மாற்றம் ஏற்படுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு!

கேரள மாநிலம் கண்ணூரில் நடந்து முடிந்திருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது தேசிய மாநாடு, அந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனை மாநாடு எனலாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, எதிா்கொள்ள இருக்கும் அடுத்த பொதுத்தோ்தலில் கட்சியின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீா்மானிப்பதாகவும் அமைந்தது அந்த மாநாடு.

மூன்றாவது முறையாகக் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டா்கள் கலந்துகொண்ட மிகப் பெரிய பேரணியைத் தொடங்கி வைத்து அவா் ஆற்றிய உரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாா்வையை வெளிப்படுத்தியது. மதச்சாா்பின்மை, மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் குறித்த காங்கிரஸின் அணுகுமுறையில் தடுமாற்றம் இருக்கலாகாது என்று குறிப்பிட்டது புருவம் உயா்த்தச் செய்கிறது.

கட்சியின் வலிமையை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அதிகரிப்பது, இடதுசாரி ஜனநாயக அணியை ஏற்படுத்துவது உள்ளிட்ட கட்சியின் முனைப்பையும், லட்சியத்தையும் அவா் முன்மொழிந்தாா். அவை எளிதல்ல என்பது நன்றாகத் தெரிந்திருந்தாலும், பாஜகவுக்கு எதிரான ‘மெகா’ கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் கட்சித் தலைமை இருப்பதை அவரது உரை தெளிவுபடுத்தியது.

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளில் இடைவெளியே இல்லாமல், அடிமட்டத்திலிருந்து தலைமை வரை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சித் தோ்தலை முறையாக நடத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. இப்போது, பாஜகவிடமிருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதியதொரு பாடத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறது. அதை செயல்படுத்தவும் செய்திருக்கிறது.

கட்சியின் வளா்ச்சிக்குத் தலைமைப் பொறுப்புகளில் இளைஞா்கள் இல்லாத குறை நீண்டகாலமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்து வந்தது. இப்போது மத்தியக் குழு உறுப்பினா்களுக்கான வயது வரம்பு 75 என்று நிா்ணயிக்கப்பட்டு, நீண்ட கால மூத்த உறுப்பினா்கள் பலா் ஓய்வு பெற்றிருக்கிறாா்கள். தமிழகத்திலிருந்து டி.கே. ரங்கராஜனும், சௌந்தரராஜனும் அந்தப் பட்டியலில் இணைகிறாா்கள்.

என்னதான் முற்போக்குச் சிந்தனை பேசினாலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில விஷயங்களில் பிடிவாத பிற்போக்குத்தனத்தைக் கடைபிடித்து வந்தது என்பது உலகறிந்த ரகசியம். கேரளத்தில் கட்சித் தலைமை உயா்ஜாதியினரின் பிடியில் இருந்ததும், அதனால் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமுதாயத்தைச் சோ்ந்த கே.ஆா். கௌரிக்கு முதல்வா் பதவி மறுக்கப்பட்டதும் வரலாறு. அச்சுதானந்தனின் தலைமைக்குப் பிறகுதான், கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈழவா்களின் தலைமைக்கு மாறியது. மேற்கு வங்கம், திரிபுராவிலும் பழைய நிலைமைதான் தொடா்கிறது.

23-ஆவது கட்சி மாநாடு ஒரு வரலாற்று மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. தனியாகப் பிரிந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான கடந்த 58 ஆண்டுகளில், இதுவரை அரசியல் தலைமைக் குழுவில் (பொலிட் பியூரோ) பட்டியலினத்தைச் சோ்ந்த எவரும் இடம் பெற்றதில்லை. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளில் தலைமைப் பொறுப்பிலேயே பட்டியலினத்தவா்கள் இருந்திருக்கிறாா்கள். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாய்க் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பே அவா்கள் இடம் பெற்றுவிட்டனா். இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தமிழகத்தைச் சோ்ந்த பட்டியலினத்தவரான டி. ராஜா தலைமைப் பொறுப்பில் இருக்கிறாா்.

