
ஆனால், இப்போது காலச்சூழல் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லை. சென்ற ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பின்வாங்கியபோதே அந்நாடு தனது பலவீனத்தை ஒப்புக் கொண்டது. இப்போது அமெரிக்காவையும் நேட்டோ நாடுகளையும் நம்பி முஷ்டி உயர்த்திய உக்ரைன் நாடு ரஷியத் தாக்குதலில் நிலைகுலைந்து போயிருக்கிறது; வெற்று மிரட்டல்களுடன் அமெரிக்கா வேடிக்கை பார்க்கிறது.
அதுமட்டுமல்ல, ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் காரணமான அமெரிக்காவே, அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இத்தகவலை, ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் மிகயில் போபோவ் அம்பலப்படுத்தி இருக்கிறார். தினசரி ஒரு லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்கா, பிற நாடுகள் ரஷியாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என்று மிரட்டுவது ஒரு நகைமுரண்.
மாறி வரும் புவி அரசியல் சூழலில், வேகமான மாற்றங்களை உலகப் பொருளாதாரம் சந்தித்து வரும் வேளையில், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்முறையே ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை. அந்த வகையில் நட்பு நாடுகளின் நிர்ப்பந்தத்துக்குப் பலியாகாமல், உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல், நடுநிலை பேணுவது இந்தியாவின் பலம் மட்டுமல்ல, நலமும் கூட.
-தினமணி
2022.04.07