ஆனந்த் டெல்டும்டேவின் சிறை வாழ்வின் இரண்டாண்டு நிறைவு: அம்பேத்கர் பேத்தியின் உருக்கமான கடிதம்!

பீமா கொரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மும்பை சிறையில் உள்ள ஆனந்த் டெல்டும்டே (Anand Teltumbde) அவர்களின் இணையர், பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தி, ரமா டெல்டும்டே (Rama Teltumbde) பொது மக்களுக்கு எழுதியுள்ள கடிதம்…
2022 ஏப்ரல் 11
1983ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆனந்துக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. அது நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். இருவருக்கும் நண்பராக இருந்த ஒருவரின் முயற்சியால் சாத்தியப்பட்டது. கடந்த 37 ஆண்டுகள் நான் வீட்டுப் பணிகளை மேற்கொண்டும், எங்களின் இரு பெண்களை வளர்த்து ஆளாக்கியும் குடும்பத் தேவைகளை அறிந்து நிறைவேற்றியும் வந்துள்ளேன். ஆனந்த் சுதந்திரமாக இயங்க, அவரின் தொழில் நிமித்தமான பணிகளிலும், அவருக்கு முக்கியமானதாக இருந்த சமுதாய அக்கறைகளை முன்னெடுத்துச் செல்லும் பணிகளிலும் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக நான் அவருக்கு உதவி புரிந்து வந்தேன். ஒரு முழுநேர வேலையைப் பார்த்துக் கொண்டும், களப்போராளியாகவும் அவர் இயங்கியபோதிலும் எங்கள் மகள்களுக்கு மிகச் சிறந்த தந்தையாகவும், அவர்களின் எந்தவொரு தேவையானாலும் அதை நிறைவேற்றி வைப்பவராகவும் இருந்து வந்துள்ளார்.
எனது கடந்த கால வாழ்க்கையை நான் திரும்பி பார்க்கிறேன்… அன்றாட அலுவல்கள், கவலைகள்… டென்னிஸ் ஆடும் மகளுடன் ஆட்டக்களத்துக்குச் செல்லுதல், ஆட்டத்தில் அவள் வெற்றி பெற்றால் குதூகலித்தல், தோல்வியுற்றால் அவளைத் தேற்றுதல், இரண்டாமவள் இரவில் கண்விழித்துப் படிக்கையில் அவளுடன் நானும் கண்விழித்து இருத்தல், அவளுக்கு பிடித்தமான உணவைத் தயார் செய்து கொடுத்தல், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானபோது அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கைத் தேர்வுகளுக்கு ஆதரவளித்தல், வேண்டியபோது வழிகாட்டியாக இருத்தல்…
இன்று இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் அது வேறொரு காலம் போல தோன்றுகிறது.
எனக்கு 66 வயது ஆகிவிட்டது. என் வயதையொத்த பெண்கள் பணி ஓய்வுபெற்று அமைதியான வாழ்க்கையை எதிர்நோக்கியும் அல்லது பணி ஓய்வுபெற்ற கணவருடன் அமைதியை நோக்கிப் பயணிக்கவும் தயாராக இருப்பார்கள். ஆனால், என் வாழ்க்கையோ முற்றிலும் வேறான பாதையில் திசை திருப்பப்பட்டுள்ளது. எனக்குள் இருந்த வேறொரு பெண்ணை நான் இனங்காண நேர்ந்தது. அத்தகைய ஒரு பெண் எனக்குள் இருந்தாள் என்று நான் நினைக்கவில்லை. கோவாவில் உள்ள எங்களின் வீட்டை, நாங்கள் அங்கு இல்லாத சமயமாகப் பார்த்து, காவல்துறையினர் சோதனையிட்டனரோ அன்று தொடங்கியது விதியின் விசித்திர விளையாட்டு. என் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்க நான் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் சலனம், கவலை. தொலைக்காட்சித் திரைகளில் எங்கள் வீடு, கணவர், காட்சிப் பொருட்களாக. மும்பையில் என் கணவர், மகள்கள் இருக்க… நான் விமானம் மூலம் கோவா சென்றேன். எந்தவோர் அறிவிப்பும் இன்றி எங்களின் வீட்டுக்குள் அயலவர்கள் நுழைந்து சோதனையிட்ட பிறகு எங்களுக்கான வெளி, அந்தரங்க வெளி என்று ஏதேனும் விட்டு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவே இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். எங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞரின் துணையுடன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவும் செய்தேன்.