நடந்து முடிந்த மாநாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மேற்கு வங்கத்தைச் சோ்ந்த டாக்டா் ராமச்சந்திர டோம், முதலாவது பட்டியலின உறுப்பினராக அரசியல் தலைமை குழுவுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். முந்தைய கட்சி மாநாட்டின்போதே சீதாராம் யெச்சூரி முயன்றும் நிறைவேறாத அந்தக் கனவு இந்த முறை நிறைவேறி இருக்கிறது. கட்சியின் மீதான களங்கம் இதன் மூலம் அகற்றப்பட்டிருக்கிறது என்கிற கூற்று உண்மையிலும் உண்மை.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைகளுக்குத் தோ்தல் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டில் திரிபுரா, கா்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா மாநிலங்களிலும், 2024 பொதுத் தோ்தலுடன் மகாராஷ்டிரம், ஹரியாணா, ஒடிஸா, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றிலும் தோ்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்தத் தோ்தல்களில் சிபிஎம்-ன் அணுகுமுறை குறித்து மாநாட்டில் விரிவாகவே விவாதிக்கப்பட்டும் எந்தவொரு தீா்மானமான முடிவும் எடுக்கப்படவில்லை.

தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி என்பதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்து விட்டது. அந்தந்த மாநிலங்களில் தனித்தனியாக பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பது என்றும், தோ்தலுக்குப் பிறகு கட்சிகளை ஒருங்கிணைத்து 1989, 1996, 2004-இல் ஏற்படுத்தியதுபோல கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதும்தான் இப்போதைக்குக் கட்சியின் அணுகுமுறையாகத் தெரிகிறது.

2024 பொதுத் தோ்தலில் மூன்று மாநிலங்களிலிருந்து குறைந்தது 13 எம்பி-க்கள் வெற்றி பெற்றால் மட்டுமே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்சி அங்கீகாரம் காப்பாற்றப்படும். தமிழகத்தில் திமுகவைத் தவிர, மாா்க்சிஸ்டுகளுக்கு இடங்களை ஒதுக்க பெரும்பாலான மாநிலக் கட்சிகள் முன்வருவதில்லை. அதனால், தனது தேசியக் கட்சி அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதுதான் மாா்க்சிஸ்ட் கட்சி எதிா்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய சவால்!

தினமணி தலையங்கம்
2022.04.14

“ஒருமிச்சாலே சாத்தியமாகு” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின்

ந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்றவைகளைக் காப்பாற்ற அரசியல் மன மாச்சரியங்களை விட்டு அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23-வது அகில இந்திய மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 09.04.2022 அன்று சனிக்கிழமை மாலை கலந்து கொண்டார். மாநாட்டையொட்டி நடக்கும் “மத்திய – மாநில உறவுகள்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலான 23 -வது மாநாட்டில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று பினராயி விஜயன் என்னிடம் கேட்டதுமே நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். எங்கள் மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வந்தாலும், இங்கு வருவதை, இந்த மாநாட்டில் கலந்து கொள்வதை நான் எனது கடமையாகக் கருதுகிறேன். தோழர் பினராயி விஜயன் என்னிடத்தில் காட்டும் அன்பு அதற்கு முக்கியக் காரணமாகும்.

தமிழகத்திற்கும் – கேரளாவுக்கும் சங்ககாலம் தொட்டே வரலாற்று ரீதியாக இருந்து வரும் பிணைப்பும் நட்பும் காலம் காலமாகத் தொடர்வது மற்றொரு காரணம். திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குமான நட்பு என்பது 80 ஆண்டுகள் பழமையானது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1932-ம் ஆண்டே தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியும். இன்னும் சொன்னால் லெனின் என்றும், ரஷ்யா என்றும் பிள்ளைகளுக்கு பேர் வைத்த இயக்கம் திராவிட இயக்கம். அனைத்துக்கும் மேலாக என்னுடைய பெயர் ஸ்டாலின். இதை விட உங்களுக்கும் எனக்குமான நட்புக்கு அடையாளம் தேவையில்லை. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு ஒரு கட்சித் தலைவராக, ஒரு மாநிலத்தின் தலைவராக அல்ல, உங்களில் ஒருவனாக உரிமையுடன் நான் வந்திருக்கிறேன்.

