ரம்புக்கனையில் நடந்தது என்ன?

ரிவாயு (கேஸ்), பால்மா, எரிபொருள் போன்ற பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான வரிசைகள் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு நீண்டு செல்லும் போது அவற்றின் விலைகளும் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதளவுக்கு உயர்ந்து சென்று மக்களின் கோபத்தை இரட்டிப்பாக்கியிருக்கின்றது. விசேடமாக எரிபொருள் விலையும் நினைத்துப் பார்க்க முடியாதளவில் நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு ஐ.ஓ. சி மற்றும் சிபெட்கோ நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்ைககள் காரணமாய் அமைந்தது. இதற்கு காரணம் பெருமளவு தொகை எரிபொருளுக்காகச் செலுத்த வேண்டியிருப்பதே என்ற காரணத்தை பொது மக்கள் பொருட்படுத்தவில்லை. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இரண்டு மூன்று நாட்களுக்குள் ஒரேயடியாக அதிகப்படியாக எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோரான பொதுமக்கள் மிகவும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார்கள். அந்த அழுத்தம் வெடித்துச் சிதறியது ரம்புக்கனையில் அது ஒருவரின் உயிரையும் பறித்து, உடமைகளுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியது மட்டுமின்றி நாட்டுக்கு கறையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று ரம்புக்கனை பிரதேச மக்களும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மிகவும் துன்பப்பட்டார்கள். ரம்புக்கனை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த வாகன வரிசைகள் சில நாட்களாக தொடர்ந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

ரம்புக்கனை எரிபொருள் வரிசை அவ்வாறிருக்கும் போது கடந்த 18ம் திகதி இரவு எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டது. 18ம் திகதி மாலை ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான வரிசையில் நின்றிருந்த வாகன உரிமையாளர்களுக்கு, அன்றைய தினம் மாலை எரிபொருள் ஏற்றிய பவுசர் கொலன்னாவையிலிருந்து வருவதாகத் தகவல் கிடைத்தது. இதனால் வாகன உரிமையாளர்கள், சாரதிகள் தத்தமது வாகனங்களிலேயே அமர்ந்து காத்திருந்தது எப்படியாவது இரவுக்குள் எரிபொருள் பவுசர் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் தான். மாலை 6.30மணியளவில் குறித்த எரிபொருள் பவுசர் நித்தம்புவவிலிருந்து புறப்பட்டது என்ற செய்தி அவர்களுக்கு கிடைத்தது. இரவு 8.30மணியளவில் குறித்த பவுசர் வரகாபொலவுக்கு வந்துவிடும் என்பதால் வாகனச் சொந்தக்காரர்களும், சாரதிகளும் பவுசரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

எனினும் அன்றைய தினம் இரவு எரிபொருட்களின் விலை பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. நித்தம்புவவிலிருந்து வெளியேறியதாகச் சொல்லப்பட்ட பவுசரும் இன்னமும் வந்து சேரவில்லை. பவுசர் வரகாபொலவில் நிறுத்தப்பட்டு, இரவு 12மணிக்கு மீண்டும் பயணத்தை ஆரம்பித்ததாகவும், அதற்கான காரணம் அதிகரித்த விலைக்கே எரிபொருளை விற்பதே என்ற செய்தி ரம்புக்கனை எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர்களிடையே பரவுவதற்கு வெகு நேரம் எடுக்கவில்லை. எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் இந்த செய்தியால் கொதித்தெழுந்தார்கள். அப்போது நேரம் அதிகாலை 1மணி.

ரம்புக்கனை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் ஆரம்பித்த இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது நகர் முழுவதும் பரவிச் செல்வதற்கும் நீண்ட நேரம் எடுக்கவில்லை. அந்நேரம் பெருமளவானோர் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.

ரம்புக்கனை நகருக்கு நுழையும் பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடரட்ட புகையிர வீதியும், சில்பர் கட்டைகளைப் போட்டு தடுக்கப்பட்டது. அந்நேரம் 19ம் திகதி விடிந்திருந்ததோடு, அப்போது சுமார் 2000பேரளவில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ரம்புக்கனை பொலிஸாரால் நிலைமையினைக் கட்டுப்படுத்த முடியாததால் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸ் குழுக்கள், கலகம் அடக்கும் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை என்பன ரம்புக்கனைக்கு வரவழைக்கப்பட்டன.

சிலிப்பர் கட்டைகளைக் கொண்டு உடரட்ட புகையிரப் பாதை ஆர்ப்பாட்டக்காரர்களினால் தடுக்கப்பட்டிருந்ததனால் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து கண்டி, பதுளை, நாணுஓயா நோக்கிப் பயணிக்கும் புகையிரதங்கள் மற்றும் பதுளை, கண்டியிலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கிப் பயணிக்கும் புகையிரதங்களும் ரம்புக்கனை புகையிரத் நிலையத்திற்கு சற்றுத் தொலையில் நிறுத்தப்பட்டிருந்தன. அந்நேரம் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு 12மணி நேரம் கடந்து விட்டிருந்தது. பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவின் உத்தியோகத்தர்கள் எந்த நிலைமைக்கும் முகங்கொடுப்பதற்கு ஆயத்தமான கண்ணீர் புகை, இறப்பர் தோட்டாக்கள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். டி 56துப்பாக்கிகளுடனான ஏராளமான பொலிஸாரும் ரம்புக்கனை நகரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி 12 , – 13மணி நேரம் கடந்த போது நகரின் வாகன வரிசையானது பல கிலோ மீற்றர் தொலைவுக்கு நீண்டு சென்றிருந்ததோடு, பாடசாலை மாணவர்கள், நோயாளர்கள், ரம்புக்கனை நகருக்கு வருகை தரும் பயணிகள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையான பொது மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளானார்கள்.

