ஜனநாயக நடைமுறைகளுக்கு மாறாக தீர்வை தேட முடியாது!
–சம்யுக்தன்
எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்டபொருளாதார நெடிக்கடிகள் தொடர்பில் ஏற்பட்டஅசாதாரண நிலைமையானது அரசாங்கத்துக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிரான மக்கள் போராட்டமாக மாறியுள்ளது.இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நாடு எதிர்கொண்டபாரிடிய நெருக்கடியான சூழல் இது எனக் கூறலாம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கை ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதாகக் காணப்படுகிறது. இந்தக் கோரிக்கை சாதாரண மக்களினால் முன்வைக்கப்பட்டதொன்று என்பதை விட, அரசியல் மயப்படுத்தப்பட்ட கோரிக்கை என்றே கூறவேண்டும்.
இதனை விடவும் பாராளுமன்றத்தில் உள்ள 225உறுப்பினர்களும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்து போராட்டத்தில் ஈடுபடுவோரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான கோரிக்கைகள் எந்தளவுக்கு அரசியலமைப்புக்குச் சாதகமானவை என்பது குறித்த கேள்வி காணப்படுகிறது.
ஜனாதிபதி தனது சொந்த விருப்பின் பேரில் இராஜினாமாக் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்து விட்டு விலகிச் செல்ல முடியும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரதமர் ஜனாதிபதியாகப் பதவியேற்க வேண்டும். இருந்தாலும் பிரதமருக்கு ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு அரசியலமைப்பு ரீதியில் தடை காணப்பட்டால், ஒருமாதம் என்ற குறுகிய காலப்பகுதிக்கு சபாநாயகர் ஜனாதிபதியின் கடமைகளை ஆற்ற முடியும்.
ஒரு மாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் ஒருவர் ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே அரசியலமைப்பின் ஏற்பாடுகள் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபித்து புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை. எனவே, ஜனாதிபதியைப் பதவி விலகக் கோருவது நடைமுறையில் எந்தவொரு தீர்வையும் வழங்கப் போவதில்லை.
மறுபக்கத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 225பேரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. 225பேரையும் உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு அனுப்புவது என்பது சாத்தியமற்ற விடயம். அரசியலமைப்பையோ அல்லது ஜனநாயக வரம்புகளையோ மீறி எழுந்தமானமாக நடந்து கொள்ள முடியாது. எமது நாட்டுக்கென ஜனநாயக நடைமுறைகள் உள்ளன.
சுதந்திரத்துக்குப் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு மக்கள் விரக்தி அடைந்துள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வாறான பின்னணியில் தமக்கு உண்மையில் சேவையாற்றக் கூடியவர்களைத் தெரிவு செய்து அனுப்புவதற்கான அதிகாரமும் வாக்காளர்களாகிய மக்களிடமே காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் தற்பொழுது பாராளுமன்றத்தில் உள்ள 225பேரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டால் நிலைமை சரியாகிவிடுமா? நிச்சயமாக இல்லை. எனவே தற்பொழுது பதவியில் உள்ள ஜனாதிபதியுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைத்து குறுகியகால மீட்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதே காலத்தின் தேவையாக உள்ளது. அரசியல்வாதிகள் பலர் இதனை வலியுறுத்துகின்றனர்.
ஒட்டுமொத்த நாடும் சிக்கலான நிலைமைக்கு முகங்கொடுத்திருப்பதால் எதிர்க்கட்சிகள் தற்பொழுது அரசியல் இலாபம் தேட முயற்சிக்காது இணைந்து தீர்வொன்றைக் காண்பதற்கு முன்வர வேண்டும் என்பதுதான் நேர்மையாக சிந்திப்போரின் எண்ணமாகும்.