காரில் செல்கையில் நான் அமைதியாக இருந்தேன். எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்… நானும் என் கணவரும் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை; நேர்மையான, உண்மையான சட்டத்துக்குட்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள்; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மேம்பட அயராது உழைத்து வரும் எனது கணவருக்கு எந்த கேடும் வராது. அவ்வாறு வரக்கூடும் என்று நான் நினைக்கவும் இல்லை. காவல் நிலையத்துக்கு நான் சென்ற அந்த நாள், தொடர்ந்து நடைபெற்று வரும் கடினமான, முடிவு ஏதும் புலப்படாத, நீண்ட சட்டப் போராட்டத்தின் தொடக்கம்தான் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை.
அந்த சம்பவத்துக்குப் பிறகு நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு எங்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு மணித்துளியைக்கூட வீணாக்க ஆனந்த் விரும்ப மாட்டார். அவரின் குடும்பத்தாரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். வழக்கம்போல தனது பணிகளைத் தொடர்ந்தார். வகுப்பறையில் உரைகளை நிகழ்த்துதல், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால்… அவரை அச்சுறுத்த மேற்கொள்ளப்பட்ட அந்த செயல் நடந்து ஒரு சில நாட்களே ஆகியிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாது எப்பவும்போல அவர் செயல்பட்டதை நான் ரசிக்கவே செய்தேன். காவல் துறையினரிடம் அவர் சரணடைந்த நாளுக்கு முந்தின நாள் வரை அவர் வேலை செய்து கொண்டிருந்தார். எத்தனை நாட்களுக்குத்தான் காவலில் வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை அறிய முடியாத நிலையில், காவல் காலம் எல்லையற்றதாக இருக்க வாய்ப்பிருக்கும் என்ற சூழலில் தனது மாணவர்கள், சக ஆசிரியர்கள் ஆகியோர் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக முடிந்த அத்தனை வேலைகளையும் செய்து முடித்தார்.
நாங்கள் எப்பவும்போல வாழ நினைத்தாலும் எங்களின் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களுக்கு நாங்கள் இடமளிக்க வேண்டியிருந்தது. எந்த தேதிகளில் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை குறித்துவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. தனக்கு எதிராகப் புனையப்பட்ட அருவருக்கத்தக்க வழக்கையும் பொய் குற்றச்சாட்டுகளையும் எதிர்த்து ஆனந்த் வழக்கு தொடுத்திருந்தார். யுஏபிஏ(UAPA)வின் கீழ் – ஜனநாயகத்துக்கு எதிரான வகையிலும் மிக மூர்க்கத்தனமாகச் செயல்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் – அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது அவமானகரமானதாக இருந்தது. எனது 70 வயது கணவர், என் மகள்களின் தந்தை, குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் உடையவராக உள்ளவர், பேராசிரியர், களப்பணியாளர், வன்முறையைக் கையாளும் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த இயற்றப்பட்ட சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
2020 ஏப்ரல் 14 பற்றி என் மனதில் தங்கியுள்ள உணர்வுகளை விவரிக்க சொற்கள் இல்லை. ஒரு வகையில் பார்த்தால் அன்று என்ன நடந்தது என்பதை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அதேசமயம், அந்த நாளின் நினைவு ஒவ்வொரு நாளும் என்னை வாட்டி எடுக்கிறது. 2020 ஆண்டுக்கு முன் ஏப்ரல் 14 என்றால் அது மகிழ்ச்சிக்கான நாள். எனது பாட்டனார் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம். மும்பையில் நான் வாழ்ந்த காலத்தில் அந்த நாளில் சைத்திய பூமிக்குச் சென்று, ஒரு மெழுகுவத்தியை ஏற்றி, தான் வாழ்ந்த வாழ்க்கையால், சாதித்தவற்றால், இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் கோடானுகோடி மக்களின் வாழ்க்கையைத் தொட்ட அந்த மாமனிதரின் திருவுருவச் சிலைக்கு முன் தலைதாழ்த்தி வணங்காமல் இருந்ததில்லை.