கடும் வெயிலுக்கு மத்தியில் ரம்புக்கனை நகருக்கு கொண்டுவரப்பட்ட 33ஆயிரம் லீட்டர் எரிபொருளுடனான பவுசர் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டு அதனை உடரட்ட புகையிரத வீதிக்கு குறுக்காக நிறுத்தி வைப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பவுசரின் டயர்களது காற்று திறந்து விடப்பட்டு அந்த வாகனத்திற்கு தீ வைப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிய வந்தது அப்போதுதான்.

பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களால் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கண்ணிர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது அவர்களை அவ்விடத்திலிருந்து கலைந்த செல்வதற்கே என்றாலும், நிலைமை மிக மோசமடைந்தது அதன் பின்னரே. ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்திற்கு மத்தியில் புகையிரத வீதியில் ஒன்று கூடி பொலிஸாரை நோக்கி கற்களை வீச ஆரம்பித்தனர். இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றுக்கும் தீ மூட்டப்பட்டுள்ளது. அவ்வாறு முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே எனக் கூறி பொலிஸாரை நோக்கி கற்களை வீசியவாறு மக்கள் குற்றம் சுமத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல் படிப்படியாக மிகவும் மோசமான நிலையை அடைந்ததில் சுமார் 20பொலிஸார் காயங்களுக்கு உள்ளானார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் 18பேரும் இரத்தக் காயங்களுடன் இருந்ததோடு, இரு தரப்பினரும் அம்புலன்ஸ் வண்டிகளின் மூலம் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னரே எரிபொருள் பவுசருக்கு தீ வைப்பதைத் தடுப்பதற்காக பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்தார்.

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததாக அறிய வந்ததையடுத்து நிலைமை மிகவும் மோசமடைவதைத் தடுப்பதற்காக உடனடியாகவே ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

பொலிஸ் கலகம் அடக்கும் பிரவினர் ரம்புக்கனை “எரிபொருள் கலவரத்தை” கட்டுப்படுத்தும் போது இரவாகியிருந்தது. அந்நேரம் ரம்புக்கனை நகரம் வெறிச்சோடிப் போயிருந்ததோடு, கலவரம் இடம்பெற்ற இடம், புகையிரத நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் போன்ற இடங்கள் யுத்தம் இடம்பெற்ற இடமாக ஆகியிருந்தது.

20பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட 34பேர் அந்நேரம் காயங்களுடன் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களுள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் அடங்கியிருந்தார்.

ரம்புக்கனை எரிபொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்ததன் பின்னர் நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் பெரிதும் அதிகரித்தன. 19ம் திகதி மாத்திரம் நாடு முழுவதிலும் 55ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிந்த நபர் ரம்புக்கனை நாரன்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 42வயதுடைய தொன் சமிந்த லக்ஷான் என இனங்காணப்பட்டார். சமிந்த பின்னவலை யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகளுக்கு அவரது பட்டா ரக லொறியினை பயன்படுத்தி உணவு விநியோகத்து வந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஐக்கிய தேசிய கட்சியின் தீவிர ஆதரவாளரான அவருக்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இடையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த எரிபொருள் நிரப்பும் இயந்திரத்துக்கு யாரோ சிலர் தீ மூட்டியிருந்தனர். ரம்புக்கனை “எரிபொருள் கலவரம்” தொடர்பிலும், பொலிஸார் அதனைத் தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பிலும் பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்ன மக்களுக்கு இவ்வாறு விளக்கமளித்திருந்தார்.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பிரகாரம் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பு சீ.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸும் கருத்து தெரிவித்தார்.

“இந்த துரதிஷ்டவசமான சம்வத்தின் போது பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினரை கண்ணீர் புகை மற்றும் தடியடிப் பிரயோகங்களை மேற்கொண்டு கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் 33ஆயிரம் லீட்டரைக் கொண்ட எரிபொருள் பவுசருக்கு தீ மூட்டியிருந்தால் அது அப்பிரதேசத்திற்கு பாரிய சேததத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும், அதனைத் தடுப்பதற்கு முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர்களைச் சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்ட போது தமது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

அதன் பின்னரே இச்சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை பொலிஸார் கேகாலை நீதிவான் வாசனா நவரத்னவிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

சமிந்த லக்ஷான் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த இடத்தையும் நீதவான் பார்வையிட்டார்.