இது இவ்விதமிருக்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அனைவரும் இதனை ஒழிப்பதாகக் கூறியே ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகக் கூறிய போதும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் தவறியிருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைக் குறைத்து அவற்றைப் பாராளுமன்றத்துக்கு வழங்கியிருந்தார். ’19ஆவது திருத்தம்’ எனும் பெயரில் இதற்கான அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தினால் பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். அவசர அவசரமாக அரசியலமைப்பைத் திருத்துவதனால் எமக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு, மீண்டுமொரு அவசர திருத்தத்துக்குச் செல்வது பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக அரசியலமைப்பை அவசர அவசரமாகத் திருத்துவது எதிர்காலத்தில் வேறு பிரச்சினைகளுக்கு வித்திடலாம் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா குறிப்பிடுகின்றார்.
அதேநேரம், பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டுமென்ற கருத்தும் ஒரு சிலரினால் முன்வைக்கப்படுகிறது. இருந்தபோதும் தற்பொழுது நாட்டில் காணப்படும் பொருளாதார சூழ்நிலையில் தேர்தலொன்றுக்குச் செலவிடுவதற்குப் போதிய பணம் இல்லை. எனவே தேர்தலொன்றுக்குச் செல்வதும் சாத்தியமானதாக அமையாது. அவ்வாறு தேர்தல் நடத்தினாலும் தற்பொழுதுள்ள அரசியல்வாதிகளுக்கு மாற்றீடாக புதியவர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்குப் போதிய காலஅவகாசம் கிடையாது.
எனவே, தற்பொழுது பாராளுமன்றத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்தி, நாட்டின் ஜனநாயகத்தை எதிர்காலத்தில் பலப்படுத்தக் கூடிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பற்றியே ஆர்ப்பாட்டக்காரர்கள் சிந்திக்க வேண்டும். அதேபோல மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இதனைப் பற்றிய சிந்தனையுடன் ஆக்கபூர்வமான தீர்வொன்றைத் தேடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதனை விடுத்து, மக்கள் போராட்டங்களைத் தமக்கு சாதகமாக்கி, தேவையற்ற வன்முறைகளை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்பது நாட்டை மேலும் பாதாளத்துக்கே தள்ளும். கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களில் சில தீய சக்திகள் ஊடுருவி வன்முறையை உருவாக்குவதற்கு எடுத்த முயற்சிகளையும் நாம் காணக் கூடியதாகவிருந்தது. இவ்வாறான வன்முறைச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எதிர்க்கட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் பிரதான பொறுப்பாகும்.
இது இவ்விதமிருக்க, ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும், அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கொழும்பு, கண்டி, தங்கல்லை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கொழும்பிலும் ஊர்வலமொன்று கடந்த செவ்வாயன்று இடம்பெற்றிருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப் பகுதியிலேயே பயங்கரவாதம் நாட்டிலிருந்து தோற்கடிக்கப்பட்டது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமையாலேயே நாடு காப்பாற்றப்பட்டது’ என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். எனவே ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பது எமது கடமை என்று ஆர்ப்பாட்டம் நடத்தியோர் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடையும் அறிகுறியும் தென்படுகின்றது.
இதேவேளை கொவிட்-19 தொற்றுநோய் இலங்கையை மாத்திரமன்றி உலக நாடுகள் அத்தனையையும் கடுமையாகப் பாதித்திருந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து இலங்கை மீளாத சந்தர்ப்பத்தில் கொவிட்-19தொற்றுநோய் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பேரிடியாக வந்தது. உலகத் தொற்றுநோயின் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது.
தற்பொழுது எதிர்கொள்ளும் விலைவாசி அதிகரிப்புப் போன்ற பிரச்சினைகள் இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகள் பலவும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகும். அவற்றுடன் நின்று விடாது, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற்று வரும் யுத்தம் உலக எரிபொருள் விலையில் தாக்கத்தைச் செலுத்தியது. எரிபொருள் விலையேற்றம் என்பது இலங்கை மாத்திரமன்றி மேலைத்தேய நாடுகள் கூட எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். எனவே, நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினையை ஒவ்வொருவரும் அரசியலாக்காது அனைவரும் இணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக தீர்வொன்றைக் காண முன்வர வேண்டும். இதற்கான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.