2020ஆம் ஆண்டு நள்ளிரவு மணி அடித்தவுடன் வெள்ளை ஆடைகளை உடுத்தி ராஜகிருகாவில் உள்ள நினைவிடத்தில் ஆனந்த் எனக்காகக் காத்திருந்தார் – எப்பவும் போல, சிரித்த முகத்துடன். மெழுகுவத்தியை ஏற்றி, அம்பேத்கரின் அஸ்தியைத் தாங்கிய குடத்துக்கு தலைவணங்கினார். நானும் அவ்வாறே செய்தேன். ஆனால், என் மனம் இனி நடக்கவிருந்த சம்பவங்களை நினைத்த வண்ணம் இருந்தன.
2020 ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளின் ஏப்ரல் நினைவுகளைக் காணாமல் போட்டு விட்டன. அடுத்தடுத்து வந்த ஏப்ரல் மாதங்கள் எங்கள் மீது திணிக்கப்பட்ட பெரும் வலியை, இன்றும் எங்களை அலைக்கழிக்கும் வேதனையை நினைவூட்டுவனவாக அமைந்து விட்டன. அன்று நான் அவருடன் தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency) அலுவலகத்துக்குச் சென்றேன். நீதிமன்றக் கட்டளையை ஏற்று அவர் அங்கு சரணடைந்தார். அவர் நிதானமாகவே இருந்தார்… அங்கு நடந்து செல்லும்போதுகூட. தன்னை பற்றி அவர் கவலைப்படவில்லை. அம்மாவை பற்றிதான் அவருக்கு கவலை. கடைசி வரை தொலைப்பேசியில் தன் மகள்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் தைரியமாக இருக்க வேண்டும், எல்லாம் நல்லபடியாக முடிந்து சரியாகி விடும், நல்ல, உண்மையான வாழ்வை அவர்கள் வாழ வேண்டும் என்றவாக்கில் அவர்களுடன் பேசினார். அவர்கள் அழுதபோது தேற்றினார். அன்று நடந்தது என் கணவர் குரூரமான அநீதிக்கு ஆளான காலக்கட்டத்தின் தொடக்கம் மட்டுமே. ஒவ்வொரு நாளும் நானும் என் மகள்களும் துயரத்தை அனுபவித்து வருகிறோம். காலம் செல்ல செல்ல அது தாங்கிக்கொள்ள முடியாததாக ஆகி வருகிறது.
கோவிட்-19 பெரும் தொற்றானது இதுவரை நாம் சந்தித்திராத நெருக்கடிக்கு ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஆட்படுத்தியது. கற்பனைகூட செய்து பார்க்காத பல்முனைப் போராட்டங்களுக்கு நான் முகம்கொடுக்க வேண்டியிருந்தது. நான் தனித்துவிடப்பட்டிருந்தேன். என் கணவர் சிறையில், என் மகள்கள் வெகு தொலைவில். கோவிட் கால தடைகள் அமலில் இருந்ததால் அவர்களால் இந்தியாவுக்குப் பயணிக்க முடியவில்லை. ஆனந்த் சரணடைந்ததற்குப் பிற்பாடு தனியாக வாழ்ந்து வந்ததுடன், அவர் அனுபவித்து வரும் அநியாயமான வேதனையை எவ்வளவு சீக்கிரம் குறைக்க முடியுமோ அத்தனை சீக்கிரம் குறைக்க என்னால் ஆனவற்றை செய்து வருகிறேன் – அவ்வப்போது எதை எதையோ நினைத்து அச்சப்பட்டாலும்.

சமுதாய இடைவெளி, ஊரடங்கு ஆகியன அமல்படுத்தப்பட்டும் புதிய வகை தொற்றுகள் நாட்டை நாசம் செய்து வர, என்னால் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்க முடியவில்லை. ஒருவர் இருக்க வேண்டிய இடத்தில் மூன்று பேர் இருக்கும் நெரிசலான சிறைச்சாலையில் ஆனந்த் அடைக்கப்பட்டிருந்தார். உலகம் முழுக்க தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நிலை, அவர்களின் மனவளம் பாதிக்கப்படுவது ஆகியன குறித்து பலரும் பேசிய நிலையில் ஆனந்தின் உடல்நலம் எப்படியுள்ளதோ என்ற கவலையும், எங்களின் நிலை குறித்த கேள்விகளும் என்னை வாட்டின. ஆனந்துக்கு ஆஸ்துமா இருப்பதால் அவருக்கு சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவதுண்டு. பெருந்தொற்று காலத்தில் அவர் என்ன பாடுபடுகிறாரோ என்ற எண்ணி கலங்கினேன்.
பெருந்தொற்று காலகட்டத்தில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் மனவளம் பற்றி, அவர்கள் தங்களின் பாசமான சொந்தபந்தங்களிலிருந்து பிரிந்து இருப்பது பற்றி நாம் விவாதிப்பதில்லை என்பது கண்கூடு. இந்தக் காலகட்டத்தில் சிறையிலுள்ளவர்களை அவர்களின் குடும்பத்தார் சந்திக்க இயலாது போனதால் எங்களுக்கு விட்டுவைக்கப்பட்ட அந்த சிறு கருணையும்கூட இல்லாமல் போனது. அதற்கு பதிலாக வாரம் ஒருமுறை வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் போட்டு பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த நாள் எனது அலைபேசி சத்தமாக ஒலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன். இன்டர்நெட் இணைப்பு சரியாக உள்ளதா, மோடம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று சரி பார்த்துக்கொள்வேன் – ஆனந்துடன் பேச எனக்கு இருந்த அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்ற பரிதவிப்பில். சொல்லப்போனால் அந்த வாராந்திர அலைபேசி அழைப்பைச் சுற்றியே என் நாட்கள் சுழன்றன. அவருடன் பேசிய பிறகு மகள்களுக்கு போன் செய்து பேசிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வேன் – அவர்களுடன் அவர் பேச இயலாததால்.
வீடியோ கால் என்ற இந்த வசதியை நான் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. பிறர் கடிதங்கள் மூலமே அவருடன் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், குடும்பத்தார் எழுதிய கடிதங்கள் அவர் கைகளுக்குப் போய் சேர பல நாட்கள் ஆகிவிடுகின்றன. அவை அவருக்கான அந்தரங்க கடிதங்களாக இருந்தபோதிலும், அவற்றை படித்துவிட்ட பிறகுதான் காவல் துறையினர் அவருக்கு அவற்றை அனுப்பி வைப்பர்.

நிலைமை இப்படி இருந்தாலும் இதையுமே எங்களுக்கு விட்டுவைக்கப்பட்டுள்ள கருணை என்று எண்ணி எங்களை நாங்களே தேற்றிக் கொள்கிறோம். ஆனந்த் வேலை நிமித்தமாகப் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வதுண்டு. எங்கு சென்றாலும் எங்களை தொலைப்பேசியில் அழைக்காமல் இருக்க மாட்டார். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் போன் செய்து விடுவார். குறிப்பாக மகள்கள் தேர்வு எழுதும் நாட்களாக இருந்தால் வாழ்த்துகள் சொல்லாமல் இருக்கவே மாட்டார். இப்படிப்பட்ட தந்தை, மகள்களுடன் பேசி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் ஒரு விசாரணைக் கைதி. பொய் குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டவர். யுஏபிஏ (UAPA) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்.
ஒருவர் 70 – 72 வயதை எட்டியவுடன் அவரின் குழந்தைகள் அவரைப் பராமரிக்க வேண்டும், சுற்றம் சூழ அவர் வாழ வேண்டும். ஆனால், ஆனந்தின் நிலை, எனது நிலை இன்று அவ்வாறானதாக இல்லை. எங்களுக்கு நேர்ந்துள்ள இந்த கதிக்கு காரணம் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜோடனை செய்து சமர்ப்பித்த வழக்கு. வழக்கில் கூறப்பட்டுள்ளவை உண்மையா, இல்லையா என்பது விசாரிக்கப்பட்டு இனிதான் நிரூபணம் செய்யப்படவிருக்கின்றன.
பெருந்தொற்று குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு வாரம் ஒருமுறை ஆனந்தைச் சந்திக்க முடிகிறது. இந்தச் சந்திப்பு 10 நிமிடங்களே நீடிக்கும். எங்கள் வீட்டிலிருந்து சிறைச்சாலைக்கு வந்து சேர ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. பிறகு பெயர் பதிவுக்காக வரிசையில் நிற்க வேண்டும். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கக் காத்திருக்க வேண்டும். சில சமயங்களில் 2 முதல் 4 மணி நேரம்கூட காத்திருக்க வேண்டும். ஆனால், இதை நான் பொருட்டாகக் கருதுவதில்லை. சகித்துக் கொள்கிறேன். காரணம், ஆனந்தை கண்ணால் பார்க்க முடியும்.
தூசிப் படிந்த பைரக்ஸ் திரையினூடாக பார்த்துக் கொள்வோம். இன்டர்காம் வழியாக பேசிக் கொள்வோம். உள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வயதால் மெலிந்துவிட்ட எங்களின் குரல்களை உயர்த்திப் பேசுவோம் – பிற சிறைவாசிகளின் பேச்சு, அவர்களின் சுற்றத்தாருடன் அவர்கள் நடத்தும் உரத்த உரையாடல்கள், சிறைக் காவலர்களின் குரல்கள், இவற்றுக்கு நடுவேதான் நாங்கள் பேசிக்கொள்வோம்.
ஆனந்தும் நான் அவரைச் சந்திக்க வரும் அந்த நாளுக்காகக் காத்திருப்பார். நன்கு பழகிய, தெரிந்த முகத்துக்காக, இரண்டு ஆண்டுகளாகத் தொடர்பு கொள்ள இயலாத வெளி உலகம், அவர் உறவு கொள்ள முடியாதபடிக்கு வலுக்கட்டாயமாக அவரிடமிருந்து துண்டிக்கப்பட்ட அந்த வெளி உலகம் பற்றிய செய்திகளைக் கொண்டு வரும் முகத்துக்காக… பலரைப் போல சிறைச்சாலை சந்திப்பு என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு சினிமா காட்சிகளை மட்டுமே உதாரணங்களாகக் கொண்டிருந்தேன். ஆனால் சந்திக்கும் இருவரும் அனுபவிக்கும் அவமானம், துயரம் ஆகியவற்றை – வெகு சௌகரியமாக – சினிமாக்கள் காட்டாமல் விட்டு விடுகின்றன.

2020 மார்ச் வரை ஆனந்தும் நானும் ஆரவாரமற்ற, கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். ஒவ்வொரு வாரமும் இப்படி சந்தித்துப் பேசிக் கொள்வோம் என்று கனவில்கூட நாங்கள் நினைத்ததில்லை. நாங்கள் சந்திக்கையில் கரம் தொட்டு பேச முடியாது, கைகோத்துக் கொள்ள முடியாது, ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள முடியாது… ஆனால் ஒன்று, அந்த பத்து நிமிடங்களில் எங்களுக்குள் இருக்கும் வலியைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதில் இருவருமே தேர்ந்து விட்டோம்.
எங்கள் மகள்கள் வாரா வாரம் அப்பாவுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். அவரும் உடனுக்குடன் பதில் எழுதி விடுகிறார். 2020 ஏப்ரல் 14 அன்று அவர்களுடன் கடைசியாக தொலைப்பேசியில் பேசியபோது அவர்களுக்கு தைரியமூட்டி பேசினாற்போல்தான் இந்தக் கடிதங்களிலும் அவர்களுக்கு தைரியம் சொல்கிறார். அவர்களைத் தேற்றுகிறார்.
இது ஒரு கெட்ட கனவு, இதிலிருந்து நான் விரைவில் விழித்துக்கொள்வேன், வழக்கம்போல எங்கள் வீட்டு பலகனியில் நான் அமர்ந்திருக்க ஆனந்தும் வந்து விடுவார், நாளிதழ்களை வாசித்து, தேநீர் பருகி, ஒருவரை ஒருவர் நையாண்டி செய்வோம் என்று நினைப்பதுண்டு. ஆனால், நாட்கள் நம்மைக் கடக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படுகிறது, அதன் விளைவாக மற்றொரு வழக்கு விசாரணை நடக்கிறது..
எங்களின் இந்த நிலைமைக்கு காரணமான அநீதி, எங்களை இங்கு கொண்டு வந்து நிறுத்திய சம்பந்தமற்ற நிகழ்வுகள் பற்றி யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இத்தகைய ஒன்று அவர்களுக்கும் நேரலாம் என்பதை அவர்கள் ஒருவேளை அறியாமல் இருக்கலாம்.
மூலம்: Reflecting on the most poignant moments of last two years during Anand’s incarceration
மொழியாக்கம்: வ.கீதா