முதலில் உங்கள் மாநிலத்தின் முதல்வர் பிணராயி விஜயனை நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். கேரளாவின் முதலமைச்சராக அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என்பதற்காக மட்டுமல்ல, இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்பு மனிதராக அவர் செயல்பட்டு வருகிறார். மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றின் அடையாளமாக பினராயி விஜயன் இருக்கிறார். ஒரு மாநிலத்தின் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார்.

கொரோனா பரவிய போது, தமிழகத்தில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தோம். இங்கு முதலமைச்சராக இருந்த பினராயி விஜயன் குறித்து தமிழக பத்திரிகைகள் பாராட்டி எழுதின. அந்த வகையில் எனக்கு வழிகாட்டும், முன்னோடி முதல்வராக அவர் இருந்தார். சுகாதாரத்தில், சிறந்த நிர்வாகத்தில், இலவச சிகிச்சை வழங்குவதில், உணவுப்பாதுகாப்பில், கல்வித் தரத்தில், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று விருதுகளின் முதல்வராக பினராயி விஜயன் இருக்கிறார்கள். ஒரு கையில் போராட்டக் குணம், ஒரு கையில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் கொண்டவராக இருப்பதால்தான், மத்திய அரசைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

அன்புத் தோழரே, கேரள முதல்வரே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தமிழக மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநாட்டிற்கு என்னை அழைத்து மத்திய- மாநில உறவுகள் குறித்து நான் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பதை முதலில் எண்ணிப் பார்க்கிறேன்.

இந்த மாநாடு நடக்கும் இடம் கேரளா, மத்திய – மாநில உறவுகள் குறித்துப் பேச வந்திருக்கும் நான் தமிழகத்தைச் சேர்ந்தவன். இதை விட மிகப்பெரிய ஒற்றுமை வேறு எதுவும் இருக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன் முதலில் கலைக்கப்பட்டது கேரளத்தில் தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கத்துக்கு 1959-ம் ஆண்டு இது நடந்தது.

தமிழகத்திலும் மக்களின் பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம் 356-வது பிரிவைப் பயன்படுத்தி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1976-ம் ஆண்டு முதல்முறையும், 1991-ம் ஆண்டு இரண்டாவது முறையும் இது நடந்தது. எனவே மத்திய – மாநில உறவுகளைப் பற்றி பேசுவதற்கான முழு உரிமையும் தமிழகத்திற்கும் உண்டு, கேரளாவுக்கும் உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உண்டு. அந்த அடிப்படையில் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

நான் ஏதோ தமிழகத்தைக் காப்பதற்காக மட்டுமோ, பினராயி விஜயன் கேரளாவைக் காப்பாற்றுவதற்கு மட்டுமோ இந்த முழக்கத்தை முன்வைக்கவில்லை. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால் இந்தியநாடு காப்பாற்றப்படும். வீடுகள் இருந்தால் தான் அது தெரு. தெருக்கள் சேர்ந்தால் தான் அது ஊர். ஊர்கள் சேர்ந்தால் தான் அது மாநிலம். மாநிலங்கள் இணைந்தால் தான் அது நாடு. ஆனால் சிலர் அரசியல் அரிச்சுவடியையே மாற்றுகிறார்கள். ‘ஒரு உடலுக்குள் பல உறுப்புகளாக ஒன்றிணைந்துள்ளோம்’ என்று தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர் பாடினார். உறுப்புகள் இல்லாவிட்டால் உடலே இல்லை.

இந்தியாவில் எத்தனையோ மதங்கள், எத்தனையோ இனங்கள், எத்தனையோ மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், உடைகள், உணவுகள் இருக்கின்றன. இத்தனை வேறுபாடுகள் மாறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பண்பாடு. இந்த வேற்றுமையுடன் தான் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே உணவு ஒரே தேர்வு ஒரே கல்வி ஒரே மதம் ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே கலாச்சாரம் என்று எல்லாவற்றையும் ஒரே ஒரே ஒரே என்று கோரஸ் பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும்.