“இரு தரப்பினராலும் கற்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனக்கு அருகில் இருந்த சுத்தாவை அங்கிருந்து ஓடிவிடுமாறு கூறினேன். அவர் அவ்வாறு ஓடிச் செல்லும் போதே துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானார்” என இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சாட்சியமளிக்கும் போது கூறினார்.

பொது மக்கள் சார்பாக ஆஜராவதற்கு பெருமளவிலான சட்டத்தரணிகள் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் ரம்புக்கனைக்கு வந்திருந்தமை முக்கிய அம்சமாகும்.

உடமைகளுக்குச் சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் ரம்புக்கனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அந்த இளைஞருக்காக ஏராளமான சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தார்கள். கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த லக்ஷானின் சடலத்தையும் பார்வையிட்ட கேகாலை நீதவான் வாசனா நவரத்ன, கேகாலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய விசேட நிபுணர் சமந்த விஜேரத்னவிடம் சடலத்தை ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர் அதன் அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 20பொலிஸார் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதோடு, 18பொது மக்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் முச்சக்கர வண்டிக்கு தீ வைக்கப்பட்டதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். அப்போது அவ்விடத்தில் இருந்த சட்டத்தரணிகளுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்கிய நிலையயில் பொலிஸார் ஏன் அவர்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.

கடந்த 20ம் திகதி சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.

“ரம்புக்கனை ஆர்ப்பாட்த்திற்கு மத்தியில் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்கப்பட்டிருந்தால் அது மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும். அவ்வாறான நிலையினைத் தடுப்பதற்கே பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடு சரியா, பிழையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். அதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் ஒலி, ஒளி காட்சிகள் பயன்படுத்தப்படும். இச்சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது” எனக் கூறினார்.

இச்சம்பவத்தில் பொலிஸார் அதிகாரத்தைச் சட்ட ரீதியாகப் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சுயாதீன விசாரணைக் குழு ஒன்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளது. பிரஜா பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். டி. கொடிகார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம். எஸ். பீ. சூரியப்பெருமன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஈ. எஸ். ஜயசிங்க ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் அங்கத்தவர்களாகும். இச்சம்வத்துடன் தொடர்புடைய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட ரம்புக்கனை பல நோக்கு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்.

“கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் பவுசர் ஒன்று எரிபொருளுடன் வந்ததாகவும் அதனை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்கும் நோக்கில் மறுநாள் கொண்டு வரப்பட்டது என்ற கதையை நாம் முற்றாக மறுக்கின்றோம். எமது பவுசருக்கு கடந்த ஒரு மாதமாக வேலை இருக்கவில்லை. திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன் பின்னர் ஏப்ரல் 18ம் திகதிதான் கொலன்னாவைக்கு அனுப்பப்பட்டது. இன்னமும் அந்த வாகனம் அங்கு பாதுகாப்பு பிரிவின் பொறுப்பில் இருக்கின்றது. இச்சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இங்கு வந்தது வேறு இரு பவுசர்களாகும். அவை எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் வாடகை அடிப்படையில் சேவையில் ஈடுபடும் வாகனங்களாகும். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது மறைத்து வைக்கப்பட்டிருந்த பவுசர்கள் எனக் கூறி எரிபொருளை இறக்குவதற்கு இடமளிக்கவில்லை. பழைய விலைக்கு எரிபொருளை வழங்குமாறே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவ்வாறு பழைய விலைக்கு வழங்கினால் சுமார் 25, 30இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்படும்”

ரம்புக்கனை ஆர்ப்பாட்டக்காரர்கள் 33ஆயிரம் லீட்டருடனான பவுசருக்கு தீ மூட்டியிருந்தால் பாரிய அழிவுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்ததாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் கடந்த 20ம் திகதி கூறியிருந்தார்.

பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் பொலிஸ் உத்தரவுகளின் பிரகாரமே இச்சந்தர்ப்பத்தில் பொலிஸார் செயற்பட்டார்கள் என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 56ம் பிரிவுக்கு அமையவும், குற்றவியல் சட்டங்களுக்கு அமைவாகவும் பொலிஸாருக்கு இது தொடர்பில் தேவையான அதிகாரம் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்வை கடந்த 22ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் அந்த ஆணைக்குழு அறிவித்திருந்தது.

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷானின் மகள் இவ்வாறு கூறினார்.

“அப்பா அன்றைய தினம் பெட்ரோல் எடுப்பதற்காக பெட்ரேல் செட்டுக்குச் செல்வதாகக் கூறியே வீட்டிலிருந்து சென்றார். மாலையில் பைசிக்களை எடுக்க முற்பட்ட போதுதான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அதனை மாமா ஒருவர் நேரில் பாரத்திருக்கிறார். எமக்கு நியாயம் வேண்டும். எனக்கு இதற்காக பணம் எதுவும் வேண்டாம். எனது தந்தைக்கான நியாயம் கிடைக்க வேண்டும்” கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ரம்புக்கனை பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள மூலம்: தீபால் சமரசேகர
தமிழில் -: எம். எஸ். முஸப்பிர்

Tags: