இலங்கை: நிலுவையில் உள்ள அனைத்து வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்தம்!
வெளிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டியை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கலந்துரையாடல் மூலம் கடன் மறுசீரமைப்பிற்கு செல்லவுள்ளதாகவும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கூறினார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் இன்று (12.04.2022) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மத்திய வங்கி புதிய ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், கடனை மீள செலுத்துவதை விட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறினார்.
எரிபொருள், எரிவாயு, மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்த பணம் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஏற்றுமதி வருமானத்தை வர்த்தக வங்கிகளினூடாக இலங்கை மத்திய வங்கிக்கு கட்டாயமாக மாற்றுவதை 50 வீதத்திலிருந்து 25 வீதமாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
மீதமுள்ள 25 வீத வௌிநாட்டு கையிருப்பு, அத்தியாவசிய இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ தளங்களினூடாக இலங்கைக்கு பணத்தை அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
கடனை மீள செலுத்துவதற்காக அநாவசியமாக பணம் செலவிடப்பட மாட்டாது எனவும், நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
முழுமையான அறிவித்தல்:
https://www.treasury.gov.lk/api/file/54a19fda-b219-4dd4-91a7-b3e74b9cd683
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது நாட்டின் வங்கி முறைமைகளை கையாளுமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கோரியுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் அவர் இந்த கோரிக்கையையை விடுத்துள்ளார்.
உண்டியல் ஊடாக மோசடியான முறைமையில் வெளிநாட்டு பணத்தை நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.