ஒரே கட்சியானால் – ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்தானது வேறு இருக்க முடியாது. ஒரே கட்சி என்று ஆகும் வரை பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடையலாம். ஒரே ஆள் என்று ஆகும் போது நம்மோடு சேர்ந்து பா.ஜ.க.வினரும் எதிர்க்கத்தான் வேண்டும். இத்தகைய எதேச்சாதிகாரத்துக்கு எதிரான குரல்தான் ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்பது ஆகும்.

நமது அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒற்றைத்தன்மை கொண்ட ஆட்சியை உருவாக்கவில்லை. அதிகாரங்களை மூன்றாகப் பிரித்து, மாநிலப் பட்டியல், மத்தியப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் என்றுதான் வைத்தார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக உரிமைகள் தரப்பட்டன. கிராமங்கள் வளர வேண்டும். கிராமங்கள் வளர்ந்தால் மாநிலம் வளரும். மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்று இதன் காரணமாகத்தான் நான் சொன்னேன். கிராமங்களை, மாநிலங்களை அழிக்க நினைப்பவர்களாக மத்திய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்பைக் கடந்து தனது அதிகார எல்லையை விரித்துச் செல்கிறது மத்திய அரசு. இந்திய நாட்டை பிரிட்டிஷார் ஆண்டார்கள். அவர்கள் கூட இத்தகைய அதிகாரம் பொருந்திய ஒற்றைத் தன்மையை உருவாக்க நினைக்கவில்லை. 1919-ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்திலேயே கூட -”மாகாணங்கள் ஒன்றையொன்று ஒட்டி உறவாடும் தன்மையில் மாகாண நலனிலும் உள்ளூர் நலனிலும் அக்கறை கொண்ட தன்னாட்சி நடத்த வேண்டும். இவ்வகையான மாகாணங்கள் ஒருங்கிணைந்த அமைப்புக்கு மத்திய அரசு தலைமை ஏற்க வேண்டும்” என்றுதான் சொல்லப்பட்டது. அதிகாரத்தைக் கையில் வைத்திருந்து அடக்கியாளும் எண்ணத்தோடு இருந்த ஆங்கில ஆட்சி கூட செய்யாததை இன்றைய பா.ஜ.க. அரசு செய்கிறது என்று வெளிப்படையாகவே நான் குற்றம் சாட்டுகிறேன்.

“சுயாட்சி இல்லாத சுயராஜ்யம் என்பது வெள்ளைப் புலிக்குப் பதிலாக இந்தியப் புலியை மாற்றுவதற்கு ஒப்பானதாகத் தான் இருக்கும்” என்று சொன்னார் மகாத்மா காந்தி. அதுதான் இன்று நடக்கிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்யும் மாநிலங்களை மத்திய அரசை நோக்கி கையேந்த வைப்பதில் தான் மத்திய ஆட்சியாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் அது மக்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா அது மக்களைப் பழிவாங்குவது ஆகாதா மாநிலங்களைப் பழிவாங்குவதாக நினைத்து மக்களைப் பழிவாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்ததும், மாநிலத்தின் நிதி உரிமையைப் பறிக்கும் வகையில் ஜிஎஸ்டி முறையைக் கொண்டு வந்தார்கள். வரி வருவாயைப் பறித்தார்கள். இழப்பீடு தருவதாகச் சொன்னார்கள். இழப்பீடு முழுமையானதாக இல்லை. அந்த அரைகுறை இழப்பீடும் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை. மாநில அரசுக்கான நிதிகளை வழங்குவதே இல்லை. இதையெல்லாம் நாம் கேட்க வேண்டிய இடம் திட்டக்குழு. திட்டக்குழு இருந்தால் தானே கேட்பீர்கள். அதையே கலைத்துவிடுகிறோம் என்று கலைத்துவிட்டார்கள் இதை எல்லாம் நாம் கேட்க வேண்டிய இடம் தேசிய வளர்ச்சிக் குழு. தேசிய வளர்ச்சிக்குழு இருந்தால்தானே கேட்பீர்கள். அதையே கலைத்துவிடுகிறோம் என்று கலைத்துவிட்டார்கள்.தென்னகத்துக்கான ரயில்வே திட்டங்களுக்கு பணமே ஒதுக்குவது இல்லை.

அதுபற்றி விவாதம் இருந்தால் தானே கேட்பீர்கள் ரயில்வேக்கு தனியான பட்ஜெட்டே கிடையாது. மாநிலப்பட்டியலில் இருக்கும் வேளாண்மைக்கும் அவர்களே சட்டம் போடுவார்கள். அது பற்றி விவாதம் நடத்த மாட்டார்கள். எந்தச் சட்டத்தையும் விவாதம் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் எதற்கும் சிறப்பு விவாதம் நடத்துவது இல்லை. உரிய பதில் சொல்வது இல்லை. கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களைக் கூட தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அதிகார வெறியோடு மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.

பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இவை அனைத்தையும் ஆளுநரை வைத்து அமல்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவை இருக்கும்போது, ஆளுநரை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது அல்லவா? இதனை ஒரு மத்திய ஆட்சியே செய்யலாமா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாகத் தனியாட்சி நடத்துவது தான் சட்டத்தின் ஆட்சியா?

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இரண்டு முறை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை இன்னமும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழகத்திலுள்ள மாநில ஆளுநர் தாமதித்து வருகிறார்; நாள் கடத்தி வருகிறார். நீட் மசோதா மட்டுமல்ல – 11 மசோதாக்கள் ஆளுநர் வசம் இருக்கின்றன.

அதற்கெல்லாம் அவர் அனுமதி தரமறுப்பதற்கு என்ன காரணம் எட்டுகோடி மக்களை விட நியமன ஆளுநருக்கு அதிகாரம் வந்துவிடுகிறதா இப்படித்தான் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கிறது என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?

இன்று தமிழக முதல்வர் நானாக இருந்தாலும் கேரள முதல்வர் பினராயி விஜயனாக இருந்தாலும் தலையாட்டி பொம்மைகளாக இருந்தால் நமது ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் தர மாட்டார்கள். தலையாட்டி பொம்மையாக நாம் இருக்க வேண்டுமா இதுதான் என் கேள்வி. ஏழை எளிய, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காக திட்டங்கள் தீட்டினால், கல்வி உரிமையைப் பேசினால், நமது தென்னகத்தின் பண்பாட்டைப் பற்றி பேசினால், சமதர்மக் கொள்கைகளைப் பேசினால், உடனடியாக நமது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள். அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைக்கும் தலைவர்கள் அனைவரும் இத்தகைய முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சட்டமன்றத்தாலும் நீதிமன்றத்தாலும் மக்கள் மன்றத்தாலும் இதனை நாம் எதிர்கொள்ளத் தான் வேண்டும். எதிர்கொண்டு வருகிறோம். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும்.

தென்மாநில முதல்வர்களின் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக மற்ற மாநில முதல்வர்களைக் கொண்ட குழுவையும் தனியாக அமைக்க வேண்டும். மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

“தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஓரணியில் வைத்துள்ளோம். நாங்கள் அனைவரும் தேர்தல் காலத்தில் மட்டும், தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ளும் கட்சிகளாக இல்லாமல், கொள்கை உறவாக தொடர்ந்து வருகிறோம். அதுதான் எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

ஒற்றுமைதான் பலம் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை கூட்டாட்சித் தத்துவம் ஜனநாயகம் மதச்சார்பின்மை சமத்துவம் சகோதரத்துவம் மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் அரசியல் மன மாச்சரியங்களை விட்டு அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று வேண்டுகோளை இங்கு வைக்கிறேன். உடன்பாடான கொள்கை கொண்ட கட்சிகள் இடையே நல்லுறவு உருவாக வேண்டியது இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் தேவையானது ஆகும் இத்தகைய கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும். அந்த அரசியல் வெற்றியால் மட்டும்தான் சமூகநீதியை சமத்துவத்தை மதச்சார்பின்மையை உருவாக்க முடியும். அத்தகைய வெற்றிக்கான திட்டமிடுதல்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Let us fight for state autonomy… Let us create a truly federal India… Red Salute Comrades… இவ்வாறு பேசினார்.

Tags: